தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 oktober 2011

ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள் -இதயச்சந்திரன்

[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 12:10.45 PM GMT ]
அவுஸ்திரேலிய சமஷ்டி காவல் (AFP) துறையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹொகன்ன மற்றும் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அட்மிரல் திஸர சமரசிங்கவிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இவ் விசாரணையின் முக்கிய சாட்சியாக இறுதிப் போர்க்களத்தில் நின்ற மீனா கிருஷ்ணமூர்த்தி என்ற பெண் முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தான் சந்தித்த அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் (Commomwealth Heads of Government Meeting) இவ் விவகாரம் கிளப்பப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுயாதீன போர்க்குற்ற விசாரணை யொன்றிற்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவிக்காவிட்டால் பொதுநலவாய நாடுகளின் உறுப்புரிமையை இலங்கை இழக்கலாம் என்கிற வகையில் கனடாவும், அவுஸ்திரேலியாவும் முன் நகர்வுகளை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த படைகளின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் ஜனாதிபதி ராஜபக்சவும், இறுதிப் போரில் பொது மக்கள் மீது கடற்கலங்களிலிருந்து எறிகணை வீச்சு நடாத்திய கடற்படையின் தளபதி அட்மிரல் திஸர சமரசிங்கவும், இரட்டைக் குடியுரிமை பெற்ற கலாநிதி பாலித பாலித ஹொகன்னவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்பதே முக்கிய அம்சமாக இருக்கிறது.
கடந்த ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 18ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றினை கனடா தேசம் முன்வைக்கப் போகிறதென்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. எவ்வாறாயினும் இச் சர்வதேசம் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமென நம்பியிருந்த தமிழ் மக்கள் குழப்பமடைந்தனர்.
புதியதொரு நம்பிக்கை ஒளி அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்திலிருந்து தெரிவதாக மறுபடியும் நம்பிக்கை ஊட்டப்படுகிறது. உலக உணவு உற்பத்திக்கு மிக அத்தியாவசியமாகக் கருதப்படும் உரத்தை உருவாக்கும் மிகப்பெரிய நிறுவனமான பொற்றாஸ் கார்பரேசன் (Potash Corporation) நிலைகொண்டுள்ள கனடா நாடும் நழுவி விட்டது.
சுரங்க கைத்தொழில் மூலம் பெறப்படும் பெருமளவிலான கனிப் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்து தனது திறைசேரி திவாலாகாமல் காப்பாற்றிக் கொள்ளும் அவுஸ்திரேலியா என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதேவேளை இலங்கை அரசிற்கு நெருக்கமாகவிருந்த பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸின் பதவியும் அவரது நண்பரால் பறிபோயுள்ளது. இலங்கை அரச அதிபரின் தோளில் கை போட்டு உட்காருமளவிற்கு மிக அந்நியோன்யமாக இருந்த கேர்ணல் முகம்மர் கடாபியும் கிளர்ச்சிப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னர் தானும் பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடப் போகின்றேன் என்று உலக ஒழுங்கில் இணைந்து கொள்ள முயன்றவர் தான் இந்தக் கேர்ணல். ஆனால் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் புரிந்து கொள்ளவில்லை.
ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்களை எலிகள் என்று விளித்தவர், ஜனநாயக மயப்படுத்தல் என்கிற கருத்தியலை முன்வைத்து ஆட்சி மாற்றத்தை மட்டும் விரும்பிய மேற்குலகின் இராஜதந்திர அணுகுமுறையை கடாபி கவனிக்கவில்லை.
ஆகவே சர்வதேச அரசியல் அரங்கில் நேரடியான ஆதரவினை அளித்தவர்களை இலங்கை அரசு இழந்து வருவதைக் காணலாம். ஆசியாவைப் பொறுத்தவரை அங்குள்ள நாடுகளுக்கிடையிலான பொருண்மிய உறவுச் சமன்பாட்டில் அதிரடியான மாற்றங்களும் நிகழ்கின்றன.
50 பில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்த உள்ளூர் உற்பத்தியாகக் கொண்ட இலங்கையில் பாதுகாப்புத்துறைக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை நேரடி முதலீடுகளை எந்த நாட்டில் செய்வது என்பது குறித்து சிந்திக்கும் பல்தேசியக் கம்பனிகள் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளாது.
ஏற்கனவே ஜி.எஸ்.பி.வரிச்சலுகை இழக்கப்பட்டதால் அந்த வாய்ப்புகள் பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளை சென்றடைந்து விட்டது. அதேவேளை அனைத்துலக நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கோஷி மத்தாய் "சீபா' உடன்பாடு குறித்து தெரிவித்த கருத்தினால் முரண்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறைமையுள்ள இரு நாடுகளுக்கிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இத்தகைய சர்வதேச நிறுவனமொன்று கருத்துக் கூறுவது பொருத்தமானதல்லவென்று அரச தரப்பிலிருந்து விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் நாணய நிதியத்தினால் கடந்த ஓகஸ்டில் வழங்கப்படவிருந்த 2.9 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பதை நோக்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து, நிதியத்தின் மதிப்பீட்டாய்வு டிசம்பர் வரை ஒத்திப் போடப்பட்டதே இதற்கான காரணியாகக் கொள்ளப்படுகிறது.
இதேவேளை, 60 வர்த்தகர் குழுவோடு வந்திறங்கிய வியட்நாம் அதிபர் குரோங் ரான் சாங் மரணமடைந்த இராணுவத்தினரின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தியதோடு இரு தரப்பு பொருளாதார உறவு குறித்தும் பேசியுள்ளார். இலங்கைக்கு வந்த சீனக்குழுவோ, படைத்துறை வளர்ச்சிக்கு எவ்வாறு உதவி புரியலாம் என்பது குறித்து ஆராய்ந்து சென்றுள்ளது.
இவர்களின் வருகையும் பொருளாதார படைத்துறை ஒப்பந்தங்களும் இந்தியாவையும் மேற்குலகையும் தடுமாறச் செய்யுமென்கிற கற்பனையில் இலங்கை அரசு மூழ்கி உள்ளது போல் தெரிகிறது.
சீனப் பங்காளியான மியன்மாரோடு பிராந்தியம் சார்ந்த தந்திரோபாய உறவுகளை இந்தியா புதுப்பித்துக் கொள்வது போன்று, முரண்பட்ட சக்திகளை ஒரே நேர்கோட்டில் நிறுத்திக் கொள்ள முடியுமென்று இலங்கை அரசு நம்புகின்றது.
ஆசியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடான இந்தியா 30 ரில்லியன் கன அடி எரிவாயுவை அரகன் (ARAKAN) பிரதேசத்தில் புதைத்து வைத்திருக்கும் மியன்மாரோடு உறவு கொள்வது ஆச்சரியமானதல்ல.
ஆனால் மன்னாரில் கண்டெடுக்கப்படும் மசகு எண்ணெயோ எரிவாயுவோ பயன்பாட்டிற்கு வர இன்னமும் பத்து வருடங்கள் செல்லலாம் என்பதால் அது குறித்து இந்தியாவும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
கனிமவளத்தை கையகப்படுத்தும் போட்டியில் சீனாவும் இந்தியாவும் ஈடுபடுவதால் தன்னிடம் எரிசக்தி வளமும் நிலவளமும் இருக்கிறது என்று கூற இலங்கை முற்படுவது போலிருக்கிறது. இந்த இரண்டு விடயமும் வட கிழக்கில் இருப்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
ஆனால் புயல், வெள்ளம், மற்றும் கட்டடக் காடுகளாகும் கிராமங்களால் உணவு உற்பத்தி குறைவடைந்து அவற்றின் விலை உலகச் சந்தையில் அதிகரிக்கிறது. இதனால் பண வீக்கமும் அதிகரிப்பதற்கு இதுவொரு முக்கிய காரணியாக இருக்கிறது.
தற்போது இந்தியாவின் பணவீக்கமானது 9.72 விழுக்காட்டினை எட்டியுள்ளது. மார்ச் 2010 இலிருந்து இவ்வருட செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 12 தடவைகள் இந்திய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது.
ஆகவே உலகப் பொருளாதாரம் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நிலைவரங்கள் இறைமைக் கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டு கிடப்பதால் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் குறைவடைந்து செல்கிறது. ஆதலால் நாடளாவிய உட்கட்டுமானத்தை அபிவிருத்தி செய்வதற்கு தனது இறைமைச் சொத்து நிதியத்திலிருந்து (Sovereign Wealth Fund) பெருமளவிலான நிதியை வங்கிகளுக்கு வழங்க சீனா முன்வருகிறது. அவ்வாறானதொரு நகர்வினை இந்தியாவும் மேற்கொள்ள முனைகிறது.
இந்நிலையில் தமது தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடனான உறவினைப் பலப்படுத்தவே இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன.
பிரிக்ஸ் (BRICS) என்கிற ஐவர் கூட்டணியில் இருக்கும் சீனாவும் இந்தியாவும் மேற்குலகிற்கான தமது ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுமாயின் ஆசியச் சந்தைக்கான போட்டியில் குதிக்காமல் அவற்றை பங்குபோடும் இணக்கப்பாட்டு அரசியலை விரும்பி ஏற்றுக் கொள்ளலாம்.
ஆகவே இவ்விரு நாடுகளுக்கிடையிலான பிராந்திய கடலாதிக்க போட்டியை தமது இருப்பிற்கான மூலதனமாக இதுவரை கொண்டுள்ள தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள், மேற்குலகம் என்கிற மூன்றாவது சக்தியின் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது

Geen opmerkingen:

Een reactie posten