தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 november 2011

நோர்வேயின் சமாதான முயற்சிகளின் தோல்விக்கான நான்கு அடிப்படைக் காரணங்கள்

சிறிலங்காவில் அமைதி முயற்சி தோல்வியடைந்ததற்கு நான்கு காரணங்களை முக்கியமானவை என்று இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த மக்கெல்சன் இன்ஸ்ரிரியூட்டைச் சேர்ந்த குன்னர் சோர்போ தெரிவித்துள்ளார்.
இந்தக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட அவர், அறிக்கையின் முக்கிய அம்சங்களை நேற்று ஒஸ்லோவில் விவரித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் இந்த அமைதி முயற்சிகளில் இறங்கிய போது கூட, தங்களது இலட்சியங்களை- நிலைப்பாடுகளை கைவிடாமலேயே இருந்து வந்தனர்.
இதனால் அவர்கள் ஒரு அரசியல் தீர்வைக் காணும் முயற்சியில் உளச்சுத்தியுடன் ஈடுபடவில்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் இந்த அமைதி முயற்சி எப்படி அரசியல் ரீதியாக முடிய வேண்டும் என்று இந்த இரு தரப்புகளுமே அவர்கள் வரையறுத்துக் கொண்ட நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை“ என்பது முதலாவது காரணம்.
“சிறிலங்கா நாடு மற்றும் அரசியலில் இருந்த கட்டமைப்பு ரீதியான அம்சங்கள் இந்த அமைதி வழிமுறையைப் பாதித்தது'- இது இரண்டாவது காரணம்.
“சிறிலங்காவில் நிலவும் பரம்பரை அரசியல், உட்கட்சி போட்டிகள், வேண்டியவர்களுக்கு அனுகூலம் செய்யும் அரசியல், தேசியவாத அரசியல் அணி திரட்டல் ஆகியவை நாட்டை சீர்திருத்துவதற்கும் சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கும் இடையூறாக இருந்தன.“
“பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இருந்த வாய்ப்பு மிகவும் குறுகியதே“ - இது மூன்றாவது காரணம்.
“அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான சமநிலை இருக்கும் ஒரு நிலை, மேற்கு நாடுகளோடு ஒத்த கருத்துணர்வில் இயங்கும் ஒரு அரசு இருப்பது, பல தரப்பட்ட அனைத்துலக நாடுகளின் ஆதரவு பேச்சுகளுக்கு இருந்தது என்று ஒரு சாதகமான சூழ்நிலை போன்றவை மிக விரைவிலேயே மாறிவிட்டன.
மிக முக்கியமாக, 2004ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் பிளவுபட்டது, இராணுவ சமநிலையை, அரசுக்குச் சாதகமாக மாற்றியது.
இந்த பிளவுக்குப் பிறகு, இரண்டு தரப்புகளுமே மற்றத்தரப்புக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளைக் காட்ட வேண்டியதற்கான தேவையைக் குறைத்து விட்டது“ .
“ஐக்கிய தேசிய கட்சி அரசு இந்த அமைதி வழிமுறையை, பாதுகாப்பு உத்தரவாதங்கள், அனைத்துலக கொடை வழங்கும் நாடுகளிடம் நிதி உதவி, மற்றும் அரசியல் ரீதியாக சிக்கலான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம், அனைத்துலக மயமாக்க எடுத்த முயற்சிகள் சிங்கள தேசியவாத எதிர்வினையைத் தான் தூண்டின“- இது நான்காவது காரணம்.
“இதன் விளைவாக, ஒரு தேசியவாத முனைப்புள்ள கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வர உதவியது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு ஆசிய நாடுகளின் ஆதரவுடன் புதிய அனைத்துலக பாதுகாப்பு வளையத்தைத் தனக்கு ஆதரவாக அமைத்துக் கொண்டு, விடுதலைப் புலிகள் மீது மேலும் கடுமையான ஒரு அணுகுமுறையை எடுக்கவே உதவியது.
இதன் மூலம் மகிந்த ராஜபக்ச அரசு இந்த மோதலுக்கு இராணுவ ரீதியான தீர்வை முன்னெடுக்க வழி பிறந்தது.
ஒரு பலவீனமான, மென்மையான நோர்வேயால், இந்த இயங்கு சக்திகளை எதிர்க்க முடியவில்லை“ என்றும் குன்னர் சோர்போ தெரிவித்துள்ளார்.
ஒரு கேந்திர தொலைநோக்குத் திட்டம் இல்லாமல், துடிப்புடன் செயல்படக் கூடிய சர்வதேச வலையமைப்பு இல்லாமல், இந்த அமைதி வழிமுறை பாதிக்கப்பட்டது.
இருதரப்புகளும், பின்வாங்க முடியாத விட்டுக்கொடுப்புகளையும், உறுதிமொழிகளையும் தரவைப்பதற்கும், அவற்றை இருதரப்பும் கடைப்பிடிக்கச் செய்வதற்கும் நோர்வேயால் இயலாமல் போனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசியலில் ஒரு சதுரங்கப் பகடையாக பயன்படுத்தப்படுவதை உணர்ந்து, நோர்வே அதை தடுத்திருக்க வேண்டும்.
2006ம் ஆண்டு ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போது, நடுநிலை முயற்சிகளிலிருந்து நோர்வே விலகிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குன்னர் சோர்போ தெரிவித்துள்ளார்.

பிபிசி

Geen opmerkingen:

Een reactie posten