[ சனிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2011, 06:09.51 AM GMT ]
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று நெதர்லாந்தின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக நிதிசேகரித்த குற்றச்சாட்டின் பேரில் ஐந்து தமிழர்களுக்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது
இத்தீர்ப்பின் போது புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தீர்ப்பு வழங்கப்படும் என்ற இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.
ஆனால் எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் அமைப்பு என்று கருத முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐரோப்பிய கொள்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரையிடும் வகையில் இல்லை என்று ஹேக் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
விடுதலைப்புலிகள் சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் அல்ல! நெதர்லாந்து நீதிமன்றம்
இன்று, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றில், நெதர்லாந்தின்,ஹேக் நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகளை சர்வதேசப் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்த முடியாது என்று கூறியது.
விடுதலைப் புலிகளுக்கு பணம் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நெதர்லாந்து வாசிகளான ஐந்து தமிழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளான இன்று, ”நெதர்லாந்து(டச்சு) சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தப்பட முடியாது” எனினும் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையானது இவர்கள் மேல் செல்லுபடியாகும் என்பதனால், விடுதலைப் புலிகளுக்காக இவர்கள் பணம் சேர்த்தமை சட்ட விரோதமாகிறது என்று எழுத்து மூலம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்தும், அச்சுறுத்திப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் ”நிரபராதிகள்” என்று இவர்கள் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், விடுதலைப்புலிகளுக்குப் பணப் பங்களிப்பு செய்யாவிடில் ஊருக்குச் செல்ல முடியாது என்று வன்முறையற்ற வழியில் பலவந்தப்படுத்தி விடுதலைப் புலிகளுக்காகப் பணம் வசூலித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு 2 மற்றும் 6 வருட சிறைத் தண்டனையை வழங்கினர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல அது ஒரு விடுதலை இயக்கம் என்று வாதிட்ட இரண்டு பிரதி வாதிகளின் வழக்குரைஞரான விக்டர் கோப், லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியை பதவியிலிருந்து கவிழ்ப்பதற்காகப் போரிட்ட விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள் என்று வாதிட்டார்.
வழங்கப்பட்ட தீர்ப்புப் பற்றிக் கருத்துரைத்த அவர், “தமிழீழ விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கக் கூடாத இயக்கம் என்பதே தீர்ப்பின் அடிப்படையாகும்,” என்றார்.
இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலால், நேற்று வரை பல தமிழர் விரோத சக்திகள் இவர்களுக்குக் குறைந்த பட்சம் 21 வருட தண்டனை தீர்க்கப்படும் என்று வதந்திகளைப் பரப்பியிருந்தன.
வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்தில் குழுமியிருந்த நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமற்றது என்று கூறியதுடன் தாம் எதுவித பலவந்தமும் இன்றி மனமுவந்தே இவர்களிடம் பணம் கொடுத்தனர் என்று செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழுக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், விரைவில் அத்தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான முதற்படியாக, இன்று ஹேக் மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகள் பற்றி வங்கிய தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten