கடந்த மே 26ம் திகதி, “பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலைப் போராட்டமும்” என்ற எனது கட்டுரை வெளியாகி அடுத்த நாள், திங்கட்கிழமை 27-05-2013, காலை 9.24 எனக்கு ஓர் மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. இவ் அழைப்பு ஜெர்மனியில், பிரங்பெட் நகரிலிருந்து, 00-49-69244342200 என்ற இலக்கத்திலிருந்து அழைக்கப்பட்டது.
என்னை அழைத்தவர் தனது குரலை மாற்றி நான் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தவேண்டுமென கொலைமிரட்டல் விட்டார். அவர் தனது பெயரை சொல்ல மறுத்தாலும், அவர் பாவித்த இலக்கம் எனது தொலைபேசியில் பதிவாகியுள்ளது. வாழ்க அவர்களது கோழைத்தனமான பணி!. இவ் தொலைபேசி இலக்கத்தை (00-49-69244342200) பாவிப்பவர்களது முழுப்பெயர் தெரிந்தால், தயவு செய்து தெரியத் தரவும் - நன்றி. “அச்சம் என்பது மடைமையடா, அஞ்சமை தமிழர் உடமையடா - ஆறிலும் சாவு நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா”)
ஐ.நா. மனித உரிமை சபையின், 23வது கூட்டத் தொடர், கடந்த மாதம் மே மதம் 27ம் திகதி முதல், யூன் மாதம் 14ம் திகதி வரை, போலாந்தின் ஐ. நா. பிரதிநிதி, திரு. ஆச்சிலேஸ் கென்ஸில் தலைமையில் நடைபெற்று முடிந்தது.
கடந்த மனித உரிமை சபையின், 22வது கூட்டத்தொடரில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட கண்டனப் பிரேரணைக்கு அமைய, இவ் 23வது கூட்டத் தொடரில் இலங்கையின் விடயங்கள் எதுவும் சூடுபிடிக்காவிடிலும், அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளும், சில அரசசார்பற்ற அமைப்புகளும் இலங்கை விடயத்தில் தமது அக்கறையை பிரஸ்தாபித்திருந்தன.
இக் கூட்டத்தொடருக்கு இலங்கை அரச மட்டத்தில் எந்தவித அமைச்சர்களும் கலந்து கொள்ளாத போதிலும், ஒரு சில பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தார்கள். அரசார்பற்ற அமைப்புகளின் சார்பில், கொழும்பிலிருந்து யாரும் வருகை தந்திருக்கவில்லை. வழமைபோல் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ஒரு சிலர் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து கலந்து கொண்டனார்.
இக் கூட்டத்தொடரில் பங்குபற்றிய சில மேற்குநாட்டு செயற்பாட்டாளர்கள், “இம்முறை, ஐ. நா. மேற்பார்வையிலனா தமிழர்களது இடைகால அரசுபற்றி உரையாற்றுவதற்கான விசேடபிரதிநிதிகள் யாரும், சமுகமளிக்கவில்லையா” என வினாவியது, அங்கு மிக வேடிக்கை நிறைந்து காணப்பட்டது.
இக் கூட்டத் தொடரில, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பல தடவைகள், உலகின் வேறுபட்ட நாடுகளின் நிலைமைகள் பற்றி உரையாற்றியிருந்தார். விசேடமாக, சிரியா இக் கூட்டத் தொடரில் முக்கிய இடத்தை கொண்டிருந்ததுடன், வழமைபோல் பாலாஸ்தீனிய அரேபிய எல்லைகள் என்ற விவாதமும் இடம்பெற்றது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தனது உரையில், “R2P” பாதுகாப்பதற்கான கடமையின் மூலம், அப்பாவி மக்களை, யுத்தத்திலிருந்தும், இனச்சுத்திகரிபிலிருந்தும் பாதுகாக்க முடியுமென்பதை சர்வதேச சமுதாயம் என்றும் மனதில் கொள்ளவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
இதே இடத்தில், பெலருஸ், ஏரித்திரியா ஆகிய நாடுகளின் நிலைமைகளை அவதானிப்பதற்காக நியமிக்கப்பட்ட, ஐ. நா. பிரதிநிதிகள் அந்நாடுகளின் நிலைமை பற்றிய அறிக்கைகளை சமர்பித்திருந்தனர்.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமை சபையின், யு.பி.ஆர் எனப்படும் சர்வ காலவரை மதிப்பீடு - பிரான்ஸ், ரொங்கா, ருமேனியா, மாலி, போட்ஸ்வான, பாமாஸ், புருன்டி, லக்ஸம்பேர்க், பார்படுஸ், மொன்ரீநிகிறோ, சேபியா, யு.ஏ.ஈ., லின்சன்ஸ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஆராயப்பட்டன.
இலங்கை பிரதிநிதி
23வது கூட்டத் தொடர் ஆரம்ப தினத்தன்று, இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி திரு. ரவிநாத் ஆரியசிங்கா தனது உரையில், வழமை போல் உண்மைக்கு அப்பாற்பட்ட பல புள்ளி விபரங்களை சமர்ப்பித்திருந்ததுடன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 25ம் திகதி முதல் 31ம் திகதி வரை விஜயம் செய்யவுள்ளார் என்ற செய்தியையும் சபையில் அறிவிந்திருந்தார்.
திரு. ரவிநாத் ஆரியசிங்காவினால் மனித உரிமை சபையில் கூறிய சில விடயங்களை சகலரும் தெரிந்து கொள்வதற்காக, மிகச் சுருக்கமாக இங்கு தருகிறேன்.
சில நாடுகள், இலங்கையின் புலம்பெயர் வாழ் மக்கள் சிலரின் தவறான தகவல்கள், அபிப்பிராயங்களின் அடிப்படையில், தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் ஆபாத்தான விடயமென்றும், இதேவேளை கடந்த 22வது கூட்டத் தொடருக்கு சில புலம்பெயர்வாழ் அங்கத்தவர்கள், சில அரசின் பெயர்பட்டியலில் இடம்பெற்று, அங்கு வருகை தந்திருந்தமை தம்மை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும்,
2013ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி தகவலின் பிரகாரம் - 594 சிறுபிள்ளை இராணுவம் உட்பட, எல்லாமாக 11,551 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும்,
18 பெண் போராளிகள் உட்பட் எல்லாமாக, 374 போராளிகள் தற்பொழுது புனர்வாழ்வு அளிக்கப்படுவதாகவும்,
194 முன்னாள் போராளிகள் மீது, வழக்குகள் தொடரப்பட்டு, தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகவும்,
அத்துடன், தடுப்பு காவலில் உள்ள முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்களை, அவர்களது குடும்பங்கள் பெற்றுக்கொள்ளக் கூடியவதையில், தற்பொழுது கணணியில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இவை காவல்துறையினரின், பயங்கரவாத பிரிவினரிடம் உள்ளதாகவும், இவை கொழும்பு, வவுனியா, பூசா போன்ற இடங்களில் உள்ளதாகவும் கூறினார்.
(கேள்வி என்னவெனில், இப்பொழுது சிறிலங்காவிடம் எத்தனை பேர் எங்கு இருக்கிறார்கள் என்பதல்ல! 2009ம் ஆண்டு மே மாதம் 17, 18, 19ம் திகதி இவர்களிடம் சரணடைந்தோர் எத்தனை பேர், எங்கு உள்ளார்கள் என்பதுடன், இக் கணணியில் அவர்களது பெயர் பட்டடியல் உள்ளதா என்பதுடன் அவர்கள் யாவரும் என்ன நடந்தது என்பதே)
இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி மேலும் கூறியதாவது,
யாழ் குடநாட்டில், யுத்தகாலத்தில் 50,000 இராணுவம் மட்டுமே இருந்ததாகவும், தற்பொழுது, 13,200 இராணுவத்தினரே இருப்பதாகவும்,
யுத்தம் காரணமாக, மூன்று சதாப்தங்களாக விஸ்தரிக்கப்படாத, பாலாலி விமானத் தளமும், காங்கேசன் துறைமுகமும் தற்பொழுது விஸ்தரிக்கப்படுவதனால், சிலருடைய தனிப்பட்ட காணிகள் அரசினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலாக வேறு இடங்களில் காணிகளும், நஷ்ட ஈடுகளும் வாழங்கப்பட்டுள்ளதாகவும்,
யாழ் குடநாட்டின் பொருளதாரம் என்றுமில்லாதவாறு இன்று முன்னேறியுள்ளதாகவும், வேறு பலதரப்பட் ஏமாற்றுத் தகவல்களையும் அங்கு கூறினார்.
