தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 mei 2012

எதைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது? – "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 01


பிரபாகரனின் விருப்பத்துக்கு ஏற்ப, புலிகள் என்ற இயக்கத்தை கட்டமைத்தவர் ஐயர். ஐயர் இல்லாமல் புலிகள் இயக்கம் இல்லை. இந்த உண்மையின் பின்னால் ஐயர் இல்லாமல் பிரபாகரன் இல்லை, பிரபாகரன் இல்லாமல் ஐயர் இல்லை என்பது எதார்த்தமாகின்றது. பிரபாகரன் போன்றவர்கள் கொலைகள் செய்ய, அந்தக் கொலைகளை நியாயப்படுத்தி அதை அரசியலாக்கி அமைப்பாக்கியவர்களில் ஐயர் முதன்மையானவர். ஒரு முன்னோடியாக, ஒரு நிர்வாகியாக, செயல்வீரனாக, விமர்சனத்துக்கு உள்ளாகாத நேர்மையான, தூய்மைவாதியாக ஐயர் இருந்த பின்னணியில் தான், புலிகள் இயக்கம் உருவானது. பிரபாகரன் அதன் உந்து சக்தியாக இருந்தான். இப்படித்தான் புலிகள் இயக்கம் இனவொடுக்குமுறை சார்ந்து உருவானது.
புலிகளின் அரசியல் நடைமுறை என்பது, கூட்டணியின் எதிரிகளைக் கொல்வது. அரசு இயந்திரம் மீதான வன்முறைகளைச் செய்வது. மொத்தத்தில் கொலைகளைச் செய்வதே. இந்தக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டவர்கள், இதை மீறும் போது அவர்களைக் கொல்வது. இதுதான் அதன் கட்டமைப்பு. இது தமிழீழத்தை பெற்றுத் தரும் என்று நம்பினர். இது படிப்படியாக தங்கள் இந்த அரசியல் வழிமுறையை மக்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரியது. இதற்கு வெளியில் வேறு வழிமுறை இருக்கக் கூடாது என்ற அளவுக்கு முன்னேறியது. இப்படி தாம் அல்லாத அனைத்தையும் கொன்று குவித்தது தான் புலியானது. இதைத்தான் புலிகளின் அரசியல் ஆரம்பம் முதலே வழிகாட்டியது. இதற்கு வெளியில் புலிக்கு வேறு அரசியல் எதுவும் இருக்கவில்லை.

 இங்கு தான் கதாநாயகத்தனம், வீரம், தியாகம், துரோகி என்ற குறுகிய அடைமொழிக்குள் அரசியல் சுருங்கிக் போனது. கொலை தான் தொடக்கமும் முடிவுமாகி அதன் மொழியானது.

அன்று கூட்டணி துரோகியாக காட்டியவர்களைக் கொல்வது புலியின் அரசியலாகியது. கூட்டணியின் அரசியல் சார்ந்து, அந்த அரசியல் மீதான ஈர்ப்பு ஏற்படுகின்றது. இந்த அரசியல் மீதான ஆர்வம், ரசிப்பும், இதை மீறுபவர்களைக் கொல்லும் அரசியலாக மாறுகின்றது. இதை தனிமனித வீரதீர செயலாக, தமிழீழத்தின் படிக்கல்லாக கூட்டணி போற்றி மாலை சூட்டியது. இதை செய்பவர்கள் பற்றிய பிரமைகள், கற்பனைகளை உருவாக்கி கதாநாயகத்தனம் இதன் மேலான காதலாக மாறுகின்றது. தாமும் இதில் ஈடுபடும் ஈர்ப்பும் துடிப்பும் இதனால் மேலோங்குகின்றது. தன்னிச்சையாகவும், தன்னியல்பாகவும் உதிரியாகவும் பலர் ஈடுபடுகின்றனர். இப்படி ஈடுபட்டவர்கள், இதில் ஆர்வம் கொண்டவர்கள், அரசால் தேடப்பட்டவர்களுக்கு இடையில் இணைப்பின் ஒரு புள்ளியில்தான், ஐயர் – பிரபாகரன் இணைகின்றனர்.

பிரபாகரனின் அனைத்துச் செயலுக்கும் உடன்பட்ட ஐயர், பிரபாகரனின் முதுகெலும்பானார். இந்தப் பின்னணியில் பிரபாகரனுக்கு ஏற்ற புலிகள் அமைப்பை உருவாக்கினர். எண்ணிக்கை பெருக முரண்பாடுகள் உருவாகின்றது. மறுபுறத்தில் பிரபாகரனின் தனிப் போக்கும், அமைப்பினுள்ளான பலமுனை முரண்பாடாக மாறுகின்றது. இதற்கு வெளியில் அரசியல் முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் தொடங்கி தனிநபர் முரண்பாடுகள் வரை தோன்றுகின்றது. இந்த நிலையில் இந்த அமைப்பை நிர்வகித்த ஐயர், இதைத் தீர்க்க முற்படுகின்றார். தனிநபர் முரண்பாடாக இருந்தவரை கொலை தீர்வாக இருந்தது. அணிகளாக, குழுக்களாக முரண்பாடு உருவான போது, பிரபாகரனின் வழிகளில் ஐயர் தீர்வு காண முடியாமல் போகின்றது.

இதன் போது மற்றவர்களால் தூண்டப்பட்ட நிலையில் தற்செயலாக வாசித்த "லெனினின் வாழ்க்கை வரலாறு" என்ற நூல் மூலம், ஐயர் இதை தீர்க்கும் புதிய வழியை காண்கின்றார். முதன் முதலில் பிரபாகரனின் வழிமுறைக்கு நேர்மாறான வழிமுறை ஒன்றை வந்தடைகின்றார். இப்படித்தான் தொடங்கியது பிரபாகரன் ஊடான ஐயரின் முரண்பாடு. ஏற்கனவே இருந்த முரண்பாடுகள், ஐயரின் முரண்பாட்டுக்குப் பின்னால் அணிதிரளுகின்றது. ஐயரின் இந்த முரண்பாடு, புலிகளின் அரசியல் வழிமுறையுடனான அரசியல் முரண்பாடாக மாறுகின்றது.

புலிகளில் இருந்து ஐயரின் உடைவு முதல், புளட்டில் இருந்து விலகல் வரையான அனைத்தும், இந்த வகையில் அமைந்தது. இந்த நிலையில் "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மூலம் இதைக் கூற முற்பட்டார்.

இந்த நூல் இதை வெறும் சம்பவமாக காட்டுகின்றது. அரசியலூடாக, அரசியல் உணர்வுடன் இதை முன்வைக்கத் தவறி இருக்கின்றது. பிரபாகரன் மீதான கழிவிரக்கம் ஏற்படும் வண்ணம், அவரை ஒரு அப்பாவியாகக் காட்டி, அனுதாபத்துடன் அணுகியிருகின்றது. பிரபாகரன் வழிமுறை என்பது ஒரு அரசியல் வழிமுறை என்பதை, இந்த நூல் மறுதலிக்கின்றது. வலதுசாரிய அரசியல் வழியும், இதன் இராணுவ வடிவமும் இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த நூல் காணவும், காட்டவும் தவறி இருக்கின்றது. இடதும் வலதுமற்ற சாக்கடையில் சம்பவத்தை மிதக்க விட்டு இருக்கின்றது.

புலியில் இருந்து விலகிய ஐயர் மற்றொரு அமைப்பாக மாறிய போது, ஏற்பட்ட அரசியல் உணர்வை இந்த நூல் முற்றாக இருட்டடிப்புச் செய்கின்றது. வெறும் சம்பவமாக, உணர்ச்சியற்ற உணர்வாக இது காட்ட முனைகின்றது.

இடதுசாரிகள் தம்மை வழிகாட்டவில்லை என்று குற்றஞ்சாட்டும் இந்த நூல், இந்த நூல் மூலம் அந்த இடதுசாரியத்தை கற்றுக்கொடுத்து இருக்கின்றதா!? இல்லை. இன்றைய இடதுசாரிகள் தாங்கள் என்பதை, இது மறுதலித்து இருக்கின்றது. எதைக் கற்றுக்கொடுத்து, எதை வழிகாட்டுகின்றது!? இதைப் படித்து தன் தவறை உணர்ந்து, சரியான அரசியல் வழிமுறைக்கு வந்துவிடுமளவுக்கு எதை உணர்வுபூர்வமாக பேசியிருக்கின்றது?

இந்த நூல் புலிகள் இருந்தபோது வெளிவந்திருந்தால், அரசியல் ரீதியாக எதையும் கற்றுக் கொடுத்தா இருக்கும்? சொல்லுங்கள் இன்று எதைத்தான் இந்த நூல் கற்றுக் கொடுக்கின்றது?

'புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன்" எதை மற்றவர்கள் படிப்பதை விரும்பவில்லையோ, அதை இந்த நூல் சாதித்து இருக்கின்றதா? மற்றவர்களைக் கொன்றதன் மூலம் புலிகள் மாற்றுக் கருத்தை மக்கள் முன் தடைசெய்த அரசியல் பின்புலத்தில், புலிகள் கண்டு அஞ்சிய அரசியலையும் அந்த உள்ளடக்த்தையும் இந்த நூல் கொண்டு வந்துள்ளதா? இல்லை.

மாறாக கொலைகளை மட்டும் செய்யும் புலி அரசியலை மறுக்கும் எல்லைக்குள் இந்த நூல் குறுக்கப்பட்டு இருக்கின்றது. அதை மட்டும் தவறாக காட்ட முற்பட்டு இருக்கின்றது. ஒரு வலதுசாரிய அரசியல் வழிமுறை அது என்பதை இந்த நூல் மறுத்து நிற்கின்றது.

இந்தப் பின்புலத்தில் புலிகளை அனுதாபம் கொண்டு, அரசியல்ரீதியாக பாதுகாக்கின்றது. இதைத் தொகுத்தவர்கள், இதை வெளியிட்டவர்கள், தமிழ் மக்கள் முன் இந்த நூலைப் பற்றி எடுத்துக் கூறுபவர்கள், புலியின் தமிழ்தேசிய வலதுசாரிய ஒளியில் அதன் அரசியலை பாதுகாக்கின்றனர். புலி மீதான சில விமர்சனங்கள் சார்ந்து பினாத்துகின்றனர். இந்த அரசியல் பின்புலத்தில், இந்த நூல் பிரபாகரனைப் போற்றும் புலிகளின் அரசியல் கண்ணோட்டத்துக்கு மேலும் வலுச் சேர்த்து இருக்கின்றது.

தொடரும்

பி.இரயாகரன்

08.05.2012
எதைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது? – "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 01

Geen opmerkingen:

Een reactie posten