தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 oktober 2011

சர்வதேச அரங்கை நோக்கி நகருமா அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தை ?

09 October, 2011
இந்த வார இறுதியில் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய் இலங்கை வருகின்றார். வட பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட மத்தாய் வருவதாகக் கூறப்பட்டாலும், இலங்கை அரசால் கிடப்பில் போடப்பட்ட "சீபா' உடன் படிக்கை குறித்து இவர் பேசுவாரென எதிர்வு கூறப்படுகிறது. இவரின் பயணச் செய்தி ஊடகப் பரப்பில் உலா வந்த வேளையில் இந்திய விமானப்படைத் தளபதி என்.ஒ.கே. பிறவுணின் செய்தியொன்று வெளிவந்துள்ளது.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரிலும், இலங்கையிலும், சீனத் தலையீடு அதிகரிப்பதாகவும் , தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு இவ்விவகாரம் பெரும் சவாலாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு சீனாவின் தலையீடுகள் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிற செய்தியை மட்டுமே அவரால் கூற முடியும். அதை எவ்வாறு இராஜதந்திர உறவினூடாக முறியடிப்பது என்பதனை வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்களே தீர்மானிப்பார்கள். ஆகவே ரஞ்சன் மத்தாயின் விஜயத்தின்போது சீனத் தலையீடு குறித்த விடயம் நேரடியாகப் பேசப்படுமா? இல்லையேல் புதிய ஒப்பந்தங்களினூடாக அதனைக் கட்டுப்படுத்த இந்தியா முயலுமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அண்மைக் காலமாக இலங்கை வரும் வெளிநாடுகளின் செயலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு உரையாடுவதை தமது நிகழ்ச்சி நிரலின் முக்கிய அங்கமாக இணைந்துள்ளார்கள்.
இச்சந்திப்புகளால் அதிகம் பாதிப்படைந்தவர்களாக பேரினவாத கடும் போக்காளர்கள் இருப்பதனைக் காணலாம். இவர்களின் உளவியலில் ஏற்படும் அதிர்வுகள், பல கோணங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.

மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை விவாதிக்க இடமளித்தால், ஐ.நா. சபை பிளவுபடும் அபாயம் உருவாகுமென்று இந்த கடும் போக்காளர்கள் அதீத கற்பனையில் ஆழ்ந்து விடுகின்றார்கள். இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்த அமெரிக்காவின் தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கிற்கான காங்கிரஸின் உப குழுவின் தலைவர் ஸ்டீவன் சபெட்டை இரா. சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடியதும், கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென கடும் போக்கு குரலொன்று எழுகிறது. அரசோடு பேசுங்களென்று அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவுந்தான் கூட்டமைப்பை வற்புறுத்துகிறது. ஆனால் பேரினவாதச் சக்திகளின் பார்வையில் இது வேறுவிதமாக நோக்கப்படுகிறது. ஐ.நா. நிபுணர் குழுவிற்கு போர்க் குற்றத்தகவல்களை வழங்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற வகையில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகராவும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்கவும் பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். 

இலங்கைக்கு எதிரான அனைத்துலக சூழ்ச்சியின் பின்னணியில் நாட்டில் சுதந்திரமாக நடமாடும் பிரிவினைவாத சக்திகள் இருப்பதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தேசிய பாதுகாப்பிற்கும் இறைமைக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இச் சக்திகளை விசேட நீதிமன்றமொன்றின் ஊடாக, போர்க்குற்றங்களின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டுமென அறிவுரை வழங்குகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறும் இக் கடும் போக்காளர்கள், தடையினூடாக தமிழ் மக்களின் அரசியல் குரலை அடக்கி விடலாமென எண்ணுகின்றார்கள் போல் தெரிகிறது. நுவரெலியாவில் விமான நிலையத்தை அமைப்போமென்றும், கண்டியில்[?] துறைமுகம் கட்டுவோமென தேர்தல் பரப்புரைகளில் அரசு ஈடுபட்டாலும், பொருளாதார நெருக்கடிகளாலும் போர்க் குற்ற விசாரணை அழுத்தங்களாலும் பாதிப்புறும் ஆட்சியாளர்கள், இவற்றிலிருந்து எவ்வாறு தப்பிச் செல்வது என்பது குறித்தே தீவிரமாகச் சிந்திக்கின்றார்கள்.

ஆகவே கூட்டமைப்போடு பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவாறு , போர்க் குற்ற விசாரணைகளிலிருந்து தப்புவதற்கு இதனை ஒரு காரணியாக முன்னெடுத்துச் செல்லும்போது உள்வீட்டு தீவிரவாதிகளை எவ்வாறு சமாளிப்பது என்கிற சிக்கலை அரசு எதிர்கொள்கிறது. அதேவேளை, எந்தவிதமான தீர்வினையும் அரசு முன்வைக்காது என்பதை உணரும் மேற்குலகமும் இடைக்கால தீர்வொன்றினை முன்மொழியுமாறு நோர்வே ஊடாக கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறானதொரு இடைக்காலத் தீர்வு முன்மொழிவானது, முன்பு விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையாக இருக்காது என்பதனை உறுதியாகக் கூறலாம். அத்தோடு இந்த இடைக்கால தீர்வு விவகாரமும் இழுபட்டுச் செல்லும் என்பது தான் உண்மை. ஆனாலும் கிடைப்பதைப் பெற்றவாறு, தொடர்ந்து பேசுவதுதான் புத்திசாலித்தனமானதென சிலர் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
ஆனால் பேச்சுவார்த்தை என்பது சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிச் செல்வதற்கான மாற்றுவழியாக அரசு கருதுவதை இவர்கள் இன்னமும் உணரவில்லை.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்று அடிபணிவு அரசியல் சித்தாந்தம் பேசுவோரும், இன நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமாயின் அதிகபட்சமான பிறப்புரிமையை ஒரு இறைமையுள்ள தேசிய இனம் கோரக் கூடாதென வாதிடுவோரும், நில ஆக்கிரமிப்பினூடாக பூர்வீக தேசிய இனத்தின் இருப்பு தகர்ந்து போவதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஆகவே இன அடியழித்தலும், நில அபகரிப்பும் தீவிரமடைந்துள்ள இவ்வேளையில், அரசியல் தீர்வொன்றிற்கான பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் அல்லது காலக்கெடு ஒன்றினை விதிக்க வேண்டிய அவசியமேற்படுகிறது.
நிர்ணயம் செய்யப்பட்ட அக்கால எல்லைக்குள் எழுத்து மூலமான நகல் அரசியல் தீர்வொன்றினை அரசு முன்வைக்காமல் இழுத்தடித்தால், தமக்கான தீர்வுப் பொதியினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும். 

அக்கால எல்லையானது மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரிற்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்டால் பொருத்தமாகவிருக்கும். இலங்கை அரசைப் பொறுத்தவரை தீர்வு குறித்து காட்டும் அக்கறையை விட, போர்க் குற்ற விசறாரணையை நீர்த்துப் போக வைப்பதிலே அதிக கரிசனை கொண்டுள்ளதை, 'அரிசி அரசியல்' விவகாரம் வெளிப்படுத்துகிறது. 130 நாடுகளின் தலைவர்கள் பங்கு கொண்ட ஐ.நா. வின் 66 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, ஆபிரிக்காவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப் போவதாக அறிவித்திருந்தார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலுள்ள 47 நாடுகளில் 13 நாடுகள் ஆபிரிக்க பிராந்தியத்தை சார்ந்ததாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆகவே பான் கீ மூனால் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, வருகிற 19 ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டால், நடு நிலை போல் தோன்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவு அரசுக்குத் தேவை . ஆதலால் அவர்களை தம்வசப்படுத்த 'அரிசி அரசியல்' ஆரம்பமாகிறது. இவைதவிர , அடுத்த கூட்டத் தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையோடு நிபணர் குழுவின் அறிக்கையை, உத்தியோகப் பற்றற்ற வகையில் ஒப்பீட்டாய்வு செய்யப்படும் வாய்ப்பு உண்டென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே அரசின் தற்போதைய கவனம் முழுவதும் ஐ.நா. சபை நோக்கியே குவிந்துள்ளதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் போர்க் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டால் அரசியல் தீர்வு என்பது கானல் நீராகிவிடும். ஆகவே ஆறு கடக்கும் வரைதான், அரசியல் தீர்வு என்கிற மாயமானை அரசு இழுத்துச் செல்லும் என்கிற வரலாற்று பட்டறிவினை புரிதல் நன்று.
போர்க்குற்ற விசாரணை போன்று அரசியல் தீர்வு என்கிற அடிப்படையான ஆதார விடயத்தையும், சர்வதேச அரங்கிற்கு நகர்த்துவதே சரியானதாக அமையும்.

Geen opmerkingen:

Een reactie posten