தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 juli 2011

விடுதலைப் புலிகள் மிகத் திறமையான முறையில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் கடைசியில் தோல்வி அடைவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்

 
[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 09:59.17 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மிக வெற்றிகரமான சில உளவியல் நடவடிக்கைகள் பற்றி இத்தொடரில் விரிவாகப் பார்த்திருந்தோம்.
அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த உளவியல் நடவடிக்கைகள்.
ஒரு போராட்ட அமைப்பால் இத்தனை தூரம் உளவியல் நடவடிக்கைளை திட்டமிட்டுச் செயற்படுத்த முடியுமா என்கின்றதான ஆச்சரியம் சில மேற்குலக போரியல் ஆய்வாளர்களிடமே காணப்படுகின்றது. அந்த அளவிற்கு உளவியல் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் தமது திறமையை வெளிப்படுத்தி வந்திருந்தார்கள்.
இந்த இடத்தில் பலரிடம் ஒரு கேள்வி இருக்கின்றது.
விடுதலைப் புலிகள் மிகத் திறமையான முறையில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் கடைசியில் தோல்வி அடைவதற்குக் காரணம் என்ன?
உண்மையிலேயே நாம் சற்று நிதானமாக யோசிக்கவேண்டிய கேள்வி. தமிழ் மக்களின் போராட்டப் பாதையில் முக்கியமாக எழுப்பப்படவேண்டிய கேள்வி. நிச்சயம் பதில் காணப்படவேண்டிய கேள்வி.
இந்தக் கேள்விக்கு சரியான பதிலை நாம் உண்மையாகவே காண விரும்பினால், முதலில் எங்களையே நாங்கள் ஒரு ஆரோக்கியமான சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும். அப்படிச் செய்யாது விட்டால் மேலே கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை நிச்சயம் எங்களால் காணமுடியாமலேயே போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
விடுதலைப் புலிகள் மிகத் திறமையான முறையில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் கடைசியில் தோல்வி அடைவதற்கு மூன்று முக்கிய காரணங்களை நாம் பட்டியலிடலாம்.
முதலாவது: விடுதலைப் புலிகளின் முன்நாள் தளபதியான கேணல் கருணா அம்மான்.
இரண்டாவது: சிறிலங்கா இராணுவத்தின் நவீனமுறையிலான உளவியல் நடவடிக்கைகள்.

மூன்றாவது: விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகள்.

இதில் மூன்றாவதாக நான் குறிப்பிட்ட காரணம் பற்றி உங்களில் சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படலாம். விடுதலைப் புலிகள்தான் பல வெற்றிகரமான உளவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக முன்னர் நாம் பார்த்திருந்தோமே. பின்னர் அவர்கள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தின் வெற்றிக்கு வழி வகுத்தாகக் கூற முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் ஒரு வகையில் இந்த ஆபத்து புலிகளின் உளவியல் நடவடிக்கைகயில் நடந்தேறியிருந்தது என்பதுதான் உண்மை.

உளவியல் நடவடிக்கைகள் பற்றிய கற்கைகளில் ஒரு முக்கியமான விடயம் இருக்கின்றது. அதாவது எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, எதிரியை ஒரு மாயைக்குள் வைத்திருக்கும்படியான உளவியல் நடவடிக்கை என்று ஒருவகை நடவடிக்கை இருக்கின்றதல்லவா? எதிரியைக் குறிவைத்து ஒரு தரப்பால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த வகை உளவியல் நடவடிக்கைக்கு, அந்த உளவியல் நடவடிக்கையை மேற்கொள்ளுகின்ற தரப்பே பலியாகிவிடக்கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இது உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயத்தில் ஒரு முக்கியமான பாடம்.

எதிரியைக் குறிவைத்து மேற்கொள்ளப்படுகின்ற உளவியல் நடவடிக்கைக்கு எப்படி நாமே பலியாவது?

இதற்கு, என்னுடைய கல்லுரி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை உதாரணத்திற்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் சென்னையில் காலேஜ் விடுதியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த பொழுது கேரளாவைச் சேர்ந்த ஒரு முதலாம் ஆண்டு மாணவன் புதிதாக விடுதிக்கு வந்திருந்தான். தோற்றத்தில் மிகவும் பலவீனனாகக் காணப்பட்ட அந்த மாணவன் தனக்கு வர்மக்கலை தெரியும் என்று கூறி, வர்மக்கலை நுணுக்கங்கள் சிலவற்றையும் விபரித்துக் கூற ஆரம்பித்தான்.

எதிரியின் களுத்தில் உள்ள ஒரு நரம்பில் தனது விரல்களால் இலேசாகத் தட்டிவிட்டால் போதும் எதிரியின் வாய் ஒரு பக்கம் இழுத்துக்கொண்டுவிடும். பின்னர் வாழ் நாள் முழுவதும் அந்த நபரால் குணமாக முடியாது. தோளில் உள்ள ஒரு நம்பில் குறிபார்த்து இலேசாக அழுத்திவிட்டால் கை இழுத்துக்கொண்டுவிடும். பின்னர் வாழ் நாள் முழுவதும் அந்தக் கை செயற்பட முடியாது- இப்படி பல கதைகள் அந்த மாணவனிடம் இருந்த வர்மக்கலைத் திறமை பற்றி மாணவர்கள் மத்தியில் பரவியிருந்தது.

மிகவும் அமைதியாகக் காணப்பட்ட அந்த மாணவனிடம் வம்பிழுப்பதற்கு எங்களனைவருக்கும் கொஞ்சம் பயம். அவன் விசயத்தில் தலையிடுவதை கூடுமானவரை தவிர்த்தே வந்தோம். ஒரு குறுகிய காலத்திற்குள் எதுவும் செய்யாமலேயே அந்த மாணவன் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு காலேஜ் கொஸ்டலில் வலம்வர ஆரம்பித்துவிட்டான். யாருமே அவனிடம் சண்டைக்குப் போவதில்லை. அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை நட்பாக்கிக்கொள்ள முன்டியடித்தார்கள். அவனை ராக்கிங் செய்வதற்கு அனைவருக்குமே பயம். முதல் வருடம் இவ்வாறு கழிந்தது. இரண்டாம் வருடம் அந்த மாணவன் சீனியர் ஆனதும் அவனுக்கு இன்னும் தலைக்கனம் வர ஆரம்பித்தது. அவனைப் பார்த்து பயந்த மாணவர்களை அந்த மாணவன் வம்பிக்கிழுக்க ஆரம்பித்தான். சிலரை அடிக்கவும் செய்தான். அவனுக்கு வர்மக்கலை தெரியும் என்ற அச்சத்தில் யாருமே அவனைத் திருப்பி அடிக்கத் துணியவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் புதிதாக வந்த மாணவன் ஒருவன் இந்த வர்மக்கலை தெரிந்த ஜம்பவானை ஒரு ராகிங்; பிரச்சனையின் போது போட்டு வாங்கு வாங்கென்று வாங்கி அடித்துத் துவைத்த போதுதான், உண்மையிலேயே அவனுக்கு வர்மக்கலையும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது என்கின்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்தது. எங்கோ புத்தகத்தில் வர்மக்கலை பற்றி ஓரிரண்டு விசயங்களை வாசித்து அறிந்துவைத்துக்கொண்டு ஒரு வருடமாக எங்கள் அனைவரையும் போட்டு ஓட்டி இருக்கின்றான் என்ற விசயம் அனைவருக்கும் தெரியவந்தது. கடுப்பாகிய மாணவர்கள் அவனை போட்டு வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்கள். அதன் பின்னர் அவனை எங்கு கண்டாலும் அவன் தலையில் குறைந்தது ஒரு குட்டாவது குட்டிவிட்டுத்தான் மாணவர்கள் கடந்து செல்வார்கள். இந்த மாணவன் விடயத்தில் உண்மையிலேயே என்ன நடந்ததென்றால், மற்றவர்களை அச்சமூட்டும் நோக்கில் தனக்கு வர்மக்கலை தெரியும் என்று அந்த மாணவன் கதை அளந்திருந்தான் அல்லவா. அந்தக் கதையை ஒரு சந்தர்ப்பத்தில் அந்த குறிப்பிட்ட மாணவனே நம்ப ஆரம்பித்துவிட்டான். மற்றவர்கள் தன்னைக் கண்டு பயப்பட ஆரம்பித்ததும் அந்த அச்சத்தை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த அவன் தனக்கு உண்மையாகவே வர்மக்கலை தெரியாது என்கின்ற உண்மையை மறந்து தனக்கு அது தெரியும் என்று நம்ப ஆரம்பித்ததன் விளைவுதான் அவன் மேற்கொண்ட அந்த உளவியல் நடவடிக்கை தோல்வி அடையக் காரணம்.
விடுதலைப் புலிகள் விடயத்திலும் கிட்டத்தட்ட இதுதான் நடந்திருந்தது. எதிரியை அச்சமூட்டுவதற்காகவென்று விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல உளவியல் நடவடிக்கைகளை ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளே நம்ப ஆரம்பித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம்.

சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள். அந்தப் புத்தகத்தின் பெயர்: நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள். சாள்ஸ் அன்டனி சிறப்புப் படையணிபின் பத்தாண்டு போராட்ட வரலாறு பற்றிய புத்தகம். விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள், போராளிகளின் அனுபவங்கள், புகைப்படங்களைச் சுமந்து வந்த மிகவும் கனதியான அந்தப் புத்தகத்தில் விடுதலைப் புலிகளின் போராட்ட நுனுக்கங்கள், இரகசியங்கள் பல பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளால் மிக வெற்றிகரமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக அனைவராலும் நம்பப்பட்ட சில குறிப்பிட்ட தாக்குதல்கள் உண்மையிலேயே ஓரிருவரின் தனிப்பட்ட நடவடிக்கையினால், அல்லது அதிர்ஷ்டத்தினால், அல்லது எதிரிக்கு ஏற்பட்ட நியாயமற்ற அச்சத்தினாலேயே பெறப்பட்டிருந்தன என்கின்ற உண்மையைக்கூட அந்தப் புத்தகம் வெளிப்படுத்தியிருந்தது. முக்கியமாக எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கோடு போராட்டக் களங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த உளவியல் நடவடிக்கைகள் களமுனைகளில் எப்படியான தாக்கத்தினை எதிரிக்கு ஏற்படுத்தியிருந்தது என்றெல்லாம் விபரித்து இருந்தார்கள்.

~இப்படி இராணுவ இரகசியங்களை பகிரங்கப்படுத்துவது பிற்காலத்தில் புலிகளுக்கு மிகப் பலவீனத்தை ஏற்படுத்திவிடும் அல்லவா| என்று ஒரு மூத்த ஊடகவியலாளர் விடுதலைப் புலிகளின் ஒரு கட்டளைத்தளபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். ~இந்தப் புத்தகத்தை மொழி மாற்றி சிறிலங்காப் புடை வீரர்களுக்கு வினியோகித்தால், உளவியல் ரீதியாக மிகப் பெரிய பலம் அவர்களுக்கு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றதல்லவா? விடுதலைப் புலிகளின் பல பலவீனங்கள் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றனவே. ஒரு போராட்ட அணிக்கு இது நல்லதல்லவே| என்று அக்கறையுடன் அந்த தமிழ் இராணுவ ஆய்வாளர் புலிகளின் அந்த கட்டளைத் தளபதியிடம் கூறியிருந்தார்.

அதற்கு புன்னகையுடன் பதிலளித்த அந்த தளபதி, அடுத்த கட்ட யுத்தத்தில் இப்படியான சண்டைகளெல்லாம் நடக்கச் சந்தர்ப்பம் இல்லை. நேரடிச் சண்டை என்பதே இனிவரும் காலங்களில் நடக்கப்போவதில்லை. இங்கிருந்தபடி பட்டன்களை அழுத்துவதுதான் எமது வேலையாக இனி இருக்கப் போகின்றது. எதிரிகளை அழிப்பதற்கு ஏவுகணைத் தொழில்நுட்பம்தான் இனி வரும் காலங்களில் புலிகளால் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதுதான் நாம் இனிச் செய்யப் போகும் சண்டைகள் என்று அந்தத் தளபதி தெரிவித்தார்.
இதேபோன்று 2005ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வன்னியில் ஒரு தளபதியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, 'எதற்காக சண்டை ஆரம்பமாகவேண்டும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு விரும்புகின்றது? ஒரு சண்டைக்கான அவசரம் என்ன?" என்று நட்பு ரீதியிலான ஒரு கேள்வியை நான் எழுப்பியிருந்தேன். ~நாலாம் கட்ட ஈழ யுத்தம் என்பது வெறும் மூன்று நாட்கள் மாத்திரம்தான் நடைபெறும். இனிமேல் மூன்றுநாட் சண்டைதான்- அதற்குள் அனைத்தும் முடிந்துவிடும். அந்த அளவிற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சண்டைகளுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வைத்திருக்கின்றோம்| என்று நம்பிக்கை ஒளி கண்களில் தெரிய அந்தத் தளபதி கூறியிருந்தார்.

ஆனால் மூன்று வருடங்களையும் கடந்து நடைபெற்ற நான்காம் கட்ட ஈழ யுத்தத்தின் பொழுது விடுதலைப் புலிகளின் தளபதிகள் நம்பிக்கை வெளிப்படுத்திய அளவிற்கான நவீன போரியல் யுக்திகளோ, அல்லது நவீன போரியல் உபகரணங்களோ விடுதலைப் புலிகள் தரப்பில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

கிளிநொச்சியையும் கடந்து சிறிலங்கா படைத் தரப்பு புதுக்குடியிருப்பை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த பொழுது கூட, வன்னியிலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்த விடுதலைப் புலிப்போராளிகளுக்கு ஒரு பெரிய தாக்குதலைச் செய்யும் அளவிற்கான தயார்படுத்தல்களைத் தாம்; கொண்டிருப்பதான நம்பிக்கை மிக மிக அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது.
சண்டைகளின் ஆரம்பத்தின் பொழுது உளவியல் ரீதியாக விடுதலைப் புலிகள் பெற்றிருந்த உற்சாகம், நம்பிக்கை முள்ளிவாய்கால் முடிவிற்கு சில வாரங்கள் முன்னவர் வரை அவர்கள் வசம் காணப்பட்டது.

கிளிநொச்சி தமது கரங்களில் வீழ்ந்ததைத் தொடர்ந்து, சிறிலங்கா படைத் தரப்பிற்கு ஒரு அச்சம் ஏற்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகள் தமது மரபுக் கட்டமைப்புக்களைக் கலைத்துவிட்டு அவர்கள் மிகவும் கைதேர்ந்த கெரில்லா பாணியிலானா போராட்டத்தைக் கைகளில் எடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் படைத் தரப்பிற்கு இருந்தது. ஏனென்றால் கெரில்லாத் தாக்குதல்களில் உலகிலேயே சிறந்த போராளிகள் விடுதலைப் புலிகள். புலிகள் மாத்திரம் கெரில்லாப் போராட்டத்தில் இறங்கிவிட்டால் அவர்களை வெல்லவே முடியாது- அதுவும் வன்னி மண்ணில் புலிகளை வெல்வதென்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பது சிறிலங்காப் படைத் தரப்பிற்கு இருந்த ஒரு மிகப்பெரிய அச்சம்.
ஆனால் விடுதலைப் புலிகளுக்கு அந்த நேரத்தில் இருந்த உளவியல் தெம்பு என்பது, அவர்கள் தோல்வி அடைந்து சரணடையும் வரைக்கும் அவர்கள் பல கட்டுமாணங்கள் பலவற்றைக் கொண்ட ஒரு மரபுப் படையணியாகவே வலம்வரும் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆணந்தபுரச் சண்டைகளெல்லாம் முடிவடைந்து, முள்ளிவாய்காலுக்குள் அத்தனை புலிகளும் முடக்கப்பட்ட பொழுதிலும் கூட, வன்னியில் இருந்து கடைசியாக வெளிவந்த ஒளிப்படக்காட்சிகளில் விடுதலைப் புலிகளின் காவல்துறை வீரர் சீருடையில் நின்ற காட்சி பதிவாகியிருந்தது. அவர்களது ஊடகத் துறை தமது காரியங்களைக் கடைசிவரை செய்துகொண்டே இருந்தது.

என்னதான் நடந்தாலும் எதிரியை வெண்றுவிடும் பலம், எதிரி எத்தனை இலட்சம்தான் வந்தாலும் அவர்களை அழித்துவிடும் வல்லமை விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இருக்கின்றது என்கின்றதாக தமிழ் மக்களையும், எதிரியையும் குறிவைத்து விடுதலைப் புலிகள் தரப்பு மேற்கொண்டிருந்த உளவியல் நடவடிக்கையை, கால ஓட்டத்தில் விடுதலைப் புலிகள் தரப்பே உறுதியாக நம்ப ஆரம்பித்திருந்ததன் விளைவு இது என்று கூறலாம்.

சரி, இனி அடுத்த விடயத்திற்குச் செல்வோம்.

விடுதலைப் புலிகளின் மிக வெற்றிகரமான உளவியல் நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்திப்பதற்கு காரணமான மற்றொரு காரணி பற்றிப் பார்ப்போம்.

விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்திப்பதற்கு காரணமான மிக மிக முக்கியமான காரணி: கருணா.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளுள் ஒருவராக இருந்த கேணல் கருணா என்கின்ற தனி மனிதன் எவ்வாறு விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் முறியடிக்கக் காரணமாக இருந்தார்?

இது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்
nirajdavid@bluewin.ch

Geen opmerkingen:

Een reactie posten