இப்படி
இப்படி இடதுசாரிய அரசியல் அந்தந்த சூழலை நியாயப்படுத்துகின்ற, அதுவே தவிர்க்க முடியாத எதார்த்தம் என்று கூறுகின்ற எல்லைக்குள், பாட்டாளிவர்க்க அரசியலையும் அதன் கோசங்களையும் கிளர்ச்சிகளையும் நிராகரிக்கின்றனர். இது இலங்கை விவகாரம் முதல் உலக அரசியல் வரை இடதுசாரியத்தின் பெயரில் புரையோடிக் காணப்படுகின்றது.
இதை மார்க்சியத்தின் பெயரிலும், ஜனநாயகத்தின் பெயரிலும் செய்கின்றனர். மக்களை அணிதிரட்டும் அரசியலில் இருந்து அன்னியமானவர்கள், மக்களைச் சார்ந்து நின்று அரசியலை முன்னெடுக்க முடியாது வக்கற்றுப் போனவர்கள், தங்கள் அறிவுசார் புரட்டுகள் மூலம் இதைச் செய்கின்றனர். மக்கள் போராடி தங்கள் விரோதியான புலியை அழித்திருக்கமுடியாது என்று மக்கள் விரோதக் கோட்பாட்டை முன்தள்ளியதுடன், அதைத் தொடர்ந்து முள்தள்ளுகின்றனர். மக்கள் போராடுவது என்பது எதார்த்தம் கடந்த வரட்டுவாதமாக காட்டுவதும், புலியை அழிக்க அரசுக்கு தொடர்ந்து உதவுவதுதான் சரியானது என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றனர். புலியெதிர்ப்பு அரசியல் தளம் இப்படித்தான் அரசுடன் கூடி இயங்குகின்றது. மக்களைச் சார்ந்து நிற்கின்ற அரசியலை புலியாக முத்திரை குத்துவதன் மூலம், மக்கள் விரோத அரசியல் புளுக்கின்றது.
இந்த வகையில் தேனீ முதல், அரசு மற்றும் இந்தியாவிடம் சோரம் போன இயக்கங்கள் மட்டுமின்றி, முன்னாள் இடதுசாரிய உதிரிகள் வரை இதில் அடங்கும். புலியழிப்பு அரசியலை முன்தள்ளும் முன்னாள் உதிரி இடதுசாரிகள், இதை மூடிமறைக்க புலியின் குறுந்தேசியத்தை குறிப்பாக்கி அதை முன்னிறுத்துகின்றனர். குறுந்தேசியத்துடன் ஓட்டி அன்னியோன்னியமாக வாழ்ந்த சமூக ஒடுக்கு முறைகளை (சாதியம், பிரதேசவாதம், ஆணாதிக்கம், யாழ் மையவாதம்…) சுட்டிக்காட்டித்தான், புலியை அழித்த அரசுக்கு வக்காளத்து வாங்குகின்றனர்.
குறுந்தேசியம் என்றால் சமூக ஓடுக்குமுறை எல்லாம் அதனுடன் ஓட்டி இருக்கும் தானே, இதற்கு அப்பால் அது தேசியத்தில் ஊன்றி நின்றது என்ற புலி ஆதரவு இடதுசாரிய புரட்டுகள் போன்றது தான், சமூக ஓடுக்குமுறையைக் காட்டி அரசின் புலி ஓழிப்பை ஆதரிக்கும் எதிர்வாதமும்.
இதன் விளைவு என்ன? புலி – அரசு என்ற இரு எதிர்முகமாக சமூகத்தை காட்டிவிடுவதுதான். இதன் மூலம் அரசியல் களத்தில் மக்களை அகற்றி விடுவதுதான்.
புலிக்கு எதிரான அனைவரையும் ஒன்றாக்குகின்ற, ஒன்றாகக் காட்டுகின்ற அரசியல் புரட்டுகள் மூலமும், புலிக்கு எதிரான அரசு தரப்பையும், அரசு-புலிக்கு எதிரான தரப்பையும் ஒன்றாக்கிவிட முனைகின்றனர். இந்த அரசியல் பின்னணிக்கு அமைவாக அக்கம் பக்கமாக இருதரப்பும் ஓன்றையொன்று சார்ந்து இயங்குகின்றதும், அரசு-புலிக்கு எதிரான தரப்பு மக்களைச் சார்ந்து இயங்காத அரசியல் வெற்றிடத்தில்தான், அரச தரப்புக் கோட்பாடுகள் வெற்றிகரமாக தன்னை முன்னிறுத்துகின்றது. புலியை மையப்படுத்தி அதற்கு எதிராக இயங்குகின்ற பொதுத்தளத்தில், அரசு வெற்றிகரமாக இன்று தன்னை முன்னிறுத்தி விடுகின்றது.
புலிக்கு எதிரான அரசுதரப்புடன் அரசியல் ரீதியாக அரசு-புலிக்கு எதிரான தரப்பு தன்னை அரசியல் ரீதியாக முறித்துக்கொள்ளாத வரை, அரசியலில் சோரம் போதல் தொடரும். அரசு -புலிக்கு எதிரான தரப்பு புலியுடன் எப்படி தன்னை வேறுபடுத்தி நிற்கின்றதோ, அப்படி புலிக்கு எதிரான அரசுதரப்புடன் தன்னை வேறுபடுத்தியாக வேண்டும். இதை செய்யாத வரை, அரசு -புலிக்கு எதிரான தரப்பு புலிக்கு எதிரான அரசு தரப்பு உதவுவது தான் மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி நிரலாகிவிடுகின்றது.
பொதுவாக ஜனநாயகரீதியாக புலிகளுடன் அரசு - புலிக்கு எதிரான தரப்பு கொண்டுள்ள முரணும் இது சார்ந்த அரசியல் இடைவெளியும், புலிக்கு எதிரான அரசு தரப்புடன் இருப்பதில்லை. இந்த இடைவெளிதான் அரசு - புலிக்கு எதிரான தரப்பை புலத்தில் அரசியல் நீக்கம் செய்கின்றது. இன்று மண்ணில் புலிக்கு எதிரான அரசு தரப்பு, ஜனநாயகத்தை அரசு - புலிக்கு எதிரான தரப்புக்கு மறுக்கின்றது. அரசு - புலிக்கு எதிரான தரப்பு தன் தனித்துவத்தை அரசியல் ரீதியாக போராட்டங்களில், நிகழ்ச்சிகளில், கருத்துக்களில், செயல்தளங்களில் முன்வைத்துப் பிரியாதவரை, அரசியல் ரீதியாக சோரம் போதல் தொடரும். அரசு - புலிக்கு எதிரான தரப்பு தன்சொந்த திட்டத்தின் கீழ் இயங்கவேண்டும். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.
அரசு – புலி இரண்டையும் எதிர்த்து மக்களைச் சார்ந்து போராடும் பிரிவு, தன் சொந்த அரசியல் மூலம் அணிதிரட்டாத போதும், அரசு - புலி இரண்டையும் அம்பலப்படுத்தி அரசியல் ரீதியாக வேலை செய்யாத வரை, தங்கள் கருத்துக்கள் நிகழ்ச்சிகளில் அரசு - புலி இரண்டையும் எதிர்த்து இயங்காத வரை, இதற்குள் அரசு – புலி இரண்டும் அக்கம்பக்கமாக இயங்கத் தொடங்குகின்றது. புலத்தில் இதை பல தளத்தில காணமுடியும். இடதுசாரி முகமூடியுடன், மார்க்சியச் சொல்லாடலுடன், ஜனநாயக பம்மாத்துகளுடன் தான், அனைத்து மக்கள் விரோதமும் அரசியல் ரீதியாக பம்மிப் பதுங்கியபடி சமூகத்தில் நீடிக்கின்றது.
பி.இரயாகரன்
28.10.2011
இடதுசாரியத்தின் பெயரில், மார்க்சியத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் சிலர் இன்று அரசியல் செய்கின்றனர். புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோரியவர்களின் ஓரு பகுதியினர், புலிக்கு எதிராக இருக்கும் அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் இயங்குகின்றனர். புலியை மக்களின் முதன்மை எதிரியாக காட்டிக் கொள்வதன் மூலம், அரசு தான் அந்த எதிரியை ஓழித்ததாக கூறிக்கொண்டு, அரசின் பின் நின்று கூச்சல் எழுப்புகின்றனர். புலியை அரசுக்கு வெளியில் வேறு எந்த வகையிலும் ஓழித்திருக்க முடியாது என்றும், இதை மறுப்பது எதார்த்தத்தைக் கடந்த ஓன்று என்றும் கூறுகின்ற தர்க்கத்தைக் கொண்டும், அழித்தொழிப்பு அரசியலை தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten