[ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 08:39.08 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு, அக்டோபர் 28 முதல் 31 வரை நடந்தது. இங்கிலாந்து பேரரசி எலிசபெத் இதைத் தொடங்கி வைத்தார். அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 54 நாடுகள் இதில் கலந்துகொண்டன. இதில் முக்கியமான செய்தி என்ன தெரியுமா?
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் 'நாடு கடந்த தமிழ் ஈழம்’ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இதில் உட்கார ஒரு நாற்காலி கிடைத்திருந்தது. இதன் வெளியுறவுத்துறைத் துணை அமைச்சர் மாணிக்கவாசகர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
அவரிடம் பேசியபோது,
காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் தமிழீழ மக்களின் சார்பாக, நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதி கலந்துகொள்வது, இலங்கையில் அமைய இருக்கிற தமிழீழ அரசுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம். இதில் பேசும்போது, 'இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை காமன்வெல்த் கூட்டமைப்பின் சார்பாக விசாரிக்க வேண்டும்’ என்று கோரினேன்.
போர்க் குற்ற விசாரணைக்காக காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை ஆணையத்தை நிறுவ வேண்டும்’ என்ற தீர்மானமும் இதில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்படி ஒரு ஆணையத்தை அமைக்க இந்தியா, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இலங்கை எதிர்ப்பது ஆச்சரியமல்ல.
ஆனால், அண்ணல் காந்தி அடிகள் தென்னாபிரிக்காவிலும், இந்தியாவிலும் எந்த மனித உரிமைகளுக்காகப் போராடினாரோ அவர் சம்பந்தப்பட்ட நாடுகளே மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையத்தை எதிர்த்தது, எவரும் எதிர்பாராத, வருத்தமான ஒன்று என்று முடித்தார் அவர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய மக்களிடம் பேசியபோது,
ராஜபக்ச'வுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் கிரீன் கட்சி, ஒரு மாபெரும் போராட்டம் நடத்தியது. இதில் பெர்த், சிட்னி, மெல்போர்ன், டார்வின் ஆகிய நகரங்களில் இருந்துவந்த ஏராளமான தமிழர்களோடு, கணிசமான அளவில் அவுஸ்திரேலியர்களும் பங்கேற்றனர். ராஜபக்ச'வின் கொடுமைகளுக்கு எதிரான வாசகம் எழுதிய அட்டைகளை நாங்களும் ஏந்தி நின்றோம்.
எங்கள் நாட்டிலும் ராஜபக்ச'வுக்கு எதிரான போர்க்குற்ற வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. ஏற்கெனவே அமெரிக்க நீதிமன்றம் ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மேலும், பல்வேறு நாடுகளிலும் நீதிமன்றங்கள் ராஜபக்ச'வுக்கு அழைப்பாணைகள் அனுப்பி வரும் நிலையில், அந்த நாடுகளுக்குச் சென்றால் கைதாவோம் என்ற அச்சத்தால்தான் ராஜபக்ச பல நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார் என்றனர்.
போகிற போக்கைப் பார்த்தால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டும்தான் ராஜபக்ச போகமுடியும் போலிருக்கிறது!
ஜூனியர் விகடன்
மாணிக்கவாசகர்
Geen opmerkingen:
Een reactie posten