குறிப்பு : அமைப்புக் குழுவில் யார் யார்? அவர்கள் எந்த இயக்கங்கள்? என்று கேட்டனர்.
குறிப்பு : துண்டுப்பிரசுரம் எங்கே அடித்தீர்கள்? என்று கேட்டனர்.
குறிப்பு : 07.05.87 அன்று சலீம் என்பவர் விஜிதரன் போராட்டத்தில் எடுத்த படங்களுடன் வந்தார் (இவை சோதிலிங்கம் வீட்டில் கைப்பற்றியது)
குறிப்பு : படத்தில் உள்ளவர்கள் பெயர்கள் கேட்டெழுதப்பட்டது. அவர்களது அரசியல் நிலை பற்றியும் கேட்கப்பட்டது.
விளக்கம் : பல்கலைக்கழக போராட்டம் தொடர்பான பல்வேறுபட்ட தரவுகளை அவர்கள் வைத்திருந்தனர். பல்கலைக்கழக போராட்டப் படங்களை, சோதியை கைது செய்யத் தேடிய போது அவரின் வீட்டில் இருந்து 1987 இல் கைப்பற்றியிருந்தனர். இதன் இரண்டாவது பிரதி ஒன்றை நான் எடுத்திருந்தேன். அது தற்போதும் என்னிடம் உள்ளது. பல்கலைக்கழக போராட்ட ஆவணங்களை, பல்கலைக்கழகத்திலும் சோதி வீட்டிலும் அவர்கள் அடாத்தாகவே கைப்பற்றியிருந்தனர். பல்கலைக்கழக தலைமை, பகிரங்கமாகவே மாணவர்கள் கூட்டிய ஒரு பகிரங்க கூட்டத்திலேயே தெரிவாகி இருந்தனர். இதை மீண்டும் உறுதி செய்ய என்னிடம் கேட்டனர். சோதி வீட்டில் கைப்பற்றிய படத்தை கொண்டு வந்து, அதைக் காட்டி சிலரை குறிப்பாக கேட்டனர். இதில் இவர்களின் அரசியல் தொடர்பு என்ன எனக் கேட்டனர். நான் அவர்களுக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை என்றேன். அவர்கள் ஓரு சிலரின் கடந்தகால இயக்க அரசியல் பற்றியும், சொந்த இயக்கமே ஜனநாயகத்தை மறுத்த போது, அவர்கள் அதற்கு எதிரான அவர்களின் பகிரங்க போராட்டம் பற்றியும் கதைத்தேன். இவர்கள் என்.எல்.எப்.ரி.யா எனக் கேட்டனர். நான் இல்லை என்றேன்.
உண்மையில் பெருபான்மையானவர்கள் ஜனநாயகத்தை நேசித்த மாணவர்கள். விமலேஸ்வரன் எமது புதிய ஜனநாயக மாணவர் அமைப்பின் செயல்குழுவின் இரகசிய உறுப்பினராவார். அவன் படுகொலை செய்யப்படும் வரை, எமது அமைப்புக்கு வெளியில் அதுபற்றி யாருக்கும் தெரியாது. பல்கலைக்கழக துண்டுப்பிரசுரங்களை எங்கே அடித்தீர்கள் என்று கேட்டனர். நான் தெரியாது என்றேன்.
100க்கு மேற்பட்ட தன்னியல்பாக வெளிவந்த துண்டுபிரசுரங்களை யார் அடித்தது என்று கேட்டார். எங்கே அடித்தது என்றார். நான் தெரியாது என்றேன். இதைவிட இந்த போராட்டத்தில் 100க்கு மேற்பட்ட வெகுசன அமைப்புகள் போராட்டம் சார்பாக, தமது அறிக்கைகளை தன்னியல்பாக சுயமாக விட்டனர். அத்துடன் வெகுசன அமைப்புகளை உள்ளடக்கிய மாணவர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இது மக்களின் ஜனநாயக கோரிக்கையை முன்வைத்தது. பரந்த அளவில் வடக்குப் பிரதேசம் தழுவிய வகையில் பாடசாலைகளில், ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட குழுக்களை உருவாக்கியதுடன், அவைகள் பிரதேசரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது. இவைகள் பல்கலைக்கழகத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டது. இப்படிப் போராட்டத்தினை பரந்த மக்களின் அடித்தளத்துடன் கட்ட தீவிரமாக முயன்றோம். இதைவிட சொந்த இயக்கத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக ஜனநாயகத்தை முன்னிறுத்தி பிரிந்து நின்ற மாணவர் அமைப்புகளை பரஸ்பரம் இதனுடன் ஒருங்கிணைத்து, அவர்களை முன்முயற்சியுடன் செயல்பட வைத்தோம். பரந்த அளவில் ஜனநாயக கோரிக்கைக்கான தன்னியல்பான ஆதரவை ஒருங்கிணைக்கும் அடித்தளத்தை உருவாக்குவதில் தனிப்பட்ட வகையில் நான் கடுமையாக உழைத்ததுடன், அதன் எதிர்கால முக்கியத்துவத்தை உணர்ந்தும் அன்றும் செயல்பட்டேன்.
குறிப்பு : விஜிதரனின் போராட்டத்தை திசைதிருப்பிய போராளிகள் யார்? எனக் கேட்டனர்.
குறிப்பு : 07.05.87 இரவு இனந்தெரியாத ஒரு நபரும் மாஸ்ரரும் வந்தனர்.
குறிப்பு: இனந்தெரியாத நபர் விஜிதரன் ஊர்வலத்தில் 50 கலிபர் வர என்னடா விசிலடிக்கிறீங்களாடா எனக் கூறித் தாக்கினான்.
குறிப்பு : ஒளவையின் லவ்வர் யார் எனக் கேட்டார்?
குறிப்பு : ஸ்ரேலா ஏன் வந்து நிற்கிறாள்?
குறிப்பு : விஜி போராட்டக் கவிதைகள் யாரடா எழுதியது?
குறிப்பு : பாதி சுதந்திரம் வந்து விட்டதடா மிச்சம் என்னடா?
குறிப்பு : ஒரு கவிதை சொல்லடா? என்று கேட்டு அடித்தனர்.
குறிப்பு : அராஜகத்துக்கு எதிராகவாடா போராடுகிறீர்கள்? இந்த அராஜகம் எப்படி? என்றான்.
குறிப்பு : உன்னைப்பற்றி விபரத்துடன் நாளை வருகிறேன் என்று கூறிச் சென்றவன் மீண்டும் வரவில்லை.
விளக்கம் : பல்கலைக்கழக மாணவர் போராட்டம், புலிகளின் மக்கள்விரோத பாசிசத்துக்கு மிகவும் சவால் விடுவதாகவே அமைந்தது. பரந்துபட்ட மக்கள் சுயேட்சையாக, தத்தம் கோரிக்கைகளுடன் தாமாக முன்வந்து போராடிய போராட்டமாக வளர்ச்சியுற்றது. மக்கள் பெரு மூச்சு விட்டாலே, சித்திரவதையையும் படுகொலையையுமே பதிலடியாக தமிழ் தேசிய இயக்கங்கள் கொடுத்தன. இதை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தினை, மக்கள் தமது சொந்தக் கருத்தை தன்னியல்பாக முன்வைக்கும் போராட்டமாக மாற்றியது. அத்துடன் இந்தப் போராட்டம் ரெலோ என்ற இயக்கத்தை புலிகள் வீதிவீதியாக படுகொலை செய்தும், உயிருடன் கொழுத்தி பயங்கரம் விளைவித்த பின்னாலும் நடந்த முக்கியமான போராட்டமாகும். பாசிசத்தை நேருக்கு நேர் எதிர் கொண்டு, மூர்க்கமாகவே இப் போராட்டம் எழுச்சியுற்றது. நூற்றுக்கணக்கான ரெலோ உறுப்பினர்களை வீதிவீதியாக படுகொலை செய்தது மட்டுமின்றி, பலரை உயிருடன் வீதிகளின் கொழுத்திய வக்கிரம் பிடித்த பாசிட்டுகளின் பயங்கரவாத பீதி நிலவிய ஒரு நிலையில், இந்தப் போராட்டம் உருவானது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கிய மாணவர்களிடையே, ஒருமித்த அரசியல் பார்வை இருக்கவில்லை. அத்துடன் தெளிவான அரசியல் நோக்கம் இருக்கவில்லை. குறிப்பாக போராட்டத்துக்கு உத்தியோகபூர்வமாக தலைமை தாங்கிய சோதி, ஊசலாட்டத்தையே ஆதாரமாக கொண்டு போராட்டத்தை அடிக்கடி கைவிடக் கோரினான். 2001இல் புலிகளின் பினாமியாகி பாசிசத்துக்கு கொள்கை விளக்கமளித்து கருத்து கூறுமளவுக்கு சீரழிந்தான். அன்று தலைமையில் ஏற்பட்ட ஊசலாட்டங்களை முறியடிக்க, விமலேஸ்வரன் உண்ணாவிரத்தில் இருந்து எழுந்து வந்து மேடையில் பேச வேண்டியும் இருந்தது. உண்ணாவிரதிகளிடையேயும், வெளியிலும் விமலேஸ்வரனின் உறுதியான பங்களிப்பே, ஊசலாட்டத்தை குறைந்தபட்சம் முறியடித்தது.
போராட்டத்தில் அன்று கொள்கை வழிப்பட்ட ஒரு சரியான தலைமை இருக்கவில்லை. ஆனால் குறிப்பாக ஜனநாயக கோரிக்கையில் ஒன்றுபட்ட அரசியல் தலைமையை பல்கலைக்கழகம் பெற்றிருந்தது. இதற்குள்ளும் அரசியல் ரீதியாக வழிநடத்தக் கூடிய, திறமை வாய்ந்த முன்னணி சக்திகள் தலைமை தாங்கினர். அரசியல் கோசங்கள், உத்திகள், பதிலடிகள், போராட்ட நடைமுறைகள் சார்ந்து சில முரண்பாடுகள் இருந்தபோதும், மிகத் திறமையாக கையாளப்பட்டது. சொந்த அரசியல் குறைபாடும், மாணவருக்கே உரிய வர்க்க ஊசலாட்டங்களும் போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதில் நெருக்கடியைச் சந்தித்தது. ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புரீதியான பாசிட்டுகளை தொடர்ச்சியாக எதிர்கொள்ள திறனற்றுப்போனது. இதற்கு தலைமைதாங்கும் வண்ணம், வெளியில் அமைப்பு எதுவும் இருக்கவில்லை.
நீடித்த இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியில் யாழ் நகரை நோக்கி நடந்த பல ஊர்வலங்களின் போதும், அதைத் தொடர்ந்து நடந்த பிரமாண்டமான கூட்டங்களையும், வீதி மறியல் போராட்டங்களையும் தடுக்க புலிகள் பகிரங்கமாகவே மோதினர். இறுதியாக நடந்த பேரணியைக் குழப்ப பிரபாகரனின் பெயரில் போட்டி ஊர்வலம் ஒன்றை நடத்தினர். பல்கலைக்கழகத்தை நோக்கி மக்கள் திரள்வதை தடுக்க, போக்குவரத்துக்களை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இருந்தபோதும் இறுதியாக நடந்த பல்கலைக்கழக மாணவர் ஊர்வலம், திட்டமிட்டபடி பல ஆயிரம் மக்களுடன் புறப்பட்டது. பாசிட்டுகளின் பல தடைகளையும் கடந்து, பாசிட்டுகளை எதிர்த்து யாழ் மண்ணில் வரலாறு காணாத அளவு மக்கள், தன்னியல்பாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பாசிட்டுக்களை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஊர்வலத்துக்கு நேர் எதிராகவே, அதே வீதியில் பாசிட்டுகள் திடீரென தமது எதிர் ஊர்வலத்தை நடத்தினர். இடையில் இரண்டும் நேருக்குநேர் சந்தித்த போது, மோதல் உருவாகும் நிலைமை தோன்றியது. புலிப் பாசிட்டுகளுக்கு எதிராக அமைந்த ஊர்வலத்தில், பாசிட்டுகளின் ஊர்வலத்தை விட 10 மடங்கு அதிகமானோர் கலந்து கொண்டனர். புலிகள் மோதலை உருவாக்கி போராட்டத்தை சிதைக்க கனவு கண்டனர். மாணவர்களிடம் அமைதியை உருவாக்கி, குறித்த கோசத்தை அரசியலாக்கி வீதியை விட்டு அகலாது அப்படியே நிறுத்தினோம். நானே அன்று அதற்கு தலைமை தாங்கி புலிகளின் முன் நின்றேன். பாசிசம் முன்னேறுவதை தடுத்து, பாசிசத்தின் அராஜகத்தின் முன் கலைந்து செல்ல மறுத்தோம். கோசங்களால் நகரமே குலுங்கியது. புலிப் பாசிட்டுகள் மீதான ஒரு மக்கள் எழுச்சி கொண்ட ஒரு தாக்குதலாக மாறும் நிலை உருவானது.
தமக்கு எதிராக நிலைமை மேலும் மோசமாவதை தவிர்க்க விரும்பி புலிகள், பாதையை மாற்றி அருகில் இருந்த வீதியூடாக திரும்பிச் சென்றனர். அவர்கள் தமது ஊர்வலத்தில் தமது ஆயுதங்களை கவர்ச்சிகரமாக கொண்டு வந்ததுடன், வாகனங்களில் அதைப் பொருத்தியும் இருந்தனர். அத்துடன் கனரக (பாரமான) ஆயுதங்களையும் ஊர்வலத்தில் எடுத்து வந்தனர். இதன் மூலம் மக்களை மிரட்டி அடிபணிய வைக்க முயன்றனர். ஆயுத வாகனத் தொடர்கள் சென்ற போது, கிண்டலடித்த மாணவர்கள் சீக்கை (விசில்) ஒலிகளால், ஆயுதங்களை எள்ளி நகையாடினர். இதையே எனது விசாரணையில் கேட்டும், சொல்லியும் தாக்கினர். அன்று அராஜகத்துக்கு எதிராக போராடினீர்கள், இந்த அராஜகம் எப்படி உள்ளது எனக் கேட்டு தாக்கினர்.
பல்கலைக்கழக போராட்டத்தின் போது, பல்கலைக்கழகம் தொடக்கம் யாழ் எங்கும் தொடர்ச்சியான ஒளிபரப்புகளை நாம் உருவாக்கினோம். அதில் மாணவர் உரைகள், பாடல்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு அவை ஒளிபரப்பப்பட்டது. இந்த முறையையே புலிகள் பின்னால் களவாடினர். உணர்ச்சியைக் கிளறக் கூடிய கவிதைகள் உள்ளடங்கிய அரசியல் கோசங்களால், யாழ் வீதிச் சுவர்கள் எல்லாம் புரட்சி பேசி நின்றன. கோசங்கள் சுதந்திரத்தின் பெயரிலான பாசிசத்தை எள்ளி நகையாடியது. அதைச் சொல்லியும், சொல்லக் கோரியும், என்னை புலிகளின் வதைமுகாமில் தாக்கினர். இப்படி எழுதப்பட்ட கோசங்கள் பல்வேறு பாசிச எதிர்ப்பு படங்களுடன் சித்தரிக்கப்பட்டு ஒட்டப்பட்டது. தீர்க்கதரிசனமிக்கதாக, பாசிசத்தின் எதார்த்தத்தை அவை வெளிப்படுத்தி நின்றது. எதிர்காலத்தில் பாசிசம் ஆட்சி ஏறின், என்ன நடக்கும் என்பதை அம்பலம் செய்த ஒரு சில சுவர் எழுத்துகளைப் பார்ப்போம்.
1."பாதிச் சுதந்திரமே இந்தப்
பாடுபடுத்தினால்
மீதி வரும்போது – யாரும்
மிச்சமிருக்கமாட்டார்கள்
சிம்மசானம் ஏறும் வரைக்கும் தான்
சீர்திருத்தவாதிகள்
ஆசனத்தைப் பிடித்துவிட்டால்
அராஜகவாதிகள் - ஆனாலும்
நெருப்பு சருகுகளை
நிச்சயம் தோற்கடிக்கும்"
2."மனிதத்தை துப்பாக்கி முனையில்
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில் வைத்துச்சுட்டு
புறங்காலால் மண்ணைத் தள்ளி
மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில் குருதியறைந்து
நியாயம் சொல்லுகிறார்களாம்
நியாயம்…!? "
3."சுதந்திரதேவி இது உனக்கு
எத்தனையாவது சிறை?
ஆங்கிலச்சிறையிலிருந்தும்
சிங்களச்சிறையிலிருந்தும்
தப்பிவந்த நீ இப்போது
தமிழ்ச்சிறையில் கிடக்கிறாய்!
கவலைப்படாதே கண்மணியே!
சிறையை உடைத்து உன்னை
மீட்கும் வரை இங்கே
மனிதஇனம் ஓயாது!! "
4."மரணத்தைக் கண்டு
நாம் அஞ்சவில்லை
ஒரு அநாதையாய்
ஒரு நடைப்பிணமாய்
புதிய
எஜமானர்களுக்காய்
தெருக்களில்
மரணிப்பதை
நாங்கள் வெறுக்கின்றோம்"
5."ஒரு தேசத்தின்
அரசியல் தற்கொலை
இதுவென அறியார்
கரங்களில் உயரும்
கருவிகளை பறிக்கும்
ஒரு மக்கள் குரல்
அராஜகத்தின் வேருக்கு
ஒரு கண்ணிவெடி"
6."போராளியின்
கல்லறைகள்
பேசுகின்றன
நமது
மரணங்கள்
உங்கள் கைகளில்
நகமாய் மலருமென
முன்னமே தெரிந்திருந்தால்
இறப்பதற்கு
முன்வந்திருக்கமாட்டோம்| "
7."சுதந்திரத்துக்காக
புறப்பட்டு
சுதந்திரம் மறுக்கப்பட்ட
மனிதர்களாக
வாய்கட்டப்பட்ட
வயிற்றுடன்
எவ்வளவு காலம்
வாழ்வது"
பல்கலைக்கழக மாணவர்களும் மக்களும், 1986 இல் யாழ் பிரதேசம் எங்கும் எழுதிய ஒட்டிய சுவர் எழுத்துகளில் சில.
இப்படியான பல கவிதை வரிகளை மீளச் சொல்லியும், சொல்லக் கோரியும் என்னைத் தாக்கினர். பாதியைச் சொல்லி, மிகுதியைச் சொல்லக் கோரி தாக்கினர். யார் இதை எழுதியது எனக் கேட்டு தாக்கினர். இக் கவிதை உள்ளடக்கம் "புலிகளை அரசியல் அநாதையாக்க கூடியது" என புலிகளின் துண்டுப்பிரசுரம் குறிப்பிட்டது போல், பல்கலைக்கழக போராட்டம் அரசியல் ரீதியானதாகவே இருந்தது. இது புலிகளை மட்டுமல்ல, பாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட அராஜக இயக்கங்களையே சந்திக்கு இழுத்து. அதன் அழிவைக் கோரியது. பாசிச அரசியலை எள்ளி நகையாடியது. வன்மம் மிக்க அபாண்டமான அவதூறுகளை, புலிகள் ஒழுங்குபடுத்திய வடிவில் தனிப்பட்ட புலி கூட பிரச்சார ரீதியாக தொடர்ச்சியாக செய்தனர். மாணவர்கள் ஒழுங்குபடுத்தப்படாத நிலையில், தன்னிச்சையான செயல் வடிவில் எதிர்கொண்ட போது, தலைமையின் ஒரு பகுதி அரசியல் ரீதியான தெளிவுடனும் உறுதியான பதிலுடனும், பரந்துபட்ட மக்களின் முன் நியாயத்தை முன்வைத்தது. இதன் மூலம் புலிகளின் அப்பட்டமான நிறுவனமயமான பாசிச சதிகளையும், அழித்தொழிப்புகளையும் தகர்க்க முடிந்தது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சிவத்தம்பியின் தலைமையில் நடுநிலை வேஷம் போட்டு நஞ்சைக் கக்கியது. அராஜகத்துடன் கூடிய பாசிசத்துக்கு முண்டு கொடுத்தது. இதை அம்பலப்படுத்தி நடுநிலை வேஷத்தை நிர்வாணப்படுத்தினோம். பேராசிரியர் வேடம் போட்டு மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை அழிப்போம் என்ற எச்சரிக்கை மூலம், போராட்டத்தை கைவிட தனிப்பட்ட தலைமை உறுப்பினர்களை நிர்ப்பந்தித்த போது, அதையும் எதிர்த்து அம்பலம் செய்தோம். பாசிசமும், அராஜகமும் தமிழ் மண்ணில் வீறுநடை போட, புத்திஜீவிகளாக அறியப்பட்ட யாழ் பல்கலைக்கழக பேராசியர்கள் பலரின் பங்களிப்பு முக்கியமானதாகும். பாசிசத்தின் குண்டியை பல பேராசிரியர்கள் போட்டி போட்டபடி நக்கித் திரிந்தனர். அறிவுத்துறையின் சோரம் போகும் பூர்சுவா பிழைப்பில் தான், பாசிசம் தனது கால்களை ஆழப்பதித்து மக்களின் முதுகின் மேல் தாவி ஏறினர். மக்களை அடக்கி ஒடுக்குவதை அறிவுத்துறையினரின் பினாமித்தனம் சுயவிளக்கம் அளித்ததன் மூலம், கோட்பாட்டு ரீதியாகவே மக்களின் அடிப்படை உரிமைகள் மிதிக்கப்படுவதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது, அளிக்கப்படுகின்றது.
46. விஜிதரன் போராட்டமும், அதை நடத்தியவர்கள் யார் என்றும் கேட்டனர்? - (வதைமுகாமில் நான் : பாகம் - 46)
35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)
25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)
19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)
15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)
13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)
08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)
04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)
01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)
Geen opmerkingen:
Een reactie posten