தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 november 2011

சீல் படையின் டீம்- 6: ஓசாமா பற்றிய ரகசியங்கள் கசிந்துள்ளது !

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்காவுக்குக் காட்டிக் கொடுத்தது, அவரது வலதுகரமான அய்மாn அல் ஜவாஹிரி தான் என்று அமெரிக்க சீல் படையின் முன்னாள் வீரர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பின்லேடன் கடந்த மே மாதம் 2ம் தேதி அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவைச் சேர்ந்த 'டீம் 6' என்ற படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர். ஆபரேசன் ஜெரோனிமோ என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந் நிலையில், 'Seal Target Geronimo' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் சுக் பெரர் என்ற முன்னாள் சீல் படை வீரர். அதில் அவர் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். 225 பக்கங்களைக் கொண்ட அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் சிஐஏ ரகசிய உளவாளிகள், பின்லேடனுக்கும் ஜவாஹிரிக்கும் இடையே தகவல் தொடர்புக்கு உதவிய அபு அஹமத் அல் குவைத்தியை அடையாளம் கண்டனர். பாகிஸ்தானில் வைத்து அவரை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இந்த விவரம் ஜவாஹிரிக்கும் தெரியும். ஆனாலும், உடனடியாக அவரது தொடர்பை ஜவாஹிரி துண்டிக்கவில்லை. வேண்டுமென்றே அவர் மூலமாக பின்லேடனுக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பினார். அவரும் அந்தத் தகவல்களுடன் அபோதாபாத்தில் உள்ள பின்லேடனின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதையடுத்து அபு அஹமத் அல் குவைத்தியை சிஐஏ உளவாளிகள் பிடித்து விசாரித்தபோது, அந்த வீட்டில் பின்லேடன் இருப்பது உறுதியானது. இதன் பின்னரே பின்லேடனை தாக்கும் திட்டமே தீட்டப்பட்டது.

அல் கொய்தா தலைவர் பதவியை பிடிப்பதற்காக, பின்லேடனைக் கொல்ல ஜவாஹிரி பல முறை முயன்றார். டாக்டரான ஜவாஹிரி, பின்லேடனின் சில உடல் நலப் பிரச்சனைகளுக்கு தவறான மருந்தும் கொடுத்துள்ளார். மேலும் பின்லேடனை கொல்வதற்காக ரஷ்யர்கள் சிலரின் உதவியைக் கூட நாடினார். ஆனாலும், பின்லேடனை அவரால் ஒழிக்க முடியவில்லை. இந் நிலையில் தான் அபு அஹமத் அல் குவைத்தியை சிபிஐ உளவாளிகள் அடையாளம் கண்டுவிட்டனர் என்று தெரிந்த பின்னரும் கூட பின்லேடனின் இருப்பிடத்தை வெளி உலகத்துக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தகவல் பரிமாற்றம் என்ற போர்வையில் அவரை அடிக்கடி அபோதாபாத்துக்கு அனுப்பினார். மேலும் ஒசாமாவுக்கும் ஜவாஹிரியை பிடிக்கவில்லை என்பது அபோதாபாத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டு, ஜவாஹிரியை கொலை செய்யவும் பின்லேடன் திட்டமிட்டிருந்தார்.

அபோதாபாத் வீட்டிலிருந்து 500 ஹார்ட்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஒசாமா தனது புதிய இயக்கம் குறித்த விவரங்களையும் அதற்கான நிதி உதவிகள் குறித்த விவரங்களையும் ஸ்டோர் செய்து வைத்திருந்தார். இவ்வாறு அந்த புத்தகத்தில் சுக் பெரர் கூறியுள்ளார். சீல் படையின் 'டீம் 6' பிரிவின் முன்னாள் கமாண்டராகவும் இருந்தவர் சுக் பெரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் பயிற்சி பெற்ற சீல் படையினர் சிலரும் அபோதாபாத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கிடைத்த நேரடித் தகவல்களை வைத்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் சுக் பெரர்.

Geen opmerkingen:

Een reactie posten