தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 november 2011

தமிமீழ மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய நவம்பர் 11ம் திகதி நோர்வே கூட்டம்!- ச. வி. கிருபாகரன்

இவரின் கிணற்றுத்தவளை பற்றிய விளக்கமே தவறு,இவரெல்லாம் ஆய்வுவேற செய்றார்,தமிழர் தலையெழுத்தை யாரால் மாற்றமுடியும்.
 
[ ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011, 02:54.41 AM GMT ]
‘கிணற்று தவளைகள்’ கிணற்றுக்குள் நடப்பதற்கு மேலாக வேறு ஒன்றையும் அறியாதவர்கள். இத் தவளைகள் உலகம் என்று ஒன்று உள்ளதையோ, மலை, சமூத்திரம், கடல், ஆறு, காலநிலை மாற்றம் போன்றவற்றையோ, பெரிய திமிங்கிலம், சுறா, சிங்கம், கரடி போன்றவை பற்றியோ ஒரு பொழுதும் அறியாதவர்கள்.
இவற்றை என்றுமே அறியாத காரணத்தினால் இவற்றினால் தமக்கு ஏற்படக்கூடிய அழிவையோ, விபரீதங்களையோ அறிந்திருக்க முடியாது.
இதை தான் கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை நோர்வே அரசினால் வெளியிடப்பட்ட (202 பங்கங்கள் கொண்ட) வெளியீட்டு விழாவின் உரைகள், அறிக்கை தமிழீழ மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. உண்மையை கூறுவதனால், இங்கு வெளியிட்ட அறிக்கையை மிக தெளிவாக வாசிக்கும் சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லை.
ஆகையால் இக் கட்டுரையில் அவர்களது அறிக்கை பற்றி எழுதுவதை தவிர்த்து கொள்கிறேன். ஆனால் 11ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சகல உரைகள், கேள்வி பதில்கள் யாவற்றையும் பல தடவை மிக அவதானமாக பார்வையிட்டு இவற்றை எழுதுகிறேன்.
இக் கூட்டத்தின் வீடீயோ ஏறக்குறைய இராண்டு மணித்தியாலங்களும் முப்பத்து எட்டு நிமிடங்களை (2:37:17) உள்ளடக்கியது. இதில் பலர் உரையாற்றி கேள்விகளுக்கு பதில்கள் கூறியிருந்தாலும், தமிழீழ மக்களுக்கு மிகவும் அறிந்த பெயர்வழியான நோர்வேயின் அமைச்சர் திரு எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் திரு ரிச்சேட் ஆர்மிரேஜ், சிறிலங்காவின் ஜனதிபதி ஆலோசகர் திரு மிலிந்த மொறகொட, இந்தியாவின் ஊடகவியலாளர் திரு நாராயணசுவாமி, இவர்களுடன் பிரித்தனியாவை சேர்ந்த கலாநிதி சுதா நடாராஜாவின் கருத்துக்கள் இங்கு பல மிக முக்கிய விடங்களையும் செய்திகளையும் தமிழீழ மக்களுக்கு வெளிபடையாக கூறுகின்றன.
இரண்டு மாவீரர் தினமா?
தயவுசெய்து இவற்றை படித்துவிட்டு, உண்மையில் இரண்டாக பிரிந்து, இரு மாவீரர் தினம் புலத்தில் செய்ய வேண்டுமா? அப்படி செய்வதன் மூலம் எப்படியாக இரண்டாவது மாவீரர் தினம் செய்யும் உங்களால் தமிழீழ மக்கள் மீதான சர்வதேச நிலைப்பாட்டை மாற்ற, எதிர்கொள்ள முடியும் என்பதையும் சிந்தியுங்கள், எங்களுக்கும் உங்கள் சிந்தனையில் வருபவற்றை கூறுங்கள்.
காரணம், தடி எடுத்தவன் எல்லாம் சட்டம்பி, காக்கி போட்டவன் எல்லாம் ஆமிக்காரன் போல, தரம் அற்ற இணையத்தளமும், வா(ய்)னொலி நடத்துபவர்கள் எல்லாம் ஊடகவியலாளராகவும், ஊரில் கள்ளுத்தவறணையில் கதைப்பவர்கள் போல் அலட்டுபவர்கள் எல்லாம் ஆய்வாளராகவும் வந்து தமிழீழ மக்களின் வாழ்வே மாயமாகி உள்ளது மட்டுமல்லாது, இப்பொழுது தமிழீழ மக்களின் இருப்பே நிலத்தில் கேள்வி குறியாகி வருகிறது.
எந்தவித இராஜதந்திரம் இல்லாத அரசியல், சுயநலத்துடனான அரசியல், உணர்ச்சி வசப்பட்ட அணுகுமுறை யாவும் மேலும் மேலும் தமிழீழ மக்களின் வாழ்க்கையை பாதாள உலகத்திற்கே இட்டு செல்கிறது.
முன்பு ஒற்றுமையாகுங்கள் என்று கூறிய வசனங்கள் காலப்போக்கில், வேற்றுமையிலும் ஒற்றுமை காணுங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இன்று மாவீரர் தினத்தை தன்னும் நிம்மதியாய் ஒற்றுமையாய் செய்தவர்களை செய்ய விடுங்கள் என்ற நிலைக்கு வந்துள்ளோம்.
இவையே முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் சர்வதேசம் சிரிக்குமளவிற்கு புலம்பெயர்வாழ்வில் தற்போதைய அரைகுறை அல்லது அரைக்கால் தலைவர்கள் என தங்களை பெருமிதத்துடன் கூறுபவர்களினால் தமிழீழ மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட் பிரமிக்கக்கூடிய வெற்றிகள்.
சிங்கள பௌத்த தேசம் - ஒற்றுமையாக, இராஜதந்திர ரீதியாக, உணர்ச்சிவசப்படாத அணுகுமுறைகளினால் பெற்றுள்ள வெற்றிகளை கண்டு இன்று சர்வதேசம் திகைத்துள்ளது மட்டுமல்லாது, சர்வதேசம் மேலும் அவர்களுக்கு உதவப்போகிறது என்பதை நாம் கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை நோர்வேயில் நடைபெற்ற அறிக்கை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற உரைகள் கேள்வி பதில்களிலிருந்து ஊகிக்கக்கூடியதாகவுள்ளது.
நோர்வே உரைகள்
இங்கு உரையாற்றியவர்களில் பிரித்தானியாவைச் சேர்ந்த கலாநிதி சுதா நடராஜாவின் கருத்துக்கள் யாவும், தமிழீழ மக்களின் குரலை, தமிழீழ விடுதலை புலிகளினால் சமாதான பேச்சுவார்த்தை காலத்தின் முன்னெடுப்புக்களை பிரதிபலிப்பதாக காணப்பட்டது.
சுதா நடராஜா, காலஞ்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கத்திற்கு மிக நெருக்கமானவர் மட்டுமல்லாது, தாய்லாந்து முதல் வேறு பல நாடுகளில் திரு அன்ரன் பாலசிங்கம் கலந்து கொண்ட சமதான பேச்சுவார்த்தைகளில் இவரும் பங்கெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பிரித்தானியாவில் வெளியாகும் ‘தமிழ் காடியன்’ ஆங்கில வாரப் பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியராகவும், பிரித்தானிய பல்கலைக் கழகம் ஒன்றில் விரிவுரையாளராகவும் கடமையாற்றும் சுதா நடராஜா, இவ் விடயங்களை முன்னெடுக்க கூடிய சகல தகமைகளையும் கொண்டுள்ளார் என்பதில் எவ்வித ஐயமில்லை.
சுதா நடாராஜா தனக்கு ஒதுக்கப்பட்ட மிக குறுகிய நேரத்தில் தன்னால் முன் கொண்டுவரக்கூடிய முக்கிய விடயங்களை சர்வதேச சமூதயம் தலைகுனியக் கூடிய விதத்தில் எடுத்து கூறியிருந்தார்.
உதாரணமாக, முன்பு சமதான பேச்சுவார்த்தை காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட விடயங்களான - உயர் பாதுகாப்பு பிரதேசங்கள், இடம் பெயர்ந்தோர், ஒட்டுக் குழுக்கள் போன்ற விடயங்களையே இன்று சர்வதேச சமுதாயம் அலட்டிக் கொள்கிறது என சுதா நடாராஜா குறிப்பிட்டதுடன், நோர்வேயினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘முற்றுப்பெறாத முன்னெடுப்புக்களென’ கூறப்பட்டுள்ளது தவறு எனவும், உண்மையில் சிறிலங்காவில் ஒரு முழு சிங்கள தேசம் உருவாக இவர்களது முயற்சிகள் வழி வகுத்துள்ளவென கூறினார்.
சுதா நடாராஜாவினால் கூறப்பட்ட அடுத்த முக்கிய விடயம் என்னவெனில், அமெரிக்காவில் நடைபெற்ற 9-11 பின்னரே, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்குவரம் கொடுக்கப்பட்டது என கூறப்படுவது உண்மைக்கு மறானதுவெனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் இதற்கு முன்னரே தடை செய்யப்பட்டு நெருக்குவாரத்திற்கு ஆளாக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
நல்ல அரசியல் ஆளுமை மதிநுட்பம் கொண்ட கலாநிதி சுதா நடாராஜா போன்றவர்களை, தமிழீழ மக்கள், விசேடமாக புலம்பெயர் வாழ் மக்கள், தமது வழமையான எரிச்சல் பொறாமை கலாச்சாரங்களிலிருந்து விலக்கி, சரியான இராஜதந்திர வழியில் பயணிக்க, ஆசிகள் வாழ்த்துக்கள் ஆதரவுகள் கூற வேண்டும்.
நோர்வேயின் அமைச்சர் திரு எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றும் பொழுது, திரு அன்ரன் பாலசிங்கத்தினுடைய மறைவிற்கு பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளையும் மேற்கொள்வில்லையெனவும், இதனால் சர்வதேச நிலைமைகள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது மாற்றமடைய தொடங்கியது எனவும் கூறினார்.
முன்னாள் அமெரிக்காவின் உதவி இராஜங்க செயலாளர் திரு ரிச்சேட் ஆர்மிரேஜ் தனது உரையில் எவ்வளவோ சிரமத்தின் மத்தியில், தான் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட அமைப்பான, தமிழீழ விடுதலை புலிகளினது அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கத்தினுடன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கான அனுமதியை வழங்கியதாகவும், ஆனால் மறு தினமே தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ முகாம் ஒன்றை தாக்கியதாகவும், இதனால் இவ் அனுமதி ரத்துச் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
திரு ரிச்சேட் ஆர்மிரேஜின் உரையிலிருந்து ஒரு விடயம் தெளிவாகியிருந்தது. அதாவது அமெரிக்காவின் வேண்டுகோள் முன்னெடுப்புக்களின் அடிப்படையிலேயே நோர்வே அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் இடையில் மத்தியஸ்தர் வேலைக்கு முன்வந்தனர். இது சர்வதேசத்திற்கு ஓர் புதுமையான விடயம் அல்லவா, ஆனால் தமிழீழ மக்களில் பெரும்பான்மையோருக்கு மிக அதிசயமான தகவலே.
இன்று பாலஸ்தீன இஸ்ரேலிய பிரச்சினைகள் குழறுபடியில் உள்ளதனால் அதுவும் நோர்வேயின் மத்தியஸ்தம் மூலம் போடப்பட்ட சில அத்திரவாரங்களே எனலாம்.
இந்தியாவின் ஊடகவியலாளர் திரு நாராயணசுவாமி வழமைபோல் இந்தியாவின் நிலைமைகளை எடுத்துக் கூறியிருந்தார். இவர் விசேடமாக கூறியதாவது, இந்தியாவில் இந்திரா காங்கிரசின் தேர்தல் வெற்றியும், படுகொலைசெய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் அரசியல் செல்வாக்கும் நிலைமைகளை மாற்றம் பெற உதவியதாக கூறியிருந்தார்.
சிறிலங்காவின் ஜனதிபதி ஆலோசகர் திரு மிலிந்த மொறகொட இவ் விழாவில் அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளாத போதிலும், சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை தனது உரையில் பிரதிபலித்திருந்தார். அங்கு மீன்பிடி, விவசாயம் யாவும் நல்ல முன்னேற்ற நிலையை அடைந்துள்ளதாகவும், கொழும்பில் வாழும் சனத் தொகையில், மூன்றில் (1ஃ3) ஒன்று தமிழரே எனவும் குறிப்பிட்டிருந்தார்.
திரு மிலிந்த மொறகொட கொழும்பில் வாழும் தமிழர் சனத் தொகை பற்றி குறிப்பிட்ட புள்ளி விபரத்திற்கும், சிறிலங்கா அரசினால் தமது சர்வதேச பரப்புரைக்கு பாவிக்கபடும் புள்ளி விபரத்திற்கிடையில் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. சிறிலங்கா அரசு கொழும்பில் வாழும் சனத் தொகையில் 65 சதவீதமான மக்கள் தமிழரென பொய் பிரச்சாரம் செய்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது
இங்கு உரையாற்றியவர்களில் பெரும்பான்மையானேர் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசியல் மீள் பிரவேசத்திற்கு முழுக்கு போட்டுவிட்டனர்.
யாவரும் திருமதி சந்திரிக்கா குமாரதுங்க யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கோ, சமாதான பேச்சுவார்த்தைக்கோ, ஆதரவு கொடுக்கவில்லையெனவும், சந்திரிக்கா குமாரதுங்க அப்போதைய பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எந்தவித நல்ல உறவும் இருக்கவில்லையென கூறினார்கள்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு பிரபாகரன், 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு வாழ் மக்களை தேர்தலை நிராகரிக்குமாறு வேண்டுகோள் விடாதிருந்தால், ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் சிறிலங்காவில் அரசியல் நிலைபாடு நிச்சயம் மாறியிருக்குமெனவும் கூறினார்கள்.
சர்வதேச சமூதாயத்தின் இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது, ஐக்கிய சிறிலங்காவிற்கு உள்ளேயே காண முடியும் என்பதை மிக தெளிவாக கூறியிருந்தனர்.
இறுதி யுத்தம் பற்றி எரிக் சொல்ஹெய்ம்
கீழே குறிப்பிடப்படும் சில விடயங்கள், பல வேறுபட்ட கருத்துகளுடன் சில இணைய தளங்கள், பத்திரிகைகளில் ஏற்கனவே வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவற்றில் கூறப்பட்ட கூற்றுக்கும், சிறிலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் பல ஆண்டுகள் மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் ஓர் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் திரு எரிக் சொல்ஹெய்ம், விசேடமாக முன்னாள் அமெரிக்கவின் உதவி இராஜங்க செயலாளர் திரு ரிச்சேட் ஆர்மிரேஜ்க்கு அருகிலிருந்து கீழ் கண்ட விடயங்களை கூறுவதற்கும், செய்தியின் பெறுமதியின் அடிப்படையில் பல மடங்கு வித்தியாசம் உண்டு. ஏனெனில், இணைய தளங்கள், பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகியதும் சர்ச்சைகள் உருவாகிவிட்டன. இவை இன்று இரண்டு மாவீரர் தினம் செய்ய வேண்டுமென்றளவுக்கு சென்று விட்டது.
திரு எரிக் சொல்ஹெய்ம் இறுதிநேர யுத்தம் பற்றி குறிப்பிடுகையில்,
‘‘யுத்தம் முடியும் நிலைக்கு வரும்வேளையில், அதாவது சிறிலங்கா அரசு வெற்றி அடையும் நிலைக்கு வந்த பொழுது, தாம் நேரடியாக தொலைபேசியில் நாட்டில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுடனும், நேரடியற்ற முறையில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்த விடுதலைப் புலிகளுடனும் தொடர்பு கொண்டு, போர் நிறுத்தப்பட வேண்டியதற்கான நேரம் வந்து விட்டதென ஆலோசனை கூறுதியதாகவும். அவர்கள் விரும்பினால் போரை சரியான முறையில் முடிவுக்கு கொண்டுவர முடியுமென தான் கூறியதாகவும், இதன் பிரகாரம்  நீங்கள் யாவரும் (தமிழீழ விடுதலைப் புலிகள்) உங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்வீர்கள், அத்துடன் எல்லாப் பொதுமக்களும் காப்பாற்றப்படுவார்கள், இதேவேளை உங்கள் ஆயுதங்களை நீங்கள் விரும்பியவரிடம் - ஐக்கிய நாடுகள் சபை அல்லது இந்தியா அல்லது அமெரிக்காவிடம் கையளிக்க வேண்டுமெனவும் கூறியதாகவும். இவ்வேளையில் அமெரிக்கா இராணுவ போக்குவரத்து மூலம் போராளிகள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்படுவார்களென்றும், கொழும்பில் சகல போராளிகளிகளது பெயர்கள் சர்வதேச முறைக்கு அமைய பதிவு செய்யப்படுமெனவும், இதன் மூலம் அவர்களினால் (சிறிலங்கா அரசினால்) யாரையும் இல்லாது செய்ய முடியாதென கூறியதாகவும், ஆனால் தங்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ அல்லது பொட்டம்மானுக்கோ எந்தவித உறுதியும் கொடுக்க முடியாதென கூறியதாகவும், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இவற்றை நிரகாரித்துவிட்டனர் எனக் கூறினார்’’.
அதேவேளை எரிக் சொல்ஹெய்ம் தானும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் வன்னிக்கு நேரில் செல்ல வேண்டுமானால் செல்வதற்கு தயாராய் இருப்பதாக கூறியதாகவும், அவர்கள் (சிறிலங்கா) ‘நீங்கள் வரலாம் ஆனால், நீங்கள் தலைவர் பிரபாகரனையோ, அரசியல் பொறுப்பாளர் நடேசனையோ சந்திக்க அனுமதிக்க மாட்டோமென’ கூறுதியதாகவும் கூறினார்.
அடுத்து திரு எரிக் சொல்ஹெய்ம் கூறிய முக்கிய விடயமாவது,
2008ம் ஆண்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழிக்கப்பட வேண்டுமென்ற முடிவுக்கு இந்தியா வந்ததாகவும், அதற்கு முன், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில், தனது முன்னெடுப்பினால் ஏதோ ஒரு இடத்தில் இரகசிய சந்திப்புக்கள் நடந்ததாகவும், தான் அந்த இடத்தையும் பிரதிநிதிகளையும் கூற விரும்பவில்லையென கடந்த வெள்ளிக்கிழமை 11ம் திகதி நோர்வே கூட்டத்தில் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
இவ்விடயத்தில் பல சந்தேகங்கள் உருவாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 2008ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி ஆற்றிய மாவீரர் தின உரையில் “...........கனிந்து வருகின்ற இந்த காலமாற்றத்திற்கேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்” என்பதுடன் இந்தியாவை திருப்திப்படுதக்கூடிய வேறு பல விடயங்களையும் கூறியிருந்தார்.
அப்படியானால் இந்தியாவின் விடயத்தில் திரு எரிக் சொல்ஹெய்மின் கூற்றிற்கும், தலைவர் பிரபாகரனின் 2008 மாவீரர் தின உரைக்குமிடையில் முரண்பாடு தென்படுகிறது. இது ஆய்விற்கு உள்ளாக்கபட வேண்டிய ஓர் முக்கிய விடயம்.
காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் திரு எரிக் சொல்ஹெய்மின் முன்னெடுப்பில் இந்தியாவுடன் ஏதோ ஒரு இடத்தில் இரகசிய சந்திப்புக்கள் நடந்தியது பற்றி திரு பிரபாகரனுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது தான் உண்மையா?.
இறுதியாக நோர்வேயின் அமைச்சர் திரு எரிக் சொல்ஹெய்மும், முன்னாள் அமெரிக்கவின் உதவி இராஜங்க செயலாளர் திரு ரிச்சேட் ஆர்மிரேஜ்சும் சில கடுமையான செய்திகளை சிறிலங்கா அரசிற்கு சொல்லியிருந்தாலும், சீனா ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான, வெனிசுலா போன்ற நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள சிறிலங்கா அரசுடன் இவர்களால் முரண்பட முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
அத்துடன் தற்பொழுது அமெரிக்க அரசில் பதவியில் இல்லாத திரு ரிச்சேட் ஆர்மிரேஜ், சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சென்று சந்தித்ததை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
திரு எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றுகையில், ‘ஒஸ்லோ பிரகடனத்தை திரு அன்ரன் பாலசிங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் அதை தலைவர் பிரபாகரன் கவனத்திற்கு எடுத்துச் சென்றபொழுது திரு பிரபாகரன் அதை ஏற்க மறுத்தாக கூறிப்பிட்டார். அத்துடன் திரு அன்ரன் பாலசிங்கம் ஐக்கிய சிறிலங்கவிற்கு உள்ளான தீர்வையே என்றும் ஆதரித்திருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையை கூறுவதானால், லண்டனில் 2006ம் ஆண்டு திரு அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட திரு எரிக் சொல்ஹெய்மும், இதே வார்த்தைகளை ஆயிரக்கணக்கான புலம்பெயர்வாழ் மக்களின் முன்னிலையில், விசேடமாக வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் திறமையாக செயல்பட்டு வந்தவேளையில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு எரிக் சொல்ஹெய்மின் இறுதிவார்த்தைகள் புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களுக்கு மிகவும் எச்சரிக்கையானவை.
முதலாவதாக நீங்கள் சாத்வீக வழியில் உங்கள் அரசியல் உரிமைக்கு போராடுங்கள், அடுத்து உங்கள் அரசியல் போராட்டங்களை புலத்தில் அல்ல நிலத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
ஆகையால் உண்மையான சர்வதேச நிலைமை என்ன என்பதை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றை அலட்சியம் செய்துவிட்டு நாம் தேவையற்ற முறையில் எமக்குள் தினமும் பிரச்சனைகளை அதிகரித்து கொள்வது, இறுதியில் எமது இனத்தை நாமே தாரைவார்த்து கொடுக்கும் நிலையை உருவாக்கும். ஆகையால் என்றும் ‘வருமுன் காப்போனாக வாழுங்கள்’.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்

Geen opmerkingen:

Een reactie posten