தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 november 2011

11 11 11 ஞாபகார்த்த நினைவு தினம்! பூநகரான்

[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 04:14.50 PM GMT ]
மறக்க முடியாததும், மறக்கக் கூடாததுமான நிகழ்வுகளையும் சம்பவங்களையும் ஒவ்வொரு இனமும் தத்தமது ஞாபகார்த்தங்களாக நினைவு கூர்ந்து வருகின்றன. நமது இனத்திற்கு மட்டும் தனது இருக்கையையும் தனித்துவத்தையும் பேணும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகின்றது.
மறந்தேயாக வேண்டும் என்பதற்காக மாவீரர் தினங்கள் முடக்கப்படுகின்றன.
அவர்கள் பயங்கரவாதிகளோ இல்லையோ ஞாபகார்த்தம் மறுக்கப்படலாகாது.
சிறீலங்கா வெளிநாடுகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்களில் இதுவுமொன்று.
அதாவது பல்லினங்களிற்குரிய பன்மைப் பண்புள்ளதாக அரசியலமைப்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். சோல்பரியின் முதலாவது சாசனத்தில் இருந்த 29 வது சரத்து உயிரப்பிக்கப்பட வேண்டும்.
ஒரு பல்லினச் சமூகத்தில் எந்த ஒரு மதமும் எந்த ஒரு மொழியும் எந்த ஒரு இனமும் ஏனையவற்றை நசிக்கி அழித்தொழிக்கும் பாங்கிற்கு இசைவாக அரசியற் சாசனம் பேரினத்தின் பெரும்பான்மை வாக்களிப்பின் ஊடாக மாற்றப்பட்டு வந்தமை ஏற்புடையது அல்ல.
உதாரணமாக கனடா தேசமும், அமெரிக்காவைப் பின்பற்றி புலிகளைத் தடை செய்திருந்தது. அந்த முடிவின்படி புலிகளின் கொடியை பறக்க விட இயலாது. ஆனால் கனேடிய மரபு ரீதியிலான சாசனப்படி கருத்தை வெளியிடும் அதீத சுதந்திரத்தின் பிரகாரம் எதனையும் தடுக்க இயலாது.
எனவே கொடியை விரும்பாத போதும் அதனை தடுக்கும் சட்ட இயலுமை காவற்துறையினரிற்கோ எவருக்குமே கனடாவில் இல்லாதுள்ளது. இது தான் ஜனநாயகம். இங்கு ஜனாதிபதியிசம் கிடையாது. தமது கருத்தை அது சரியோ தவறோ யாரும் வெளியிடலாம் பிடிக்கலாம்.
ஆனால் திருகோணமலையில் சாத்வீக அறவழித் தலைவர் தந்தை செல்வாவின் சிலையின் தலை சிதைக்கப்பட்டது. உலக நாடுகளின் அனுபவங்களை படிப்பினைகளை இனியாவது சிறீலங்கா மேற்கொள்ள வேண்டும்.
தன்னிடமிருந்தே உலகம் பலதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் சிறீலங்கா வெளியிடும் கற்றறிந்த பாடங்களின் அறிக்கையில் அதிகம் எதையும் எதிர்பாரக்க இயலாது
பல தேசிய இனங்களைக் கொண்ட பல நாடுகளிலும் அவரவர்களும் தத்தம் மரபுகளைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பாரத்து இந்தியாவில் உள்ளதைப் போல் சமஷ்டியை சம்பந்தர் சுட்டிக்காட்டுவதாகவும், கனடா மற்றும் சுவிஸ் தேசங்களை மேற்கோள் காட்டுவதாகவுமே அவரது உரை கனடாவில் தொடர்ந்தது.
எல்லா நாடுகளும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இன மரபுகளிற்கும் இடமளிக்கும் போது சிறீலங்கா மட்டும் ஒன்பதில் தமிழரிற்கு இரண்டு மகாணங்களைக் கூட கொடுக்க மறுக்கிறது.
மேற்குலக நாட்டு அரசியல் சாசனங்கள் பல இனங்களையும் ஆதரித்து அனுசரித்து எழுதப்பட்ட நிலையில், அவர்களது அரசியல் அபிலாசையை கருத்தை மதிக்கும் போது, சிறிலங்காவில் மட்டும் அதனது அரசியற் சாசனத்தின் பிரகாரம் வெளிநாடுகளில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அமெரிக்கா அடங்கலாக வெளிறாடுகளிற்கு வந்த திரும்பியுள்ள நம் சமய குரவர் நால்வர். அதில் ஒருவர் கனடாவிற்கு வர இயலாது போனமைக்கு கனடாவின் அதி உயர் ஜனநாயக விழுமிய மரபும் சட்டமுமே காரணம். ஆயுதப் போராட்டத்தை எந்த நிலையிலும் எதற்காகவும் ஏற்காத கனடாவின் தன்மையின் வெளிப்பாடே அது.
எனவே கனடா போன்ற தேசங்களின் அனுசரணையும் ஆதரவும் வேண்டுமென்றால் அதற்கேற்பவே நாம் ஒழுக வேண்டும்.
கடந்த மாதம் 30 ம் தேதி கனடாவில் இடம்பெற்ற இராப் போசன விருந்தில் பேசிய மூவருமே ஒரு விடயத்தை சுற்றிப் பேசியிருந்தனர். நாலாமவர் வந்திருந்தால் அவரும் இதையே பேசியிருப்பார்.
ஆரம்பத்தில் திரு சுமந்திரன் அவர்கள் நல்விணக்கம் செய்வதாக உலகிற்கு பரப்புரை செய்யும் அதே சமயம் மறு புறத்தில் அரச நிர்வாகமானது இன அடையான தனித்துவங்களிற்கு மாறாக செயற்படுவதை, வன்முறையை தமிழ் இளைஞர்கள் பின்பற்றாதிருக்க வேண்டியது சம்பந்தமாக பேசிய வேளை சுட்டிக் காட்டியிருந்தார்.
அடுத்து அங்கு பேசிய பெரியவர் திரு ஆர் சம்பந்தர் அவர்கள் நமக்கு என தனியான ஒரு கலை கலாச்சார மரபு உண்டென்பதை தொட்டுச் சென்றார் காரணம் சிறீலங்கா நிர்வாகமானது தற்போது உள்ளது ஒரே சிறீலங்கா என்ற ஒரே ஒரு தேசிய இனமே என்ற வலியுறுத்தி வருவதற்கான பதிலாக அதனைத் தெரிவித்திருக்க வேண்டும்.
அதாவது அவர் கனடாவில் உள்ளதைப் போன்ற மொழி வழித் தேசிய இன வாரிச் சமஷ்டியை மனதிலிருத்தியவாறு அதனைத் தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய திரு மாவை சேனாதிராஜா அவர்களும் தமிழ் இனத்தின் சுய நிர்ணய உரிமை கோரிக்கையை மறுப்பதற்காக கொழும்பு நிர்வாகம் தமிழர் தனித்துவங்களையும் அடையாளங்களையும் விரைந்து சிதைப்பதாக தெரிவித்தார்.
அந்தச் சம்பந்தர் காலத்தில் மட்டுமல்ல இந்தச் சம்பந்தர் காலத்திலும் அவர்கள் வாதிலும் சூதிலும் வல்லவரகளாகவேயுள்ளனர். அதற்காக நம் தலைமைகள் தரம் கருதாது தர்க்கம் புரிந்து கொண்டிருக்க இயலாது.
ஆனால் சிறீலங்கா தரப்பினர் விதண்டாவாதங்களையும் பொய்ப் பரப்புரைகளையும் தொடர இயலாதவாறு தமிழர் தரப்பினர் அவர்களது தவறான கருத்து மேற்கோள்களை சிதைத்து வர வேண்டும்.
உள்ளது ஒரே தேசியம் அது சிறீலங்காத் தேசியம் என்றே அரச தலைவர் உலகில் எல்லா அவைகளிலும் பேசி வருகின்றார். உள்ளது ஒரே இனந்தான் என்றால் நல்லிணக்கத்திற்கான தேவை எழுந்தது எவ்வாறு? ஒரே லங்கா இனந்தான் உள்ளது என்று விட்டு இனங்களிடையே நல்லிணக்கம் செய்கிறேன் என்று திரு மகிந்த அவர்கள் கூறுகிறார்.
இந்தச் சுய முரண்பாடு தெளிவாக பலமாக சர்வதேச தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டால் அவர் தனது விதண்டாவாதத்தை தொடர இயலாது.
இலங்கைத் தீவில் உள்ளது ஒரு தேசியம் என்றால் சிங்கள தமிழ் முஸ்லீம் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரத்திற்கு முன் தோன்றியது எவ்வாறு?
சிங்களம் “ மட்டும் ”; சட்டம் என்பதிலேயே அங்கு வேறு மொழியான தமிழ் இருப்பது ஒத்துக் கொள்ளப்படுகிறதே இவ்வாறான உத்திகளை தமிழர் ஊடகங்களும் கல்விமான்களும் கையாள வேண்டும்.
போராட்டத்தையும் போராடும் உரிமையையும் புலம் பெயர் தமிழர்கள் வலியுறுத்தும் அதேவேளை தமிழர் இனத் தனித்துவத்தை நிலை நிறுத்த வேண்டும்.
போராட்டத்தை பயங்கரவாதமென்று முலாமிட்ட நிலையில் முதலிற் செய்யப்பட வேண்டியது எது என்பதை நான் கூற வேண்டியதில்லை.
எனவே சர்வதேச ரீதியிலான தினங்கள் வர முன்னரே அந்தத் தினங்களை கருத்திற்கொண்டு நமது நியாயங்களை தமிழராகிய நாங்கள் அந்தந்ந நாடுகளில் பேசியும் எழுதியும் வர வேண்டும்.
அந்த வகையில் முதலாவது உலகப் போர் நிறுத்த நாளான நவம்பர் 11  தொடர்பாக இது எழுதப்படுகின்றது.
சவக்காலையே உலகிற் தலை சிறந்த நூலகம் என்பது ஒரு வேற்றினப் பழமொழி.
ஆனால் இறந்த பின்னரும் கூட தமிழரிற்கு சுதந்திரமில்லை.
ஊயிர் போன பிணத்திற்கு கூட அது தமிழன் ஒருவனுடையது என்பதால் லங்காவில் இடமில்லை என்பது அடாவடித்தனம்.
நினைவுகள் பலவிதமானவை.
இன்பத்தையோ துன்பத்தையோ இரை மீட்கும் இதயத்தின் செயலே ஞாபகார்த்தம்.
போரில் விழுந்தவன் இடத்தில் நடப்பட்டது நடுகல்.
அந்தக் கல்லில் எழுதப்பட்ட எழுத்தே கல்வெட்டு.
எல்லாளனிற்கு துட்டகைமுனு பாரிய நினைவு மையத்தை நிறுவியிருந்தான்.
நவ லங்காவில் இப்போது கெட்ட கைமுனுக்கள் தான் உள்ளனர் போலும்.
நினைத்து நினைவு கூரும் உரிமையைக் கூட அது மறுக்கிறது.
உள்ளார்ந்து நினைப்பதை தடுப்பதனூடாக மகிந்த சிந்தனை சிந்தனைச் சுதந்திரத்தையும் நிந்திக்கிறது.
ஞாபக ஆற்றல் என்பது மூளையுடன் தொடர்புடையதான போதும் நினைவு என்பது இதயத்தோடு தான் தொடுக்கப்பட்டுள்ளது
மூளை கணிக்கும் , …. இதயந் தான் பேசும் ,இரங்கும் , சுருங்கும் , விரியவும் செய்யும் …..அப்போது அங்கே ஏதாவது அதிர்வு அலைவீச்சு தோன்றுகிறதோ என்னமோ?
இதயமற்ற மூளை இயந்திரம் , அந்த இயந்திரத்தை மனிதனாக்குவது இதயமே.
இதயமற்று மூளையின் வேகத்தில் போரிட்ட உலகம் 1918 ம் ஆண்டு 11 ம் மாதம் 11 மணிக்கு முதலாவது உலகப் போரை நிறுத்தி அமைதியானது.
அன்று காலை 5 மணிக்கு எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை ஆறு மணிக்கு பாரிஸ் வானொலி அறிவித்தது.
இன்று பகல் 11 மணியுடன் போர் முடிவிற்கு வரும். 11 மணிக்குப் பிறகு எத்தரப்புப் படைகளும் மேற்கொண்டு முன்னேறி நகர மாட்டா! தாக்குதல்கள் தொடரா!! போர் நிறுத்தம் !!!
ஓய்வின்றி சமரிட்ட உலகம் ஓய்ந்தது.
பாய்ந்து தாக்கிய படைகள் களைப்பாறின.
பயந்து ஓடியவர்களும் நின்று திரும்பிப் பார்த்தனர்.
மூளைக்கு பேரவா வந்தால் போர்.
அது மண் ஆசையாக மட்டுமல்ல, எண்ணெய் ஆசையாகவும் இருக்கலாம்.
மூளை எந்த ஆசை வசப்பட்டாலும் போர் தான்.
இதயம் அன்பால் நனைந்தால் அமைதி அன்பு சாந்தம் கருணை தியாகம்.
புதியதோர் உலகம் செய்வோம் இந்தப் போரிடும் உலகத்தை வேரொடு சாயப்போம்.
வேரொடு சாய்ப்பதும் போர் தானே.
இந்து மதத்தின் நிலையும் இது தான்.
அன்பே சிவமானாலும் சிவத்தின் கையில் சூலம் அவசியம்.
கொடியவர்களை அழிக்க ஆயுதம் ஆண்டவனிற்கே தேவைப்பட்டது.
குழந்தை முருகன் கூட போரிற்கு செல்ல வேண்டியிருந்தது.
தர்மத்தை நிலை நிறுத்த இறையே எழுந்த போர்க் கதைகளோ இந்து மதப் புராணங்கள் ஆகும்.
தீபாவளி, நவராத்திரி , கந்த சஷ்டி என அந்தப் பட்டியல் நீண்டது.
பாரதிதாசனின் வேரொடு சாய்க்கும் நிலையும் அது தான்.
போரிட்டே போரை நிறுத்த முடியுமென உலகம் தொடர்ந்து போரிடும் காலமிது.
சடாம் கூசெயின் , பிரபாகரன் , பின் லாடன் , கடாபி ……..
அடுத்தது யார்?
தர்மத்தை போரினூடாகவே நிலை நிறுத்தலாம் என்கிறது 18 அத்தியாயங்களைக் கொண்ட கீதை.
காண்டீபத்தை நழுவ விட்ட பார்த்தனையும் நிமிர்த்தியவர் பாரத்தசாரதி.
என் முன்னாலேயே என் பிள்ளைகளை அழித்த கிருஷ்னனின் சந்ததியும் இவ்வாறே அவன் கண் முன்னாலேயே அழிந்து போவதாக என்ற காந்தாரியின் சாபத்திற்கு ஆளாகி பலியானவர் புராண கால இந்து மத இயேசு பிரான் கிருஷ்ணர்.
மரஞ் செடி கொடிக்குள் மறைந்திருந்த கண்ணனை மானென நினைத்து எய்தொழித்த வேடன் வேறு யாருமல்ல முன்பு இராமரால் மறைந்திருந்து கொல்லப்பட்ட வாலி தான் என்கிறது புராணம்.
வாலுள்ள குரங்குமற்ற வாலற்ற மனிதனுமாகவுமன்றி அலி போல மானிடனாகவுமின்றி விலங்காகவுமின்றி இடை நடு நிலையிலிருந்த தேவ அம்சம் வாலி தான்.
வாலி வதம் மட்டுமல்ல இந்தப் புலி வதமும் கொடுமையானதே, நம்பிக்கைத் துரோகம் நிறைந்த பழிச் செயலே.
இந்தப் பழிச் செயலிற்கு பலியாகப் போவது யார் லங்காவா? பாரதமா? அல்லது இரண்டுமா?
நாராயணன் நம்பியார் கண்கள் முன்னாலேயே இது நடக்க வேண்டுமென்றால் அது விரைவில் அல்லவா நிறை வேற வேண்டும்.
இந்தப் புராண நம்பிக்கைகளை விட்டு விட்டு விஜயத்திற்கு வாருமென நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது.
சமாதனாத்தை கொண்டு வர கொடியவர்களை அழிக்கும் கிருஷனரின் வேலையை இப்போது அமெரிக்காவும் மேற்கு நாடுகளுந்தான் பார்க்கின்றனவா? அதுவும் கீதையைப் படிக்காமலே…..
முள்ளால் முள்ளால் தான் எடுக்கலாம் என இவர்கள் உண்மையாகவோ நம்புகிறார்களோ இல்லை எண்ணைக்காகவோ என்னமோ தெரியவில்லை.
லங்காவில் எண்ணெய் இல்லைத் தான் ஆனால் எண்ணெய் ஏற்றுமதி கடற் கப்பல் மார்க்கத்தில் அல்லவா அந்த இளங் குயில் முத்து மிதந்து கொண்டிருக்கிறது.
அந்த இலங்கை இளங்குயில் மீது எல்லோரிற்கும் காதல்.
போட்டி போட்டுக் கொண்டு அனைவருமே பூக் கொத்துக் கொடுப்பது ஓய்ந்து இப்போ அழுத்தம் கொடுபடுகிறதா?
பயங்கரவாதத்தை அழிக்கும் சாட்டில் தமிழரை அழித்தது லங்கா.
இந்த சிறிய விடயத்தைக் கூட புரியாது எத்தனை அப்பாவித் தமிழர்களை முள்ளிவாய்க்காலுள் புதை;தனர் இந்த றோபோ இராஜதந்திரிகள்.
இப்போது தான் மெற்றல் மூளைகளிற்கு புரிகிறதா?
எங்கே யசூஜி அகாஜியைக் காணவில்லை.
இவர் உண்மையான புத்த பத்தர் என்றால் நியாயத்தை வலியுறுத்த வேண்டும்.
யப்பான் புவி நடுக்கம் படிப்பினையை வழங்கியதோ என்னமோ!
உண்மை என்றதும் பொய்யும், தற்கொலையும் ஞாபகாரத்த நாளில் நினைவிற்கு வருகின்றன.
பேரழிவு ஆயுதங்களை சதாம் உசெயின் வைத்திருக்கிறார் என்று கூறிச் சென்ற புஷ்சும் பிளேயரும் லையர்கள் என்கிறது இன்றைய உலகம்.
2003 இல் உலகத்தின் கண்களிற் புலப்பட்டவர் டேவிட் கெலி.
பி பி சிக்கு தகவல் வழங்கியதாக விசாரிக்கப்பட்ட ஆங்கில தேசத்தின் ஆயுத விற்பன்னர் தான் இந்தக் கெலி.
அஸ்தமனமே இல்லாத ஆங்கில அரசின் பாதுகாப்பு அமைச்சில் வேலை பார்த்தவரை அரச தெரிவுக் குழு விசாரித்த பின் இரண்டு நாட்களின் பின் பாக் ஒன்றில் இவரைப் பிணமாகக் கண்டது உலகம்.
அஸ்தமனமான பின்பு இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலை அஸ்தமனமானதா என்று தெரியவில்லை.
வழமை போல் சுதந்திரமான விசாரனகைள் எதுவுமில்லை.
ஆனால் தற்கொலை என்ற சொல்லிற்குள் கொலை என்பது அடங்கியிருக்கிறது.
சதாம் கண்டு பிடிக்கப்பட்டார் ஆனால் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை.
வஞ்சத்தை தீர்த்ததுடன் உலக வரை படத்தில் தமிழர் பலத்தை ஒடுக்கியதனூடாக தமிழனத்தை இலகுவாக தொடர்ந்து அடக்கியாள வகை செய்து கொண்டது பாரதம்.
பயங்கரவாதத்தை அழிக்கிறேன் என்று தமிழரையே அழித்தது லங்கா.
எனவே தான் போர் முடிந்த பின்னரும் இந்த இரண்டு நாடுகளும் அரசியற் தீர்வு பற்றி அக்கறை கொள்வதாக இல்லை.
இந்தியாவையும் சிறீ லங்காவையும் தவிர மற்றைய நாடுகள் விசாரணை வேண்டுமென்கின்றன …இங்கோ கோழி தின்ற கள்வர்களும் கூட நின்று உலாவுகிறார்கள் சமரசம் குலாவ வேண்டுமென்பதற்காக ….. நம்புவோம் தொடர்வோம் விசாரனையை பின்பும் கோரலாம் நடத்தலாம் …..
இனி நாடுகளை விட்டு மனித மீட்புப் போர் என்றும் தமிழர்கள் ஆயுதங்களை கீழே உடனே வைக்க வேண்டும் என்றும் ஒரிரு தமிழ்க் குரல்கள் இங்கு கனடாவில் வானலையில் மே 2009 இல் ஒலித்தன.
வானொலியைக் கேட்டால் அது அவரவர் கருத்துச் சுதந்திரம் என்று தப்பித்து விடுவார்கள். ஆயுதத்தை கீழே புலிகள் வைக்க வேண்டும் என்றவர் இப்போ அரசியல் பேசுவதாகத் தெரியவில்லை.
பாதுகாப்பாற்ற தமிழர் பற்றி இயேசுவிற்கு கரிசனை இருக்கும்.
வென்றவனிற்கு வென்றதை அனுபவிக்க அமைதி தேவை.
தோற்றவனிற்கும் தேவையானது போரற்ற அமைதியே.
போரற்ற அமைதி தேவதை 11 11 இல் பிறந்தாள்.
இருந்தாலும் அதற்குப் பிறகு இரண்டாவது உலக யுத்தமும் இன்னும் எத்தணையோ யுத்தங்களும் தொடர்கின்றன.
இருந்தாலும் உலகம் 11 11 (20)11 இல் அமைதி திரும்பிய அந்த நாளை நி;னைவு கூருகிறது.
லங்காவோ தன்னால் எந்த இராணுவத்தையும் எதிர் கொள்ள முடியுமென்கிறது.
இன்றைய நிலையில் அதாவது மாவீரர் கல்லறைகளும் தகர்க்கப்பட்ட நிலையில் தாயகத்தில் இந்த றிமெம்பறன்ஸ் டே ஊடாகவே மௌணமாக மா வீரர்களிற்கு அஞ்சலி செலுத்த இயலும்.
ஈகைச் சுடரை ஏற்ற இயலும். அந்தச் சுடரிற்குள் அந்த தியாக தீபங்களின் முகங்களை காண முடியும். போராட்ட அத்தியாயம் முடிந்திருக்கலாம் ஆனால் வரலாற்றில் அவர்களது தியாகமே அதி உச்சமானது.
பூநகரான் குகதாசன் கனடா
kuha9@rogers.com

Geen opmerkingen:

Een reactie posten