"நெதர்லாந்தில் உள்ள தமிழ்ச் சிறார்கள் அவர்களது சிறுவயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை சார் கருத்தியலுக்கு ஏற்ப மூளைச்சலவை செய்யப்படுவது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும்"
இவ்வாறு உலகளாவிய ஒலிபரப்பு சேவையைக் கொண்ட நெதர்லாந்து வானொலியின் [Radio Netherlands Worldwide - RNW] இணையத்தளத்தில் Marcel Haenen எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
ஏறத்தாழ 9000 தொடக்கம் 13000 வரையிலான ஆண்களைக் கொண்ட நெதர்லாந்தின் தமிழ்ச் சமூகமானது சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பெரும்பாலும் தமிழ்ப் புலிகளுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் மற்றும் தேசத் துரோகம் போன்ற சிலவற்றின் ஊடாக நெதர்லாந்துத் தமிழர்கள் மத்தியில் 'சூழ்நிலை அச்சம்' ஒன்று நிலவியுள்ளது.
2010 ல் கைதுசெய்யப்பட்ட நெதர்லாந்தில் வதியும் ஐந்து தமிழர்களுக்கு எதிரான வழக்கானது தற்போது ஹேக்கில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் இது தொடர்பாக பொது வழக்கறிஞர்களான Ward Ferdinandusse, Maartje Nieuwenhuis ஆகியோர் வாதாடியுள்ளனர்.
இந்த வழக்கறிஞர்களின் வாதப்படி, இச்சந்தேக நபர்கள் சிறிலங்காவில் செயற்பட்ட தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படு தளம் ஒன்றை நெதர்லாந்தில் அமைத்துச் செயற்பட்டதாகக் கூறப்பட்டது.
கலவரம், குண்டுத்தாக்குதல்கள், கொலைகள், மனிதப் படுகொலைகள், மோசமான தாக்குதல்கள் போன்றவற்றை மேற்கொண்ட அனைத்துலக பயங்கரவாத அமைப்பொன்றுடன் இவ்வழக்கின் பிரதிவாதிகள் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்பட்டது.
இதில் பிரதான சந்தேகநபரான 52 வயதுடைய Schagen வாசியான எஸ்.இராமச்சந்திரன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக கணக்காளராகச் செயற்பட்டார் என வழக்கறிஞர்கள் தமது வாதத்தில் குறிப்பிட்டுள்ளனர். புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதிகளை அனைத்துலக நாடுகளுக்கும் அனுப்பி வைத்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இராமச்சந்திரனுக்கு 16 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்க பொது வழக்கறிஞர் மன்றம் முயற்சிக்கின்றது. அத்துடன், ஏனைய 03 நெதர்லாந்துத் தமிழர்களுக்கும் 10 ஆண்டு கால சிறைத்தண்டனையும், புலிகளின் நெதர்லாந்துக் கிளைத் தலைவராகச் செயற்பட்டவர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 46 வயதான சிறிறங்கத்திற்கு 12 ஆண்டுகால சிறைத்தண்டனையும் வழங்கவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
சிறிலங்காத் தீவின் வடக்குப் பகுதியில் தனிநாடு ஒன்றை நிறுவுவதற்காக தமிழ்ப் புலிகள் 1983ம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடாத்தியமை, தற்கொலைக் குண்டுத்தாக்குதல் உத்திகளைப் பயன்படுத்தியமை, சிறுவர் போராளிகளைப் படையில் இணைத்தமை போன்ற சில காரணங்களால் ஐரோப்பிய ஒன்றியமானது புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டது.
இரு ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா இராணுவத்தால் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். "ஆனால் ஐரோப்பாவில் புலிகள் தற்போதும் உயிர்பெற்று வாழ்கின்றார்கள்" என Ferdinandusse தெரிவித்தார்.
"நெதர்லாந்தில் உள்ள தமிழ்ச் சிறார்கள் அவர்களது சிறுவயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை சார் கருத்தியலுக்கு ஏற்ப மூளைச்சலவை செய்யப்படுவது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
நெதர்லாந்தில் புலிகள் 20 வகுப்பறைகள் வரை வைத்திருக்கிறார்கள். அங்கே வார இறுதி நாட்களில் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது. அங்கே பல்வேறு வகையான குண்டுகளின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
"அதாவது நெதர்லாந்தில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்கு அவர்களது சிறுவயதிலிருந்தே அவர்களின் எதிர்காலம் நெதர்லாந்தில் இருக்காது என்றும், அது சுதந்திர தமிழர் தேசத்திலேயே இருக்கும் என்றும், தற்கொலைக் குண்டுதாரிகள் கதாநாயகர்கள், வீரமுள்ளவர்கள் என்றும் போதிக்கப்படுகிறது" எனவும் வழக்கறிஞர் Ferdinandusse மேலும் குறிப்பிட்டார்.
தமிழ்ப் புலிகள் தமது போராட்ட செயற்பாடுகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், நெதர்லாந்தில் மாநகர சபையின் நிதியுதவியைப் பெறும் தமிழ் இளையோர் அமைப்பு, நெதர்லாந்து தமிழர் கலை மற்றும் கலாசார நிறுவனம் போன்ற பல அமைப்புக்களைப் புலிகள் நடாத்தி வருகின்றனர் என நெதர்லாந்து வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியானது போர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவ்வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உதாரணமாக, Zeist என்ற மாநாகரசபையானது நடைபெற்று முடிந்த விளையாட்டுப் ஒன்றில் தமிழ் மக்களுக்காக 2000 யூரோக்களை வழங்கியிருந்ததாகவும் அந்த நிதி பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சென்றடைந்ததாகவும் அரச வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது ஹேக்கில் முன்னிறுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நெதர்லாந்தில் வாழும் தமிழ் மக்களிடம் யுத்த வரியைத் தருமாறு கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் போருக்கான இந்த நிதியைச் செலுத்தா விட்டால், சிறிலங்காவில் உள்ள குறிப்பிட்ட நெதர்லாந்துத் தமிழர்களின் உறவினரை அவர்கள் சென்று பார்வையிடத் தடைவிதிக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை நேற்றைய தினம் ஹேக்கில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கான அமர்வில் குற்றஞ்சாட்டப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்கள் செவிமடுத்தனர்.
1985ம் ஆண்டிலிருந்து நெதர்லாந்தில் வசித்து வரும் இராமச்சந்திரன் எந்தவொரு பிரதிபலிப்பையும் காட்டாது நெஞ்சிற்குக் குறுக்கே தனது கைகளைக் கட்டியவாறு அமர்ந்திருந்தார்.
நீதிமன்றத்தின் திரையில் வழக்கறிஞர்களால் காண்பிக்கப்பட்ட படங்களை மட்டும் இவர் பார்த்தார். அத்துடன் சிறிலங்காவில் அணிவகுத்துச் செல்லும் தமிழ்ச் சிறுவர் போராளிகளின் பதிவுகள், போரில் மரணித்த ஒருவரின் நினைவு நிகழ்வானது 2007 ல் இடம்பெற்ற போது அதில் தற்போதைய வழக்கின் பிரதிவாதியான சிறிறங்கம் என்பவர் ஆற்றும் உரையின் பதிவுகள் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைத்து எடுக்கப்பட்ட ஒளிப்படம் போன்றனவும் ஹேக்கில் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் உள்ளடங்கியிருந்தன.
நீதிமன்றில் பிரதிவாதி காண்பித்த மனோபாவமானது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் பொருந்துவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
"பிரதிவாதிகள் நீதிமன்றில் நடந்து கொள்ளும் முறைமை, தண்டனை தொடர்பான அவர்களது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தல் போன்றன குறைவாகவே உள்ளது. அத்துடன் அவர்கள் சிறிலங்கா அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டும் போது மகிழ்வடைகிறார்கள். ஆனால் அவர்களது சொந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அவர்களது சுய பிரதிபலிப்பு என்பது போதியளவில் காணப்படவில்லை" என வழக்கறிஞர் Ferdinandusse தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் இதே குற்றங்களைச் செய்யுமிடத்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றானது நீண்டகால சிறைத்தண்டனை வழங்கத் தீர்மானிக்கும்.
"சந்தேகிக்கப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டவர்களின் மனோநிலை, பிடிவாதப் போக்கு, சுய பிரதிபலிப்பின்மை போன்றவற்றை நோக்குமிடத்து அவர்கள் இக்குற்றங்களை மீண்டும் செய்வார்களோ என நாம் அச்சப்படுகின்றோம்" எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten