தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 november 2011

தாயகத்தை கண்முன்நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள்!

[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 07:00.20 PM GMT ]

தாயகத்தில், மாவீரர் துயிலும் இல்லங்களில், நடைபெறுகின்ற மாவீரர் நாளை முழுமையாகப் பிரதிபலிப்பதுபோல், இன்று பிரான்சில், மாவீரர் லெப்டினன்ட் சங்கர் ஞாபகார்த்த திறந்தவெளி மைதானத்தில், மிகவும் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் மாவீரர்நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருந்தனர்.
தாயகத்தில், நிகழ்வுகள் நடைபெறும் நேரத்திற்கு சற்றும் பிசகாமல், தமிழீழத் தேசியவானொலியான புலிகளின் குரல் வானொலியின், ஒத்துழைப்புடன், நிகழ்வுகள், ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

பொதுச்சுடரினை, மாவீரர் கேணல் கீர்த்தியின் சகோதரர் ஏற்றிவைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை, மூன்று மாவீரர்களின் சகோதரியும் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினருமான செல்வி பிரியா சுப்பிரமணியம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, பிரதான மாவீரர் கல்லறைக்கான மலர்மாலையை, மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் திரு. அமுதனும், விடுதலைச் செயற்பாட்டாளர் திரு. மேனனும் அணிவித்தனர். மலர்வளையங்களை, தேசியச் செயற்பாட்டாளர் திரு. குமாரசாமி பரராசா, தேசியச் செயற்பாட்டாளர் திருமதி. சுரேன் செல்வி, தேசியச் செயற்பாட்டாளரும், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியுமான திரு. சிவசுப்பிரமணியம் மகிந்தன் ஆகியோர் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, புலிகளின் குரல் வானொலியின் நேரடி ஒலிபரப்பில், தமிழீழ தேசியத் தலைவர் உரையாற்றுகின்ற நேரம், அந்த ஒளிமுகத்தையும், ஆன்மாவை நிறைக்கும் அந்த அன்புக்குரலுக்காகவும், தமிழ்மக்களின் விழிகளும், செவிகளும் தாகத்தோடும் ஏக்கத்தோடும் காத்திருக்கின்றன என்ற செய்தி சொல்லப்பட்டு, அவரின் சிந்தனைகளை மனம்எண்ணிப்பார்க்கும் கணங்களாக அவை ஆக்கப்பட்டன.
தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் மாவீரர்நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது.
நினைவொலி எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான ஈகைச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், 2008ம் ஆண்டு, தனது மாவீரர்நாள் செய்தியில், புலம்பெயர் இளைய சமூகம், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை கையேற்கவேண்டும் என வேண்டுகோளை விடுத்திருந்தார்.
அதற்கேற்றாற்போல், பிரான்சின் இளைய தலைமுறையைச் சேர்ந்த விடுதலைச் செயற்பாட்டாளர் திரு. கரிகாலன் கமலநாதன் அவர்கள், பிரதான ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மற்றும் பொதுமக்கள் என, ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒருசேர நினைவுக்கற்களுக்கும், பொதுத் தீபங்களுக்கும் முன்னால் நின்று, மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி, வணக்கம் செலுத்தினர். துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கவிடப்பட, தாயகத்தில் நிற்பதுபோன்ற ஒரு உணர்வு எல்லோரையும் ஆட்கொண்டது.
கண்கள் கலங்க நின்றபடி, அவர்கள், மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திய காட்சி, தாயகத்தில், மாவீரர் துயிலும் இல்லத்தில், நெய்விளக்கேற்றும் கணங்களை நினைவுபடுத்தியது.
தொடர்ந்து, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. உருத்திரகுமார் அவர்கள் விடுத்த அறிக்கையை, நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் திரு. நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் வாசித்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தேசியச் செயற்பாட்டாளருமான திரு. சிவசுப்பிரமணியம் மகிந்தன் அவர்கள், பிரஞ்சுமொழியில், உரையாற்றினார்.
தலைமைச் செயலகத்தின் சார்பில், அரசியல்துறைச் செயற்பாட்டாளரான, திரு. தமிழரசன் அவர்கள், மக்களுக்கான விளக்கஉரை ஒன்றை வழங்கினார்.
தொடர்ந்து, தேசியக்கொடி இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கை வரிகள் தாங்கிய தாயகப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற அசையா உறுதிமொழியுடன் நிகழ்வு சிறப்புற நிறைவுபெற்றது,
தாயகத்தில் இருந்த கல்லறைகளை அப்படியே பிரதியெடுத்ததுபோல், திறந்தவெளியை, உணர்வுததும்பும் மாவீரர் துயிலும் இல்லமாக வடித்தெடுத்த தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான உழைப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு ஆரம்பமான நிகழ்வுகள், பிற்பகல் மூன்று மணிக்கு நிறைவு பெற்ற பின்னரும், தொடர்ச்சியாக மக்கள் வருகைதந்து மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தியபடியே இருந்தனர்.
மாலை ஆறுமணிவரை மக்களின் வருகையைக் காணக்கூடியதாக இருந்தது. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிகழ்வில் கலந்து, இம்மாவீரர்நாளை கனப்படுத்திச் சென்றனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Geen opmerkingen:

Een reactie posten