தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 juli 2011

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசியம் அபிவிருத்தி அல்ல! அரசியல் தீர்வே!- பிரதியமைச்சர் முரளிதரன்

[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 02:46.30 AM GMT ]
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது அபிவிருத்தி அல்ல. அரசியல் தீர்வாகும். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதனைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட்டால்தான் ஜனாதிபதி மீது வடக்கு மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். ஜனாதிபதியும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
வடக்கிலும், கிழக்கிலும் தற்போது தேவைப்படுவது அரசியல் தீர்வாகும். எனினும், அபிவிருத்தியைப் புறந்தள்ள முடியாது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியான தீர்வு வழங்கப்பட்டால்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வடக்கு, கிழக்கு மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். இதனை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள ஜனாதிபதி அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நியாயமானவை. எனினும் பொலிஸ் அதிகாரங்களுக்கு அதிக அக்கறை செலுத்தத் தேவையில்லை. ஏனென்றால் மாகாண சபைகளுக்கும் தற்பொழுது பொலிஸ் அதிகாரம் உள்ளது. அதனால் பொலிஸ் அதிகாரம் குறித்து தமிழ் மக்கள் அதிகளவில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
அத்துடன், காணி அதிகாரம் நியாயமான கோரிக்கையாகும். ஏனென்றால் தற்சமயம் மத்திய அரசு, மாகாண மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய பிரிவுகளில் காணி அதிகாரம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும்.
இவை அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் தீர்வு பேச்சு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பிரிவினரும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
சனல் 4 தொலைக்காட்சியின் யுத்தக்குற்ற ஆவணத் திரைப்படம் மற்றும் யுத்தக் குற்ற விசாரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துகள் வரவேற்கத்தக்கவை.
இலங்கையர்கள் மீண்டுமொரு யுத்தத்தை விரும்பவில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. எனவே, யுத்தத்தை நினைவூட்டும் விடயங்களை மீண்டும் மீண்டும் கண்முன்னே கொண்டுவந்து விசாரணை செய்வதிலும் பயனில்லை.
30 வருடங்களின் பின்னர் வடக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர். இதுவே உண்மையான நல்லாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten