கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பியின் உடல் நிலை தேறி வருவதாக கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
அதேவேளை கத்திக்குத்தை மேற்கொண்ட மருத்துவரும் சட்டபீட மாணவருமான சிவஞானசுந்தரம் சுரேந்திரஜித் மாத்திரையொன்றை உட்கொண்டிருப்பதன் காரணமாக நேற்றைய தினம் தொடர்ந்தும் சுய நினைவின்றியிருந்ததாக களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் லயனல் மொஹாந்திரம் கூறினார்.
கத்திக்குத்துச் சம்பவத்தை தொடர்ந்து சுரேந்திரஜித் தற்கொலை செய்யும் நோக்கில் ஏதோ ஒரு வகை மாத்திரையை உட்கொண்டுள்ளார்.
அது எவ்வகையான மாத்திரை என்பதனை அறியும் நோக்கில் அவரது இரத்த மாதிரி கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் கூறினார்.
அத்துடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் மயக்க நிலையில் காணப்படும் மாணவனை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்தார்.
விளக்கமறியல் கைதியான மேற்படி மாணவன் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் தற்போது கொழும்பு 13, கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவன் குறித்த நாளில் தமக்கான ஒப்படை அறிக்கையை சமர்ப்பிக்க தவறியமையினால் காலங்கடந்து ஒப்படையை பொறுப்பேற்க முடியாதென சட்டபீடத் தலைவி மறுத்துள்ளார்.
இதற்கான வாய்த்தர்க்கம் இறுதியில் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.
பொலிஸார் தொடர்ந்தும் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten