தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 juni 2013

விடுதலைப் புலிகளைச் சமபல நிலைக்கு உயர்த்திச் சென்ற ஈழப்போர்-3

இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
முன்னைய போர்களில் இருந்து இது வித்தியாசமான பரிமாணத்தை அடைந்திருந்தது.
காரணம் விடுதலைப் புலிகள் மரபுவழிப் படையணிகளைக் கொண்ட ஒரு இராணுவமாக மாறியது இந்தக் காலகட்டத்தில் தான்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பூநகரிப் படைத்தளத்தை விலக்கிக் கொள்ளும் விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டு முறிந்துபோன நிலையில் விடுதலைப் புலிகளே போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்தனர்.
திருகோணமலை கடற்படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ரணசுரு, சூரய ஆகிய பீரங்கிப் படகுகளை கடற்புலிகள் தாக்கியழித்ததுடன் ஆரம்பமானது இந்த மூன்றாவது கட்ட ஈழப்போர்.
1995 ஏப்ரல் 19ம் திகதி வெடித்த மூன்றாவது கட்ட ஈழப்போர் 2002 பெப்ரவரி 22ம் திகதி அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடும் வரை தொடர்ந்தது.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இந்தப் போர் நீடித்தது.
விடுதலைப் புலிகள் சந்தித்த, இலங்கையில் நடந்த ஐந்து கட்டப் போர்களிலும் மிகவும் நீண்டது இதுதான்.
ஈழப்போர்-1 1983 தொடக்கம் 1987 வரை நான்கு ஆண்டுகளும், இந்திய - புலிகள் போர் 1987 தொடக்கம் 1990 வரை சுமார் இரண்டரை  ஆண்டுகளும், ஈழப்போர்-2 1990 தொடக்கம் 1994 வரையான கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளும், ஈழப்போர்-4 2006 தொடக்கம் 2009 வரையான சுமார் மூன்று ஆண்டுகளும் நீடித்தது.
ஒருவகையில் சொல்லப்போனால் இருதரப்பையுமே முடிவில் களைப்படைய வைத்த போர் என்றால் அது ஈழப்போர் 3 தான்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நடந்த போர் மக்களையும் சரி, போரில் ஈடுபட்ட தரப்பினரையும் சரி சலிப்படைய வைத்தது.
கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை விடுதலைப்புலிகள் சாதகமாக அணுகியதற்கு இதுவும் ஒரு காரணம்.
செப்டம்பர் 11 அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின்னர் சா்வதேச அரசியல் சூழல் தான் விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேச வைத்ததாக கருதப்பட்டாலும், நீண்ட போரில் ஏற்பட்ட ஒரு சலிப்புணர்வு அதற்கு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாதது.
ஓயாத போர், குண்டு வீச்சுகள், பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்ட பின்னடைவுகள், நோய்கள் என்று வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடையே சோர்வை ஏற்படுத்தத் தொடங்கியது.
இந்தச் சோர்வு விடுதலைப் புலிகள் மத்தியிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
அந்தச் சூழலைச் சமாளித்துக் கொள்ள தற்காலிக நிம்மதியை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு ஓய்வு தேவைப்பட்டது.
சர்வதேச அரசியல் சூழமைவுகளும் கொழும்பின் ஆட்சி மாற்ற அறிகுறிகளும் சாதகமாக அமைந்து போனது விடுதலைப் புலிகளுக்கு அதிர்ஸ்டமே.
ஆனால் இந்த அதிர்ஸ்டமே பின்னர் துரதிர்ஸ்டமாகவும் மாறியது.
விடுதலைப் புலிகளின் பெருந் தோல்விக்கு இந்த தற்காலிக அமைதியே வழி வகுத்தது என்பதையும் மறுக்க முடியாது.
ஈழப்போர் 3 தான் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாத சக்தியாக உலகினால் உணர வைத்தது.
இந்த ஏழு ஆண்டு காலப் போர் ஒருபோதும் தொடர்ச்சியாக எந்தவொரு பக்கத்துக்கும் சாதகமானதாக அமைந்து கொள்ளவில்லை.
திருகோணமலையில் பீரங்கிக் கப்பல்கள் மூழ்கடிப்பு, குறிப்பிட்ட சில படைமுகாம்கள் மீதான தாக்குதல்களில் கிடைத்த வெற்றி, வடக்கில் இரண்டு அவ்ரோ விமானங்களை வீழ்த்தியது, வடக்கில் படைநகர்வு முறியடிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் கை ஆரம்பத்தில் ஓங்கியிருந்தது.