அரசார்பற்ற நிறுவனங்கள்
அன்றைய தினம், சபையில் உரையாற்றிய, ‘சர்வதேச மனித உரிமை சேவை’ என்ற அரசார்பற்ற நிறுவனம், இலங்கையின் சுதந்திரமான ஊடகவியலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக கூறியிருந்தனர்.
அத்துடன் ‘கனடாவின் வழங்கறிஞர் உரிமை’ என்ற அமைப்பு மூலமாக உரையாற்றிய, திரு. கரி ஆனந்தசங்கரி, இலங்கையின் நீதித்துறையின் மோசடிகளை அங்கு பிரஸ்தாபித்ததுடன், மியன்மார் (பர்மா), பாகிஸ்தானின் நீதித்துறை பற்றியும் உரையாற்றியிருந்தார். ‘ஆசிய போரம்’ என்ற அரசசார்பற்ற நிறுவனமும் இலங்கையின் நிலைபற்றி அங்கு உரையாற்றியிருந்தனர்.
இக்கூட்டத் தொடர் நடைபெற்ற வேளையில், அங்கு நடைபெற்ற சில அரசசார்பற்ற அமைப்புக்களின் கூட்டங்களில், தமிழ் செயற்பாட்டாளர்கள், பங்கு பற்றியதுடன், ஈழத்தமிழர் பற்றிய உண்மை நிலைகளை எடுத்து கூறியிருந்தார்கள்.
இவ் 23வது கூட்டத் தொடரில் நடைபெற்ற ஒர் முக்கியமான சம்பவம் என்னவெனில், இலங்கை பிரதிநிதியின் தொடர்ச்சியான உண்மைக்கு புறம்பான தகவல்களை சகிக்க முடியாத, அமெரிக்காவின் தூதுவர் திருமதி ஏலியன் டொனகியூவும், கனடாவின் பிரதிநிதியும், யூன் மாதம் 5ம் திகதி புதன்கிழமை, சிறிலங்காவை மிக கடுமையாக சாடினார்கள்.
அமெரிக்கா, கனடா
அமெரிக்காவின் தூதுவர் திருமதி ஏலியன் டொனகியூ உரையாற்றுகையில் கூறியதாவது,
“இலங்கையில் யாவரும் சுதந்திரமாக கருத்து கூறமுடியாத நிலை உள்ளதாகவும், பத்திரிகையாளர் மிகவும் மோசமாக இம்சிக்கப்படுவதாகவும், இலங்கையில் பத்திரிகையாளர் மீது நடைபெறும் தாக்குதலுக்கும் எந்தவித சுதந்திரமான விசாரணைகள் நடைபெறுவதில்லையெனவும் கூறினார்”.
கனடாவின் பிரதிநிதி உரையாற்றுகையில்,
“சர்வதேச மனிதாபிமான, போர் சட்டங்கள் சிறிலங்காவில் மிக கடுமையாக மீறப்பட்டுள்ள போதிலும், இலங்கை இன்று வரை எந்தவித சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள வில்லையெனவும், அவர்களது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கூட அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லையெனவும், பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடான இலங்கை, பொதுநாலவாய அமைப்பின் தனித்துவத்தை மதிக்கவேண்டுமென” கூறினார்.
இவ் உரைகளை கண்டு திகில் அடைந்த இலங்கையின் பிரதிநிதி, கொழும்பை தொடர்பு கொண்டு, சரியாக இரு நாட்களின் பின்னர், அதாவது 7ம் திகதி வெள்ளிக்கிழமை, இவர்களுக்கான தனது பதிலை சபையில் கூறினார். இங்கு குறிப்பிடுமளவிற்கு அவர் அங்கு ஒன்றையும் விசேடமாக கூறவில்லை.
வழமைபோல் தாம் பல விடயங்களை நடைமுறைபடுத்தியுள்ளதாகவும், இவற்றை அமெரிக்கா, கனடா கவனத்தில் கொள்ளதாது கவலை தரும் விடயமெனவும், கனடாவினது பிரதிநிதி, பொதுநலவாய அமைப்பின் பெயரை ஐ. நா. மனித உரிமை சபையில், பாவித்தது தேவையற்ற விடயமெனவும், இலங்கை, பொதுநலவாய அமைப்பின் தனித்துவத்தை பேணும் காரணத்தினால் தான், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில், பொதுநாலவாய நாடுகளின் மாநாடு நடப்பதற்கான ஒழுங்குகள் தற்பொழுது நடைபெறுவதாகவும் கூறினார்.
இதேவேளை, ஜப்பான் நாட்டின் பிரதிநிதி, சிறிலங்கா சில விடயங்களை நடைமுறை படுத்தியுள்ளதாகவும் சபையில் கூறினார்.
முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்
கடந்த சில வருடங்களாக, மினார்மா எனப்படும் பார்மா நாட்டில் வாழும் முஸ்லீம்கள் மீது, மினார்மா அரசின் ஆதரவுடன், பௌத்தர்கள் தாக்குதல் நடத்தி வருவது யாவரும் அறிந்த விடயமே. மிக அண்மைக்காலங்களில் இத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை, உலகின் முஸ்லீம் நாடுகள் யாவும் மிகவும் கடுமையாக கண்டித்து வந்ததன் பலனாக, 23வது கூட்டத் தொடரில், மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகள் யாவும் ஒருமித்து ஏகமனதாக, சபை தலைவரினால் மியன்மார் அரசு கண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இலங்கைதீவில் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டு வரும் முஸ்லீம்கள் இவ் வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு இனத்தின் ஒடுக்குமுறை, இன அழிப்பு ஆகியவற்றை, உள்நாட்டில் தீர்ப்பது மிக கடினமான விடயம் என்பதற்கு உலகில் பல நாடுகள் உதாரணமாகவுள்ளன. விசேடமாக ஓர் அரசின் உதவியுடன் பெரும்பான்மை இனமென கணிக்கப்படுபவர்களினால், எண்ணிக்கையில் குறைந்த சிறுபான்மையினம் அழிக்கப்படுமானால், இவற்றை ஐ. நா. மனித உரிமை சபை போன்ற, சர்வதேச அரச அமைப்புக்களினலேயே தீர்க்க முடியும். இவ் அணுகுமுறையை நேரகாலத்திற்கு அலசி ஆராய்ந்து நடிவடிக்கை எடுப்போரினால், தம் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இல்லையேல் அவர்கள் கண் முன்னே, அவ் இனம் அழிந்தே தீரும்.
நோர்வே விடா கெல்கீசன்
ஐ. நா. மனித உரிமை சபை கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில், மனித உரிமை ஆணையாளர் உட்பட, வேறுவிதப்பட்ட முக்கிய நபர்களையும் அழைத்து, பல விடயங்களில், விவாதங்கள், சம்பாசனைகள், கலந்துரையாடல்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 11த் திகதி செவ்வாய்க்கிழமை, மனித உரிமை சபையில், ‘ஜனநாயகமும் மனித உரிமையும’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக, நோர்வேயின் முன்னாள் துணை வெளிநாட்டு அமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசிற்குமிடையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திரு விடா கெல்கீசன், இவ் 23வது கூட்டத் தொடரில் சமுகமளித்திருந்தார்.
திரு விடா கெல்கீசன், தனது உரையில், ஓர் நாட்டின் ஜனநாயகம், நான்கு படிகள் அல்லது நான்கு நிலைகளை கொண்ட முறையில், பேண முடியுமென குறிப்பிட்டிருந்தார்.
முதலாவதாக, சர்வதேச நிலைகள் ஒப்பந்தங்களை ஏற்ற நாடுகள் அரசுகள், தமது நடைமுறையில் அவற்றை பேண வேண்டுமெனவும், இரண்டாவதாக, ஜனநாயகத்திற்கு சுதந்திரமான தேர்தல் முக்கியமானதெனவும், மூன்றவதாக, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த செயற்பாடுகள், நான்காவதாக, ஓர் நாட்டின் முன்னேற்ற பாதைகள், ஜனநாயகம், மனித உரிமையுடன் பின்னிப்பிணைந்ததாக இருக்க வேண்டுமென கூறினார்.
இதேவேளை சுதந்திரமான பத்திரிகை, ஊடாக சுதந்திரம் அங்கு காணப்பட வேண்டும். இவை காணப்படாத நிலையில், ஜனநாயம், மனித உரிமை என்பவை நிலைக்க முடியாது எனக் கூறியிருந்தார்.
திரு விடா கெல்கீசன் அவர்கள், தற்பொழுது சுவீடனில் ஓர் சர்வதேச அரசார்பற்ற நிறுவனத்தின் செயலாளார் நாயாகமாக கடமையாற்றுகிறார்.
அன்றைய கலந்துரையாடலில், மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை, பி. பி. சி.யின் ஜெனிவா பிரதிநிதி, ரூமெனியா, மொறோக்கோ நாடுகளின் முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர்.
இம்முறை மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்ட பல பிரேரணைகள், வாக்கெடுப்பின்றி ஏகமனதாகவே நிறைவேற்றப்பட்டன. ஏரித்திரியா, கொத்துவார், தென் சூடான் ஆகியவை குறிப்பிடத்தக்கது.
சிரியா மீது இரு பிரேரணைகளை - அமெரிக்கா, கட்டார், துருக்கி, குவைத், பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து முன் வைத்தன. இவ் இரு பிரேரணைகள் மீதும் தனித் தனியாக வாக்கெடுப்புக்கள் நடைபெற்றன.
முதலாவது பிரேரணை, சிரியாவின் மிகமோசமான மனித உரிமை மீறலை கண்டிப்பதற்கு சார்பாக 36 நாடுகளும், நடுநிலையாக 8 நாடுகளும், எதிராக வெனிசுலா தனித்தும், கசகஸ்தான், கென்யா ஆகிய இரு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது, சிரியா மீதான இப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஏதியோப்பியா, யூகான்டா, ஈகுவடோர், அங்கோலா ஆகிய நாடுகள் நடுநிலை கித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பிரேரணை, உடனடியாக சிரியா, சர்வதேச சுதந்திர விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு சார்பாக சார்பாக 37 நாடுகளும், நடுநிலையாக 9 நாடுகளும், எதிராக வெனிசுலா தனித்து வாக்களித்து, சிரியா மீதான இரண்டாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், காசஸ்தான், ஏதியோப்பியா, யூகான்டா, கபோன், ஈகுவடோர், அங்கோலா ஆகிய நாடுகள் நடுநிலை வாகித்தன என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமை சபையின் அண்மைகால வாக்களிப்பு பற்றிய விபரங்களை இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை சபையின் 24வது கூட்டத் தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம், 9ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடைபெறும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, மனித உரிமை ஆணையாளர், திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 25ம் திகதி முதல் 31ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து, திரும்பி சரியாக ஒரு வாரத்தில, இக் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
ஏனையோர் கண்டு, அனுபவித்து கூறிய நிலைமைகளுக்கு மேலாக, எதையும் மனித உரிமை ஆணையாளர், தனது இலங்கை விஜயத்தின் பொழுது, புதுமையா பார்க்க முடியும் என சிறிலங்கா அரசு கனவு கண்பது தவறனாது என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten