சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது சுரேஸ் தனது வலது கையை இழந்துள்ளான். இவனது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் 12 வயதேயான சுரேஸ் என்ற இந்தச் சிறுவன் துன்பியல் நிறைந்த சம்பவங்களைத் தனது வாழ்வில் கொண்டுள்ள போதிலும், உறுதி தளராத நம்பிக்கையுடன் வாழ்கிறான்.
நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனமான Mines Advisory Group - MAG ஆனது 69 நிலக்கண்ணிகளையும், வெடிக்காத 15 குண்டுகளையும் சுதந்திரபுரம் என்கின்ற கிராமத்திலிருந்து அகற்றிய பின்னர் அங்கே மீளக் குடியேறிய 2140 உள்ளக இடம்பெயர்ந்தோர் மக்களில் சுரேசும் ஒருவனாவான்.
தற்போது கடுமையாகப் படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வாழும் இந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனாகி தனது பாட்டியைப் பராமரித்துக் கொள்வதற்காக நல்லதொரு தொழிலைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனக் கூறுகின்றான்.
"இடம்பெயர்ந்தோர் முகாமை விட்டு வெளியேறி மீண்டும் எனது வீட்டிற்குச் செல்வதில் நான் மிகவும் மகிழ்வடைகின்றேன். நான் மீண்டும் பாடசாலைக்குப் போகவேண்டும் அத்துடன் எமது வீட்டை மீளக் கட்டுவதில் எனது பாட்டிக்கு தாமதமின்றி உதவி செய்ய வேண்டும்" என சுரேஸ் தெரிவித்தான்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிப் போர் அரணாக, மே 2009ல் இடம்பெற்ற சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் தீவிரமடைந்திருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள கிராமமே சுதந்திரபுரமாகும்.
இறுதி யுத்தத்தின் விளைவாக கடந்த இரு ஆண்டுகளாக இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்ந்த 638 வரையான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமமான சுதந்திரபுரத்திற்கு தற்போது முதற்தடவையாகத் திரும்பியுள்ளனர்.
தற்போது தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ள மக்களுக்குத் தேவையான 600 கிணறுகள், இரு பாடசாலைகள், ஒரு வைத்தியசாலை, நீர்ப்பாசனத்திற்குத் தேவையான 05 நீர்த்தாங்கிகள், 05 சதுர கிலோமீற்றர் அளவிலான விவசாய நிலம், 20 சிறிய கடைகள் போன்றனவும் இந்தக் கிராம மக்களுக்காக ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கடையொன்றில் பெருமளவில் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதுடன், உள்ளுர் கூட்டுறவுக் கடை போன்று செயற்படுகின்றது. மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டதும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு முத்திரைக்கான பொருட்களை இலகுவாகப் பெற்றுக் கொள்வதில் இவ்வாறான கூட்டுறவுக் கடைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
"இந்தப் பிரதேசத்தில் MAG நிறுவனமானது நிலக்கண்ணிகளை அகற்றிய பின்னர் நாம் தற்போது கூட்டுறவுக் கடை ஒன்றைத் திறந்துள்ளோம். இக்கடையின் மூலம் 170 குடும்பங்கள் வரை பயனடைகின்றார்கள். இதனால் MAG இற்கு நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்" என சுதந்திரபுரத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவுக்கடை ஒன்றில் விற்பனை முகாமையாளராகக் கடமையாற்றும் ஜேசுதாஸ் யூட் என்பவர் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த தேவிபுரம், வள்ளிபுனம் ஆகிய வேறு இரு இடங்களிலும் கடந்த யூன் மாதத்தில் மேலும் 3693 இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
செய்தி வழிமூலம்: Alertnet
மொழியாக்கம்: நித்தியபாரதி |
Geen opmerkingen:
Een reactie posten