தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 juli 2011

தேர்தல் முடிவுகள் எல்லோருடைய கண்களையும் திறக்கச் செய்துள்ளது! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Photo
[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 12:41.35 PM GMT ]
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த எவ்விதமான பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றையதினம் (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றியைப் பெற்றிருந்தாலும் அவர்கள் எமது மக்களுக்கான அரசியல் புனரமைப்பு அபிவிருத்தி மற்றும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள் என்றும் நடைபெறவுள்ள மாகாணசபைக்கான தேர்தலின் போது மக்கள் இதை உணர்ந்து கொண்டு சரியான தீர்ப்புக்களை வழங்குவார்கள் என்றே நம்புகின்றேன்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அரசை மக்கள் புறக்கணித்துள்ளனரா என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது இது ஒரு தவறான புரிந்துணர்வு என்பதுடன் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு தவறான பிரச்சாரங்கள் ஊடாக மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் இந்தத் தவறான பிரச்சாரங்களால் வழிநடாத்தப்பட்டதன் விளைவுகளை எமது மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும் இத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மொழிவாதம், இனங்களைத் தூண்டி தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரச்சாரம் தொடர்பில் இங்குள்ள தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு சரியான வழிகளை எடுத்துக் காட்டவில்லை என்பதுடன் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கோ உணர்வுகளுக்கோ ஏற்ப சரியாக செயற்படவில்லை. அத்துடன், கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான உள்ளுராட்சி வேட்பாளர் ஒருவர் ஈ.பி.டி.பியினரால் தாக்கப்பட்டமை தொடர்பாக கேட்ட போது இச்சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. அத்துடன் எம்மீது திட்டமிட்ட வகையில் குற்றம் சுமத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இனவாதத்தை நம்பியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எமது ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகர சபை மக்களுக்கான தனது செயற்பாடுகளை மிகத்தரமான முறையில் மேற்கொண்டு வருகின்ற போதிலும் அங்குள்ள எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா நகர சபையை கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனால் அச்சபையை சரியாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமிழ்ப் பிரதிநிதிகளே என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை என்றும் தேர்தல் முடிவுகள் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், ஏனெனில் இது, எல்லோருடைய கண்களையும் திறக்கச் செய்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
தேர்தல் முடிவுகளால் துவண்டுவிடப்போவதில்லை எமது மக்கள் பணிகள் தொடரும்! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாங்கள் 3 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியிருக்கின்றோம். அத்துடன் 2 உள்ளூராட்சி சபைகளில் மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறியிருக்கின்றோம். எங்களிடம் தங்களுடைய உள்ளூராட்சி அதிகாரத்தைக் கையளித்த மக்களுக்கு முதலில் எனதும் எனது வேட்பாளர்களினதும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அத்துடன் இதர சபைகளிலும் எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனதும் எனது வேட்பாளர்களின் நன்றிகள் உரித்தாகட்டும்

எங்களிடம் உள்ளூராட்சி சபைகளுக்கான ஆட்சி அதிகாரத்தைக் கையளித்த மக்களுக்கு ஓர் உண்மையான - நேர்மையான - ஊழலற்ற சேவையை வழங்குவோம் என நான் இத்தருணத்தில் உறுதி கூறுகிறேன். அத்துடன் நாம் அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறிய உள்ளூராட்சி சபைகளில் நாம் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு இயலுமானவரையில் அத்தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவுவோம் எனவும் உறுதி கூறுகிறேன்.

நான் என்றுமே சொன்னதைச் செய்பவன் செய்வதையே சொல்பவன். வெறும் வாக்குகளைப் பெறுவதற்காக வானத்திலிருந்து சந்திரனைக் கொண்டுவந்து தருவேன் என்று நான் வாக்குறுதிகளை அளிப்பதில்லை. எனது மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் என்றும் இதய சுத்தியுடன் முயன்றிருக்கிறேன். இயலுமான வகையில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பலதை நான் நிறைவு செய்தும் இருக்கிறேன். கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் இதனை அறிவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இந்தத் தேர்தலிலும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தின் ஊடாக எமது மக்களுக்கு எம்மால் எதைச் செய்ய முடியும் என்பதைப் பற்றியே நாம் பிரச்சாரம் செய்தோம். இனவெறியையும் மொழி வெறியையும் ஊட்டி எமது மக்களின் உணர்வுகளை எழுப்பி வாக்குகளைப் பெறும் மலினமான உத்திகளில் நாம் முயன்றதில்லை. ம்சாட்சியுள்ள எவரும் இதனை ஏற்றுக்கொள்வர். இதனையிட்டு நாம் பெருமையடைகிறோம்.

எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாகத் தீர இலங்கையிலுள்ள சகல இனங்களுக்கிடையிலும் ஒரு சுமுகமான உறவு நிலவவேண்டுமென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. கடந்த கால யுத்தத்தால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களுக்கு அப்பால் எமது மக்களுடன் உறவுகளைப்பேண இலங்கை அரசு இதய சுத்தியுடன் விரும்பிவந்தது என நான் உளமார நம்புகிறேன்.
இனங்களுக்கிடையிலான உறவுகளைச் சீரமைத்து அரசியல் உரிமைப் பிரச்சினைகள் உட்பட அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் இணக்கமான தீர்வுகண்டு, ஒரு வளமான எதிர்காலத்தை அமைக்க இலங்கை அரசு நீட்டியிருந்த இரு கரங்களையும் எமது மக்கள் இறுகப்பற்ற வேண்டுமென நான் மனமார விரும்பியிருந்தேன். எமது ஜனாதிபதியினதும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட இதர அமைச்சர்களினதும் தொடரான வருகைகளை வரவேற்று வழிசமைத்து இந்த எண்ணம் நிறைவேற நான் அயராது முயன்றேன்.
இந்தத் தேர்தலிலும் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட இதர அமைச்சர்களும் பல தினங்கள் எமது மக்களுடன் வந்திருந்து அவர்களது பிரச்சினைகளைக் கேட்டு அறிந்து உதவமுன்வர நான் மனதார உதவிசெய்தேன். ஆனால் தமிழ் இனவாத அரசியல் போலிகள் இவைகளை தமது வாக்கு வேட்டைக்காக பொய்ப் பிரச்சாரங்களாக முன்னெடுத்து தவறான கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் திணித்துள்ளனர்.

நாம் �சிங்கள�க் கட்சியில் தேர்தலில் நிற்பதாக இனவெறியூட்டப்பட்டு மக்களின் வாக்குகள் எமக்கெதிராகத் திருப்பப்பட்டன. வன்னிப் போருக்காக சிங்கள அரசை பழிவாங்க எமக்குப் பாடம் புகட்டுமாறு எமது மக்கள் இன உணர்வூட்டப்பட்டனர். 81ன் யாழ் நூலக எரிப்புச் சம்பவம் போன்றதொரு அசம்பாவிதத்தை இலங்கை அரசினூடாக அரங்கேற்றி நாம் தேர்தலில் வெல்ல முயல்வதாக எமது மக்களின் இன உணர்வுகள் தட்டி எழுப்பப்பட்டன.
கறைபடிந்த 83 யூலை இனக்கலவர நிகழ்வுகள் வெறும் வாக்குகளைப் பெறுவதற்காக எமது மக்களுக்கு நினைவூட்டப்பட்டன. தேர்தல் கடமைகளுக்காக தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சகோதர சிங்கள ஊழியர்கள் தேர்தல் மோசடிகளுக்காகவே வரவழைக்கப்பட்டதாக எமது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இவர்களை தேர்தல் வேலைகளில் அமர்த்தக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
தேர்தல் பிரச்சார வேலைகளில் எமக்குதவ வந்திருந்த இலங்கை ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஏனைய அமைச்சர்களும் மோசடிகள் செய்து எம்மை வெல்லவைக்கவே வந்ததாக ஒரு விம்பம் தரப்பட்டது. வாக்குப் பெட்டிகளைத் திருட அல்லது மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பெட்டிகள் மாயமாய் மறைந்ததாக இணையத் தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
எமது ஆளுகையிலிருக்கும் யாழ் மாநகர சபை இதய சுத்தியுடன் சங்கிலியன் சிலையை திருத்த எடுத்த முயற்சிகளுக்கு இனவெறிச் சாயம் ஊட்டப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்தலில் எம்மை நிராகரித்து இலங்கை அரசுக்கு ஒரு பாடம் புகட்டுமாறு இறுதி யுத்தத்தில் பாதிப்படைந்த அபபாவி மக்களின் பழிவாங்கும் உணர்வு தேர்தல் வாக்குகளுக்காகத் தட்டி எழுப்பப்பட்டது. ஜனாதிபதி அவர்களையும் அமைச்சர்களையும்; அழைத்துவந்து தேர்தலில் மோசடி செய்து வெல்ல முனைவதாக திரும்பத்திரும்பக் குற்றஞ் சாட்டப்பட்டது.
எந்தவித பொறுப்புணர்வுமின்றி, அரச படைகளுடன் அப்பாவி மக்களையும் மாணவரையும் ஒரு மோதலுக்கு வழிசமைக்கும் அறிக்கைகள் அரசியல்வாதிகளாலும் மாணவர் அமைப்பு என்ற பெயரிலும் வெளியிடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. தாம் சுதந்திரமான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாதுள்ளது என்றும் நீதியான தேர்தல் இங்கு நடக்காது என்றும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
எதிர் அணியினரை வெற்றிக்குக் கொண்டுசென்ற இந்தப் பிரச்சாரங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை இத் தேர்தல் நடைமுறைகளும் முடிவுகளும் இப்போது தெளிவாகத் தெரிவித்து நிற்கின்றன. மனச்சாட்சியுள்ள சகலரையும் இத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கோருகிறேன்.

இந்த வகையில் எதிரணியினர் இப் பிரச்சார யுத்திகளால் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் எமது மக்களை இவர்கள் தோற்கடிக்கவே செய்துள்ளனர் என்பதை பகுத்தறிவுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர். அந்தவகையில் நாம் இந்தத் தேர்தலில் எதர்பாரத்த வெற்றிகளைப் பெற்றிருக்காவிட்டாலும் எமது மக்களுக்கு எந்தவித இழப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பதில் பெருமையடைகிறேன்.

எமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எமக்கு ஆதரவாக நல்லெண்ண நோக்கத்தோடு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கியிருந்த இலங்கை ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இந்தத் தேர்தல் முடிவுகளால் துவண்டுவிடாது எமது மக்களுக்கான எனது பணிகள் தொடரும்.


Geen opmerkingen:

Een reactie posten