தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 juli 2011

நில ஆக்கிரமிப்பினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது தமிழர்தேசம் ?

02 July, 2011
சிந்தனைக் கூடம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தினால் �மாஞ்சோலை� மாதாந்த ஒன்று கூடலொன்று, சென்ற வாரம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தேறியது. �இந்திய உதவியும், அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு பயன்தருமா?� என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆய்வில், அபிவிருத்தி என்கிற போர்வையில், குடாநாட்டு வளங்கள் சுரண்டப்படுவது குறித்து உரையாடப்பட்டுள்ளது. இராணுவக் கெடுபிடிகளின் மத்தியிலும், இவ்வாறான ஆய்வரங்குகள் நிகழ்த்தப்படுவது ஆச்சரியமாகவிருக்கிறது. சூழலியல் பற்றியதான விழிப்புணர்வுகள், மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதோடு, நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தெளிவூடல்களும் முன்வைக்கப்பட வேண்டும். தமிழர் தாயகத்திலுள்ள அரச காணிகள் சுவீகரிக்கப்பட்டு, உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. விவசாய நிலங்கள், நிரந்தர உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்படுகின்றன.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்போடு தீர்வு குறித்துப் பேசியவாறே, நில அபகரிப்பில் சிங்களம் தீவிரமாக ஈடுபடுகிறது. போரிற்குப் பின்னான அபிவிருத்திக்காக இந்தியா முன்வைத்த 50,000 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமல் மகிந்த அரசு தடுக்கிறது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியைவிட மக்களின் இயல்புவாழ்வு மீளக்கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதை தமிழர் தரப்பு வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசைப் பொறுத்தவரை, சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுவதிலும், அரச காணிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதிலுமே அக்கறை செலுத்துகிறது.

இதைத்தவிர, கூட்டமைப்போடு பேசுவது, அதற்கு முட்டுக்கட்டை போடுவது போன்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்று கூறுவது என்பதெல்லாம் காலத்தை இழுத்தடித்து சர்வதேசத்தை ஏமாற்ற சிங்களம் மேற்கொள்ளும் தந்திரங்களே. ஆயினும் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் சிங்களத்தின் கனவிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கள் அதனை சுட்டிக்காட்டுகிறது. போர் முனையில் நடந்த சமர் இப்போது அனைத்துலக இராஜதந்திரக் களத்திற்கு இடம்மாறியுள்ளதாகக் கூறிய பீரிஸ், அரசியல் உள்நோக்கம் கொண்ட அரசிற் கெதிரான பரப்புரைகள் யாவும் தோல்வியடையுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்தோடு உலகுடன் மோதுவதற்கு தாம் பயப்படவில்லையென வீரவசனம் பேசும் அவர், சீனா, ரஷ்யா போன்ற பலமான நாடுகள் பின்புல ஆதரவு தமக்கு உண்டென அறுதியிட்டுக் கூறுகின்றார். ஆனாலும், தமது நேச சக்திக் கூட்டுக்குள் இந்தியாவைச் சேர்க்காமல் தவிர்த்த விடயம் கவனிக்கத்தக்கது. நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்காமல் இழுத்தடிப்பது போன்று அமெரிக்க நீதிமன்றமொன்று மகிந்தருக்கு அனுப்பிய அழைப்பாணைக்கும் பதில் கிடைக்காதென பீரிஸ் பிதற்றுவது ஆச்சரியமான விடயமல்ல.

ஜுன் 10 திகதி இரண்டுநாள் பயணம் மேற்கொண்டு இலங்கை சென்ற இந்திய மூவர் குழு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை வைத்து வெருட்டியதாக அறியவருகிறது. அதேவேளை மே 17 அன்று பீரிசும், எஸ்.எம்.கிருஷ்ணாவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஏதிலிகளின் மீள்குடியேற்றம், அவசரகாலச் சட்ட நீக்கம், மனித உரிமை மீறல் குறித்த விசாரணை போன்ற அரசிற்கு ஒவ்வாத விடயங்கள் சில இணைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கெதிராக அரசோடு இணைந்துள்ள பௌத்த சிங்கள பேரினவாதக் கடும் போக்காளர்களும், ஜே.வி.பியும் போர்க்கொடி து�க்கின. 1987 இல் ஜே.ஆர் - ராஜீவ் இனால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலுள்ள 13 சரத்தினால் வட-கிழக்கு மாநிலங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. 2007 இல் ஜே.வி.பி யின் முயற்சியால் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக அவை பிரிக்கப்பட்டன. இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையானது வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இணைக்க வழியமைத்துவிடுமாவென்று பேரினவாத சக்திகள் அச்சமடைகின்றன.

அரசோடு பேசும் கூட்டமைப்பும், வட-கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், சுயாட்சி ஒன்று நிறுவப்படுவதோடு நிரந்தர தீர்வாக அமையுமென்று மக்களுக்குக் கூறுகிறது. சகல மக்களும் இத்தகைய தீர்வினை ஏற்றுக் கொள்வார்களா என்பது குறித்து ஆராயவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையில் ஒற்றையாட்சிக்குரிய அரசியல் வடிவத்தை வலியுறுத்துவதாலேயே சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை சிங்களம் எதிர்பார்க்கிறது.

அதாவது, தாயக மண்ணில் சுயாட்சியையும், அத்தோடு தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்பதையும் அரசு ஏற்றுக் கொண்டால், தென்னிலங்கையில் பேரினவாத அடிப்படையிலான அரசியலை இவர்களால் நடாத்த முடியாது. ஆகவே விடுதலைப் புலிகள் கேட்டதை எவருக்கும் கொடுக்க முடியாதென சிங்களம் கூறுவதை எமது தமிழ் தலைமைகள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போல் தெரிகிறது. இவை தவிர, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் சிங்கள தேசம், வருடாந்த கடன் தவணைப்பணத்தை கட்ட முடியாமல் திணறுகிறது. கிரேக்க நாடு போன்று வங்குரோத்து நிலையை நோக்கி நகராமல் இருப்பதற்கு சீனாவின் உதவியையே சிங்களம் பெரிதும் நம்பியிருக்கிறது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி மையத்தை நோக்கி வருமென்று காத்திருக்கும் சிங்களம், தென்னிந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் மேற்குலகின் முதலீடுகளால் அதிர்ச்சியுற்றுள்ளது.

2000 - 2009 வரையான காலப்பகுதியில் நேரடி முதலீடாக 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தமிழ் நாட்டில் குவிந்துள்ளன. அதில் 31 விழுக்காடு மொறீசியசும், 21 விழுக்காடு சிங்கப்பூரும், 12 விழுக்காடு அமெரிக்காவும் கொண்டுள்ளன. இலங்கையின் உட்கட்டுமானத்திற்கென மேலதிகமாக 1.8 பில்லியன் டொலர்களை வழங்க சீனா உடன்பட்டிருப்பதால், சற்று ஆறுதலடைந்துள்ளது மகிந்த அரசு. ஆனாலும், சீனக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டியானது, அனைத்துலக நாணய சபையைவிட அதிகமானது. முதல்கட்ட துறைமுக அபிவிருத்திப் பணிக்கு சீனாவிடம் வாங்கிய கடனிற்கான இவ்வருட தவணைப்பணத்தை கொடுக்க முடியாமல் தவிக்கிறது அரசு.

அரச பிணையங்களையும், முறிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, எத்தனை காலத்திற்கு காலத்தை ஓட்ட முடியும் இலங்கை அரசால் என்பதை ஆய்வு செய்ய இலங்கையில் எவரும் இருப்பது போல் தெரியவில்லை. காணிகளை விற்றுக் கொண்டிருக்கும் சிங்களம், கடல் வளங்களையும் விற்க ஆரம்பித்துள்ளது. மன்னார் குடாக்கடலை எட்டுத் துண்டுகளாகப் பிரித்து அதன் இரண்டு பகுதிகளை இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எண்ணெய் அகழ்விற்கு விற்றுவிட்டது இராசபக்ச இராசதானி. வருகிற ஓகஸ்ட் மாதமளவில் இந்தியாவின் (CARIN) நிறுவனம், எண்ணெய் உறுஞ்சும் வேலையை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமான காஸ்புரொம் மூன்றாவது மன்னார் படுகையை வாங்கப்போகிறது. அதற்கான உடன்பாடு எட்டப்பட்டாலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. ஆகவே, இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள சீனாவிலும், ரஷ்யாவிலுமே பெரிதும் தங்கியிருப்பதைக் காணலாம்.

செப்படம்பரில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 18 வது கூட்டத்தொடரிற்கு முன்பாக சீனா, ரஷ்யாவுடன் இறுக்கமான பொருளாதார உடன்பாடுகளை ஏற்படுத்த சிங்களம் முயற்சி செய்யும். தமிழர் தாயகத்தின் கடல் பரப்பும், நிலப்பரப்புமே பேரம்பேசும் பொருளாக மாறப்போகிறது.

நன்றி: ஈழமுரசு (28.06.2011)

Geen opmerkingen:

Een reactie posten