தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

ஆட்சியாளர்கள் உல்லாச வாழ்க்கை! மக்கள் தலைமுறை தாண்டியும் வாழ முடியாமல் அந்தரிப்பு !

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் குடியிருப்பு இலங்கை தீவில் உள்ள ஒரு இடம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியுமோ?, தெரியாதோ? என்பதுதான் இன்றைய நிலவரம் என பிரதேச சபை உறுப்பினர் சு. தயாபரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் குடியிருப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளரும் அக்கராயன் பிரதேச அமைப்பாளருமான கு. சர்வானந்தா தலைமையில் அகவணக்க நிகழ்வுடன் ஆரம்பமானது.
தயாபரன் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
இது எல்லோருடைய மனங்களையும் நெருடச் செய்கிறது. இங்கு வாழும் மக்கள் இனக்கலவரங்களால் இருப்பிடங்களை விட்டு ஆட்சியாளர்களால் பல தடவை விரட்டப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் பலவருடங்களுக்கு மேல் பல தலைமுறைகளையும் தாண்டியும் இலங்கையில் உண்மையான மனிதாபிமான வாழ்வை வாழமுடியாமல் உள்ளனர்.
கூலித் தொழிலை நம்பி வாழும் இவர்களுக்கு வாழ்வாதார அடிப்படைகள் இல்லாது சிதைந்து போகும் நிலையில் உள்ளனர்.  குடிநீர் வசதி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, மின்சாரம் ஏதும் அற்ற நிலையில் குடிப்பதற்கு இடையிடையே மட்டும் தண்ணீர் உள்ள பொதுக்கிணறு ஒன்று.
இதைவைத்துக் கொண்டு குளிப்பதற்கு என்ன செய்வது? பாடசாலை தரம் 1-5 மட்டுமே உண்டு.அதற்கு மேல் படிக்க 12கிலோ மீற்றர் செல்ல வேண்டும்.பேருந்து போக்குவரத்தோ எந்த வாகனப் போக்குவரத்தோ இல்லை.சில குடும்பங்களில் மட்டும் துவிச்சக்கரவண்டிகள் உண்டு.
மருத்துவத்திற்கு 15 கிலோ மீற்றரும் சந்தைக்கு 8 கிலோ மீற்றரும் செல்ல வேண்டியுள்ளது. மீள்குடியமர்த்திய அன்று போல இல்லாது காற்றில் அள்ளுண்ட கூரை. இவ்வாறுள்ள இவர்களின் முகங்களின் சிரிப்பை காண்பதற்கு யாரவது உதவுவார்களா? என்பதே எமது கேள்வி.
இவர்களும் மனிதர்களே, இலங்கை பிரஜைகளே, இவர்களும் வாழ விரும்புபவர்களே. உல்லாசமான வீடுகளும் நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு வாகனங்கள் என்றும் சுகபோகங்களை அனுபவிக்கின்ற ஆட்சியாளர்களே உங்கள் வீட்டு கால் மிதிகளுக்கு செய்யும் செலவுகளின் பங்குகளையாவது இந்த பிரதேசம் நோக்கி திருப்புங்கள்.
இவர்கள் சுய உழைப்பு சுய கௌரவம் என்று வாழ்ந்தவர்கள் இன்று போரினால் சிறை பிடிக்கப்பட்டு வங்கிக்கடன்களால் ஆசை காட்டப்பட்டு இயந்திரங்களால் தொழில்கள் பறிக்கப்பட்டு தொழிலாளர்கள் இறக்குமதியால் சாவுக்கு கொண்டுபோய் விடப்பட்டுள்ளனர்.
இவர்களின் மரணத்திற்கு முன்னதாக ஏதும் சிறு சிறு பரிகாரங்களையாவது செய்யுங்கள். உலகிற்கு மீள்குடியேற்றம், போரற்ற வாழ்வு, வாழ்வாதாரம், வீடு, மின்சாரம் என்று பெரிய பட்டியலாக நீட்டி முழக்கி பேசும் அமைச்சர்களே இந்த கிராமம் பற்றி தகவல் அறிந்து பாருங்கள்.
சிலவேளை ஞானம் பிறக்கும். உலகமே வந்து பாருங்கள் இலங்கைத் தமிழனின் உண்மை நிலைகளை, கந்தலாகி போன எங்கள் உடைகளை, சிரிப்பற்ற முகங்களை, குளிப்பற்ற எங்கள் உடல்களை உணவற்ற வயிற்றை. கையொப்பமே இடுவதில் இடர்படும் சூழலில் வங்கி கடன்களால் கிராமமே மூழ்கியுள்ளது.
பிறக்கும் குழந்தையையும் வங்கிகடன் வரவேற்கிறது. சேமிப்பு என்றால் எப்படி செய்வது? எங்கிருந்து செய்வது? உண்மையானதும் பலரும் பேச மறுக்கும் விடயங்கள் இவை. இவற்றுக்கு பரிகாரமாக வீட்டுக்கு வீடு தினமும் தரிசனம் செய்யும் இராணுவ அணிவகுப்பு.
உண்மைகளை அறியும் முன்பே மரத்துடன் கட்டியடிபோடும் பொலிசார். உறவினர்கள் கூட வீட்டுக்கு வந்தால் அறிவிக்க வேண்டும் எனக்கூறும் சிவில் அலுவலர்கள். இப்படி உள்ள கிராமம் இது மட்டும் என்று கூறிவிடமுடியாது.
இவ்வாறான கிராமங்களில் நான் வாழும் கிராமம் இது என்றும் நான் ஒரு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக இருக்கின்ற போதிலும் என்னால் இவர்களுக்கு எதையும் செய்ய முடியாத ஜனநாயகம் அற்ற ஆட்சியில் உள்ளேன்" என கவலை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் தலைவர் நா.வை. குகராசா, உப தலைவர் வ. நகுலேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் உறுப்பினர் பொ. கிருபாகரன் மற்றும் கண்ணகைபுரம் குடியிருப்பு மக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten