தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 november 2011

தந்தை செல்வாவின் சிலையை மீண்டும் அதே இடத்தி​ல் நிறுவுவோம்!​- புளொட்

[ செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011, 01:31.18 PM GMT ]
திருமலையில் தந்தை செல்வாவின் சிலை விசமிகளால் சிதைக்கப்பட்டமை தொடர்பில் புளொட் அமைப்பு அறிக்கையொன்றினை விடுத்துள்ளது. அதில் தந்தையின் சிலையினை மீண்டும் அதே இடத்தில் விரைவில் நிறுவுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தந்தை செல்வாவின் சிலை திருமலையில் சிதைக்கப்பட்ட செய்தி தமிழ்மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாத்வீகத்தின் தந்தையென்றும், ஈழத்துக் காந்தியென்றும் அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்கள், உண்மையிலேயே தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டவென சாத்வீக முறையிலே நேர்மையாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.
ஆயுதப்போராட்டம் உக்கிரமாயிருந்த காலப்பகுதியில், தந்தை செல்வாவின் நேர்மையையும் தீர்க்கதரிசனங்களையும் தியாகங்களையும் நினைவுகளையும் பலரும் மறந்திருந்தவேளையில் அன்று அரச கட்டுப்பாட்டிலிருந்த திருமலை, மன்னார் நகர்களில் தந்தை செல்வாவின் உருவச்சிலையை நிறுவி அவரின் நினைவுகளை எப்போதும் மக்கள் மனங்கொள்ள முயற்சித்தோம்.
அந்தவகையில் 1995ம் ஆண்டு ஜூலை 16ம்திகதி எமது கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் ஆறாவது நினைவுதினமான வீரமக்கள்தின நிகழ்வுகளின்போது அன்றைய எமது திருமலை மாவட்ட அமைப்பாளர் திரு. வ.விஜயரட்ணம் (செல்லக்கிளி மாஸ்டர்) அவர்களினால் திருமலை நகரில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைக்கப்பட்டது.
அன்று 35 லட்சம் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்குரலாக திகழ்ந்த தந்தை செல்வா எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு மனிதருக்கும் தீங்கு விளைவித்தவருமல்ல, விளைவிக்க நினைத்தவருமல்ல.
அப்படியான ஒரு மாபெரும் தலைவரின் சிலையை, அமைதியும் சமாதானமும் நிலவுவதாக அரசும் பேரினவாதிகளும் நாடகமாடும் இன்றையநிலையில், அடித்து நொருக்கி சிதைத்திருக்கின்றார்கள்.
இழிவான இச்செயலின் மூலம் இந்த நாட்டில் பேரினவாதம் எவ்வளவு தூரம் புரையோடியுள்ளதென்பதை உலகம் அறிந்து கொள்ளும்.
தந்தையின் சிலையினை மீண்டும் அதே இடத்தில் விரைவில் நிறுவுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten