தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 november 2011

வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம்! இப்போது நினைத்தாலும் இணைக்க முடியும்!- முன்னாள் நீதியரசர் பேட்டி

[ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 08:27.42 AM GMT ]
வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை ஆட்சியில் இருந்து வந்த ஜனாதிபதிகள் அனைவரும் திட்டமிட்டு வருடந்தோறும் பிற்போட்டு வந்தனர்.  அதனால் அந்த இணைப்பு சட்டவிரோதமானதாக இருந்தது.
இணைப்பை அவர்கள் உண்மையில் விரும்பி இருந்தால் நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி அதனைச் செய்திருக்க முடியும். எந்த ஒரு ஜனாதிபதியும் அப்படிச் செய்யாமல் விட்டதுதான் நீதிமன்றத்தின் முன் இந்த விவகாரம் வந்தபோது பிரச்சினைக்குரியதாக அது மாறியது.
அதனால்தான் சட்டப்படி அதனைப் பிரிக்க வேண்டியி ருந்தது. இது அரசியல்வாதிகள் விட்ட தவறு. அவர்கள் இப்போது நினைத்தாலும் சட்டத்தை இயற்றி வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியும்.இவ்வாறு முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டியின் முக்கியமான சில பகுதிகள் வருமாறு:
கேள்வி:  ஜனாதிபதிக்குத் தெரியாமல் உங்களுக் கெதிரான விடயங்கள் நடக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்கள். அது சரியாக இருக்கலாம். கடந்த கால விடயமொன்றை ஞாபகப்படுத்த நான் விரும்புகிறேன். ஆழிப்பேரலை வந்த காலத்தில் ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கு விசாரிக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கெதிராக அப்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நீங்கள் நீதித்துறையில் உயர்பதவியில் இருந்தீர்கள். வழக்கில் இப்போதைய ஜனாதிபதிக்குச் சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்படியெல்லாம் நேர்மையாக இருந்த உங்களுக்கு ஜனாதிபதி இப்படி செய்கிறார் என்று கூறுவது நியாயமானதுதானா?
பதில்:  என்னை அவர்கள் இப்போது வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அந்த வழக்கில் சட்டத்தின்படியே நாம் செயற்பட்டோம். அன்று மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால் அன்றே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பார். அதில் கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், தேர்தலுக்கு முன்னர் அவரைக் கைதுசெய்திருந்தால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்திருக்காது. அவர் நேரே சிறைக்குப் போயிருப்பார். ஜனாதிபதித் தேர்தலில் இருந்தும் விலகியிருப்பார்.
"ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை" விவகாரத்தில் பணம் எடுத்ததற்கான அத்தாட்சிகள் உள்ளன. அந்தப் பணம் விசேட கணக்கு ஒன்றிலிருந்தது. ஆனால் நிதி மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் வழக்கைத் தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம்தான் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.குற்றவியல் தண்டனைக் கோவையின் கீழ், நல்லெண்ண அடிப்படையில் செய்யும் முறைப்பாட்டையே விசாரணைக்குட்படுத்த முடியும். கபிர் ஹாசிம் வழக்குத் தாக்கல் செய்திருந்தாலும் இந்த விடயத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் கேகாலையைச் சேர்ந்தவர். ஆழிப்பேரலையைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. நிதியைப்பற்றி எதுவும் தெரியாது. இது நல்லெண்ணத்திற்கு அப்பால் அரசியல் ரீதியாகச் செய்யப்பட்டது என்பதால் தான் அதனை நிறுத்தினோம்.
நிதி மோசடி இருக்குமாயின் அந்த நிதி வழக்கில் தொடர்புடையவர்கள் முறையிட்டிருக்கவேண்டும். நிதி கொடுத்தவரோ அல்லது அரசின் அதிகாரிகள் எவருமோ இந்த முறைப்பாட்டைச் செய்யவில்லை. வெளியில் இருந்த ஒருவர் அரசியல் காரணங்களுக்காக இதனைச் செய்தார். இதனைச் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரமுடியாது என்பதால்தான் அப்போது அந்தச் சுதந்திரத்தை மஹிந்தவுக்குப் பெற்றுக்கொடுத்தோம்.
இது மட்டுமல்ல, கொலைச் சம்பவங்கள் மூன்று தொடர்பிலும், எதையோ கொண்டு செல்லப்போய் விமான நிலையத்திலும் அவர் சிக்கியிருந்தார். இந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவருக்கு நீதியின் நிவாரணம் கிடைத்திருக்கிறது.
மனித உரிமைகள் குறித்து முறையிட ஜெனிவாவுக்கு புகைப்படங்களை எடுத்துச்சென்றபோது மஹிந்தவை விமான நிலையத்தில் நிறுத்தினர். அவற்றைச் சோதனையிட்டபோது தனது பையை அவர் வீசியெறிந்தார். அதிலுள்ளதைப் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். அப்போது சட்டம், நீதி எப்படி சிறந்த முறையில் நடைமுறையில் இருந்தது என்பது இதன்மூலமே புலனாகிறது. அவர்கள் இவர் மீது வழக்குப் பதியவில்லை. இவர் அவர்கள் மீது வழக்குத் தாக்குதல் செய்தார். இதில் தவறு மஹிந்தவுடையதுதான் எனச் சுட்டிக்காட்டி வழக்கை உயர்நீதிமன்றம் அப்போது நிராகரித்திருந்தது.
ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை நான் சறுக்கிய இடம்
கேள்வி: "ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை" விவகாரத்தில் மோசடி இருந்ததுதான். ஆனால், சம்பந்தப்பட்ட தரப்புகள் முறைப்பாடு செய்யவில்லை என்பதுதானா நீங்கள் கூறுவது? 

பதில்:  மோசடி இல்லை என்று நான் கூறமாட்டேன். மோசடி நடந்ததா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நல்லெண்ண ரீதியில் இந்த முறைப்பாடு இல்லையென்றுதான் நான் கூறுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் இதில் இல்லை. இதனால் பொலிஸாருக்கு எப்படிச் செயற்படுவது என்ற அடிப்படையும் இருக்கவில்லை. நிதி 72 மில்லியன் ரூபா வந்திருந்தது. அவர் அதனைப் பொறுப்பேற்று லலித் வீரதுங்கவிடம் கொடுத்தார். அவர்கள் இருவரும்தான் அதில் தொடர்புபட்டிருந்தனர். இப்போதும் அவர்கள் இருவரும்தானே இருக்கின்றனர். அப்போது வேறு கணக்கில் நிதி போடப்பட்டது. தவறு என்னவெனில், அரச கணக்கில் அந்தப் பணம் போடப்படவில்லை. வேறொரு கணக்கில் போடப்பட்டு சில நாள்கள் இருந்தது. எனக்குத் தெரிந்தவரை இந்த முறைப்பாடு கொஞ்சம் முன் கூட்டியே செய்யப்பட்டுவிட்டதாகவே கருதுகிறேன் (சிரிக்கிறார்). அது குறித்து விசாரணைகள் இன்னும் நடத்தப்படவில்லை. அதற்குள்தான் இவர் ஜனாதிபதியாகி விட்டாரே.
நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் என்னை விமர்சிக்கின்றனர். நான் செய்தது தவறு என்கின்றனர். ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை வழக்கு ஒன்றுதான் நான் எடுத்த முடிவுகளிலேயே தவறான ஒன்றெனக் கருதுகிறேன். நாட்டுக்கு இந்தக் கேட்டைச் செய்தது நான்தான் என்று பலர் என்னிடம் கூறுகின்றனர். முகத்திற்கு நேராகவே தெரிவிக்கின்றனர். எனக்கு எதிரான குற்றப் பிரேரணை வந்தகையோடு நான் சந்தைக்குப் போயிருந்தேன். சாப்பிடக் கொடுத்து கையை கடித்துக்கொள்ள விட்டவர் நீங்கள்தான் என்று அங்கு மக்கள் என்னிடம் தெரிவித்தனர். இல்லை என்று நான் சொன்னேன். அன்றும் நான் நேர்மையாகவே செயற்பட்டேன். இன்றும் நேர்மையாகவே செயற்படுகிறேன். யார் கடித்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. நான் கடிபடமாட்டேன் (சிரிக்கிறார்). யாரும் என்னைக் கடிக்கமுடியாத நிலையில்தான் நான் இருக்கிறேன்.
