20 November, 2011
மலையக மக்களை நாடற்றவராக்கிய மாதமிது. பிரித்தானிய காலனியாதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரமடைந்ததும் தமிழர்கள்மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதல் இது.
"குடியுரிமைச் சட்டம் 1948'' என்பதன் ஊடாக இலங்கைப் பொருளாதாரத்தின் ஆணி வேராக விளங்கிய மலையகத் தமிழ் மக்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்ட மாதமும் இதுதான். 1823 ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்ட இந்த உழைப்பின் உன்னதங்கள், அன்றைய நாட்களில் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. எட்டு அல்லது பன்னிரெண்டு பேரடங்கிய குடும்பமொன்றிற்கு குந்தி இருக்க ஒரு அறை, பொது மலசல கூடம். பாடசாலைகளில் நான்காம் அல்லது ஐந்தாம் தரத்திற்கு மேல் வகுப்புகள் கிடையாது. அதிகம் படிக்க அனுமதித்தால் தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் மரக் காடுகளிலும் பணிபுரிய யாரைத் தேடுவது என்பதைப் புரிந்து கொண்டதால் கல்விக்குத் தடை போட்டார்கள் பெரு முதலாளிகள்.
அரசியல் அதிகாரமற்ற மனிதர்களாக, கல்வியறிவற்ற பாமரர்களாக, கொத்தடிமை போல் இவர்கள் வாழ வேண்டுமென விரும்பிய பேரினவாதம் இப்பெரு மக்களை 1948 இல் தேசமற்றவர்களாக்கியது. வர்க்க ஒடுக்கமுறைக்கும் இன ரீதியான அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட இம் மக்கள், இலங்கையின் 200 வருட கால ஆட்சியில் ஆழமான வலியைச் சுமந்து நிற்கும் ஒரு சமூகமாகும். 60 களில் 70 களில் ஏறத்தாழ ஆறு இலட்சம் மலையக மக்கள் இந்தியாவிற்கு பலவந்தமாக நாடு கடத்தப்பட்டார்கள். வெண் முகில்கள் உரசும் மலைகளில் தமது உதிரத்தை உரமாக்கி, நாட்டை வளமாக்கிய இம் மண்ணின் மைந்தர்களை, விலங்குகள் போல் பரிமாறிக் கொண்டது இலங்கை இந்திய அரசுகள்.
1796 இல் இலங்கையை ஆக்கிரமித்த பிரித்தானியர், 1833 இல் முழு நாட்டையும் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்தாலும், 1931 இல் சர்வசனங்களுக்கும் வாக்குரிமையை அளித்தார்கள்.
ஆனால், 1948 இல், சுதந்திர நாட்டின் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க, இலங்கை என்பது பௌத்த சிங்கள இறைமைக்குட்பட்டதென்பதை வெளிப்படுத்தும் வகையில், மலையகத் தமிழர்கள் மீதே தனது அரசியல் வன்முறையைப் பிரயோகித்தார். பிரஜாவுரிமையைப் பறித்தார். ஆனாலும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலுள்ள நாடொன்றிலிருந்து அகதி அந்தஸ்து கோரும் ஈழத் தமிழர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பிரித்தானியா வழங்குவதை இங்கு சுட்டிக் காட்டுவது
பொருத்தமானதாகவிருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் தனித்துவத்தை, அடையாளத்தை நிராகரிக்க வேண்டுமென்கிற பேரினவாதத்தின் பிடிவாதம் 48 இலிருந்து தொடர்வதைக் காண்கிறோம்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, தனிச் சிங்களச் சட்டத்தை முன்வைத்ததாலேயே இத்தனை அவலங்களும் இம் மண்ணில் நிகழ்ந்தேறியதாக சுய விமர்சனம் செய்யவும் சிலர் புறப்பட்டுள்ளார்கள். இப்போதும் நடந்து கொண்டிருப்பது இன அழிப்பல்ல என்கிற வகையில், நல்லிணக்க ஆணைக்குழுக்களையும் நாடாளுமன்ற கட்சிகளின் தெரிவுக் குழுக்களையும் அமைத்துக் கொண்டிருக்கிறது பேரினவாதம். இதை எழுதும் பொழுது, வெள்ளைக் கொடியில் இரத்தக் கறை படிந்ததா? இல்லையா? என்கிற நீதிமன்ற விசாரணைக்கு தீர்ப்பு வழங்கப்படலாம்.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு அமைத்து, கற்றுக் கொண்ட பாடங்களை ஆய்வு செய்யப் புறப்பட்ட குழுவின் நடவடிக்கைகள் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 20 ஆம் திகதி ஆணைக்குழு அறிக்கையை மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவிருப்பதாக அதன் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஆனாலும் பொது மக்களின் பார்வைக்கு இவ்வறிக்கை முன்வைக்கப்படாது என்கிற செய்தியும் உண்டு. ஆகவே, வெளிப்படைத் தன்மையில்லாத இவ் வாணைக்குழுவின் அறிக்கை சர்வதேச தரம் வாய்ந்ததா என்கிற கேள்வி முன்வைக்கப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை. போர்க் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி கூறினாலும், போரை வழி நடத்திய களமுனைத் தளபதிகள் இராஜதந்திர அந்தஸ்த்தோடு வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களில் வீற்றிருப்பதை சர்வதேசம் அறியும்.
அடுத்ததாக ஆணைக்குழுவின் அறிக்கைக்கு என்ன நடக்கும் என்பதை அறிவதில் தமிழ் மக்கள் கரிசனையற்று இருந்தாலும், மேற்குலகமானது இதனை உன்னிப்பாக அவதானிக்குமென நம்பலாம். ஆணைக்குழு அறிக்கை வெளியீடு, நாடாளுமன்ற கட்சிகளின் குழு உருவாக்கம் என்கிற அரச நிகழ்ச்சி நிரலில், மூன்றாவதாக வெளிவரவிருக்கும் அடுத்த கட்ட நகர்வு, வட மாகாண சபைக்கான தேர்தலாகவிருக்கும். இந்த வாரம், 13 வது தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு அரசு நடத்திய பேச்சுவார்த்தை, வட மகாணசபைத் தேர்தல் வரை நீண்டு செல்லும் வாய்ப்புண்டு. மாதத்தில் நான்கு தடவைகள் கூடிக் கலந்து பேச வேண்டுமென்கிற முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த தடவை சந்திக்கும்போது மாகாண சபைக்கான அதிகாரமும் அதன் அலகுகள் தொடர்பான விடயங்களும் பேசப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் விரிவாகச் சொல்லப் போனால் மத்திய அரசிலிருந்து மாகாண சபைக்கு பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரங்கள் பற்றியும், நிதி தொடர்பாடல்கள் குறித்தும், சபையின் ஆளுநர் கொண்டிருக்கும் அதிகாரங்கள் பற்றியும் ஆராயப்படுமென செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் காணி அதிகாரம் குறித்து பேசப்படுமாவென்று தெரியவில்லை. ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி, மத்திக்கும் மாநிலத்திற்குமிடையிலான தனித்துவமான இறைமையோடு கூடிய அதிகாரப் பகிர்வு என்பன குறித்து பேசப்படுமென்று எதிர்பார்க்க முடியாது. இவை தவிர, பேச்சுவார்த்தையின் போது வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம் என்கிற அடிப்படைக் கோட்பாடு கூட்டமைப்பினால் வலியுறுத்தப்படுமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுவதை காணக் கடியதாக வுள்ளது.
ஆகவே, தாயகக் கோட்பாட்டை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள், தமிழ்ப் பேசும் மக்களின் நில உரிமை குறித்து கனடாவிலும் லண்டனிலும் தெரிவித்த முரண்பாடான கருத்துகள் இச் சந்தேகத்தை எழுப்புகின்றன. அதேவேளை தீர்வுப் பிரச்சினையை நீட்டிச் செல்ல, அரசு உருவாக்கும் 'நாடாளுமன்ற தெரிவுக் குழு' என்கிற பொறிக்குள் கூட்டமைப்பு சிக்குண்டு விடுமா என்று தெரியவில்லை. ஈழத் தமிழினமானது, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதனை பேரினவாதம் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. அரசானது, தமிழர் அரசியல் தலைமையோடு தனியாகப் பேசுவதாக சர்வதேசத்தை தற்காலிகமாக ஏமாற்றும் அதேவேளை, நாடாளுமன்றக் குழுவிற்குள் கூட்டமைப்பையும் இணைத்து தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் இருப்பினை பேரினவாத அரசியல் நீரோட்டத்தில் கரைத்து விட முயற்சி செய்யும்.
தீர்வு என்ற விடயம் வரும்போது எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வையே முன் வைக்க முடியுமென இருபெரும் பேரினவாதக் கட்சிகளும் கூறுகின்றன. இருப்பினும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்கள், அனைத்துக் கட்சிகளையும் அழைத்து தீர்வு குறித்து ஆராய வேண்டிய அவசியமில்லை. இருக்கிற பலத்தோடு, அரசியலமைப்பில் கூட மாற்றங்களைச் செய்யலாம். ஆனால் இலங்கை பேரினவாத உளவியலில் எந்த மாற்றங்களும் நிகழக்கூடிய சாத்தியப்பாடுகள் இல்லை. அதேவேளை, இலங்கை அரசின் மீது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் வல்லரசாளர்கள், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்தலாமென கற்பிதம் கொள்கிறார்கள். போர் வெற்றியை மூலதனமாகக் கொண்டு பெரும்பான்மையின மக்களின் ஆதரவோடு ஆட்சி புரிவோருக்கு எதிராக, இந்த எதிர்க்கட்சிக் கூட்டுக்கள் சிறு அசைவையும் மேற்கொள்ள முடியாது.
பொருளாதார ரீதியிலான பாரிய அழுத்தங்கள், சில வேளைகளில் மக்கள் எழுச்சியினை உருவாக்கலாம்.
லிபியா, சிரியா போன்று இலங்கையை எடை போடுவது தவறு. பொதுவாக ஆக்கிரமிப்பு யுத்தம் மற்றும் உள்நாட்டுப் போர் மூலமாக ஆட்சி மாற்றங்களை உருவாக்கலாம். இருப்பினும் சர்வதேச இராஜதந்திர உறவுகள் தொடர்பான அமெரிக்காவின் பார்வையில், முக்கிய இடத்தை ஆசிய பசுபிக் பிராந்தியம் பிடித்திருப்பதாக அதிபர் பராக் ஒபாமா அவர்கள் கூறிய விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இதயச்சந்திரன்

Geen opmerkingen:
Een reactie posten