ஸ்ரீலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 விடுதலைப் புலிப் போராளிகளையும், உடனடியாகவே பிரத்தியேக விமானத்தின் மூலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கும்படி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு கொழும்பில் இருந்து உத்தரவிடப்பட்டது.
அப்பொழுது ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அப்பொழுது இந்திய- இலங்கை ஒப்பந்த்திற்கு எதிராக தென் பகுதியில் ஜே.வி.பி.யினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு ஏதுவாக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள அத்துலத் முதலி எண்ணியிருந்தார்.
கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு வந்து, தொலைக்காட்சி முன்பு அவர்களை தோன்ற வைத்து மலிவான ஒரு பிரச்சாரத்தை தேடிக்கொள்ளும் திட்டத்திலேயே லலித் அத்துலத் முதலி இவ்வாறான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
அக்காலத்தில் லலித் அத்துலத் முதலிக்கு சிங்கள மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது. அதுவும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வடமாராட்சியில் மேற்கொண்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, லலித் அத்துலத்முதலி சிங்கள மக்களின் ஒரு கதாநாயகனாகவே வலம்வந்தார்.
இந்தியப்படைகளின் வருகையைத் தொடர்ந்தே, லலித் அத்துலத் முதலியின் மவுசு கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது.
ஜே.வி.பியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், லலித், ஜே.ஆர். போன்றவர்களை கையாலாகாதவர்கள் என்று விமர்சித்து பிரச்சாரம் செய்தும் வந்ததால், விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது அந்தஸ்தை சிங்கள மக்கள் முன்பு உயர்த்திக்கொள்ள அவர் தீர்மானித்திருந்தார்.
அது ஒருபுறம் இருக்க, இந்தியாவையும், புலிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் புலிகள் கைது சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஜே.ஆர். இன் திட்டமாக இருந்தது. அதனால் இந்தப் பிரச்சனையை லலித் அத்துலத் முதலியின் போக்கிலேயே விட்டுவிடும் முடிவுக்கு ஜே.ஆர். வந்திருந்தார்.
கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கும்படி கடுமையான உத்தரவொன்றை லலித் அத்துலத் முதலி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு அனுப்பிவைத்திருந்தார்.
புலிகள் அதிர்ச்சி:
கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு செல்லும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரது திட்டம் வெளியானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைமை அதிர்ச்சி அடைந்தது. மிகுந்த கோபமும் அடைந்தது.
காங்கேசன்துறை மற்றும் பலாலியில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு பொறுப்பாக இருந்த இந்தியப் படை உயர் அதிகாரியான ஜெனரல் ரொட்ரிகஸ் அவர்களைச் சந்தித்த விடுதலைப் புலித் தலைவர்கள், ஸ்ரீலங்கா படையினால் கைது செய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு இந்தியப் படைகளே பொறுப்பு என்று தெரிவித்தார்கள்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக தமது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தார்கள்.
அப்பொழுது இந்தியாவின் இராஜதந்திரிகள் புலிகளுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியப் படையின் சில அதிகாரிகள் புலிகள் மீது ஓரளவு அனுதாபம் கொண்டவர்களாகவே காணப்பட்டார்கள். பல அதிகாரிகள் புலி உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார்கள்.
சில அதிகாரிகள் விடுதலைப்புலி தலைவர்களினது திருமணங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு புலிகளுடன் நட்புப் பாராட்டி வந்தார்கள். ஜெனரல் ரொட்ரிகசும், அப்படியான அதிகாரிகளில் ஒருவர். புலிகள் மீது ஓரளவு அன்பும், அனுதாபமும் கொண்டவர்.
கைது செய்யப்பட்டு, ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை மீட்டுவருவேன் என்று கூறி புறப்பட்டார் ஜெனரல் ரொட்ரிகஸ்.
ஸ்ரீலங்கா இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவைச் சந்தித்த இந்தியப் படை அதிகாரி, கைது செய்யப்பட்ட புலிகளை இந்தியப் படையிடம் கையளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
அதற்குப் பதிலளித்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~ஏற்கனவே புரிந்திருந்த குற்றச் செயல்களுக்கே பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும், புதிதாக இவர்கள் புரிந்துள்ள ஆயுதக் கடத்தல் குற்றத்திற்கு அந்தப் பொது மன்னிப்பு செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை கொழும்புக்கு கொண்டு செல்வதால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்த ரொட்ரிகஸ், இதனை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு ஸ்ரீலங்கா படை அதிகாரியை கேட்டுக்கொண்டார்.
அதற்கு பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~தான் ஒரு இராணுவ அதிகாரி என்றும் தனக்கு இடப்படும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதே தனது கடமை என்றும் தெரிவித்து, அவருக்கு கொழும்பில் இருந்து கிடைக்கப்பட்டிருந்த கடுமையான உத்தரவு பற்றியும் தெரிவித்தார்.
இறுதி உத்தரவு:
இந்த இரண்டு அதிகாரிகளிடையேயும் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக, புலிகள்-இந்திய யுத்தம் பற்றி பின்நாட்களில் ஆய்வுகள் மேற்கொண்ட சுஜீஸ்வர சேனாதீர என்ற சிங்கள எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் படை அதிகாரி ரொட்ரிகஸ் இற்கும் ஸ்ரீலங்காப் படை அதிகாரி பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கும் இடையில் மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறப்பட்டன.
ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியப் படை அதிகாரி இவ்வாறு தெரிவித்திருந்தார்:
நான் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் உங்களது விமானம் செல்வதற்கு அனுமதிக்கமாட்டேன். இந்தியப்படையின் கவச வாகனங்களை விமான ஓடு தளத்தில் நிறுத்திவைப்பேன் என்று எச்சரித்தார்.
அதற்கு பதிலளித்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~அப்படி நீங்கள் நடந்து கொண்டால், அந்த கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும்படி நான் எனது படைவீரர்களுக்கு உத்தரவிட வேண்டி இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இறுதியில், தனது குரலை தாழ்த்திய இந்திய அதிகாரி ரொட்ரிகஸ், ஒரு வேண்டுகோளை வினயமாக விடுத்தார்.
புலி உறுப்பினர்களை விமானத்தில் ஏற்றி அனுப்புவதை 12 மணி நேரம் தாமதிக்கும்படியும், புதுடில்லியில் இருக்கும் இந்தியத் தூதர் தீட்ஷித் மறுநாள் கொழும்பு வந்ததும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டுவிடலாம் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன கொழும்பை மீண்டும் தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினார்.
கொழும்பில் இருந்து உறுதியான ஒரு பதில் வந்தது.
இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் கைதிகளை விமானத்தில் ஏற்றி அனுப்புவதற்கு உங்களால் முடியாவிட்டால், உங்களது பொறுப்புக்களை உங்களுக்கு அடுத்ததாக உள்ள அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு, கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்புக்கு வந்து சேருங்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் ஒரு இரத்த ஆறு ஓடுவதற்கு அந்த உத்தரவு காரணமாக இருந்தது.
தொடரும்...
Geen opmerkingen:
Een reactie posten