இந்தியப் படையினரின் வெளியேற்றத்தை அடுத்து ஒரு சில மாதங்கள் மட்டுமே வடகிழக்கில் அமைதிநிலை நீடித்தது. அவர்களின் வெளியேற்றத்தின் பின் யாழ். குடாநாட்டையும், வடக்கின் பெரும்பாலான பகுதிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
பிரேமதாச அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் மெல்ல மெல்ல முறிந்து மீண்டும் தொடங்கியது யுத்தம்.
1990 யூன் 10ம் திகதி மட்டக்களப்பில் தொடங்கிய மோதல் தான் ஈழப்போர் 2 ஆக வெடித்தது.
முதலாம் கட்ட ஈழப்போரிலும், இரண்டாம் கட்ட ஈழப்போரிலும், விடுதலைப் புலிகள் முழுமையாக கெரில்லாப் போரையே நடத்தினர்.
ஆனால் இரண்டாம் கட்ட ஈழப் போர் விடுதலைப் புலிகளை ஒரு அரை மரபுவழிப் படையாக மாற்றியது.
கிழக்கில் முற்றிலும் கெரில்லாப் போரை நடத்திய விடுதலைப் புலிகள் வடக்கில் இராணுவ முகாம்களை சுற்றிவளைத்து படையினரை முடக்கினர்.
கிழக்கில் புலிகளும் படையினரும் ஒருவரையொருவர் பதுங்கித் தாக்குவதையும் தப்பி ஓடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வடக்கிலோ அதற்கு எதிர்மாறான போர் வியூகம் அமைக்கப்பட்டது.
படையினரை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருப்பது, அத்தகைய முகாம்களை தாக்கியழிப்பது என்று புலிகள் செயற்பட்டனர்.
அதேவேளை படையினரோ புதிய இடங்களைப் பிடித்து கட்டுப்பாட்டு பிரதேசத்தை விரிவாக்கவும் புலிகளின் தாக்குதலில் இருந்து தமது இருப்பை பாதுகாக்க அவ்வப்போது முகாம்களுக்கு வெளியே வந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
புலிகள் பலமடைந்து வந்ததை உணர்ந்த படைத்தலைமை அவர்கள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக, தற்காப்புக்கான தாக்குதல்களை அவ்வப்போது நடத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
இரண்டாம் கட்ட ஈழப்போர் பரந்தளவிலான சமர்கள், சண்டைகளைக் கொண்டதாகவே இருந்தது.
அவ்வப்போது வழிமறிப்புச் சண்டைகளுடன் நடந்து வந்த இந்தப் போர் 1991 யூலையில் ஆனையிறவுத் தளம் மீது புலிகள் நடத்திய முற்றுகைச் சமருடன் புதிய கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.
அந்த முற்றுகையை உடைக்க படைத்தரப்பு மேற்கொண்ட ஒபரேசன் பலவேகய என்ற நீண்ட படை நடவடிக்கை இரண்டு மரபுவழி இராணுவங்களின் சமராக அதை எடை போட வைத்தது.
அப்போது விடுதலைப் புலிகள் தம்மை ஒரு மரபுவழிப் படையைக் கொண்ட இராணுவமாக உரிமை கோரியிருந்தாலும் அது ஒரு அரைநிலை மரபுவழிப் படையாகவே செயற்பட்டது என்பதே உண்மை.
ஏனென்றால் விடுதலைப் புலிகளிடம் அப்போது ஒரு மரபுவழி இராணுவத்துக்குரிய படைபலமோ ஆயுத வளங்களோ இருக்கவில்லை.
குறிப்பாக குறுந்தூர மோட்டார்களும், உள்ளூரில் கவசவாகனமாக மாற்றியமைக்கப்பட்ட புல்டோசர்களும் தான் அவர்களிடம் இருந்தன.
ஆனால் மரபுவழி இராணுவம் ஒன்றிடம் நெடுந்தூர ஆட்டிலறிகளும், கவசவாகனங்களும், டாங்கிகளும் இருக்க வேண்டும்.
மரபுப்போர் பாணியில் புலிகள் பல சமர்களைச் செய்திருந்தாலும், இரண்டாம் கட்ட ஈழப்போரில் அவர்கள் முழுமையான மரபுப் போர்ப் பலத்தைப் பெறவில்லை.
ஆனால் இரண்டாம் கட்ட ஈழப்போரில் புலிகளின் கடற்தாக்குதல் பலம், திடீரெனப் பெருகியது படைத்தரப்புக்குப் பெரும் அச்சுறுத்தலான விடயமாக மாறியிருந்தது.
வடக்கில் ஆனையிறவு, சிலாபத்துறை, பூநகரிப் படைத்தளங்கள் மீது விடுதலைப் புலிகள் இந்தக் காலத்தில் நடத்திய பெரும் சமர்கள் இறுதி வெற்றியை கொடுக்காத போதிலும் கடல்வழி உதவியின்றி இனிமேல் எந்தவொரு படைத்தளங்களையும் வடக்கில் பாதுகாக்க முடியாது என்ற உண்மையை உணர்த்தியது.
