தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 juli 2011

இலங்கையின் கொலைக்களம் காணொளி குறித்து விசாரித்தபோது கண்கலங்கிய சந்திரிகா

[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 01:32.27 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணரின் நினைவுப் பேருரையில் சொற்பொழிவாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிக்கட்டத்தின் போது  கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றினார்.
இனங்களுக்கிடைலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிப் பகுதியில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அதாவது இந்தக் காணொளியை பிரித்தானிய தொலைக்காட்சியொன்றில் பார்வையிட்ட 28 வயதான தனது மகன் தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக விம்மியழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கண் கலங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். மேலும் தனது பிள்ளைகள் பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் நலன் குறித்து சிந்திப்பது தொடர்பில் தான் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்நிகழ்வில் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,
2004 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தை கலைக்க நேர்ந்தமையையிட்டு நான் கவலையடைந்தேன். எனது கட்சியினன் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு செய்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமத்துவம் அவசியம்
நாடு ஒன்றில் அனைவரும் சம பங்காளிகளாகவும் அரசியல் உரிமைகள் சமமாக பகிரப்படுவதாகவும் அனைத்து பிரஜைகளும் சமூகங்களும் உணரும் நிலைமை ஏற்பட்டால் அந்த நாட்டில் அரசியல் ஸ்திரம் பொருளாதார சுபீட்சம் காணப்படும். பன்முகத்தன்மையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதை தலைவர்களும் பிரஜைகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமையை வழங்கவும் கௌரவம் மனித உரிமை என்பவற்றை மதிக்கவும் வேண்டும். யுத்தங்களின் வெற்றியானது சமாதானத்தை வெல்லக் கூடியதாக இருந்திருக்காது. அரசியல், பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் சகலருக்கும் சமத்துவமான நிலைமை காணப்படவேண்டும்.
நீதி கிடைக்காது என உணர்ந்தனர்
அன்று தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமை மற்றும் மொழி விவகாரம் என்பன அதிகாரப்பகிர்வு கோரிக்கையை நோக்கி சென்றன.
அவையே இறுதியில் தனிநாட்டு கோரிக்கைக்கு சென்றன. 1958, 1977, 1978, 1980, 1980 போன்ற காலப்பகுதியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உடல் ரீதியான தாக்குதல்கள், யாழ். நூலக எரிப்பு சம்பவம் என்பன பெரும்பான்மை சிங்கள மக்களிடம் தமக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை சிறுபான்மை மக்களிடம் ஏற்படுத்தியது. பெரும்பான்மை மக்களிடம் தமக்கு நீதி கிடைக்காது என சிறுபான்மை மக்கள் உணர்ந்தனர்.
இந்நிலையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அனைத்து அரசாங்கங்களும் தோல்வி கண்டமையினால் ஐந்து ஆயுத குழுக்களின் தோற்றம் இடம்பெற்றது. புலிகளின் தலைமையில் அவை தனிநாட்டுக்காக போராடின. அத்துடன் சிங்கள மொழி மட்டும் அரச மொழி என்ற கொள்கையும் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம்.
இந்தியா உதாரணம்
1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புக்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த தவறியிருந்தன. அவர்களின் உரிமைகள், அரசியல் மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்த தவறின. இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரத்தின் பின்னர் அந்நாட்டில் நிரந்தர அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சமஷ்டி முறைமையினை கொண்டு வந்ததை நாம் நினைவுகூர வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அந்த நாடு சமஷ்டி முறைமையினை அரசியலமைப்பில் கொண்டுள்ளது.
முதற்தடவையாக நான் முன்வைத்தேன்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எனது அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புரிந்துணர்வுடன் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தது. யுத்தம் இருந்த நேரத்திலும் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டோம். உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. வீதிகள், பாலங்கள், தொடர்பாடல், மின்சாரம், பாடசாலைகள், பல்கலைக்கழகம், வைத்தியசாலைகள் போன்றவற்றை மேம்படுத்தின. யாழ். நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். எனினும் பொருளாதார அபிவிருத்தி மட்டும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விடாது என்பதை நாம் புரிந்து கொண்டோம்.
பல சவால்களுக்கு மத்தியில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையிலான அரசியல் அமைப்பை முன்வைத்தோம். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையினை நீக்குவதற்கான யோசனையையும் அதில் உள்ளடக்கினோம். இந்த அரசியல் அமைப்பு சரியானமுறையில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்குமென உறுதியாக நம்புகிறேன். அவ்வாறான நிலைமை வந்திருந்தால் சர்வதேச மறுப்புக்கள் மற்றும் இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தவிர்த்திருக்கலாம். எமது யோசனையை புலிகளும் நிராகரித்ததுடன் அப்போதைய பாராளுமன்ற எதிர்க்கட்சியும் நிராகரித்தது.
எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு இல்லை
அப்போதைய நிலைமை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐந்து தமிழ்க் கட்சிகள் என்னுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்த போதிலும் எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனது அரசாங்கம் அன்று முன்வைத்த அதிகாரப் பகிர்வு திட்டம் தொடர்பில் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோரும் புலம்பெயர் தமிழ் மக்களும் திருப்தியடைந்திருப்பார்கள்.
நாங்கள் கொண்டு வந்த புதிய அரசியலமைப்பு திட்டத்தை அமுல்படுத்த நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று அப்போது எனக்கு கூறப்பட்டது. இது அதிகார வர்க்கமாக இருக்கும் என்பதால் அதை நான் செய்யவில்லை. காரணம் நான் ஜனநாயகத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவர். ஆனால் இன்றைய நிலைமையில் நிர்வாகம் அதிகாரவர்க்கத்தை நோக்கி நகர்வதும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமையையும் பலப்படுத்தாமை ஆச்சரியம் அளிக்கிறது.
அபிவிருத்தி மட்டும் போதாது அரசியல் அதிகாரப் பகிர்வு அவசியம்
யுத்தம் முடிவு பெற்றுள்ளது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் புலிகளில் இருந்தும் வேறுபட்டவர்கள் என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும். தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இலங்கையில் ஏனைய பிரஜைகளுடன் சமமாக வாழ விரும்புகின்றனர்.
சுதந்திரத்தின் பின்னர் அனைத்து மக்களினதும் சமவுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது கூட சிலர் அரசியல் இணக்கப்பாடு அவசியமில்லையென்றும் அபிவிருத்தியே போதுமென்றும் கருதுவதாக தெரிகிறது. ஆனால் வீதிகள், பாடசாலைகள் வைத்தியசாலைகளை அமைப்பதோ மின்சாரம், குடிநீரை பெற்றுக் கொடுப்பதோ மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதுமானதல்ல. வடக்குக்கும் கிழக்குக்கும் ஏன் மாகாண சபை முறைமையை கொண்டு செல்ல முடியாது.
சமஷ்டியே தீர்வு
மேலும் சிறுபான்மை மக்களுடன் அவர்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தி நாம் இணக்கப்பாடுகளுக்கு வர வேண்டும். இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமையே தீர்வாகும் என்பதில் நான் அர்ப்பணிப்புடன் இருந்தேன். இதனால் எனது காலத்தில் மக்களை தெளிவுபடுத்தும் திட்டங்களை முன்னெடுத்தோம். 1994 ஆம் ஆண்டு 23 வீதமான மக்களே பேச்சுவார்த்தையில் பிரச்சினையை தீர்க்க இணக்கம் தெரிவித்ததாக அப்போதைய கணிப்பீடுகள் கூறின. ஆனால் 2 வருடங்கள் நாம் மேற்கொண்ட கருத்தரங்குகள், செயலமர்வுகள் தெளிவுபடுத்தல் காரணமாக 23 வீதமாக காணப்பட்ட பேச்சுவார்த்தை விரும்பிகளின் சதவீதம் 68 வீதமாக உயர்வடைந்தது.
சமாதானத்தை வெற்றிகொள்ளவில்லை
யுத்தத்தை வெற்றி கொண்டிருந்தாலும் சமாதான போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றிபெறவில்லை. சமாதானத்தை வெற்றிகொள்ள அபிவிருத்தியுடன் அதிகாரப் பகிர்வு திட்டத்துக்கு அரசாங்கம் செல்ல வேண்டும். இதுவே அரசாங்கத்தையும் நாட்டையும் பலப்படுத்துவதுடன் நிரந்தர சமாதானத்தையும் உருவாக்கும் இதுவே பல்லின கலாசார கட்டமைப்பை கொண்ட எமது நாட்டுக்கு சிறந்ததாக அமையும்.
2003 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திடம் இருந்து நான் மூன்று அமைச்சுக்களை  பொறுப்பேற்க வேண்டியேற்பட்டது. காரணம் அப்போது காணப்பட்ட நிலைமையாகும். ஆலயங்கள் தாக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை காணப்பட்டது. இவ்வாறு பல்வேறு காரணங்களினால் நான் மூன்று அமைச்சுக்களை எடுத்தேன்.
கவலையடைந்தேன்
எனினும் 2004 ஆம் ஆண்டு அப்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனது கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே நான் பாராளுமன்றத்தை கலைத்தேன். இது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணிலுக்கும் நான் கூறினேன். அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் விடயம் தொடர்பில் நான் கவலையடைந்தேன்.
ரணிலிடம் மன்றாடினேன்
மேலும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பது தொடர்பில் பல முயற்சிகளை நான் எடுத்திருந்தேன். 10 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் அழைப்பு விடுத்து வந்தேன். எங்களுடன் இணைந்து செயற்பட்டு இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு நான் கேட்டுவந்தேன்.
இந்த விடயத்தில் நான் ரணிலிடம் பிச்சை கேட்பது போல் இருந்தேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த பிரச்சினைக்கான தீர்வை கொண் டு வர உதவுமாறு நான் கேட்டேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. நான் முடியுமானவரை முயற்சி செய்தேன். தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையையும் முன்வைத்தேன். ஆனால் ஆதரவு கிடைக்கவில்லை. என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten