தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 juli 2011

தலை இருக்க வால் ஆடலாமா ? தள்ளாடித் தவிக்கும் தமிழீழப் போராட்டம் !

02 July, 2011 by admin
தலை இருக்க வால் ஆடலாமா? தலைப்பு புரிகிறவர்களுக்கு புரியட்டும்! இனி விடயத்துக்கு வருவோம்:

மே 18 போர் முடிவுக்கு வந்தது. அங்கே இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லி, அதனூடாக இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, தமிழர்கள் இலங்கையில் வாழமுடியாது எனக் காட்டி, தனியாகப் பிரிந்துசெல்ல சர்வதேசத்தின் உதவியை நாடி சில செயல்பாட்டாளர்கள் சென்றுகொண்டிருக்க, தலைமைப் பொறுப்பை ஏற்பது யார்? இதற்கெல்லாம் தலைமை வகிப்பது யார் ?என்ற போட்டி ஒரு பக்கம் ஆரம்பித்துவிட்டது ! பழமொழிகள் பல பாட்டி சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஒரு புது மொழி சொல்லட்டுமா?

ஆடான 'ஆடுகள்' எல்லாம் தவிடு பிண்ணாக்குக்கு என்று அலைய, ஒரு 'சொத்தி' ஆடு மட்டும், மக்டொனால்ஸுக்கு அலைந்ததாம் என்ற கதைபோல ஆகிவிட்டது, புலம் பெயர் தமிழீழ செயல்பாட்டாளர்கள் நிலை! நான் தான் 'தலைமைப் பீடம்' என்று ஒரு குழுவும், நான் தான் தேசிய செயல்பாட்டாளர் என மறு குழுவும், இல்லை.. இல்லை... சர்வதேசமே என்கையில் தான் என மற்றொரு குழுவுமாக அணிசேர்ந்து, ஒருவரை ஒருவர் காலை வாருவதைப் பார்த்தால், இதற்காகவா 33,000 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

இவர்கள் தான் ஒருவருக்குள் ஒருவர் மோதுகிறார்கள் என்றால், தருணம் பார்த்து எரியும் நெருப்பில் 'சுப்பர்' பெற்றோலை ஊற்றுகிறார்கள் சில (நா.நபர்கள்) ! அவர்களை பற்றிச் சொல்லவே தேவையில்லை. யார் என்று உங்களுக்கே புரியும் ! சமீபத்தில் நடந்த மில்டன் கீன்ஸ் பிரச்சனை ஒரு நல்ல உதாரணம் ! விளையாட்டுப் போட்டி நடக்கிறதாம், ஆனால் அதனை நடத்துபவர்கள் சரியில்லை என்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக முதலில் செய்தி வந்தது அதனைத் தொடர்ந்து சங்கதி இணையத்தில் அந்த விளையாட்டு விழாவில் சிலர் பேசிய அருமையான வசனங்கள் ஒலிநாடாவாகப் போடப்பட்டிருந்தது. அதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால் அங்கே சென்ற குழப்பகாரர் ஒருவர் கூறுகிறார்

அடுத்த மாவீரர் தினத்தையும் இதுபோல தாம் நடத்தவிடமாட்டேன் என்று!

மாவீரர் தினத்தை நடாத்தும் குழுவிடம் கணக்கு கேட்டால் ,அவர்கள் காட்ட மறுப்பதாக ஒரு குற்றச்சாட்டை, 'வருடல்' என்னும் இணையத்தளம் முன்வைக்கிறது. சங்கதி வெளியிட்ட ஒலி நாடாவுக்கு எதிராக, ஒரு நேர்காணலை எடுத்து 'வருடல்' இணையம் வெளியிட்டுள்ளது. அதில் நடந்த குழப்பம் அனைத்தும் பொதுமக்களால் நடாத்தப்பட்டதாக சொல்ல முனைகிறது. அவ்வாறாயின் அந்த ஒலிநாடாவில் பேசப்படும் கெட்ட வார்த்தைகள் அனைத்தும், பொதுமக்களால் தான் பேசப்பட்டதா என்ற விளக்கத்தை அவ்விணையம் கொடுக்கவில்லை. ஏனென்றால் தலைமைச் செயலகத்துக்கு ஆதரவாக- அதன் ஊது குழலாக- அவ்விணையம் செயல்பட்டு வருகின்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி.. மாவீரர் தினத்தை நடத்தும் குழுவினரிடம் கணக்கைக் கேட்டால் காட்டமாட்டேன் என்கிறார்கள் என்கிறார்களே, அப்படி என்றால் அடுத்த மாவீரர் தினத்தை அதிருப்தியடைந்திருக்கும் குழு எடுத்து அல்லது பொறுபேற்று நடத்தலாமே? ஏன் நடத்த முன்வரவில்லை? அதாவது எக்ஸ்ஸெல் எனப்படும் அந்தப் பாரிய ஹாலுக்கே சுமார் 40,000 பவுண்டுகளுக்கு மேல் வரும். அதனைப் போட்டு பின்னர் பல செலவுகளைச் செய்து நேர்த்தியாக வருடா வருடம் மாவீரர் தினத்தை நடாத்திவரும் ஒரு குழுவிடம் சென்று, காசுக்கணக்கு கேட்டு, அவர்களைத் தூற்றி ,அந் நிகழ்வை நடத்தவிடாமல் தடுப்பது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரல் ஆகும். காசுக் கணக்கை ஒருவர் காட்டவில்லை என்றால் மக்களிடம் இப் பிரச்சனை முன்வைக்கப்படவேண்டும் !

மக்கள் தான் கேள்வி கேட்கவேண்டும், தனியாக இயங்கிவரும் குழுக்கள் கேட்கத் தேவை இல்லையே. அதிருப்தியாளர்கள் மக்களிடம் சென்று சொல்லலாம். நுளம்பு வீட்டில் இருக்கிறது என்பதற்காக வீட்டையே நெருப்பிட்டுக் கொளுத்திய கதையாக உள்ளது இது. காசுக் கணக்கால் மாவீரர் தினம் தடைப்படுவதால், சிங்களவர்களுக்கு லாபம் தமிழர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது. இதனை தமிழர்களாகிய நாம் செய்தால் சிங்களவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்? எதனோடு வேண்டும் என்றாலும் விளையாடுங்கள் மாவீரர் தினத்தோடு விளையாடவேண்டாம்! சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக மாவீரர் தினத்தோடு விளையாடி அதனை நிறுத்தும் நாசகார வேலைகளுக்கு பிரித்தானிய மக்கள் என்றும் அனுமதிக்க மாட்டார்கள்! இவ்வாறு செய்ய முனைபவர்கள் இனம்காணப்பட்டு மக்களால் ஒதுக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்! இதனை அதிர்வு எழுதுவதால் அதிர்வு மாவீரர் நாள் செய்யும் கோஷ்டியோடு கைகோத்து நிற்கிறது என்று ஒரு கதையைக் கிளப்ப சில நொடிகள் போதும் என்பது எமக்கும் தெரியும்! ஆனால் மக்களின் நிலை என்ன என்பதனை அதிர்வு இணையம் நன்கு அறியும்! மக்கள் எப்போதும் தெளிவாகவே உள்ளனர். அதனால் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதனை அவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள்!

சமீபத்தில் 'ஈழ முரசு' பத்திரிகை வெளியிட்டு வரும் 'ஈழ முரசு லீக்ஸ்' என்னும் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அது ப.நடேசன் அவர்களின் மின்னஞ்சலை உடைத்து எடுக்கப்பட்ட செய்தி என சில இணையங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதனை ஒரு தேசத்துரோகமாகவும் சித்தரிக்க அவர்கள் தவறவில்லை. ப.நடேசன் அவர்கள் இறந்த பின்னர் அவர் நினைத்து வைத்திருந்த விடயங்கள், அவர் மக்களுக்கு சொல்ல முனைந்த செய்திகள் மற்றும் தமிழீழ போராட்டத்தின் முக்கிய வரைவுகள், அதன் தொலைநோக்குச் சிந்தனைகள் என்பன மிக முக்கியமான ஒன்று. அவை வெளியே வரவேண்டிய விடயங்கள். அது பரகசியமுமல்ல. அவை ப.நடேசன் இறந்த பின்னர் அவரோடு சேர்ந்து அழிந்துபோகக் கூடாது! இது என்ன சிங்களவர் கைகளில் போய் கிடைக்கவேண்டுமா? தமிழர்கள் மத்தியில் அல்லவா போய் சேரவேண்டும். சர்வதேசத்துக்கு அல்லவா போய் கிடைக்கவேண்டும்!

இதனை வெளியிடுவதால் சிலருக்கு களங்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தால், அவர்கள் இதனை தவறான பாதையில் இட்டுச்செல்கின்றனர். ப.நடேசனின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டது குற்றம் என்று புது வியாக்கியானம் சொல்லுகின்றனர். ஈழ முரசு பத்திரிகை பிரித்தானியா வெம்பிளிப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனைச் சிலர் சென்று தூக்கி எறிந்துள்ளதோடு, இனி ஈழமுரசுப் பத்திரிகையை இங்கே வைக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இவ்வளவு நாளும் தேசிய விடுதலைப் பத்திரிகையாக இயங்கிவந்த ஈழ முரசு திடீரென துரோகி ஆக்கப்படுகிறது. இந்தக் கலாச்சாரம் முதலில் அகலவேண்டும்! இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை என்று வாய் கிழியக் கத்துகிறோம், பிரித்தானியாவில் தமிழ் ஊடகங்களுக்கு முதலில் சுதந்திரம் உண்டா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

ஊடகவியலாளர் மாநாடு நடத்துகிறோம் வாருங்கள் என ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். அக் குழுவால் நடாத்தப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளாவிட்டால் அவர்கள் தேசத்துரோகி ஆக்கப்படுகிறார்கள். இன்னும் ஒரு கோஷ்டி ஊடகவியலாளர்களையும், இணையத்தள உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கும். ஆனால் பூட்டிய அறைக்குள் இது நடக்கும் என அறிவிக்கும். நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என உத்தரவும் போடும். பத்திரிகையாளர் ஊடகவியலாளர்கள் வரவேண்டும் ஆனால் நடந்ததைக் கூறக்கூடாது, அப்படி என்றால் எதற்கு கூட்டம்? நடந்ததை வெளியே சென்று மக்களுக்கு சொல்லவேண்டும் அல்லவா? மறைப்பதால் என்ன லாபம், இல்லை இதில் என்ன ஊடக தர்மம் இருக்கிறது? இதைத்தான் 'சொல்லலாம்' இதைச் 'சொல்லக்கூடாது' என்பார்களோ தெரியவில்லை (வரும் ஆனா வராது.....எண்ட மாதிரி)

புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்கள், ஒரு சில அமைப்புகள் சார்பாகவே இயங்கிவருகின்றன. நாடு கடந்த அரசாங்கத்தின் ஊது குழலாக சில ஊடகங்களும், தலைமைச் செயலகத்தின் ஊது குழலாக சில ஊடகங்களும், கிளை அல்லது BTF GTF சார்பாக சில ஊடகங்கள் என, பல ஊடகங்களும் அடிபணிவு ஊடகமாக உள்ளது. அதிர்வு இணையத்தில் BTF ஐ பற்றி எழுதினால், அவர்கள் BTF சார்ந்தவர்கள் என்று கூறி மற்றைய குழுக்கள் புரளிகளைக் கிளப்பிவிடுகிறார்கள். எவர் ஒருவர் உண்மையாக ஈழ விடுதலைக்கு பாடு படுகிறார்களோ, இல்லை இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முற்பட்டுச் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது அவசியம், அது நா.க அரசாக இருக்கலாம் இல்லை தலைமைச் செயலகமாக இருக்கலாம் இல்லையேல் GTF, BTF ஆக இருக்கலாம்.
இங்கு பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தி, மகிந்த அரக்கன் , இன அழிப்பு குற்றச் சாட்டிலிருந்து தப்பிவிட உதவி செய்ய வேண்டாம். மகிந்தன் தப்பினால்தான், அண்ணன் கேப்பீயும் தப்புவார் எண்டு கணக்குப் போடுபவர்களும், இத்தகைய குழப்பங்களையும் ஏற்படுத்துவார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

இவர்களில் எவராவது இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்பட்டால், நாம் அவர்கள் குறித்த செய்திகளை வெளியிடத் தயார். ஆனால் வெறுமனே, காகித அறிக்கைகளை வெளியிடும் அமைப்புகளை நாம் முன்நிலை படுத்த விரும்பவில்லை. அவர்கள் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தால் அதனை நாம் பிரசுரிக்க பின் நிற்கப்போவதும் இல்லை! எனவே கோஷ்டி மோதலையும், பலப் பரீட்சைகளையும், தமிழீழம் கிடைத்தபின்னர் வைத்துக் கொள்வோமே. அப்போது ஆளும் கட்சி எதிர் கட்சி, என்று சொல்லி நீங்கள் எவ்வளவு சண்டை போட முடியுமோ போடுங்கள். அப்போது உங்களை எவரும் தடுக்கப்போவது இல்லை


அதுவரை மாவீரர் கண்ட கனவுகளை நனவாக்க நாம் ஏன் இணைந்து செயல்படக்கூடாது ? ? ?

அதிர்வுக்காக வல்லிபுரத்தான் !

Geen opmerkingen:

Een reactie posten