மரபு ரீதியான தாக்குதல் உத்திகளைக் கையாண்டு புலிகள் நடத்திய இந்தச் சமர்களும், விடுதலைப் புலிகளின் தளங்களை அழிப்பதற்காக படையினர் யாழ்ப்பாணம், வன்னி, மணலாறு பிரதேசங்களில் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகளும் பெரும் ஆளணிச் சேதங்களை இருதரப்பிலும் ஏற்படுத்தின.
இந்தப் பெருஞ் சமா்களின் போது இருதரப்பும் பெருமளவிலான வெடிப்பொருட்களைப் பயன்படுத்தின.
1990 யூன் 10ம் திகதி தொடங்கிய இந்த இரண்டாம் கட்ட ஈழப்போர் 1994 நவம்பரில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்து, போர் தவிர்ப்பு உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படும் வரை நீடித்தது.
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் நீடித்த இரண்டாம் கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவத்தின் தரப்பில் 140 அதிகாரிகளும், 3399 படையினருமாக மொத்தம் 3539 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 19 அதிகாரிகளும், 586 படையினருமாக மொத்தம் 605 பேர் காணாமல் போயினர்.
காணாமற்போனவர்களும் கொல்லப்பட்டதாகவே தற்போது கணக்கிடப்படுவதால் ஈழப்போர் 2ல் இலங்கை இராணுவத்தின் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4144 பேராகும்.
இந்தக் காலகட்டத்தில் 80 அதிகாரிகளும், 2449 படையினருமாக மொத்தம் 2529 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
இந்த எண்ணிக்கை போரினால் நிரந்தர காயங்களுக்கு உள்ளானவர்களாகும். குணமடைந்தவர்கள் இதில் அடங்கவில்லை.
இரண்டாம் கட்ட ஈழப்போரில் இலங்கைக் கடற்படைத்தரப்பில் 117 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 136 கடற்படையினர் காணாமல் போயினர்.
காணாமற்போனவர்களையும் சேர்த்து கடற்படை இந்தப் போரில் 253 பேரை பறிகொடுத்தது.
இந்தக் காலகட்டத்தில் மோசமாக காயமடைந்த 74 கடற்படையினரில் ஒரே ஒருவர் மட்டுமே தொடர்ந்து சேவையாற்றக்கூடிய நிலையில் இருந்தார்.
ஏனைய அனைவரும் ஓய்வு பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.
கடற்புலிகளின் தாக்குதல்களால் தான் ஈழப்போர் 2ல் கடற்படை அதிக இழப்புகளைச் சந்திகக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை விமானப் படையும் ஈழப்போர் 2ல் சில விமானங்களை இழந்தது.
அதன் காரணமாகவும், தரையில் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட விமானப் படையினர் புலிகளின் தாக்குதல்களில் சிக்கியதாலும் ஈழப்போர் 2ல் விமானப்படை தரப்பில் 138 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 68 விமானப்படையினர் படுகாயமடைந்தனர்.
இரண்டாம் கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட பொலிஸார் இந்தக் கணக்குகளில் உள்ளடக்கப்படவில்லை.
ஈழப்போர் 2ன் தொடக்கத்தில் கிழக்கில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 300ற்கும் அதிகமான பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் பொலிஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பொலிஸாரும், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
இந்த நடவடிக்கைகளின் போது ஈழப்போர் 2ல் நூற்றுக்கணக்கான பொலிஸார் கொல்லப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
எனினும் அதுபற்றிய சரியான விபரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த மூன்றரை ஆண்டுகாலப் போரில் காணாமற்போனவர்களையும் சேர்த்து முப்படையினரின் தரப்பில் 4535 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் முப்படைகளையும் சேர்ந்த 2671 பேர் இந்தப் போரில் படுகாயமடைந்தனர்.
இந்தப் போரில் விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய துல்லியமான மதிப்பீடுகள் இல்லாவிட்டாலும் அவர்கள் வெளியிட்ட மாவீரர் பட்டியல் ஒன்றின் படி 1990ல் 965 பேரும், 1991ல் 1622 பேரும், 1992ல் 792 பேரும், 1993ல் 928 பேரும், 1994ல் 378 பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஈழப்போர் 2ல் விடுதலைப் புலிகள் தரப்பில் 4685 பேர் மரணமாகியுள்ளனர்.
இது முற்றிலும் சரியான கணக்காக இருக்க வாய்ப்பில்லை. ஒரு தோரயமான கணக்குத் தான்.
விடுதலைப் புலிகள் தரப்பில் இந்தக் காலகட்டத்தில் காயமடைந்தவர்கள், நிரந்தரப் பாதிப்பை அடைந்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரமும் இல்லை.
அதேவேளை, படைத் தலைமையகம் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் சரியானதாக இருக்கும் என்றும் கருதுவதற்கில்லை.
எவ்வாறாயினும் இருதரப்பினதும் அதிகாரபூர்வ தகவல்களின் படி இரண்டாம் கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட படையினர் மற்றும் புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாகவே இருந்துள்ளதை இந்தப் புள்ளிவிபரங்கள் எடுத்துணர்த்துகின்றன.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten