தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 juli 2011

அமெரிக்காவும் ஈழத்தமிழர் விவகாரமும்! - ஹிலாரி கிளிண்டனும் ஜெயராம் ஜெயலலிதாவும் அப்படி என்னதான் பேசித் தொலைத்தார்கள்?

[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 08:30.35 AM GMT ]
அமெரிக்கா எங்கள் விவகாரத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறதா என்று நாங்களே நம்ப மறுத்து ஒரு வேளை அப்படியெல்லாம் இருக்காது என்று ஆசுவாசப்படுத்துகிற மாதிரிச் செய்திகள் தாராளமாய் வந்து கொண்டிருக்கின்றன.
போதாக்குறைக்கு ஹிலாரி கிளிண்டனும் ஜெயராம் ஜெயலலிதாவும் நீண்ட நேரம் பேசிய செய்தியும் வெளிவந்தாயிற்று. இப்போது எல்லோரது மனங்களிலும் தொக்கி நிற்கின்ற கேள்வி அப்படி என்ன தான் பேசித் தொலைத்தார்கள் என்பது.
அவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது “விலாவாரியாகத்” தெரியாவிட்டாலும் இது ஹிலாரியின் திட்டமிட்ட சென்னை விஜயம் என்பதையும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு” என்பதும் இலங்கையுடன் விரும்பியோ விரும்பாமலோ நல்லுறவைப் பேண வேண்டும் என்பதையுமே தமிழக மக்களிற்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுமே ஜெயலலிதாவிற்கு சொல்லப்பட்ட செய்தியின் சராம்சமாகும்.
ஈழக்கோரிக்கையினை ஆத்மார்த்தமாக ஏற்று அதற்காகவே தன்னை அர்ப்பணித்த வை.கோ.வை இறுதிநேரத்தில் தனது கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட ஜெயலலிதாவிற்கு, அல்லது தனது வெற்றிக்கு மறைமுகமாக உழைத்த சீமானை ஒரு மரியாதை நிமிர்த்தமாவது சந்திக்காத ஜெயலலிதாவிற்கு சொல்லப்பட்ட செய்தி புதியதல்ல.
இருந்தாலும் தமிழ்நாட்டை அமெரிக்கா அணுகுவது புதியதொரு நடைமுறை. இவ்வாறு மிகவும் நுட்பமாக இந்த விவகாரதத்தில் காய் நகர்த்துவதற்கு பின்பலமாக உள்ளவர் ஈழப்பிரச்சினையை அக்குவேறு ஆணி வேறாக அறிந்துள்ள ரொபேர்ட் ஓ பிளேக் என்ற அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலர் ஆவர்.
ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்க வெளியுறவுச் சேவையில் சேர்ந்த போது அவர் பணியாற்றிய இடம் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதுவராலயம். அந்தக் காலப்பகுதியில் தமிழை புலமையாக அறிந்தது மாத்திரமல்லாமல் தமிழைப் பேசுகிற அளவிற்கு அவரது ஆர்வம் இருந்ததாக ஒரு தகவல். பின்பு இவரே இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவராக வந்து நோர்வேயின் பேச்சு முயற்சிகளின் போது அப்போது சிறீலங்காவிற்கான தூதுவராக இருந்தவர்.
2007ம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதி மட்டக்களப்பிற்கு இராஜதந்திரிகள் குழுவுடன் விஜயம் செய்திருந்த போது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட செல் தாக்குதலில் இரண்டு தூதுவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயப்பட்டார்கள். இவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக அப்போது சிறீலங்கா ஊடகங்களால் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னாளில் முள்ளிவாய்க்கால் வரையான நாட்கள் வரை ஈழத்தமிழரின் விவகாரத்தில் பெயரடிபட்ட ஒருவர். இப்போது பதவியுயர்வு பெற்று துணை இராஜாங்கச் செயலர். இருந்தபோதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பிரதேசம் தென்னாசியாப் பிராந்தியம். அதனுள் சிறீலங்காவும் உள்ளடக்கம். எனவே இப்போதைய இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளின் கதாநாயகன் இவரேயாவர்.
இவர் 2009ல் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அரச தரப்பு உருத்திரகுமாரன் தலைமையிலானவர்களுடன் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோடு அதனைக் கொழும்புக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
இருந்தபோதும் கனடாவிற்கு கப்பல்மூலம் அகதிகள் வருகை தந்தது அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றி இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் இட்டுச் சென்றது.
அதற்கான காரணம் அக் கப்பல் பயணத்தின் பின்னணியில் விடுதலைப்புலிகளே இருந்தார்கள் என்ற உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் அக் கப்பல் விடுதலைப்புலிகளுடையதே என்ற ஆதாரபூர்வத் தகவல்கள் என்பனவாகும்.
இதுவே புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசவேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா தவிர்த்து ஈழத்தமிழர்களின் ஜனநாயகத் தலைமையை ஈழத்திலேயே தேடுவதற்கு வழிவகுத்தது.
இவ்வாறு ஈழத்தமிழர்களின் ஜனநாயகத் தலைமை புடம்போடப்பட்டு, சிறீலங்கா அமெரிக்காவின் இராஜதந்திர மிரட்டல்களிற்கு உள்ளாக்கப்பட்டு வந்தவேளையிலே தமிழ்நாட்டில் சிறீலங்காவில் பிரிவினை தான் தீர்வு என்ற கோதாவில் அல்லது தமிழீழத்திற்கு ஆதரவான நிலைப்பாடு வலுவடைந்து வந்தது. இது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவாது என்பதையும் தமிழகம் ஈழப்பிரச்சினைத் தீர்விற்கு எப்படி உதவலாம் என்பதையும் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறீலங்காவிற்கான நிதியுதவிகளில் கால தாமதம் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தடை என்ற ஒரு பொருளாதார நிலைப்பாட்டிற்குள் சென்றுள்ள அமெரிக்கா இந்த உள்ளுராட்சித் தேர்தலின் பின்னரான காலத்தில் ஒரு தீர்வுக்கு இலங்கையை செல்ல வைக்கப் போகிறது. அதற்கான மிரட்டல் ஆயுதமாக யுத்தக் குற்றவிசாரணையுள்ளிட்ட இதர தடைகள் இருக்கப் போகின்றன.
இதுவே இன்றைய தேதியில் ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த பார்வையாகும். அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தற்காலிகமானதே! ஏனென்றால் அது எவ்வளவு காலத்திற்கு யதார்த்தமாயிருக்கும் என்பது அதன் அடுத்த முக்கிய தேவை உலகப் பந்தின் எந்தப் பிராந்தியத்தை நோக்கிச் செல்கிறது என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல, றொபேர்ட் பிளேக்கிற்குப் பதிலான வேறு ஒருவர் நியமிக்கப்பட்டாலும் மாற்றம் பெறும்.

Geen opmerkingen:

Een reactie posten