“சிரியாவின் எல்லைப் பகுதியில் ‘விமானம் பறக்காத வலயம்’ (no-fly zone) ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக மேலை நாட்டு மீடியாக்களில் செய்தி லீக் ஆகியுள்ளது. அப்படியொரு முயற்சியில் அமெரிக்கா இறங்கினால், அது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது” என்று கூறியுள்ளது ரஷ்யா. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லவ்ரோவ், “அமெரிக்கா தன்னிடமுள்ள போர் விமானங்களையும், ஜோர்தானில் பொருத்தியுள்ள பேட்ரியாட் ஏவுகணைகளையும் வைத்து சிரியாவுக்கு மேலே விமானம் பறக்காத வலயம் ஒன்றை ஏற்படுத்தினால், ரஷ்யா அதை எதிர்க்கும். தேவையில்லாமல் எமது போர் விமானங்களையும் அங்கு அனுப்ப வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலை நாட்டு மீடியாக்களில் லீக் ஆகிய செய்தி என்று அவர் குறிப்பிட்டுள்ளது, உண்மையில் இரு தினங்களுக்கு முன் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியைதான். அவர்கள் வெளியிட்டபின் அதே செய்தி அனைத்து மீடியாக்களிலும் வெளியாகின.அப்படியொரு ஐடியா வாஷிங்டனுக்கு இருந்தது உண்மைதான் என்கிறார்கள். ஜோர்தானில் ஏவுகணைகளை அவசரகதியில் செட்டப் செய்ததும் அதற்காகத்தான் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்க விமானப்படையின் F-16 விமானங்கள் சிலவும் ஜோர்தானில் இறக்கப்பட்டுள்ளன.
சிரியாவின் எல்லைப் பகுதியில், குறிப்பாக ஜோர்தானிய எல்லையில் எந்த விமானமும் பறக்கக்கூடாது. மீறிப் பறந்தால், அமெரிக்க F-16 விமானங்கள் அந்த விமானங்களை தாக்கும், அல்லது, ஜோர்தானில் உள்ள ஏவுகணைகள் மீறிப் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் என்று அறிவிக்க அமெரிக்கா தயாராக இருந்தது என்றே தெரியவருகிறது.ஆனால், கதையை மீடியாக்கள் லீக் செய்துவிட, சிரியாவின் கூட்டாளி ரஷ்யா எச்சரிக்கையும் விடுத்து விட்டது.அதன் பின்னர் வெள்ளை மாளிகை, “அப்படியொரு திட்டம் எம்மிடம் இல்லை. லிபியாவில் நாம் அதை செய்தது உண்மைதான். ஆனால், அதையே சிரியாவின் வான் பகுதியில் செய்வது அதிக செலவு பிடிக்கும். தவிர அந்தப் பகுதியில் எமக்கு எந்த ஈடுபாடும் கிடையாது” என்று கூறியிருக்கிறது.
தற்போதைக்கு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்க போர் விமானங்களும், ஏவுகணைகளும் ஜோர்தானில் இருப்பதால், ‘அறிவிக்கப்படாத’ விமானம் பறக்காத வலயம் ஒன்றை அமெரிக்காவால் நடைமுறைப்படுத்த முடியும்.இருந்து பாருங்கள், சிரியா விமானப்படை விமானங்கள் ஜோர்தானிய எல்லை அருகே பறந்தால், ஜோர்தானுக்குள் வந்தன என்று கூறி சுட்டு வீழ்த்துவார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten