இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றபோதும், போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா. தகவல் ஒன்று தெரிவிக்கிறது. ஐ.நாவின் பிராந்திய தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசு, சுயமான விசாரணைகளை நடத்தாத நிலையில், வெளியார் தலையிடுவதை விரும்பவில்லை என்றும், அனைத்துலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் 12 ஆம் திகதி ஐ.நா. பொதுச்செயலர் பான் கீமூன், நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா ளருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் அனுப்பியிருந்தார்.இலங்கையில் நிலையான அமைதி ஏற்பட குற் றங்களுக்கு பொறுப்புக் கூறப்படுவதும், நல்லி ணக்கத்தை ஏற்படுத்துவதும், அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதும் அவசியமானது என்று ஐ.நா பொதுச்செயலர் இதன்போது குறிப்பிட்டுள்ளார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த போதும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், பொறுப்புக் கூறும் நம்பகமான தேசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது எனவும் ஐ.நா. தகவல் கூறியுள்ளது. இந்தநிலையிலேயே, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் முடிவு செய்யவுள்ளதாக ஐ.நா. தகவல் மேலும் தெரிவிக்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten