தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 november 2011

நிரந்தர தீர்வு கோரும் ஒரு தேசாபிமானியின் துணிச்சல் மிக்க கோரிக்கை!- ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்

[ சனிக்கிழமை, 19 நவம்பர் 2011, 08:26.31 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறை அடிப்படையிலோ அல்லது இந்திய முறையிலான தீர்வோ ஏற்படுமாக இருந்தால் இலங்கையில் வாழ்ந்து மடிந்த எல்லா இனத்தையும் சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆத்மாக்கள் சாந்தியடையும். இவ்வாறு த.வி.கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தின் முழுவடிவம்:
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ                                                                                                                                                                                                                                                           2011.11.15
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
நிரந்தர தீர்வு கோரும் ஒரு தேசாபிமானியின் துணிச்சல் மிக்க கோரிக்கை!-
கௌரவ ஜனாதிபதி அவர்களே!
யுத்தம் முடிந்த பின், நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்து மிக்க கவலையுடனும், மனக்குழப்பத்துடனும்; இக்கடிதத்தை எழுத நிர்ப்பந்திக்கப்படடுள்ளேன்.
யுத்தத்தினால் வட பிரதேசத்தில் சிந்தப்பட்ட இரத்தம் காய்வதற்கு முன்பும் யுத்த வடுக்கள் மாறுவதற்கிடையிலும் அரசோ அன்றி அரசை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களோ ஏற்கனவே புண்பட்டுள்ள நெஞ்சங்களை அவர்களின் பொறுமையின் எல்லையையும் தாண்டி, மேலும் ஏன் புண்படச் செய்கிறார்கள் என்பதே எனது கேள்வியாகும்.
ஒரு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை மீறும் தைரியம் அவர்களுக்கில்லை. அதே நேரத்தில் கடந்த காலத்தில் எத்தகைய அமைப்பிருந்ததோ அதே அமைப்பைச் சேர்ந்தவர்கள் மறைமுகமான மிரட்டலுடன் மக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலைமை தான் வடக்கே, குறிப்பாக வன்னியிலே நிலவுகின்றது.
வன்னியின் நான்கு மாவட்டங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட இரு மாவட்டங்கள் கிளிநொச்சியும் முல்லைத்தீவும் என்பது நீங்கள் அறியாததல்ல. இம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல தடவைகள் இடம்பெயர்ந்து இறுதியாக மீள் குடியேற்றப்பட்ட போது தமது வீடுகள் ஒன்றுமே முழுமை இல்லாத நிலையினைக் கண்டனர்.
அவர்களுடைய வீடுகள் ஒன்றில் தரைமட்டமாக அல்லது கூரைகள், யன்னல்கள். கதவுகள் உட்பட ஏனைய உபகரணங்கள் எதுவுமே இருக்கவில்லை. சுனாமி தவிர்ந்த ஏனைய எந்த இயற்கைப் பேரழிவுகள் எவற்றுடனும் இவர்களுடைய இழப்பை ஒப்பிட முடியாது. இவர்களுடைய இழப்பை சுனாமியுடன் கூட ஒப்பிட முடியாத அளவிற்குள்ளது. சுருங்கக் கூறின் பல தடவைகள் இடம் பெயர்ந்து இறுதி இடத்திற்கு வந்த போது உடுத்த உடைகள் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.
இத்தகைய துன்பத்தோடு பலர் உறவினர்களை இழந்துள்ளனர். சிலர் இன்று வரை காணாமல் போயுள்ளனர். பலர் கடுங்காயங்களுடன் கைகளையும் சிலர் இரு கைகளையும் கண்பார்வைகளையும் இழந்துள்ளனர். அனேகர் தமது உடலில் அகற்ற முடியாத குண்டுச்சிதறல்களையும் சுமந்துகொண்டு இருக்கின்றனர்.
தென்னிலங்கை மக்களை இவர்களுக்கு உதவ அனுமதித்து இருந்தால் அவர்கள் மிக நன்றாக பராமரிக்கப்பட்டிருப்பார்கள். துரதிருஷ்ட வசமாக அகதி முகாம்களை அரசசார்பற்றற நிறுவனங்கள் அணுகக் கூட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பல நூற்றுக்கணக்கான கடும் போக்கான விடுதலைப் புலிகள் வெளியார் உதவியுடன் முகாம்களில் இருந்து தப்பி இந்தியாவிற்குச் சென்றுவிட்டனர்.
இங்கே நான் குறிப்பிடுவது மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் இழப்புக்கள் ஆகியவற்றின் மிகவும் சிறிய ஒரு பகுதியாகும். மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் பட்டினி உட்பட பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். மீளக்குடியேறிய அகதிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளும் அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பின் நிலைமை முற்று முழுதாக மாறுபட்டதாக இருந்திருக்கும். உள்ளுர் அரசியல்வாதிகளின் தலையீடு உங்களுக்கும் உங்கள் அரசிற்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்திவிட்டது.
தமது இழப்புக்களுக்கு எதுவித நஷ்ட ஈடும் வழங்கப்படாமையால் மக்கள் பெருமளவு விரக்தியடைந்துள்ளனர். அமைச்சர்களின் அடிக்கடி நடக்கின்ற திறப்பு விழா கேளிக்கைகளினால் மக்களின் மனங்களினை வென்றெடுக்க முடியவில்லை. வீதிகளுக்கு கார்பெட் இடுவதிலும் அவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களுக்கு வேண்டியது அரசாங்கத்தின் செலவில் பூர்த்தியாக்கப்பட்ட அல்லது பூரணமாகத் திருத்தியமைக்கப்பட்ட வீடுகளே. அவ்வாறு செய்ய அரசுக்கு தார்மீகக் கடமையுண்டு.
கடந்த காலங்களின் வழமையும் இதுதான். வீடுகளை அமைக்கவும் திருத்தம் செய்யவும் அரசு கடன் கொடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. தங்களுடைய தங்கத்தினையும் அவர்கள் திரும்பப் பெறவே விரும்புகின்றார்கள். அதற்கான பற்றுச்சீட்டு அவர்களிடம் உண்டு. இராணுவம் சட்ட விரோதமாக பிடித்து வைத்திருக்கும் வீடுகளையும் காணிகளையும் மீளத்தருமாறு கேட்கின்றனர். அவர்கள் பிடித்து வைத்திருக்கின்ற வீடுகளும் காணிகளும் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக அல்லது மிகக்குறைந்த விலையில் பெறப்பட்டவையாகும்.
அவர்களுடைய பிரச்சினைகள் பலவற்றை அவர்களுக்கு காட்ட வேண்டிய அனுதாபத்தோடு தீர்க்கப்பட வேண்டியவையே. அவர்கள் மிகவும் துன்பப்பட்டு விட்டார்கள். மேலும் அவர்களை உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறவைப்பின் அது மிக்க துன்பமான நிகழ்வாகத்தான் முடிவதோடு அரசாங்கத்துக்கு பெரும் இழுக்கையும் தேடித்தரும். இந்த மக்கள் இடுகின்ற சாபம் அவர்களை துன்புறுத்தியவர்களை தலைமுறை தலைமுறையாக தொடரும்.
சிங்கள தமிழ் மக்களின் பூர்வீக தொடர்பு
ஜனாதிபதி அவர்களே, நாம் கால வரையின்றி இவ்வாறு செல்ல முடியாது. மேலும் தாமதியாது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையில் வாழும் பல்வேறு சமூகத்தினரும் தம் மத்தியில் உள்ள சந்தேகங்களை களைந்து ஒன்று பட்டு ஒரே தளத்தில் நிரந்தரமானதொரு தீர்வுக்கு ஒத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் வாழும் இரு பெரும்பான்மை சமூகத்தினர் நீண்ட காலமாக ஒருவர் மீது ஒருவர் கொண்ட அவநம்பிக்கை வளர்ந்தமைக்கு முக்கிய காரணம் எமது நாட்டின் வரலாற்றில் நடந்தேறிய சில முக்கிய சம்பவங்கள் பற்றி அறிந்திருக்காமையே. இதனுடைய விளைவு ஒரு குழுவினால் மற்றைய குழுவினரை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதே நீண்டகாலமாக நடந்து வருகின்றது. இந்த நாட்டின் சனத்தொகையில் எத்தனை வீதத்தினர் தமிழ், சிங்கள மக்களின் பூர்வவுக உறவு பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர்?.
எம்மில் அனேகருக்கு தெரிந்த வகையில் விஜயன் என்ற இளவரசன் பாண்டி நாட்டு இளவரசியை மணம் முடித்ததும், அதே போன்று அவனது தோழர்கள் 700 பேருக்கு அவரவர் தகுதிக்கு பொருத்தமான பெண்களை பாண்டிநாட்டு மன்னன் திருமணம் முடிக்க அனுப்பி வைத்தார் என்று சிங்கள மக்களின் பூர்வீக வரலாற்றை எடுத்துக் கூறும் “மகாவம்சம்”; என்ற புத்தகத்தில் 7ம் அத்தியாயத்தின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன்.
“அவர் (பாண்டிய மன்னர்) தனது மகளாகிய அரச குமாரியையும், அவளுக்கு உரித்தான ஆபரணங்கள், அவர்களுக்கு தேவையான பலவேறுபட்ட பொருட்கள், விஜயனின் தோழர்களின் தகுதிக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினர்க்கு உரிய நட்ட ஈட்டைக் கொடுத்து, அழைக்கப்பட்ட பெண்கள், யானைகள், வாகனங்கள், அரசருக்குரிய தரமான பொருட்கள், பல்வேறு கைவினைக் கலைஞர்கள், பதினெட்டு வகையான தொழில் புரியும் இனக்குழுக்களைச் சேர்ந்த 1000 குடும்பத்தினருடன், ஒரு கடிதத்தினையும் மன்னருக்கு அனுப்பியிருந்தார். (அத்தியாயம் 7 பகுதி 55-58)
இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோடு தமக்குள்ள தொப்புள் கொடி உறவைப்பற்றி பிரமாதமாக பேசுவதனைப் போன்று, இன்றும் தமிழ் நாட்டுடன் இணைந்து இருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவுண்டு. சுருக்கமாகக் கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்வோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனது கூற்றுக்கு வலுச்சேர்ப்பதற்காக 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ம் திகதி வெளியாகிய “த ஐலண்ட்” பத்திரிகையில் வெளியாகிய பிரபல்யமான, இளைப்பாறிய ஒரு காலத்தில,; நியாயமாகச் செயற்பட்ட யாழ் அரச அதிபரான நெவில் விஐயவீரா என்பவரால் “இலங்கைக்கு ஒரு ஒபாமா” என்ற தலைப்பில் வெளியாகிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.
“இலங்கையை அடையாளப்படுத்துவதில் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துகின்ற, நாம் மரபு ரீதியாக சிங்களவர்கள் எந்தளவுக்கு தமிழர்களாக இருக்கின்றார்களோ அதே போன்று தமிழர்கள் சிங்களவர்களாக உள்ளனர் என்பதனை மறந்துவிடக் கூடாது.
பெருமை மிக்க காலக் கிரமமாக தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிக் குறிப்புத்தான் “மகாவம்சம்”. அனேக சிங்கள மக்கள் போல் நாமும் அதை நம்புவதனால் நமது முன்னோர்கள் என நாம் உரிமை கோரும் இளவரசன் விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் பாண்டிய நாட்டுப் பெண்களை தமது மனைவிமாராக அடைந்திருப்பது எமது தாய்வழியில் சிங்களவர்களின் 50 வீதமான உயிரியல் மூலக்கூறு தமிழ் ஆகும். ஆகையால் மரபு ரீதியாக தமிழரும் சிங்களவர்களும் ஒரே இரத்தமும் சதையும் கொண்டவர்கள் என்பதே.
ஆகவே அவர்களை எமது தேசத்தின் சம பங்காளிகளாக கட்டாயமாக இல்லாது போனாலும் குறைந்த பட்சம் நல் நோக்குடனேனும் இணைய வைக்க வேண்டும். நாம் அவ்வாறு செய்யத் தவறினதாலேயே, அவர்கள் தம் வழி சென்று, தமக்காக சில ஏற்பாடுகளைச் செய்து இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போர் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த அடிப்படை உண்மையை அங்கீகரித்து தேசிய மட்டத்தில் உணர்வை ஏற்படுத்தி அதற்கேற்ப சூழ் நிலையை உருவாக்குவதே “ஸ்ரீ லங்காவின் ஒபாமாவை” காத்திருக்கும் முதற் பணியாகும்;”
இன முரண்பாடு ஒரு தேசியப் பிரச்சனை.
எமது நாட்டின் பிரச்சனை நம் எல்லோருக்கும் உள்ள ஒரு பொது பிரச்சனையாகவே நான் கணித்து வந்தேனேயன்றி அது தனிப்பட்ட ஒரு சமூகத்திற்கோ அல்லது ஒர் இனத்திற்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கோ அல்ல. இந்த நாட்டுப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நாட்டில் வாழும் ஒவ்வொருவருடைய உண்மையான பங்களிப்பு இன்றியமையாதது என உணர்ந்திருக்கின்றேன்.
நீங்கள் அடிக்கடி கூறிவந்ததைப் போல் இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஏனையவர்களைப் போல சம உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கும் உரிமையுண்டு. நாம் அதனை ஏற்போமானால் பிரச்சினையை தீர்ப்பது கடினமான விடயமல்ல. முதலாவதாக சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் மற்றும் ஏனைய குழுவினர் அனைவரும் இலங்கையர் என்ற பொது அடையாளத்துடன் வாழப்பபழக வேண்டும்.
ஒரு உண்மையான தேசபக்தன் தன் நாட்டை மட்டுமன்றி அந்த நாட்டில் வாழும் சகல மக்களையும் நேசிப்பதோடு அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும். இந்தக் கொள்கையோடு நான் இதுவரை வாழ்ந்தது மட்டுமன்றி இறக்கும் வரை அவ்வாறு வாழ்வேன். எதுவித தயக்கமும் இன்றி என் நாட்டிற்காக என் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன். இதைத்தான் எமது நாடு எல்லோரிடமும் எதிர்பார்க்கின்றது. என்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டின் அக்கறையே எப்பொழுதும் என்னுடைய முன்னுரிமையாக வந்துள்ளது. இதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றோம்.
எமது நாட்டின் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் மரியாதையும், அதை விருத்தி செய்ய எடுக்கும் முயற்சிகளும் நான் அறியாதது அல்ல. ஆனால் உங்களுடைய தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றையும், உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஏனைய பலரைப் போல் மெச்சுபவன் அல்ல. வடகிழக்கு மாகாணம,; வடகிழக்கு மக்கள், சம்பந்தப்பட்ட பல விடயங்களில் நான் தங்களுடன் முரண்பட்டுள்ளேன். பிறருடைய “சிந்தனை”, முறையற்ற வகையில் “மகிந்த சிந்தனைக்குள”; புகுத்தப்பட்டு இருப்பதாக நான் கூறியுமுள்ளேன்.
“மகிந்த சிந்தனையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடருமானால் அது தன்னுடைய அடையாளத்தையும் தனித்துவத்தையும் இழந்துவிடும். இங்கேதான் நீங்கள் தப்பு செய்துள்ளீர்கள். நான் அடிக்கடி கடிதம் எழுதியுள்ளேன். அக் கடிதங்களில் பல பொறுமதியான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளேன். அவற்றை கவனத்தில் எடுத்திருந்தால் இன்று தாங்கள் எதிர் நோக்கும் சில சங்கடமான நிலையில் இருந்து காப்பாற்றுப்பட்டிருப்பீர்கள்.
நாங்கள் இருவரும் ஒன்றாக 1970ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தாலும் நான் வயதாலும் அரசியலாலும் தங்களிலும் பார்க்க முதியவன் என்பதனால் உங்களுடைய நடை முறைகள் தீர்மானங்கள் ஆகிய ஒவ்வொன்றைப் பற்றியும் எனது வெளிப்படையான கருத்தை கூற வேண்டிய தார்மீகக் கடமை எனக்கு உண்டு.
ஜனாதிபதி அவர்களே, நான் ஒரு இனவாதியல்ல. ஒரு சிங்கள குடும்பத்தையும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தையும் எனது வீட்டின் இரு பக்கத்திலும் அயலவர்களாக இருக்க வேண்டும் என்பதனை விரும்புபவன். இந்த விடயத்தில் எனது கருத்தை நான் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. எனது இந்த வேண்டுகோளை எவரேனும் படித்து விட்டு அதற்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருந்து கூறலாம்.
ஆனால் மனச்சாட்சிப்படியே அன்றி உணர்ச்சிவசப்பட்டல்ல. என்னைப் பொறுத்த வரையில் ஏனைய பலரைப் போல் ஒரு நிரந்தர தீர்வு காணப்படுவதற்கே அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். அது கடினமான விடயமல்ல. இந்த நாடு சுதந்திரமடைய முன்னர் பல ஆண்டாண்டு காலமாக தமிழர்களும் சிங்களவர்களும் இஸ்லமியர்களும் மற்றும் ஏனைய சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். அமைதி உண்மையான ரூபத்தில் இந்த அழகான தீவில் வர வேண்டும் என்று ஏங்குகின்றேன்.
1948 இல் சுகந்திரம் கிடைத்த பின் இந்த நாட்டில் என்ன நடந்ததென்பதனை இன்றைய தலைமுறையினர் அறிந்திலர். பழைய காலத்தில் இலங்கை எத்தகைய அமைதியான நாடாக இருந்தது என்பதனையும் இவர்கள் அறிந்திலர். இந்த காலத்தில் முற்று முழுதாக நான் வாழ்ந்த நாட்டில் நடந்த நல்ல கெட்ட சம்பவங்கள் அனைத்தையும் நேரடியாகக் கண்டுள்ளேன். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் ஒரு திருப்பு முனையாக இருந்தது.
1956ம் ஆண்டு தனிச் சிங்கள அரச மொழிச்சட்டம் நிலைமையை மாற்றி பிரச்சினையை வலுப்பெற வைத்தது. அன்று தொட்டு இன்று வரைக்கும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேல் உங்களைப் போன்ற நாட்டின் ஜனாதிபதியானாலும் சரி என்னைப் போன்ற சாதாரணமான இலங்கையின் பிரஜையானாலும் சரி இந்த நாட்டின் எப்பிரதேசத்திலும் நிம்மதியாக வாழ முடியவில்லை.
ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம்.
சமாதானம் வந்து பல தடவை எமது கதவைத்தட்டியது. நாமே அதனை வெளியில் விட்டு பூட்டியுள்ளோம். பல பிரிவினர் சேர்ந்து ஒன்றிணைந்து ஒரு முடிவை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என தொடர்ந்து அடம்பிடிப்பீர்களேயானால் அது உங்களால் முடியாது என நான் பந்தயம் கட்டுகின்றேன்.
தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் உள்ள பிரச்சினை என்ன என்பதனை நீங்கள் அறிவீர்கள். சிறுபான்மையினருக்கு எத்தகைய தீர்வு ஏற்புடையதாக இருக்கும் என்பது நீங்கள் அறியாதது அல்ல. இதற்கு பாராளுமன்ற பெறுக்குக்குழுவோ பிறருடன் சந்திப்புக்களை நடத்துவதன் மூலமோ அல்லது சர்வ கட்சி மகாநாடோ தேவையில்லை.
அதே போல் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண பிடிவாதம் பிடிப்பீர்களேயானால் நீங்கள் தமிழர் கூடிய வட-கிழக்குப் பிரதேசங்களில் உள்ள சகல தொகுதிகளிலும் உங்களுடைய கட்சி வெற்றியீட்டினாலும்  உங்களால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. ஒற்றையாட்சி தீர்வு சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஏற்புடையதாகாது.
நானும் நீங்களும் இல்லாத காலத்தில் அத்தகைய தீர்வு யாரேனும் தலையிட்டு குழப்ப முடியும். இதனால்தான் அது ஒரு நிரந்தரத் தீர்வாக அமையாது. நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி இந்திய முறையிலான தீர்வே சிறுபான்மையினருக்கு, சமஷ்டிக்கு ஒரேயோரு மாற்றாக ஏற்புடையதாக இருக்கும், சமஷ்டி என்ற வார்த்தை சிலருக்கு பிடிக்காமல் போனாலும், அதுவே மிகச்சிறந்த தீர்வாக அமையும்.
ஒற்றையாட்சி என்ற வார்த்தையும் மற்றைய சாராருக்கு பிடிக்காத வார்த்தையே. நாடு பிளவுபடும் என்ற தப்பான கருத்துக் கொண்டவர்களுக்கு சில விளக்கங்களை நீங்கள் கொடுப்பீர்களேயானால் அவாகள் நிச்சயமாக சமஷ்டி முறையை ஏற்பார்கள் என உறுதியாக நம்புங்கள். நீங்கள் வேண்டுமானால் நாட்டைப் பிரிக்கின்ற நடவடிக்கையை முறியடிக்க அரசியல் சட்டத்தில் எத்தகைய அம்சங்களையும் சேர்ந்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் நாம் எல்லோரும் சமன் என்பதனையும் சமமாக நடத்தப்படுவோம் என்பதனையும், எத்தகைய அடக்கு முறைக்கும் கட்டுப்படுத்தப்பட மாட்டார்கள் என்பதனையும், சட்டத்தை மீறும் அதிகாரிகளுக்கு கடும் தண்டனை விதிக்கக் கூடிய வகையில் உருவாக்குங்கள். இந்த அடிப்படையில் நீங்கள் நினைத்தால் தீர்வை எட்ட முடியும் என்பதனை நான் உறுதியாக நம்புகின்றேன்.
சகல கட்சி தலைவர்களுடனும் மற்றும் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பிரமுகர்களுடனும் சேர்ந்து ஒரு தீர்வை தயாரித்து ஏற்புடைய நியாயமான மாற்றங்களை பிரேரித்து விரும்புகின்றவர்கள் செயற்படக் கூடிய வகையில் தீர்வை நாட்டிற்கு முன்வையுங்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் 02-10-2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் உங்களுக்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எழுதிய பொதுவான கடிதத்தினை குறிப்பிட விரும்புகின்றேன்.
அக்கடிதத்தில் (இணைப்பு) பல்வேறு விடங்களோடு -- இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயம் -- தேர்தல் பிரசாரத்தில் உட்படுத்தல், -- அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றாமை, -- சமஷ்டி சம்பந்தமாக தப்பபிப்பிராயம் கொண்டவர்கள் சந்தேகத்தினை போக்குதல், -- இலங்கை இனப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட ஒற்றையாட்சியின் முறையின் குறைபாடுகள், -- இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வின் நன்மைகள் பற்றி குறிப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தேன்.
தினமும் ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லீம் வேறு இன மக்களும் இந்தியா சென்று வருகிறார்கள். இந்தியாவின் தாராளமான ஐனநாயகக் கோட்பாடுகளை நிறைய பாராட்டுகின்றார்கள். இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட நாட்டில் ஜனாதிபதியாக தலைசிறந்த இஸ்லாமிய விஞ்ஞானி பெருமதிப்புடன் இருக்கின்றார்.
இந்திய சனத்தொகையில் இருவீத மக்கள் கொண்ட ஓர் இனத்தின் மதிப்புமிக்க தலைவர் ஒருவர் பிரதம அமைச்சராக செயல்படுகின்றார். இந்தியாவில் பிறக்காத மிகவும் மதிக்கப்படுகின்ற ஒர் பெண்மனி ஆளும் கட்சித் தலைவியாக செயல்படுகின்றார். இத்தகைய பெருமைமிக்க நாடு அயல் நாடு. வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கின்றது.
நாமும் ஏன் அப்படியிருக்கக் கூடாது? இந்திய அமைப்பைப்போன்ற அதிகாரப்பகிர்வை எமது மாநிலங்களுக்கும் ஏன் வழங்கக்கூடாது? யார் தேர்தலில் வென்றாலும் இருவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் முடிவுற்றதும் ஒரு தீர்வை ஆதரிப்போம் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
துன்பத்தில் வாழும் எமது மக்களுக்கு அமைதியை பெற்றுக் கொடுக்க இதுவே சிறந்த ஒரே வழியென நான் நம்புகின்றேன். சர்வதேச சமூகத்தின் பார்வை எம்மை நோக்கி நிற்கும் இவ்வேளையில் இதுவே சிறந்த தருணம் என நான் கருதுகின்றேன்.”

நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் 25-11-2005 பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கம் சம்பந்தமான 28-11-2005ம் திகதியிட்டு “கொள்கை விளக்கமும் சமாதான தீர்வும்” என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தின் (இணைப்பு) ஒரு பந்தியையும் கீழே தருகின்றேன்.
“வழமைபோல் கடந்தகால ஜனாதிபதிகள் நவீன இலங்கையை கட்டியெழுப்ப அனைவரினதும் உதவியை வேண்டியது போல் தாங்களும் கேட்டுள்ளீர்கள். அதிருப்தியுடன் வாழும் சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்பை பெறாது அந்த இலக்கை அடைவது மிகவும் கடினமானதாகும். பெரும்பான்மை சிங்கள மக்களின் முழு ஒத்துழைப்பு கூட தங்களுக்கு கிடைக்காது போகலாம். ஏனெனில் இன்று இலங்கை மக்களின் ஒரே குறிக்கோள் சமாதானத்தை பெறுவதே. அதை அடைவதற்கு நியாயமான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு அவசியமானதாகும்.
சமாதானம் எமது வீட்டுப்படிவரை வந்துள்ளவேளை அதை ஏற்பதா அன்றி நிராகரிப்பதா என்பது தங்களிடமே தங்கியுள்ளது. பிரிவினையை ஆதரிக்காத சர்வதேச சமூகத்துக்கு ஏற்புடையதான ஐக்கிய இலங்கைக்குள் ஒர் நியாயமான தீர்வை முன்வைத்துவிட்டு புதிய இலங்கையை உருவாக்கும் பணிக்கு நீங்கள் ஆதரவு திரட்டலாம். அதுவரை நீங்கள் எதை இலவசமாக கொடுப்பினும் சிறுபான்மை இனத்தினர் எதிலும் அக்கறைக்காட்ட மாட்டார்கள். இதை தெளிவாக கூறின் விடுதலைப் புலிகள் அவர்களை எதற்கும் அனுமதிக்கமாட்டார்கள். திருப்திகரமான சமிக்ஞை தங்கள் பக்கத்தில் இருந்து வரும்வரை எதற்கும் விடுதலைப் புலிகளின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு ஒடுங்கி வாழ்வதை தவிர வேறு வழியில்லை.”
நியாயமானதும் நேர்மையானதும் எது?
2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலி முகத்திடலில் இடம் பெற்ற 59 வது சுகந்திர தின விழாவில் அதாவது ஐனாதியதியாக தெரிவு செய்யப்பட்ட பின் 2வது சுகந்திர தின விழாவில் தாங்கள் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்திக்கு இப்போது வருகின்றேன். அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையே என்பதால் எனது கண்கள் கலங்கவில்லை. தமிழ் மக்கள் உரிமைகளை இழந்து அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு இனமாக சுகந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கின்றார்களே என்று தான் எனது கண்கள் கலங்கியது.
ஓரு நாட்டுப்பற்றாளனாக 1948ம் ஆண்டு பெப்வரி 4ம் திகதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டவன் நான். இந்த நாட்டில் நான் 78 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன். கடைசியாக நான் கலந்து கொண்ட சுதந்திர தின விழா எப்போது என்பதே மறந்து போய் விட்டது. ஆனாலும் 59வது சுதந்திர தின விழாவில் நீங்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை நான் இங்கே தருகின்றேன்.
“பயங்கரவாதிகள் அப்பாவித் தமிழர்களை பணய கைதிகளாக கைப்பற்றியதோடு தம் பாதுகாப்பிற்கு மனித கேடயமாக பயன்படுத்தி மனித தன்மையற்ற கோரிக்கைகளை வென்றெடுக்க தடுத்து வைத்துள்ள அவர்களை விடுவிக்கவே சமாதனத்தினை நிலைநாட்ட வேண்டிய இந்த பெரும் பொறுப்பை எமது படையினர் மேற்கொண்டனர். இந்த வீர செயலிற்காக பாதுகாப்புப் படையினரை இலங்கை மக்கள் கொளரவமான இன்றைய தினத்தில் வாழ்த்துவோமாக. அதே போன்று பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து வடக்கிலும் கிழக்கிலும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக ஐனநாயக ஆட்சியை உருவாக்க வேண்டும்.
தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை வளம்பெறச் செய்ய வேண்டும். மொறகஹ கந்த சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த போது கூறியது போல பயங்கரவாதத்தை அழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே என்பதனை வலியுறுத்த விரும்புகின்றேன்.
இந்திய ஆட்சி முறையே பொருத்தமான தீர்வாகும்.
ஜனாதிபதி அவர்களே, விடுதலைப் புலிகளை அரசு தோற்கடிக்கும் என்ற நம்பிக்ககை இல்லாத வேளையிலேயே தேசத்துக்கு தாங்கள் விடுத்த இச்செய்தியாகும். இருப்பினும் நீங்கள் அவ்வாறு கூறிய படியால் உங்களால் நாட்டுக்கு கொடுக்கப்படும் உத்தரவாதமாகவே அது தோன்றியது. நாங்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடப்பதாக இருந்தால் குறைந்த பட்சம் திரு. ஆனந்தசங்கரி அல்லது டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கருத்துக்களோடு ஒத்துப்போகவேண்டும் எனறு நீங்கள் கூறினீர்கள்.
அந்த நேரத்தில் அவர் உங்கள் மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர். ஆனால் நானோ பாராளுமன்ற உறுப்பினராகவோ அன்றி ஒரு உள்ளுராட்சி மன்ற உறுப்பினராகவோ இருக்கவில்லை. 2005ம் அண்டு நவம்பர் மாதம் நீங்கள் முதல் தடவையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட நீண்ட நாட்களுக்கு முன்பே நான் இந்திய முறையிலான அதிகாரபரவலாக்கும் முறைக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டேன்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இனப்பிரச்சினை பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தேர்தல் முடிந்த பின்னர் தோல்வியுற்ற வேட்பாளரோடு ஒருமித்த கருத்தை எடுக்கலாம் என்று கூட ஆலோசனை வழங்கியுள்ளேன்.
ஆகவே 59வது சுதந்திர தின விழாவின் போது குறைந்த பட்சம் என்னுடனும் டக்ளஸ் தேவானந்தாவுடனும் ஒத்துப் போக வேண்டும் என்று கூறியது நீங்கள் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்திய முறையை அமுல் படுத்தும் யோசனையுடன் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது.
சமஷ்டி என்ற வார்த்தையை எனது கட்டுரைகளிலும் அறிக்கைகளிலும் உபயோகிக்க வேண்டாம் என்றும் இந்திய முறையை தாராளமாக உபயோகிக்கலாம் என்றும் பிறிதொரு நாள் நீங்கள் என்னிடம் கூறியது எனது நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டியது. நீங்கள் இது சம்பந்தமாக ஜே..வி.பி யினருடனும் பேசுமாறு எனக்கு நீங்கள் கூறியதும் ஞாபகம் இருக்கின்றது.
ஜனாதிபதியவர்களே, நீங்கள் ஒரு காலத்தில் விரும்பியிருந்து, தற்போது சமஷ்டிமுறையை விரும்பாதிருந்தால் சமஷ்டி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அதிகார பரவலாக்கலுக்கு ஆலோசனை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
ஒரு முறை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மகாநாட்டில் கூட சமஷ்டி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜனநாயகம் என்றால் வெறும் பெரும்பான்மை ஆட்சி என்பது இல்லாமல் ஜனநாயகம் என்பது சிறுபான்மை மக்களின் சம்மதத்தோடு பெரும்பான்மையோர் நடத்தும் ஆட்சியே என்ற உண்மையை எமது மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி ஆட்சி முறையை தீர்வாக முன்வைத்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 49 வீதமாகும். உங்களுக்கு கிடைத்த வாக்குகளில் இடதுசாரிகட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் சமஷ்டி ஆட்சிக்கு ஆதரவு என்றே எடுத்துக்கொள்ளலாம்.
எனது ஆலோசனை வேடிக்கையாகத் தோன்றினாலும் அதற்கு ஒரு தார்மீகப் பெறமதி உண்டு. ஏனெனில் ஒரு தேர்தலில் அளிக்கப்பட்ட ஒரு வீத வாக்குகள் 55 ஆண்டுகள் தீர்வு காணாமல் செல்வத்தோடும் சிறப்போடும் இருந்திருக்க கூடிய ஒரு நாட்டிற்கு பெரும் அழிவைக் கொண்டு வந்த ஒரு பிரச்சினைக்கான தீர்வு கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது.
சமஷ்டி முறை அடிப்படையிலோ அல்லது இந்திய முறையிலான தீர்வோ ஏற்படுமாக இருந்தால் இலங்கையில் வாழ்ந்து மடிந்த எல்லா இனத்தையும் சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆத்மாக்கள் சாந்தியடையும்.
எமது நாட்டில் ஏற்படக் கூடிய சமாதானத்தை எதிர்க்கின்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் செயற்படுகின்றவர்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்துமாறு அந்த நாடுகளின் உத்தரவாதத்தையும் பெற்றுக்கொண்டு இத்தகைய நல்லதொரு தீர்வை அடையலாம்.
உங்களைப் பொறுத்த வரையில் துன்பத்தில் தோய்ந்திருக்கும் ஒரு நாட்டிற்கு சமாதானத்தோடு செல்வம் கொழிக்கும் ஒரு நாடாக மாற்றிய ஒரேயோரு மனிதர் நீங்கள் தான் என சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பெறவீர்கள்.
நல்லெண்ணத்துடன் தங்களுக்கு கொடுக்கின்ற முக்கிய ஆலோசனை ஒற்றையாட்சியின் கீழ் ஒரு திருப்திகரமான நிரந்தரமான தீர்வை எப்போதும் அடையமுடியாது என்பதாகும்.
நன்றி
அன்புடன்
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Geen opmerkingen:

Een reactie posten