அன்று சட்டத்தில் இவருக்கு இடையூறு ஏற்படக்கூடாது, ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றாரே என்ற நல்லெண்ணத்துடன்தான் நாம் செயற்பட்டோம். ரணில் விக்கிரமசிங்க சிலவேளை பதவிக்கு வந்திருந்தால் என்னை நீக்கியிருப்பார். 50 ஆயிரம் வாக்குகள் என்ற சிறிய எண்ணிக்கையில்தான் இவர் வெற்றிபெற்றார். நாம் பக்கச்சார்பாக செயற்படவில்லை. 

வடக்கு, கிழக்கை இப்போதும் விரும்பினால் இணைக்க முடியும்
கேள்வி: தமிழ் மக்களின் மிக முக்கியமான விடயமொன்றை உங்களிடம் கேட்கவேண்டும். தமிழ் ஊடகமொன்றுக்கு நீங்கள் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கும் முதற்றடவை இதுவென்று நினைக்கின்றேன். எனவே, இந்தக் கேள்வியைக் கேட்டாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்தது சரியென்று கருதுகிறீர்களா?
பதில்:  வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்தது ஜே. ஆர்.ஜெயவர்தன. 1987ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இதனை ஒன்றிணைப்பது தொடர்பாகப் பொது மக்கள் வாக்கெடுப்பு வடக்கு, கிழக்கில் நடத்தப்படவேண்டும் எனச் சட்டம் இருந்தது. பயங்கரவாத செயற்பாடுகள் முடிவடைந்து பயங்கரவாதிகளின் ஆயுதங்களை ஒப்படைப்பது உறுதியான பின்னரே இது நடத்தப்பட வேண்டுமென இருந்தது. அவசர உத்தரவொன்றின் மூலம் ஆயுதங்கள் ஒப்படைப்பு என்ற விடயத்தை அடக்கிவிட்டார் ஜே.ஆர்.ஜெயவர்தன. அங்குதான் தவறு நடந்தது.
நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி வடக்கு, கிழக்கு ஒன்றிணைந்ததுதான் என்று அவர் கூறியிருக்கலாம். மூன்றிலிரண்டு பலம் அவருக்கு அப்போது இருந்தது. அப்படிச் செய்திருந்தால் நீதிமன்றத்திற்கும் வந்திருக்க வேண்டியதில்லை. அவர் அதைச் செய்யவில்லை.இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இரண்டு நிபந்தனைகள் உள்ளன. பயங்கரவாதச் செயற்பாடு முடிவடைந்து அவர்கள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும், ஒரு வருடகாலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பனவே அவை. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஜே.ஆர்.ஜெயவர்தன மாகாணங்களை ஒன்றிணைத்து பின்னர் தேர்தலொன்றை நடத்தினார். அது பயனற்ற தேர்தல். பின்னர் வந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மக்கள் வாக்கெடுப்புத் தொடர்பான உத்தரவை பிற்போட்டுக்கொண்டே வந்தனர். இலகுவாக அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம். அப்படி ஒத்திவைத்து, ஒத்திவைத்து அது மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் வரை வந்தது. அப்போது தான் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக இந்த இணைப்பு இருந்தது.
இதைச் சேர்க்கவேண்டுமானால் செய்யலாம். அது சட்டப்படி இடம்பெறவேண்டும் என்பதுதான் எனது வாதம். இப்போதென்றால் அது வெகு இலகுவான விடயம். ஏனெனில், இப்போது ஆயுதங்கள் இல்லை. சர்வஜன வாக்கெடுப்பொன்றை இப்போது நடத்தலாம். தேவைப்படின் செய்யலாம். அதற்கு சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். அப்போது அந்த நிபந்தனையின்படி நடக்கவில்லை. அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் இப்போதும் வடக்கு, கிழக்கை இணைக்கலாம். மக்களின் அபிப்பிராயத்தை அறியாமல் இருந்ததுதான் அதில் பிரச்சினையாக இருந்தது. எனவே, அதற்கான கதவுகளை நாம் மூடிவிடவில்லை.
இந்த உத்தரவை நாம் பிறப்பித்தவுடன் பிரபாகரன் யுத்தத்தை ஆரம்பித்தார். மாவிலாறில் ஆரம்பமானது. இப்போது யுத்தமும் முடிந்துவிட்டது. உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எனது தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். நீதிமன்றில் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சட்டமா அதிபர் ஆட்சேபித்தார். இப்போது யுத்தத்தை வென்றதாக அவர் கூறலாம். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவரும் இதனை ஆட்சேபித்தார். சட்டத்தின் தன்மையைத்தான் அப்போது கூறினோம். 88ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டுவரை சர்வஜன வாக்கெடுப்பு வீணாக ஒத்திவைக்கப்பட்டது. வருடா வருடம் ஒத்திவைக்கபட்டமை சட்டவிரோதம் என்றே நான் கருதினேன். இதை மீண்டும் ஒன்றிணைக்கலாம். ஆனால், சில நிபந்தனைகளுடன் என்பது நீதிமன்றத் தீர்ப்பிலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
சுனாமிக் கட்டமைப்பை (பிடொம்ஸ்) நான் நிறுத்தவில்லை
கேள்வி: ஆழிப்பேரலைக்குப் பின்னர் கட்டுமானப் பணிகளுக்கான கட்டமைப்பும் (P-Tomes) நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு நிராகரிக்கப்பட்டிருக்காமல் இருந்தால் புலிகள் சிலவேளை ஜனநாயக ஓட்டத்திற்குள் வந்திருப்பார்கள் இல்லையா?
பதில்: அந்த ஒப்பந்தத்தில் எல்லாவற்றையும் நாம் நிறுத்திவிடவில்லை. அதுவும் நீதிமன்றம் வந்தது. ஆனால், இடைக்காலத் தடையுத்தரவு மட்டும்தான் கொடுத்தோம். இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆழிப்பேரலைக்கான நிதி நிர்வாகம் பிரபாகரன் நிர்வகிக்கும் பகுதிகளை மட்டுமே வரையறை செய்தது. இதனை சுயாதீனமாக செயற்படவைக்கவே நாம் முயன்றோம்.
திருகோணமலை அந்த நேரத்தில் சுதந்திரமான நகராக இருந்தது. அப்போது அந்தக் கட்டமைப்பை திருமலையில் வைத்து நிர்வகித்திருக்கலாம். ஆழிப்பேரலை மீள் கட்டுமானப் பணிகளுக்கான தலைமையகம் எங்கு இருக்கவேண்டும் என்பதுதான் பிரச்சினையாக இருந்தது. அரசுக்கு கிடைக்கும் நிதி, அரசின் கட்டுப்பாடற்ற பகுதிக்குச் செல்வதாக இருந்தால் அதில் அரசின் கட்டுப்பாடு இல்லையென்றுதானே அர்த்தம். எனவே, அதில் சில நிபந்தனைகளை மட்டுமே நாம் இட்டோம்.
சந்திரிகா அதனைப் பின்னர் கைவிட்டார். ஒப்பந்தத்தைக் கைவிடுங்கள் என்று நாம் சொல்லவில்லை. தலைமையகம் பிரபாகரனிடம் இருந்திருந்தால் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோருமே அங்கு சென்றிருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு பாரபட்சமாகிவிடும். புலிகளுடன் தொடர்பில்லாதவர்களுக்கு கிடைக்காது. சர்வதேசத் திடமிருந்து கிடைக்கும் நிதி சட்டரீதியாகச் செல்லவேண்டுமென்பதையே நாம் பார்த்தோம்.
திருகோணமலையில் இதன் தலைமையகம் இருந்திருந்தால் புலிகள் பகுதியிலிருந்த மக்கள் இங்கு வந்திருக்கலாம். போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போல் ஒரு சுமுக நிலைமை ஏற்பட்டிருக்கும். இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தைத் திருத்துவார்கள் என்று தான் நான் அப்போது எண்ணினேன். ஏனெனில், உயர்நீதிமன்றம் அதில் இரண்டு நிபந்தனைகளுக்கே எதிர்ப்புத் தெரிவித்தது.
கேள்வி:  அரசால் உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காக சர்வதேசத்திடம் செல்லப்போவதாகக் கூறுகிறீர்கள். சர்வதேச சமூகத்திடம் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?
பதில்:  இப்போது எனக்கு அநீதி இதுவரை இழைக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து செயற்பட்டார்களானால் நீதிபதிகள் சபை, சர்வதேச நீதிபதிகள் சம்மேளனம் ஆகியவற்றிடம் செல்வேன். இப்போதைக்கும் சட்டத்தரணிகள் சங்கம் செயற்பட்டு வருகிறது. அப்படி நிலைமை வந்தால் நாம் நடவடிக்கை எடுப்போம். இப்படியான சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து அரசு விலகும் என்றே நான் பார்க்கிறேன்.
கேள்வி:  ஐ.நா.மன்றம் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் நீங்கள் சென்றால் அங்கு நியாயம் கிடைக்குமா என்றுதான் நான் கேட்கிறேன்?
பதில்:  நீதி கிடைக்குமா என்பதை விட, இவ்வாறானவற்றை வெளிக்கொணர்ந்தால் இனிமேல் இப்படியானவை இடம்பெறாது. இது நீதிபதிமாருக்கே பெரும் அழுத்தம். நான் இதுபற்றி ஊடகவியலாளர்கள் மாநாட்டைக் கூட்டி அறிவித்ததே நீதிபதிமாருக்குப் பெரும் சக்தியாகும். இல்லையேல் மரணிக்கும் வரை எம்மை நாடாளுமன்றத்திற்கு இழுத்துச்செல்வார்களென எல்லா நீதிபதிமாரும் நினைத்துவிடுவர். நான் அமைதியாக இருக்க முடியாது. ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் அமைதியாக இருங்கள் என்று சிலர் கூறுகின்றனர். அப்படி இருக்க முடியாது. நாடு இப்படி வரவர விழும்போது பிரச்சினைகள் பொங்கிவரும்போது எம்மால் சும்மா இருக்கமுடியாது.
கேள்வி:  உங்களுக்கு ஞாபகமிருக்குமோ தெரியாது, தேசத்திற்கு எதிராக சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சிலரில் ஒருவரான சிங்கராயர் என்பவர் இங்கு செய்த முறையீடுகளில் நீதி கிடைக்கவில்லை. அவர் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டபோது அவர் நிரபராதி எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த ஆணையத்தின் முடிவை இங்குள்ள நீதிமன்றிடம் அவர் மீண்டும் சமர்ப்பித்தார். ஆனால், நீதிமன்றம் அந்த ஆணையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கேள்வி என்னவெனில், நீங்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிடம் நீதி கேட்டு அது கிடைத்தால் அதற்கு இங்கு உள்ளூரில் எவ்வளவு செல்வாக்கு இருக்கப்போகிறது?
பதில்:   சந்திரிகா குமாரதுங்க அம்மையார் OPTIONAL PRO-TOCOl  என்ற ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கும்போது அரசமைப்பின்படி சரியான சட்டதிட்டங்களை முன்வைத்திருக்கலாம். அப்போது இந்தச் சபைகளுக்குச் சென்று அந்தச் சபைகளின் ஊடாக வரும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதை அப்போது நாம் தெளிவாகக் கூறலாம். அப்படி இருந்தால் எமக்குப் பிரச்சினை இல்லை.
சிங்கராயருக்கு எதிரான தீர்ப்பை வழங்கியவன் நான் அல்லன். மார்க் பெர்னாண்டோ நீதிபதி வழங்கிய தீர்ப்பு அது. மேல்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வரை அது சென்றது. அங்கு நான் இருக்கவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் இது சென்றது.
இதன் பின்னர் நீதிபதி மார்க் பெர்னாண்டோவின் தீர்ப்பை மாற்றும்படி அவர்கள் என்னிடம் மனுவொன்றைச் சமர்ப்பித்தனர். எமது அரசியலமைப்பின்படி உயர்நீதிமன்றம்தான் இறுதியான நீதிமன்றக்கட்டமைப்பு. ஒரு நீதிபதி தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தால் இன்னுமொரு நீதிபதியோ, நீதிபதிகள் குழாமோ அதனை மாற்றமுடியாது. சட்டரீதியான பிரச்சினைகள் இருந்தால் மாற்றங்களைச் செய்யலாம். ஆனால், விடயங்கள் அடிப்படையில் தீர்ப்புகளை மாற்றமுடியாது. நான் குறிப்பிட்டது என்னவெனில், சட்டமொன்றை கிரமமாகத் தயாரித்தால் இந்த நிலையை மாற்றலாம். அதனால்தான் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.OPTIONAL PROTOCOL ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட்டு அதனைச் சட்டமாக இங்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. அதனால்தான் அங்கு தவறு நடந்தது.
போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்
கேள்வி:   இந்த விடயத்துக்கு அப்பால் ஒரு கேள்வி. இலங்கை அரசுக்கு எதிராக சுமத்தப்பட்டுவரும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில்:  அரசு இந்தவிடயத்தைக் குழப்பிக்கொண்டுள்ளது. உண்மையில் யுத்தம் முடிந்தவுடன் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் செயற்பட்டிருந்தால், அதிகாரப்பகிர்வு வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களில் ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படிச் செய்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் வந்திருக்காது.
எல்லா யுத்தங்களிலும் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. குற்றம் இல்லாத யுத்தம் இல்லையே. யுத்தமென்பதே குற்றம்தானே. யுத்தம் முடிவடைந்தவுடனும் நடுநிலையான சமநிலையான செயற்பாடுகள் தேவை. இங்கே யுத்தம் முடிந்தவுடன் பழைய கொள்கைகளையே முன்னெடுக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை வைத்திருப்பது, நிர்வாக அதிகாரத்துக்கு அழுத்தங்களை வழங்குவது உட்பட்ட விடயங்கள் இன்னும் உள்ளன. பலவிடயங்கள் எங்களுக்கும் தெரிகின்றன. அந்த நிலைமையை முன்னெடுப்பதால்தான் தமிழர்கள் அதிருப்தியடைகின்றனர்.
இப்படியான நிலையில் போர்க்குற்றச்சாட்டும் எழுந்தவுடன் அதைக் கிடப்பில் போடமுனையக்கூடாது. தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் நாமே விசாரணைகளை நடத்தி அதிகாரிகள் எவரும் தவறு செய்திருக்கும் பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கலாம். செய்யாவிட்டால் பிரச்சினை இல்லை. அப்படிச் செய்யாமல் இவற்றை மறைக்கமுற்பட்டால் பெரும் பிரச்சினைவரும். இதனை அரசுக்கு அடிப்பதற்கான கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அது இந்த அரசுக்குப் புரியவில்லை. இவர்கள்தான் கருவியையே கொடுத்தனர். இப்போது அடிவாங்குகின்றனர்.
போர்க் குற்றம் என்பது அரசுக்கு மறுபுறம் நன்மையானதுதான். சிங்கள இனவாதத்தை இங்கு தூண்டுவதற்கு நல்ல ஏதுவாக அமைந்துவிடும் அது. சிங்கள இனவாதத்தைத் தூண்டி எப்படியாவது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வார்கள்.
சர்வதேசம்கூட இந்த அரசைப் பலப்படுத்தும் வேலையைத்தான் செய்கிறது. இருப்பக்கங்களிலும் தவறான நிலைமைதான் இருக்கிறது. குற்றங்கள் நடந்திருந்தால் உண்மையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். போர்க்குற்றத்தை எடுத்துக்கொண்டால் ஜெனிவா சாசனத்தின்படி மனித இனத்திற்கெதிரான குற்றமாகவே கருதப்படுகிறது. யாராவது ஒருவர் போர்க்காலத்தில் கைதுசெய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டால் அதற்கான சாசனங்களில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளிவந்த பின்னர் அரசு ஏதாவது செய்யவேண்டும். இல்லையேல் சர்வதேசம் இறுக்க இறுக்க இங்கு சிங்கள இனவாதம் தலை தூக்கும். சிங்கள இனவாதத்தைக் கிளறவேண்டாம். சிங்கள இனவாதமும் தலைத்தூக்கும்போது அதற்கு எதிராக தமிழ் இனவாதம் எழும்பும். இந்தப் பிரச்சினைகளை நாம் முடிக்கவேண்டும். இல்லையேல் நாம் பழைய நிலைமைக்கே செல்வோம்.

Geen opmerkingen:

Een reactie posten