தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 oktober 2011

நீதியை கோரிநிற்கும் ஈழத்தமிழர்கள் - ரொய்ற்றர் செய்தி நிறுவனம்

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் ஒரு கட்டத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிக்கும் விடுதி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது அதனைச் சுற்றி பல நிறங்களைக் கொண்ட பாதணிகள் சிதறுப்பட்டுக் காணப்பட்டதையும், காலையிழந்த பதின்ம வயதுப் பெண்ணொருவர் தனது பதுங்குகுழியை விட்டு வெளியே வர முடியாமல் தவித்ததுடன், அவரிற்கருகில் தேங்கியிருந்த மிக அழுக்கான நீரைத் தனக்குத் தருமாறு அந்தப் பெண் இரந்து கேட்டதையும் மீனா கிருஸ்ணமூர்த்தி தற்போதும் நினைவுகூருகிறார்.

சிறிலங்காப் படைகள் முன்னேறிக் கொண்டு வந்த நிலையில் இறந்து பிறந்திருந்த தனது சொந்தப்பிள்ளையைக் கூட அவர் புதைத்து விட்டு வரவேண்டியிருந்தது. அத்துடன் அங்கே எண்ணுக்கணக்கற்றவர்களின் உடலங்கள் சிதறிக்காணப்பட்டதாகவும் மீனா கிருஸ்ணமூர்த்தி நினைவு மீட்டுகிறார்.

அவுஸ்திரேலியத் தமிழரான மீனா கிருஸ்ணமூர்த்தி தனது 23வது வயதில் அதாவது 2004ல் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தார். தனது தமிழ் உறவுகளைப் பராமரிப்பதற்காகவே தான் சிறிலங்காவிற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

பிரிவினைவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 25 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் பின்னர் சிறிலங்காவில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட போது அங்கு சென்றிருந்த மீனா கிருஸ்ணமூர்த்தி, பின்னர் தமிழ் மகன் ஒருவரைக் காதலித்து திருமணம் முடித்திருந்தார்.

யுத்தம் நிறைவடைந்த 2009ல் தான் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியபோது ஆசியாவில் மிக நீண்ட காலம் இடம்பெற்ற நவீன யுத்தமொன்றில் இடம்பெற்ற அக்கிரமங்களை நேரில் கண்டசாட்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது இந்த யுத்தம் நிறைவுற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இங்கு இடம்பெற்ற கொடுமையான சம்பவங்கள் தொடர்பாக வெளிப்படுத்த இவர் தீர்மானித்துள்ளார்.

அதாவது தமிழ்ப் புலிகளிற்கு எதிராக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் இறுதிநாட்களில் தான் நேரில் கண்ட கொடூரம் நிறைந்த உண்மைச் சம்பவங்கள் தொடர்பாக எவரும் பொறுப்பாளிக்க முன்வராமைக்கான காரணம் என்ன எனவும் மீனா கிருஸ்ணமூர்த்தி கேள்வி எழுப்புகின்றார்.

"மிகப் பெரிய மனிதப் படுகொலையை நான் நேரில் பார்த்துள்ளேன்" என சிறிலங்காவின் வடகிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாகத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் தமது பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக் கொண்ட தமிழ்ப் புலிகளை சிறிலங்கா அரச படைகள் மே 2009 ல் தோற்கடித்த போது பல ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மீது சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

அத்துடன் இவ்வாரம் அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் விவாதப் பொருளாக உள்ள சிறிலங்காவின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கனடா தனது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளது.

2013 ல் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை கனடா புறக்கணிக்கப் போவதாக அது அச்சுறுத்தல் விடுத்துள்ளது. ஒக்ரோபர் 28-30 வரை இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் 50 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருவதுடன், புலிகளை முற்றுமுழுதாக அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை எனவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இப்பிரச்சினையானது பொதுநலவாய நாடுகளைக் குறிப்பாக பிரிட்டனின் முன்னாள் கொலனித்துவ நாடுகளிற்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி விடும் எனவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள போர்க் குற்றவாளியான மகிந்த ராஜபக்ச உள்ளடங்கலாக சில போர்க்குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிமாற்றம் செய்வது தொடர்பாகத் தான் சிறிலங்காவில் உள்ளவர்களுக்கு சிலவேளைகளில் தமிழ்ப் புலிகளிற்குக் கற்பித்ததாக மீனா கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பலாத்காரமாக இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்ட தனது கணவரான கிருஸ்ணமூர்த்தி புலிகளின் நிறுவனத்தில் கணக்காளராகச் செயற்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் இவர் புலிகளின் செயற்பாடுகளில் பங்கெடுக்கவில்லை எனவும், இன்றுவரை தனது கணவர் எங்கிருக்கின்றார் என்பது தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் புலிகளின் நிதிவளத்தைப் பெற்றுக் கொடுப்பதில் மிகத் தீவிரமாக உழைத்த புலிகளின் இரு மூத்த தலைவர்களான நெடியவன் மற்றும் கஸ்ரோ ஆகியோரிற்குக் கீழ் மீனா கிருஸ்ணமூர்த்தி பணிபுரிந்ததாக கடந்த ஞாயிறன்று வெளியாகிய சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான The Nation பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

யுத்தம் இடம்பெற்ற போது பொதுமக்களை இலக்கு வைத்துப் புலிகள் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும், புலிகள் தமது படைக்குத் தேவையான ஆட்களைப் பலாத்காரமாக இணைத்துக் கொண்டதாகவும், யுத்தத்தின் இறுதிப்பகுதியில் 13-50 வரையானவர்கள் யுத்தத்தில் இணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அழுக்கான பதுங்குகுழிகளுக்குள் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களை எதிர்பார்த்த வண்ணம் தான் தனது நாட்களைக் கழித்ததுடன் அவ்வாறே தனது உயிரைக் காப்பாற்றி வைத்திருந்ததாகவும் மீனா கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

"எறிகணைகள் மற்றும் துப்பாக்கி ரவைகளிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாகனங்களின் சக்கரங்களின் பின்னே காயமடைந்தவர்கள் பதுங்கியிருந்தனர். தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு அவர்கள் கெஞ்சினார்கள்" என மீனா கிருஸ்ணமூர்த்தி ரொய்ற்றர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

"ஆனால் அந்தச் சூழலில் அவர்கள் மட்டுமே அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மற்றவர்கள் அவர்களைக் கடந்து செல்லும் போது ஒரு குற்ற உணர்வுடனேயே கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஏனெனில் யாரும் யாரையும் காப்பாற்றிக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை அங்கே நிலவியது. ஆனால் இப்போது அந்த மக்களுக்கு நாம் உதவ முடியும். அதனால் தான் நான் நேரில் கண்டவற்றை வெளிப்படுத்தத் தீர்மானித்தேன்" என அவர் தெரிவித்தார்.

"நினைவுகள் எப்போதும் பகிரப்படுவதால், உண்மையை இந்த உலகத்திலிருந்து நீண்ட காலங்கள் மறைத்து வைக்க முடியாது" என அவர் தெரிவித்தார்.

யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் ஐ.நாவால் நியமிக்கப்பட்ட வல்லநர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை சிறிலங்கா அரசாங்கம் ஏற்க மறுத்தள்ளது.

"சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்ச் விதிகளை மீறியுள்ளனர். இவை தொடர்பாக நம்பகமான சுயாதீனமான அமைப்பால் விசாரணை செய்யப்படவேண்டும்" என கடந்த வாரம் அனைத்துலக நெருக்கடிகள் குழு தெரிவித்திருந்தது.

சிறிலங்கா இராணுவம், வைத்தியசாலைகள் உள்ளடங்கலாக பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடாத்தியமை மற்றும் புலிகள் சிறுவர்களைப் படையில் இணைத்தமை, சிங்களப் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியமை போன்ற பல குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய பல அறிக்கைகளை அனைத்துலக நெருக்கடிகள் குழு வெளியிட்டுள்ளது.

நவம்பர் 15 அன்று சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்ட முழுமையான அறிக்கையை ராஜபக்சவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

"மே 2009 ல் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டவர்கள் தண்டிக்கப்படாது தப்பிப்பதனை அனுமதிக்கக் கூடாது" என அவுஸ்திரேலியாவின் அனைத்தலுக நீதிபதிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் டௌவ்ட் தெரிவித்துள்ளார்.

2009 ல் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்காக் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கிடைக்கப் பெற்ற நம்பகத் தகுந்த சாட்சியங்கள் அடங்கிய அறிக்கையை அவுஸ்திரேலியாவிற்கான அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு கடந்த வாரம், அந்நாட்டுக் காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

சிறிலங்காவின் அவுஸ்திரேலியாவிற்கான உயர் ஆணையாளர் திசார சமரசிங்க, யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடற்படையின் கிழக்குக் கடற் பகுதிக்கான பொறுப்பதிகாரியாகவும், பின்னர் இறுதிப் போரின் போது வடக்குக் கடற்பகுதிக்கான தளபதியாகவும் கடமைபுரிந்திருந்தார்.

சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தான் எந்தவொரு குற்றச் செயல்களையும் புரியவில்லை என சமரசிங்க தெரிவித்துள்ள போதிலும், தனக்குக் கீழுள்ள படைவீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் போது அவர்களுக்குப் பொறுப்பாக இருப்பவர்களே அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இது 'ஒரு கட்டளை அதிகாரியின் பொறுப்பு' எனவும் அவுஸ்திரேலியாவிற்கான அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் வன்முறைகளைச் சந்திப்பதாகவும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் சிட்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற உலகத் தமிழர் பேரவையில் கருத்துரைத்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

"போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் சிறிலங்காவின் வடக்குக் கிழக்குப் பகுதியானது அடிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அடிமைகள் என்ற நிலையையே உணர்கின்றோம். இந்தப் பகுதி முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

"சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இடம்பெறும் பல விடயங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. இரவு வந்தவுடன் இராணுவத்தின் ஆட்சி தொடங்கிவிடும். இதனால் மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வாழ்வதால் இராணுவத்தினர் தமக்கு விரும்பிய எதனையும் அங்கு செய்யக் கூடிய சூழல் நிலவுகின்றது" என சரவணபவன் மேலும் தெரிவித்தார்.

வழிமூலம்: Reuters
மொழியாக்கம்: நித்தியபாரதி
puthinappalakai.com
26 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten