தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 18 oktober 2011

வன்னிப் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அறிக்கை வெளியிடவுள்ளது! தடுக்கும் முயற்சியில் இலங்கை


[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 05:51.06 AM GMT ]
இலங்கையின் அமைதி முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அரசு, அவற்றை விசேட அறிக்கையாக வெளியிடவுள்ள நிலையில், அதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக நோர்வே அரசுடன் இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளது எனத் தெரியவருகிறது.
நோர்வே அரசுடன் நேரடியாக தொடர்புபட்ட அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று இந்த விடயங்கள் குறித்த ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தது என்றும், அந்த அறிக்கை ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நோர்வே சென்றுள்ள இலங்கைக் குழு அந்நாட்டு முக்கியஸ்தர்களுடன் பிரஸ்தாப அறிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவருகிறது.
அமைதிக்காக நோபல் பரிசு வழங்கும் நோர்வே நாடு உக்கிரமாக போர் நடைபெற்ற நாடுகளில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக அமையவில்லை என்றும், குறிப்பாக பலஸ்தீனம், இலங்கை போன்ற நாடுகளில் சமாதானத்தை ஏற்படுத்த அந்நாடு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறிவிட்டது என்றும் சர்வதேச விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச ரீதியில் தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு அமைதியை ஏற்படுத்த இலங்கையில் யுத்தகாலத்தில் தான் முன்னெடுத்த நடவடிக்கைகயை மீளாய்வுசெய்வதற்கு நோர்வே அரசு தீர்மானித்தது. இதற்கான பணிகளை அரசுடன் நேரடித் தொடர்புடைய தொண்டர் நிறுவனம் ஒன்றிடம் அரசு ஒப்படைத்தது.
இதற்கிணங்க பல்வேறு கோணங்களில் பல மாதகாலமாக ஆய்வுகளை முன்னெடுத்த குறித்த அரசசார்பற்ற நிறுவனம் ஆய்வறிக்கையை அந்நாட்டு அரசிடம் கையளித்துள்ளது.
இந்த அறிக்கையில் இலங்கை, பலஸ்தீனம் ஆகிய நாடுகளின் விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், யுத்தகாலத்தில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துக் காணப்படும் இந்தகாலகட்டத்தில் நோர்வே வெளியிடவுள்ள இந்த அறிக்கையானது மேலும் பல வழிகளில் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார். அந்தக் குழுவும் பல்வேறு தரப்பினர்களிடம் சாட்சிகளைத் தயாரித்து இறுதிகட்ட யுத்தத்தில் நடைபெற்ற அவலங்களை அறிக்கையாக வடிவமைத்தது.
ஐ.நா செயலாளரிடம் கையளிக்கப்பட்ட இந்த நிபுணர் குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்றுவரை அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்கத்தேய நாடுகள் ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைசெய்துள்ள சிபாரிசுகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும்,இறுதிகட்ட யுத்தத்தின்போது அரச படையால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை, சனல்4 விடியோ என்பன இலங்கை அரசுக்கு பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ள நிலையில் நோர்வே வெளியிடவுள்ள அறிக்கையானது மேலும் பல நெருக்கடிகளை இலங்கை அரசுக்கு கொடுக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இவ்வாறானதொரு சிக்கல் நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை இலங்கை ஆட்சிப் பீடம் முன்னெடுத்துள்ளது.
இதன் ஓர் அங்கமாக நோர்வேயில் நடைபெறும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அந்நாட்டு அமைச்சர் ஹெரிக் சொல்ஹெய்முடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இதன்போது, நோர்வேயின் அறிக்கை உடனடியாக வெளியிடப்படுமாயின் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அமைச்சர் நிமல் விளக்கமளித்துள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பாக எதுவித உறுதிமொழிகளையும் நோர்வே வழங்காதப்படாமையால் திட்டமிட்டப்படி உரிய நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten