வன்னி பெருநிலப்பரப்பு, மெல்ல மெல்ல இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டவேளை, இறுதியாக மக்களும் புலிகளும் முள்ளிவாய்க்கால் என்னும் கடற்பரப்பில் ஒதுங்கினார்கள். மரங்களோ, பாதுகாப்பு மண் திட்டிகளோ இல்லாத சமநிலப் பரப்பு அது. அச்சிறிய பகுதியில் சுமார் 3 லட்சம் மக்களும் புலிகளும் சிக்கிக்கொண்டனர். இவர்களைச் சுற்றி சுமார் 50,000 இராணுவத்தினர் முற்றுகையிட்டனர். மக்கள் செறிந்திருப்பதால் அப்பகுதி மீது கனரக தாக்குதலை மேற்கொள்ளவேண்டாம் என ஐ.நா உட்பட பல மனிதநேய அமைப்புகள் இலங்கைக்கு கோரிக்கை விடுத்தன. அவற்றை தாம் செவிமடுப்பதாக இலங்கை தெரிவித்தது. தாம் வெறும் துப்பாக்கிகளை தாங்கியே முன்னேறுவதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது ! ஆனால் அங்கு நடந்த கோரங்கள் பல ! இங்கே புகைப்பட ஆதாரங்களாக எம்மால் பிரசுரிக்கப்படுகிறது !
முள்ளிவாய்க்காலில் மக்கள் சிக்குண்டு இருந்த வேளை, அதன் ஒரு புறம் சாலை என்னும் இடமும், மறு முனையான வட்டுவாகலும் இருந்தது. வட்டுவாகல் ஊடாக வன்னியில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்லமுடியும் என்பதனால், இலங்கை இராணுவம் இப் பகுதியை முதலில் கைப்பற்றி அங்கே தனது 9வது விஜயபாகு படைப் பிரிவை நிறுத்தியது. புலிகள் பல இடங்களை இழந்து, பாரிய பின்னடைவில் இருக்கும்வேளை, இறுதியாக தாம் வைத்திருந்த 2 விமானங்களையும் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியிருந்தனர். அவ்விரு விமானங்களும் இலங்கை வான்படையால் சுட்டுவீழ்த்தப்பட்டது யாவரும் அறிந்ததே.
இந் நிலையில், விமான எதிர்ப்பு பீரங்கிகளை, 9வது விஜயபாகு படையணி அங்கே கொண்டுவர என்ன காரணம் ? புலிகளிடம் வேறு விமானங்கள் இல்லை என்பது இலங்கை இராணுவத்துக்கு நன்கு தெரியும். அதைவிட அப்படியே விமானம் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் கடல் மண்ணில் வைத்து அதனை பறக்கவைக்க முடியாது. அப்படி இருக்கும்போது, இப் பகுதிக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகளைக் கொண்டுவந்து அதனை பொதுமக்கள் மீது சுடுவதற்கு பாவித்துள்ளது இலங்கை இராணுவம். இங்கே நீங்கள் பார்க்கும் படத்தில் உள்ள விமான எதிர்பு பீரங்கி, இலங்கை இராணுவத்தினுடையது என்பதனை அதன் குறியீடு காட்டிக்கொடுத்துவிட்டது.(9 VIR)
வானில் விமானங்கள் பறக்கும்போது, இந்தரக பீரங்கிகளால் சுட்டால் அதில் இருந்து கிளம்பும் ராட்சத ரவைகள் நெருப்பு பூத்தவண்ணம் செல்லும். சில வகையான ரவைகள் வானில் வெடிப்பதால் அதில் இருந்து சிதறும் பல துண்டுகள், விமானங்களைத் தாக்கும். இவ்வாறு பேரழிவுகளை வானில் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை, மக்கள் கூட்டம் கூட்டமாக வசித்த பிரதேசங்கள் நோக்கிச் சுட்டுள்ளனர் இலங்கை இராணுவத்தினர். இதனால் பல மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இறுதியில் ரவைகள் தீர்ந்த நிலையில், இப் பீரங்கியினை எரியூட்டிவிட்டு, அது புலிகளுடையது எனத் தெரிவித்துள்ளது இலங்கை இராணுவம் என்றும் சொல்லப்படுகிறது. இதனை இராணுவம் பரவலாகப் படம்பிடித்து பல சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு கொடுத்தும் உள்ளனர். மக்களையும் கொன்று குவித்து, இறுதியில் புலிகள் மீது பழியையும்போட்டு இலங்கை இராணுவம் ஆடிய நடகங்கள் பல !
ஆனால் உண்மை வெளிவராமல் இருக்குமா ? இல்லை உண்மையைத் தான் மறைக்க முடியுமா ?
Geen opmerkingen:
Een reactie posten