ஆனால் அந்த நிலை நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லை.
வெலிஓயாவில் ஐந்து இராணுவ முகாம்களைத் தாக்கியழிக்கும் புலிகளின் திட்டம் பெரும் தோல்வியாக அமைந்ததுடன் புலிகள் பக்கம் சார்ந்திருந்த வெற்றி மெல்ல மெல்ல அரச படைகளின் பக்கம் மாறத் தொடங்கியது.
இதன் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தை புலிகள் இழந்து போனது அவா்களுக்கு பெரிய பின்னடைவாக மாறியது.
இதனால் போரின் மையம் கட்டளை அமைப்புகள் அனைத்தும் வன்னிக்கு கைமாறியது. இறுதிவரை அந்தநிலையே தொடர்ந்தது.
யாழ்ப்பாணத்தை இழந்த பின்னர் அரச படைகள் வெற்றி மிதப்பில் இருக்க முல்லைத்தீவு படைத்தளத்தை அடித்து வீழ்த்திய புலிகள் மீண்டும் தமது நிலையைத் தக்கவைத்துக் கொண்டனர்.
இலங்கையின் வரலாற்றில் இரண்டு, மூன்று நாட்களுக்குள் சுமார் 1500 பேருக்கும் அதிகமான போரிடும் தரப்பினர் கொல்லப்பட்ட முதல் தாக்குதலாக அது அமைந்தது.
புலிகளின் அந்த வெற்றியை சமனிலைப்படுத்தும் அடுத்த நடவடிக்கையை படைத்தரப்பு தொடங்கியது.
முல்லைத்தீவுக்குப் பதிலாக கிளிநொச்சியைப் பிடித்துக் கொண்டது.
தொடர்ந்து அந்த ஏ9 வீதிக்கான சமராக மாறிய போது மீண்டும் கிளிநொச்சியைப் புலிகள் பிடித்துக் கொண்டனர்.
ஆனாலும் தென்முனையில் மாங்குளத்தைக் கடந்து சென்ற அரச படையினர் ஏ9 வீதியை முழுமையாகப் பிடித்து விடுவரோ என்று அஞ்சப்பட்ட சூழலில் புலிகள் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் இழந்து போன பெரும் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டனர்.
அத்துடன் போரின் போக்கு விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகத் திரும்பியது.
ஆனையிறவுப் பெரும் தளத்தையும் தள்ளிக் கொண்டு முகமாலை வரையும் முன்னேறிய புலிகள் பின்னர் யாழ்ப்பாண நகரின் எல்லை வரை வந்து நின்றனர்.
அந்த நெருக்கடியில் இருந்து படைத்தரப்பு ஓரளவுக்கு மீண்டு கொண்டாலும் மூன்றாவது கட்ட ஈழப்போர் புலிகளை ஒரு பலமான நிலைக்கே கொண்டு சென்றது.
அக்னிகீல என்ற பெயரில் வடக்கில் அரச படையினர் மேற்கொண்ட படை நகர்வு பெரும் தோல்வியாக முடிந்து போக, மூன்றாவது கட்ட ஈழப்போர் புலிகளை மேலாதிக்க நிலைக்கு கொண்டு சென்றிருந்தது.
இந்த மூன்றாம் கட்ட ஈழப்’போரில் இலங்கை இராணுவத்தினரின் தரப்பில் 420 அதிகாரிகளும் 9,028 படையினருமாக மொத்தம் 9,448 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவத் தலைமையகத்தின் அதிகாரபூர்வ தகவல்.
இந்தக் காலகட்டத்தில் 93 அதிகாரிகளும் 2,625 படையினருமாக மொத்தம் 2,718 இராணுவத்தினர் காணாமல் போயினர்.
காணாமல் போன படையினரும் கொல்லப்பட்டவர்களாகவே கருதப்படுவதால் ஈழப்போர் 3ல் இலங்கை இராணுவம் 11, 746 படையினரை இழந்துள்ளது.
மேலும் இந்தப் போரில் 492 அதிகாரிகளும் 11,906 படையினருமாக மொத்தம் 12,398 படையினர் படுகாயமடைந்தனர்.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் 349 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும் 254 கடற்படையினர் இந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடனான சண்டைகளில் காணாமல் போயினர்.
காணாமல் போன படையினரையும் சேர்த்து இந்த ஏழு ஆண்டு காலப் போரில் இலங்கைக் கடற்படை 603 படையினரை இழந்துள்ளது.
இந்தப் போரில் படுகாயமடைந் 241 கடற்படையினரில் 24 பேர் மட்டுமே தொடர்ந்து சேவையாற்றக் கூடிய நிலையில் இருந்தனர்.
ஏனைய 217  பேரும் ஓய்வு பெற்றுச் செல்ல வேண்டீய நிலை ஏற்பட்டது.
இலங்கை விமானப்படையும் ஈழப்போர் 3ல் கணிசமான இழப்புகளைச் சந்தித்தது.
விடுதலைப் புலிகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பல விமானங்களை வீழ்த்தியதால் ஈழப்போர்களின் வரலாற்றிலேயே அதிக இழப்புகளை இந்தக் காலகட்டத்தில் தான் விமானப்படை சந்தித்தது.
208 விமானப் படையினர் ஈழப்போர் 3ல் கொல்லப்பட்டதுடன் மேலும் 116 பேர் காயமடைந்தனர்.
ஈழப்போர் 3ல் முப்படைகளையும் சேர்ந்த காணாமல் போனவர்கள் உள்ளடங்கலாக 12,557 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 12,755 பேர் இந்தப் போரில் படுகாயமடைந்தனர்.
இந்தப் போரில் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த படையினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளதைக் காணலாம்.
ஈழப்போர் 1 ல் முப்படையினர் தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,031 பேர், காயமடைந்தவர்கள் 180.
ஈழப்போர் 2ல் முப்படையினரின் தரப்பில் 4,535 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 2,671 பேர் காயமடைந்தனர்.
முதலிரு கட்டப் போர்களிலும் கொல்லப்பட்ட மற்றும் நிரந்தர காயங்களுக்குள்ளானவர்களின் எண்ணிக்கைகளுக்கு இடையில், இருந்த வேறுபாட்டுக்கும் ஈழப்போர் 3ல் இந்தக் கணக்கிற்கும் இடையில் பாரிய வேறுபாட்டைக் காணலாம்.
ஈழப்போர் 1ல் கண்ணிவெடிகளை மையப்படுத்திய போரில் பெரும்பலும் மரணங்களே நிகழ்ந்தன. படுகாயங்களுடன் தப்பியோர் மிகக்குறைவு.
ஈழப்போர் 2 துப்பாக்கிகள், கனரக ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட சமர்.
அதில் கிட்டத்தட்ட ஒன்றுக்குப் பாதி என்றளவில் மரணங்களும் நிரந்தர பாதிப்புள்ள காயங்களும் படையினருக்கு ஏற்பட்டன.
ஈழப்போர் 3 ஒரு மரபு ரீதியான போராகவே இடம்பெற்றது.
ஆட்டிலறிகளும், மோட்டார்களும் இந்தப் போரில் முக்கிய பங்கெடுத்தன.
இதனால் கொல்லப்பட்ட படையினருக்குச் சமமான எண்ணிக்கையினர் போர்க்களத்தில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தப்படும் காயங்களுக்கு உள்ளாகினர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் இந்தக் காலகட்டத்தில் 1995ல் 1,508 பேரும், 1996ல் 1,380 பேரும், 1997ல் 2,112 பேரும், 1998ல் 1,805 பேரும், 1999ல் 1,549 பேரும், 2000ல் 1,973 பேரும், 2001ல் 761 பேரும் உயிரிழந்தனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் மூன்றாவது கட்ட ஈழப்போரில் மொத்தம் 11,088 பேர் உயிரிழந்ததாக கூறுகிறது அதிகாரபூர்வ தகவல்.
ஆக இரு தரப்பிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி மூன்றாவது கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட மரணங்களுக்கு இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதைக் காணலாம்.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் முக்கியமான இரண்டு விடயங்கள் கடற்புலிகளும், ஆட்டிலறிகளும்.
புலிகளின் இந்த இரண்டு பிரிவுகளும் இந்தக் காலகட்டத்தில் தான் அசுரத்தனமான வளர்ச்சி கண்டன.
அது அரச படையினரை பெரிதும் நெருக்கடிக்குள்ளாக்கியது மட்டுமன்றி போரின் போக்குகளையும் திசைமாற்றி விட்டிருந்தது.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten