தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 november 2011

இழுத்தடிப்புகளால் அரசுக்கே ஆபத்து! தீர்வினை முன்வைக்க முன்வர வேண்டும்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணங்கள் தென்னிலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டமைப்பின் பயணங்கள் குறித்து தென்னிலங்கை ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்வதுடன் குளறிக் கொண்டும் இருப்பதன் அர்த்தம் விளங்கவில்லை.
தென்னிலங்கை சக்திகளுக்கு மாத்திரமல்ல, அரசு தரப்புக்கும் இது ஒரு பெரும் பிரச்சினையாகத் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதால் எதுவித நன்மைகளும் அவர்களுக்கு கிட்டப் போவதில்லை. எமது அரசுடன் பேசினால், மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறுவது உண்மைதான். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே பிரச்சினைக்கான தீர்வைக் காண வேண்டும். உண்மை நிலை இவ்வாறிருக்க கூட்டமைப்பினர் ஏன் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்ற கேள்விக்கு விடையும் தேட வேண்டியுள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை இனவிவகாரத்தை இலங்கைக்குள்ளேயே முடக்கிவிட முனைகின்றது. ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்கனவே சர்வதேச  அரங்கிற்கு எடுத்துச் சென்று விட்டனர்.
அதன் விளைவுதான் தாய்லாந்து, ஒஸ்லோ, டோக்கியோ, ஜெனிவா என தொடராகப் பேச்சுவார்த்தை நடக்கக் காரணமாகியது. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒஸ்லோ உடன்படிக்கையும் கைச்சாத்தாகியது.
உண்மையில் பேச்சுவார்த்தை ஒஸ்லோ உடன்படிக்கையில் இருந்து ஆரம்பித்திருக்க வேண்டும். கூட்டமைப்பும் இதனை வலியுறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அரசாங்கமோ ஒஸ்லோ உடன்படிக்கை பற்றி பேசாது சர்வதேச அரங்கில் நடைபெறுவதையும் விரும்பாது உள்வீட்டு விவகாரமாக்கி தமிழர்களின் காதுகளில் பூச்சுற்றவே விரும்புகின்றது.
இந்த ஒரு பின்னணியில் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணங்கள் தனது நிகழ்ச்சி நிரலைப் பாதித்து விடுமோ என்ற எதிர்பார்ப்பிலேயே அரசு கூட்டமைப்பிற்கெதிராக ஆர்ப்பரித்து நிற்கின்றது என்பதே உண்மையாகும்.
இதுவரை கூட்டமைப்புக்கும் அரச தரப்பிற்குமிடையில் பதின்மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக தமிழ் மக்களுக்கு கிடைத்தது பூஜ்யமே.
இந்த பூஜ்ய நிலையை உருவாக்கியது யார்? அரசாங்கமே இந்த நிலைமைக்குக் காரணம்.
அரசாங்கம் இதய சுத்தியுடன் இன விவகாரத்துக்கான தீர்வினைக் காண்பதற்கு முயற்சித்திருந்தால் தீர்வு நோக்கிய பயணத்தில் பாதித் தூரத்தையாவது கடந்திருக்கலாம்.
ஆனால் நடந்தது என்ன? என்பது குறித்து இரு தரப்பினருமே மூடுமந்திரமாக வைத்திருந்தனர். தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கூட்டமைப்பு கூட பேச்சுவார்த்தை குறித்து வாய்திறக்காது மௌனித்திருந்தது.
ஆனால் பேச்சுவார்த்தையின் பரம இரகசியங்கள் கசிந்து அம்பலமானதுடன் தமிழ் மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை. அரச தரப்பு இணங்கிய விடயங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி பேச்சுவார்த்தையின் தோல்வி குறித்து வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.
இதற்குப் பிறகும் அரசாங்கம் அழைத்தது என்பதற்காக பேச்சுவார்த்தை மேசையில் கூட்டமைப்பு போய் மீண்டும் அமர்ந்தது.
அவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்ற வாசகங்கள் அரச தரப்பில் இருந்தும், ஏனைய தென்னிலங்கை சக்திகளிடம் இருந்தும் வெளிவந்தன.
பேச்சுவார்த்தை அரச தரப்புக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் அல்ல. சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலேயே நடைபெறுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குமப்பால் நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைத்து பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகவும் இந்தக் குழுவில் கூட்டமைப்பும் பங்கு பற்றி யோசனைகளைத் தெரிவிக்கலாம் என்றும் அரச தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகின.
இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான அறிக்கைகளாலும், செய்திகளாலும், நடவடிக்கைகளாலும் அரசாங்கம் பேச்சுவார்த்தையை ““குழம்பிய குட்டை'' யாக்கியது.
இந்த ஒரு பின்னணியில் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தது.
பேச்சுவார்த்தையை எமக்குள்ளேயே வைத்துக் கொள்வோம். எமக்குள்ளேயே பேசித் தீர்வு காண்போம். வெளியாரின் தலையீட்டுக்கு இடமளிக்கக் கூடாது என்று ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டதாக அவரே பத்திரிகை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய அரச தரப்பு நம்பிக்கையுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருக்குமாகவிருந்தால் கூட்டமைப்பினர் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருந்திருக்காது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையை உருவாக்கியதே அரசாங்கம் தான். பேச்சுவார்த்தை மேசையில் அரச தரப்பு வழங்கிய தோல்விகளை மூட்டையாக்கி சுமந்து கொண்டே கூட்டமைப்பினர் வெளிநாடு பயணமாகினர்.
கூட்டமைப்பினரைப் பொறுத்து தமிழ் மக்களிடையேயான தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். அந்தப் பயணத்தில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கூட்டமைப்பினர் கணிசமானளவு வெற்றியையும் பெற்றுள்ளனர்.
இது அரச தரப்புக்கும், தென்னிலங்கைச் சக்திகளுக்கும் எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த எரிச்சலுக்கு கூட்டமைப்பு காரணமல்ல. அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு நிறையவே அனுபவம் உண்டு. கடந்த பல அரசாங்கங்களினதும், இன்றைய அரசாங்கத்தினதும் பேச்சுவார்த்தைக் குழுவில் அமைச்சர் பீரிஸ் முக்கிய பங்காற்றி வருகின்றார். விடுதலைப்புலிகளுடனான பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் இவருடைய பிரசன்னம் இருந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்துமே தமிழ் மக்களுக்கு தோல்வியைத் தவிர வேறு எதனையும் கொடுக்கவில்லை.
இது அரசு தலைமைத்துவங்களினதும், கொள்கை வகுப்பாளர்களினதும் கொள்கையாக கடைப்பிடிக்கப்பட்டது போலவே பேச்சுவார்த்தைகளின் தோல்விகள் அமைந்துள்ளன.
அரச தரப்பினரும் கூட்டமைப்பினரும் தீர்வுப் பொதியினை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பார்களாயின் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.
ஏதோ ஒரு காரணத்திற்காக இரு சாராருமே பேச்சுவார்த்தை மேசையில் வெறுங்கையுடன் அமர்ந்து தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கப் புறப்பட்டதாக கூறுவது வேடிக்கையானதே.
இருதரப்பினருமே ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைத்து இறுதியில் இரு பகுதியினருமே ஏமாந்து நிற்கின்றனர்.
அரச தரப்பு இனவிவகாரத்திற்கான தீர்வுக்கு ஏன் கூட்டமைப்பை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க வேண்டும் என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்புகின்றனர்.
உண்மையிலேயே இனவிவகாரத்திற்கான தீர்வினைக் காண வேண்டும், அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உண்மையும், நேர்மைத்திறனும் இதய சுத்தியுடனான நல்ல நோக்கமும் அரசாங்கத்திற்கு இருக்குமாக இருந்தால் நாட்டின் நலன்கருதி தீர்வுப் பொதியை முன்வைத்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
ஆனால் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இழுத்தடிப்பதை நோக்கும் பொழுது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இன விவகாரத்திற்கான தீர்வோ அல்லது அதிகாரப் பரவலாக்கலுக்கான திட்டங்களோ இல்லை என்பதை உறுதி செய்கின்றது.
இதனை தமிழ் மக்கள் மாத்திரமல்ல ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகரவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
யுத்தம் முடிந்து ஏறக்குறைய இரண்டரை வருடங்களாகிவிட்டன. ஆனால் மக்களின் சுதந்திரம் பெருமளவில் குறைந்துவிட்டது.
போர் முடிந்த பின் நாட்டில் சமாதானம் நிலவும், மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள், ஒற்றுமையாக வாழ்வார்கள், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றெல்லாம் நாம் எதிர்பார்த்தோம். நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் விரும்பும்படியல்லாது அரசு விரும்பும்படி தமிழ் மக்களை ஆள முயற்சிக்கின்றது. தீர்வுக்கான பேச்சுவார்த்தையை எவ்வித காரணமுமேயின்றி வெறுமனே இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.
நாட்டில் நிலவும் இத்தகைய சூழ்நிலைகளின் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அமெரிக்கா சென்று தமது பிரச்சினையை கூறத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியேதும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தயாசிறி எம்.பி குறிப்பிடுகின்றார்.
இதனைத் தான் தமிழ் மக்களும் அரசாங்கத்திற்கு கூற விரும்புகின்றனர். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், விடுதலைப் புலிகளையும் தொடர்ச்சியாக தமது பிரசாரத்திற்குப் பாவித்து தொடர்ந்தும் தென்னிலங்கை மக்களை இருட்டுக்குள் தள்ளி அரசியல் நடத்துவதை விடுத்து தீர்வுப்பொதியினை முன்வைத்து இன விவகாரத்திற்கான தீர்வினைக் காண அரசாங்கம் முன்வர வேண்டும்.
தமிழர் விவகாரத்திற்கான தீர்வுக்கு கூட்டமைப்போ அல்லது வேறு சக்திகளோ அரசாங்கத்திற்கு தேவையில்லை. நாட்டின் தலைவிதியையே மாற்றக் கூடிய பல விடயங்களில் அரசாங்கம் எவ்வித இடருமின்றி முடிவுகளை எடுத்து அமுல்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கேற்ப தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு சிரமம் இருக்காது.
எனவே அரசாங்கம் தீர்வுப் பொதியினை முன்வைத்து இதய சுத்தியுடன் அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
வி.தேவராஜ்

Geen opmerkingen:

Een reactie posten