ஈழப்போர் வரலாற்றில் மிகவும் நீண்டதும், போரிடும் தரப்பினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியதுமான மூன்றாம் கட்ட ஈழப்போர், விடுதலைப் புலிகளின் சமபலம் கொண்ட சக்தியாக இலங்கை அரசை ஏற்க வைத்ததுடன் நிறைவுக்கு வந்தது.
இந்தப் போர் மற்றும் அதில் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பான விபரங்கள் முன்னைய பகுதியில் விபரிக்கப்பட்டது.
2002 பெப்ரவரியில் போர்நிறுத்த உடன்பாடு முறைப்படி கையெழுத்திடப்பட்ட பின்னர் 2006 யூலையில் மாவிலாறில் போர் வெடிக்கும் வரை ஒரு நீண்ட அமைதியையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக போரற்ற அந்த அமைதி நிலை நீடித்தது.
அதனை முழுமையான அமைதி நிலை என்று கூறமுடியாது. இன்னொரு போருக்கான ஆயத்தநிலை என்று உறுதியாகக் கூறலாம்.
ஆரம்பத்தில் அமைதியான சூழல் நிலவிய போதும் பின்னர் மெல்ல மெல்ல ஒரு நிழல் யுத்தத்தினுள் அந்த அமைதிக்காலம் நுழைந்தது.
ஒரு கட்டத்தில் அது ஒரு மென்தீவிர யுத்தமாக மாறியது.
கடைசியாக அந்த அமைதியை முறித்துக் கொண்டு நான்காவது கட்ட ஈழப்போர் வெடித்தது.
போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போதிலும் இரு தரப்புமே தம்மைப் போருக்குத் தயார்படுத்திக் கொண்ட அமைதிக்காலம் அது.
அந்தக் காலகட்டத்தில் இராணுவத் தலைமையக புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டும் மற்றொரு ஆய்வறிக்கை ஒன்று வெளியானது.
அந்த ஆய்வை செய்திருந்தவர் மருத்துவ கலாநிதி ருவான் ஜெயதுங்க.
இலங்கையில் போரிடுவோரை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போர் அழுத்தங்களின் உளவியல் முகாமைத்துவம் என்ற ஆய்வே அது.
அந்த ஆய்வுக்காக இராணுவத் தரப்புக் கொடுத்த புள்ளிவிபரங்களின் படி மூன்று கட்ட ஈழப்போர்களிலும் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 17,066 ஆகும்.
அந்தக் காலகட்டத்தில் 9220 அதிகாரிகளும், 20,266 படையினருமாக மொத்தம் 29,486 படையினர் காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்ததாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தரப்பில் அந்தக் காலகட்டத்தில் 17,903 பேர் மரணமானதாகவும், அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இராணுவத் தலைமையகத்தினால் அண்மையில் ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி காணாமல் போனவர்களையும் சேர்த்து மூன்றாம் கட்ட ஈழப்போரின் முடிவில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 18,123 ஆகும்.
(ஈழப்போர் 1ல் - 1031 பேர், ஈழப்போர் 2ல் - 4535 பேர், ஈழப்போர் 3ல் - 12,577 பேர்)
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது காணாமல் போனவர்களை கொல்லப்பட்டவர்களாக இராணுவத் தரப்பு கணிக்கவில்லை.
இதனால் மூன்று கட்ட ஈழப்போர்களிலும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 3718 படையினரையும் உள்ளடக்காமலேயே அந்த ஆய்வுக்காக 17,903 படையினர் கொல்லப்பட்டதான தரவு வழங்கப்பட்டது என்று கருதலாம்.
இந்த ஆய்வுக்காக வழங்கப்பட்ட தரவிலும் அண்மையில் வழங்கப்பட்ட தரவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.
ஆனால் காணாமல் போன படையினர் இதில் உள்ளடக்கப்படாது போனால் மிகப் பெரிய வேறுபாடு இருப்பதைக் காணலாம்.
அதுபோலவே மூன்று கட்ட ஈழப்போர்களிலும் படுகாயமடைந்து அங்கவீனமடைந்த படையினரின் மொத்தத் தொகை 29,486 என்று கூறுகிறது இந்த ஆய்வு,
ஆனால் இராணுவத் தலைமையகம் அண்மையில் வழங்கிய ஈழப்போர்கள் பற்றிய தனித்தனியான புள்ளிவிபரங்களின் படி மூன்று கட்ட ஈழப்போர்களிலும் படுகாயமடைந்த படையினரின் எண்ணிக்கை 15,606 ஆகும்.
இதன்படி ஆய்வறிக்கைக்கு வழங்கப்பட்ட தரவுகளுக்கும், இந்தத் தரவுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளதைக் காணலாம்.
இதில் சரியான எண்ணிக்கை எது என்று சுயாதீனமான தரப்புகளால் முடிவுக்கு வருவது முடியாத காரியம்.
இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போன்று போர் தொடர்பாக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு இடையில் பெரியளவில் முரண்பாடுகள் இருந்தன என்பதே முக்கியமானது.
மூன்றாம் கட்ட ஈழப்போருக்கும் நான்காம் கட்ட ஈழப் போருக்கும் இடையில் நிலவிய போர்நிறுத்த காலத்தில் ஒரு மென்தீவிர யுத்தம் நடந்தது யாவரும் அறிந்ததே.
அந்தக் காலகட்டத்தில் இருதரப்புமே ஆட்டிலறிகள், மோட்டார்கள் கொண்டு மோதிக்கொள்ளா விட்டாலும் தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் மோதிக் கொண்டன.
துப்பாக்கிகள் மூலமும் மறைமுகமாக சண்டையிட்டன. ஒருவரையொருவர் போட்டுத் தள்ளின.
ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
கடற்படைக் கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல்களும் நடந்தன.
அதேவேளை கொழும்பிலும் பிற பகுதிகளிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயா் அதிகாரிகளை வேட்டையாடும் சம்பவங்களும் நடந்தன.
இந்த மென் தீவிர யுத்தத்தின் பிற்காலத்தில் குறிப்பாக 2005ம் ஆண்டு டிசம்பரில் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் கிளேமோர் தாக்குதல்களும் இடம்பெற்றன.
இது தனியே இராணுவத்தினர் மீது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இடம்பெற்றன.
மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடிய பின்னர் அதனைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அது நான்காவது கட்ட ஈழப்போர் தொடக்கம் எனலாம்.
அத்துடன் ஆட்டிலறித் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுகளும் ஆரம்பமாகின.
ஆனாலும் போர்நிறுத்த உடன்பாடு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது.
கடைசியாக 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி முகமாலை முன்னரங்கில் விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதலை அடுத்து நான்காவது கட்ட ஈழப்போர் அதிகாரபூர்வமாக வெடித்தது.
அந்தப் போர் 2009ம் ஆண்டு மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கும் வரை ஓயாமல் நடந்தது.
முகமாலையில் புலிகள் தொடுத்த போர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அதற்காக புலிகள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளிலும் தரையிறங்கினர்.
ஆனால் முகமாலை முன்னரங்கை உடைத்து எழுதுமட்டுவாழ் வரை முன்னேறிய புலிகளால் கிளாலி படைத்தளத்தை வீழ்த்த முடியாது போனது.
அதுபோலவே மண்டைதீவு, அல்லைப்பிட்டியிலும் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாது போனது.
அதனால் புலிகளின் யாழ்ப்பாணம் மீதான தாக்குதல் திட்டம் பிசுபிசுத்துப் போய் கைவிடப்பட்டது.
எனினும் நான்காவது கட்ட ஈழப்போரில் வடமுனையில் நாகர்கோவில், எழுதுமட்டுவாழ், கிளாலி இராணுவ வேலியை கடைசி வரை பாதுகாப்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர்.
ஆனையிறவைப் படையினர் கைப்பற்றும் வரை அதைத் தக்கவைத்துக் கொண்டனர்.
நான்காவது கட்ட ஈழப்போரில் கிழக்கில் மூதூரைக் கைப்பற்றும் ஒரு தாக்குதலையும் புலிகள் நடத்தினர்.
ஆனால் சில நாட்களிலேயே அந்த முயற்சியும் படையினரால் முறியடிக்கப்பட்டது.
இரு வாரங்களுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் நடந்த வாகன விபத்தில் மரணமான கேர்ணல் ரவீந்திர ஹன்துன்பத்திரன இந்த முறியடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர்.
அப்போது மேயராக இருந்த அவரது தலைமையிலான 2வது கொமாண்டோ படைப்பிரிவு தான் காலாற்படையினருடன் இணைந்து மூதூர் பிரதேசத்தில் புலிகளிடம் இழந்த பிரதேசங்களை மீட்டது.
நான்காவது கட்ட ஈழப்போரின் முக்கியமான ஒரு விடயம் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகள் கிழக்கிற்கும் பரவலாக்கப்பட்டது தான்.
122 மி.மீ., 152 மி.மீ. ஆட்டிலறிகளை விடுதலைப் புலிகள் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் நிறுத்திச் சண்டையிட்டது ஈழப்போர் வரலாற்றில் அதுவே முதல்முறை.
புலிகள் திருகோணமலைத் துறைமுகம் கடற்படைத் தளங்கள் மீது ஆட்டிலறிக் குண்டுகளைப் பொழிந்த போது அரசாங்கம் ஆடிப்போனது உண்மை.
அதுபோலவே இன்னொரு விடயம் விடுதலைப் புலிகளின் விமானப்படை.
சில இலகு ரக விமானங்களை வைத்து வான் ஆதிக்கத்திலும் பலமான நிலையில் இருப்பதாக ஏற்படுத்திக்அகொண்ட பிம்பம், அரசின் போர்த் திட்டத்தில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தியது.
இன்று வரை உலகில் அரசு இல்லாத அமைப்பு ஒன்று விமானப்படையை வைத்திருந்து குண்டுகளை வீசியதான வரலாறு பதிவாகவில்லை.
நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் இனிமேல் உலகில் வேறெங்கும் அப்படியொரு வரலாற்றுப் பதிவு உருவாகும் என்று எதிர்பார்ப்பதும் கடினம்.
நான்காவது கட்ட ஈழப்போர் இரண்டு தரப்புமே நவீன தொழில் நுட்பங்களையும் தந்திரோபாயத் தாக்குதல்களையும் கொண்டதாகவே தொடங்கியது.
இரு தரப்புமே மரபுவழிப் படையணிகளைக் கொண்டிருந்த போதிலும் மரபுசாரா முறைகளில் சண்டைகளை நடத்தவே விரும்பினர்.
புலிகளைப் பலவீனப்படுத்த இராணுவத் தரப்பு கெரில்லா பாணியில் தாக்குல்களை நடத்தியது.
தமது பக்க சேதங்களைக் குறைத்து படைபலத்தைக் கட்டிக்காக்க புலிகளும் அதனை விரும்பினர்.
ஈழப்போர் 4 கிட்டத்தட்ட ஒரு ஆட்டிலறிகள், மோட்டார்களின் யுத்தமாகவே இருந்தது.
ஈழப்போர் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாதளவுக்கு இந்த பீரங்கிச் சமர் அமைந்தது.
போரிடும் தரப்பினருக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய புள்ளிவிபரங்களில் இருந்து இதன் தாக்கத்தை உணர்ந்து கொள்வது இலகுவானது.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten