இடதுசாரிகள் தம்மைக் கண்டு கொள்ளாததால்தான், தாம் இப்படி இருந்ததாகக் கூறுவது, இடதுசாரியம் மீதான வலதுசாரிய வசைபாடலாகும். இது இடதுசாரி கருத்தோட்டத்தை புலிக்குள் முன்வைத்தவரை, கொன்றுவிட்டு ஏப்பம் விடுதலாகும். பிரபாகரனின் நடத்தைக்கும் செயலுக்கும் துணை நின்றவர்கள், பிரபாகரனின் முடிவுக்கு சுயவிளக்கம் வழங்க முடியாது. பிரபாகரனின் அரசியல் வழி அவரின் மரணம் வரை நீடித்துத் தொடர்ந்தது. இந்த வகையில் புலி என்ற இயக்கத்தின் இருப்புக்கு அரசியல் நியாயமும், காரணமும் கற்பிக்க முடியாது. அதே அரசியல் வழியிலேயே தொடர்ந்தது. இது அதன் தவறு அல்ல. அதுவே அவர்களது அரசியல் வழிமுறையாகும்.
புலி இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினரான பற்குணம், புலிக்குள் இடதுசாரியக் கருத்தை முன்வைத்தமையால் தான் கொல்லப்பட்டார். இடதுசாரியக் கருத்தை முன்வைத்ததன் மூலம், அவர் பிரபாகரனுடனும், அவரின் நடத்தையுடனும் முரண்பட்டார். இதை எதிர்த்த பிரபாகரனுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான தொடர் அரசியல் தர்க்கம் தான், அவரைக் கொன்று போட்டது. வலதுசாரிய வர்க்க அரசியல் சார்ந்த இந்த உண்மையின் அடிப்படையில், இந்த நூல் தன்னளவில் அணுகவில்லை. மாறாக கொல்வதற்குரிய தர்க்கத்தை முன்வைக்கின்றது. அதற்கான நியாயம் தம்;பக்கம் இருந்ததாக இந்த நூல் காட்ட முனைகின்றது. அதேநேரம் தங்கள் இடதுசாரிய "அறியாமை" பற்றியும், இதனால்தான் இவையெல்லாம் நடந்தன என்று இடதுசாரியம் மீதான குற்றச்சாட்டாக அதை இடம்மாற்றிக் காட்ட முனைகின்றது. இடதுசாரியம் தம்முடன் தொடர்பு கொண்டு இருந்தால், இவை எல்லாம் நடந்திருக்காது என்று, உலகை நம்பச் சொல்லுகின்றது. புலிகள் வலதுசாரிய கூட்டணியின் அடியாள் படையாக, கூலிப்படையாக செயல்பட்ட அதன் அரசியல் வடிவம் தான் காரணம் என்பதை, இந்த நூல் மறுதலிக்கின்றது. மாறாக இந்த நிலைக்கு எல்லாம் இடதுசாரிகள் காரணம் என்று குற்றஞ்சாட்டும் அரசியல் வக்கிரத்தை இந்த நூல் மூலம் பார்க்கின்றோம். இதன் மூலம் கூட்டணியும், அதன் வலதுசாரி அரசியலும் தான் இவற்றுக்கு காரணம் என்பதை, இது மறுதலிக்கின்றது.
இந்த நூலின் ஊடான நியாயப்படுத்தலை கடந்து, ஐயர் எதார்த்தத்தில் வந்தடைந்த நிலையை ஏன் மற்றவர்கள் வந்தடையவில்லை? இந்த நிலைக்கு காரணம் என்ன? புலிகள் மட்டுமல்ல, பல இயக்கங்களின் நிலையும் இதுதான். இப்படி இருக்க, ஐயரின் தன்நிலை சார்ந்து இடதுசாரியம் மீதான குற்றச்சாட்டு தவறானது. இது வலதுசாரிய அரசியல் சார்ந்ததும், உள்நோக்கமும் கொண்டது. இந்த நிலையில் பாலசிங்கம் முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ். வரை இடதுசாரியத்தை முன்வைத்திருக்கின்றனர். ஏன் புலிகளின் அரசியல் திட்டம் "சோசலிசத் தமிழீழம் விடுதலைப்புலிகள் இயக்கமும் தேசிய விடுதலைப் போராட்டமும்" என்ற இடதுசாரிய கோசங்களால் ஆனது. இதற்கு வெளியில் இயக்கத்தின் உள் தொடங்கி வெளியரங்கு வரை, வலதுசாரியத்துக்கு எதிரான இடதுசாரிய போராட்டங்கள் நடந்து இருக்கின்றது. ஐயர் இயக்கத்தில் இருந்த போது பற்குணம் மூலமும், ஈரோஸ் மூலமும் இடதுசாரியம் அங்கு அறிமுகமாகி இருக்கின்றது. இயக்கத்தில் உள் போராட்டம் நடந்து இருக்கின்றது. இது இடைவெளி இன்றி தொடர்ந்தே வந்திருக்கின்றது.
இப்படி இருக்க "பாரம்பரிய இடதுசாரிகள் என்று கூறிக்கொண்ட எவருமே எம்மை அணுகியதோ, நியாயமான போராட்டத்தை சரியான திசைவழி நோக்கி நகர்த்த வேண்டும் என்று எண்ணியதோ கிடையாது. தேசியப் போராட்டம் என்பது அவர்கள் மத்தியில் ‘தீண்டத்தகாத' ஒன்றாகவே அமைந்திருந்தது." என்று குற்றம் சாட்டுகின்ற அரசியல் பின்புலத்தில், வலதுசாரிய வக்கிரம் தான் கொட்டுகின்றது. இயக்கத்தின் மத்தியகுழுவில் இடதுசாரிய கருத்தை முன்வைத்தவரைக் கொன்றுவிட்டு, குற்றஞ்சாட்ட புலியின் அரசியலால் மட்டும்தான் முடியும். இந்தக் கருத்து இடதுசாரியம் மீதான வலதுசாரிய (புலி) அரசியலின் நீட்சி.
"பாரம்பரிய இடதுசாரிகள்" மீது குற்றஞ்சாட்ட என்ன தான் இருக்கின்றது? அவர்கள் வர்க்கப் போராட்டத்தையே நடத்தாத நிலையில், அவர்கள் எப்படித்தான் எதைத்தான் வழிகாட்ட முடியும்? இங்கு இடதுசாரியமே இல்லாத போது, குற்றஞ்சாட்டுவது ஏன்? இது வலதுசாரியத்தையும், இதன் நடத்தையையும் நியாயப்படுத்த எடுக்கும் குறுக்குவழி அரசியலாகும். இங்கு விமர்சனத்துக்குரியவைகளை, இடதுசாரியம் வழிகாட்டத் தவறியதன் அரசியல் விளைவாக காட்ட முனைகின்றது.
இவ்வாறான அரசியல் பின்புலத்தில் "எவருமே எம்மை அணுகியதோ, நியாயமான போராட்டத்தை சரியான திசைவழி நோக்கி நகர்த்த வேண்டும் என்று எண்ணியதோ கிடையாது" என்று கூறும் குற்றச்சாட்டு அபத்தமானது, அருவருக்கத்தக்கது. ஐயரை வைத்து, புலி ஆதரவாளரால் தொகுத்தளித்த வியாபார அரசியல் இது. இந்திய வியாபார இதழ்களில் வழிந்தோடும் சாக்கடைகளில் நின்று பிழைப்பு நடத்தும் ஒருவரின் எழுத்தும், அரசியலும் இப்படி வெளிப்படுகின்றது.
வலதுசாரியத்துக்கு இடதுசாரியம் உதவி இருக்கவேண்டும் என்று கோருவதை இங்கு காண்கின்றோம். வெட்கக்கேடான குற்றச்சாட்டு. இதுவல்ல இடதுசாரியத்தின் அரசியல். மாறாக இடதுசாரியம் தன் சொந்த அரசியல் வழியில், இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடி இருக்க வேண்டும்;. "இடதுசாரியம்" இப்போராட்டத்தை மட்டுமல்ல, தன் சொந்த வர்க்கப் போராட்டத்தின் எந்த ஒரு நிகழ்ச்சிநிரலையும் கூட முன்னெடுத்தது கிடையாது. இந்தப் பார்வையில் இலங்கையில் ஒரு வர்க்க கட்சியே இருக்கவில்லை. இல்லாத ஒன்றின் மீது குற்றஞ்சாட்டுவது, வலதுசாரிய அரசியல் போக்கை நியாயப்படுத்த, அதன் அரசியல் வக்கிரங்களை இடதுசாரியத்தினால் நிகழ்ந்ததாக கூறுகின்ற அரசியல் புரட்டுத்தனமாகும்.
இயல்பான மனிதத்தன்மையைக் கூட மறுதலித்த வலதுசாரிய அரசியல் நடத்தைக்கு, நியாயங்களும் நியாயப்படுத்தல்களும் அதே அரசியல் எல்லைக்குள்ளேயே உட்பட்டது. நிலமைகள் இவ்வாறு இருக்க, இடதுசாரியம் மீது குற்றம் சாட்டும் அரசியல், வலதுசாரிய போக்கிலித்தனத்துடன் கூடியது. புலியின் அதே பாணியிலானது. இதுவேதான் ஐயரின் இன்றைய கருத்தா என்றால், அன்று வலதுசாரிகள் குற்றஞ்சாட்டிய அதே வலதுசாரிய கருத்தோட்டத்தையே மீள இங்கு முன்வைக்கின்றார். அதனைத் தாண்டி இது வலதுசாரிய கோட்பாடு என்பதையும், அதன் அரசியல் நடத்தை என்பதை மறுப்பதும், சாராம்சத்தில் அன்றைய அதே வலதுசாரிய அரசியல்தான்.
இடதுசாரிய வர்க்க அரசியலின் செயலற்ற அரசியல் தளத்தில், வலதுசாரியம் மட்டும் செயல் பூர்வமான நடத்தையாக அன்று இருந்தது. இது தன் வலதுசாரிய அரசியலுக்கு அமைவாக, (அறியாமையில் அல்ல) மனிதவிரோதத் தன்மை கொண்டதாக, தன் இயல்பில் இருந்து வெளிப்பட்டது. வலதுசாரியம் எங்கும் எப்போதும் மனிதகுலத்துக்கு எதிரானது.
இந்த வலதுசாரிய அரசியல் நடத்தைகளுக்கும், அதன் அனுபவத்துக்கும் எதிராக, இயக்கத்தின் உள் இருந்தும் வெளியில் இருந்தும் இடதுசாரிய போக்குகள் உருவானது. தேசிய இனப் பிரச்சனை சார்ந்து, இரண்டு எதிர்நிலை அரசியல் போக்குகள் உருவானது. வலதுசாரி, இடதுசாரி என இரு வழிகள் இருந்துள்ளது. அவை சமூகத்தில் இருந்துதான், மீள உருவாக்கம் பெற்றது. இடதுசாரியம் மீது குற்றஞ்சாட்டுவது போல், எவையும் ஒற்றைப் பரிணாமத்தில் நடந்திருக்கவில்லை. புலியின் மத்தியகுழு உறுப்பினர் பற்குணம் இங்கு ஒரு அடையாளம்.
உண்மையில் போராட்டத்துக்குள் உருவான இடதுசாரியத்தை, ஒடுக்குவதையே வலதுசாரியம் செய்து வந்தது. வலதுசாரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்த, போராட்டத்துடன் உருவான இடதுசாரிகளை கொன்றுவிடுவது தான் வலதுசாரிய அரசியலின் தெரிவாக இருந்தது. அடியாள் கும்பலாக, கூலிப்படையாக உருவான புலியின் அரசியல் நடத்தையே அவ்வாறு தான் இருந்தது. இடதுசாரியம் வலதுசாரியத்தை விமர்சிப்பதில் இருந்து தொடங்குகின்றது. விமர்சிப்பவரையும், தங்களுடன் இல்லாதவரையும் கொல்வதுதான், புலி அடியாள் கும்பலின் அரசியல் வேலையாக இருந்தது. அதுவே தான் தமிழீழத்துக்கான பாதை என்றது.
இதுதான் இங்கு உள்ள அரசியல் உண்மை. சரியான அரசியல் நோக்கி செல்ல வேண்டும் என்பதை அமைப்பினுள் பற்குணம் முன்வைக்கின்றார். ஆனால் அவர் பிரபாகரனால் கொல்லப்படுகின்றார். பற்குணம் முன்வைத்த அரசியல் சாரத்தை இங்கு புரிந்துகொள்வது அவசியம். ".. தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான அரசியல் தொடர்புகளையும் பற்குணம் கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டணியின் அரசியல் என்பது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அதனால் நாங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பற்குணம் விமர்சிக்கிறார்" இந்த அரசியல் உண்மையை பிரபாகரன் நிராகரித்த பின்னணியில் அவர் கொல்லப்படுகின்றார். இந்த நூல் கொலையை நியாயப்படுத்த, பற்குணத்தின் நடத்தை மீது வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் கொல்லப்பட்டதை இந்த நூல் மறைமுகமாக நியாயப்படுத்துகின்றது. புலிகளின் அதே காலத்தில் அரைகுறையான இடதுசாரிய அடிப்படைகளைக் கொண்ட ஈரோஸ் இருந்து இருக்கின்றது. பற்குணம் உட்பட புலிக்கும் ஈரோசுடன் தொடர்பு இருந்து இருக்கின்றது.
உண்மைகள் பல எங்கும் இவ்வாறிருக்க அதை மறுத்தபடி "இவ்வேளைகளில் ஒரு இடதுசாரிக் கட்சியின் பின்பலம் இருந்திருக்குமானால், அவர்கள் எம்மை அணுகியிருப்பார்களானால் இன்று தெற்காசியாவின் தென்மூலையில் நிகழ்ந்த வெற்றிபெற்ற போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருந்திருப்போம்." என்று கூறுவது அபத்தமானது. வலதுசாரியம் இடதுசாரியம் மீது திட்டமிட்டுக் கக்கும் வக்கிரம். அமைப்பின் மத்தியகுழுவில் இடதுசாரிக் கருத்துகள் வெளிபட்டபோது, கொலையே ஒரு தீர்வாகின்றது. "சேனாதிராஜா வீட்டிற்கும், அமிர்தலிங்கத்தின் வீட்டிற்கும் பிரபாகரன் வேறு உறுப்பினர்களோடும் தனியாகவும் செல்வது வழமையாகிவிட்டது" என்ற அரசியல் பின்னணியில் பற்குணம் கொலையை நாம் இங்கு காணவேண்டும். கூட்டணியின் தெரிவு பற்குணம் கொலையாகின்றது. அந்த அரசியல் வழியே புலியின் தெரிவாகின்றது.
இப்படி இருக்க "இடதுசாரியம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது." என்பது அபத்தமானது."இடதுசாரியம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம்" என்பது, சமூகத்தில் இருந்து அன்னியமான உங்களளவில் மட்டும் சரியானது. மாறாக சமூகத்தில் அதுபற்றி தெரிந்திருந்தது என்பது இங்குள்ள உண்மை. 1960–1970 களில் யாழ்ப்பாணத்தில் மையங்கொண்ட சாதிப்போராட்டங்கள், இடதுசாரியத்தைப் பற்றிய அறிவை இந்த மண்ணுக்கு வழங்கியிருந்தது. இதை கூட்டணி எதிர்த்தபோது, பாரிய இடதுசாரிய அரசியல் போராட்டங்களாகவே அவை அங்கு நடந்தேறின.
இங்கு சமூகம் பற்றிய அறியாமை மட்டுமல்ல, உழைப்பில் அன்னியமான சமூகத்தில் இருந்து அன்னியமான, கூலிக்குழுவாகவே புலிகள் இயங்கினர். கூட்டணியின் அடியாள் கும்பலாக இயங்கியது. இடதுசாரியம் பற்றிய கூட்டணியின் கருத்துகள் புரையோடிய அரசியல் பின்புலத்தில், இடதுசாரிய கருத்துகள் அவர்கள் அக்கறைக்குரியதல்ல. அதை எதிரியாகவே அணுகியது.
இவர்களின் கற்பனைக்கு மாறாக இடதுசாரியம் என்பது வெளியில் இருந்து வருவதல்ல. மனித வாழ்வினுள் இருந்து வெளிப்படுவது தான் இடதுசாரியம். மனிதவாழ்வைக் கடந்து இடதுசாரியத்தை காணவும் முடியாது, தேடவும் முடியாது, காட்டவும் முடியாது.
இந்த வகையில்தான் பற்குணத்தின் ஆரம்ப எதிர்வினை அமைகின்றது. "எமது மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பிரபாகரனிற்கு அரசியல் விடயங்களில் அக்கறை இல்லை, எமக்கு என்று அரசியல் நிலைப்பாடும் அரசியல் வழிநடத்தலும் தேவை என்ற கருத்தைப் பற்குணம் முன்வைக்கிறார்." இதை மறுத்து நின்ற அரசியல், கூட்டணியின் வலதுசாரிய அரசியல் தான். அதன் அடியாளாக செயல்பட்ட கைக்கூலித்தனமும், கொலை அரசியலையும் இங்கு நாம் காணமுடியம்;.
இதை இன்று நியாயப்படுத்தும் அரசியல் தளத்தில் அதன் விளக்கத்தை பார்ப்போம் "அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது." என்னும் கூற்று இங்கு தங்களை நியாயப்படுத்த முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இது தான் வலதுசாரிய அரசியல்.
இந்த அரசியல் பின்புலத்தில் "இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி"யது என்பது இந்த இடத்தில் அர்த்தமற்றது. இடதுசாரியம் தனது வர்க்கப்போராட்ட நிகழ்ச்சிநிரலையே இல்லாததாக்கி இருந்தது. அது வேறு பிரமுகர் கட்சியாக, நபர்கள் கூடிக் களையும் செயலற்ற கட்சியாக .. இருந்தது. அதேநேரம் " கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்கள்" தான், தம்மை தவறாக வழி நடத்தியது என்பது தவறானது. அவ்வுணர்ச்சிப் பேச்சுக்கள் ஒரு அரசியல். இனவாதத்தை முன்வைப்பது எப்படி ஒரு வலதுசாரிய அரசியலோ, அதே போல் இதன்பின் உள்ளவர்கள் நாளை எமக்கு இவ்வரசியல் பற்றித் தெரியாது என்று கூறுவது மற்றொரு அரசியலே. அவ்வாறே தான் "இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி" என்று கூறுவது கூட, ஒரு வலதுசாரிய அரசியல் தான்.
இங்கு இன்று இடதுசாரியத்தை குற்றஞ்சாட்டுவதற்கே ஒழிய, இடதுசாரிய அரசியலை தாங்கள் முன்னெடுப்பதற்காக அவர்கள் இப்பாங்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. இது இடதுசாரிய அரசியலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வலதுசாரிய அரசியல்.
தொடரும்
பி.இரயாகரன்
19.05.2012
Geen opmerkingen:
Een reactie posten