தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 juli 2011

அமெரிக்கத் தரப்பின் இந்தியப் பயணம்! உள்ளூராட்சி சபைத் தேர்தல்!- இவ்வாரம் நடந்தேறியுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகள் - இதயச்சந்திரன்

[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 04:49.52 PM GMT ]
அமெரிக்க இராஜாங்க திணைக்களச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் இந்திய விஜயமும், வடக்கு கிழக்கில் நடை பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலும், ஊடகங்களை நிரப்பிய செய்திகளாக அமைந்துள்ளன.
தெற்காசிய நாடுகளில் நடைபெறும் தேர்தல் குளறுபடிகளுக்குக் குறைவில்லாமல், இலங்கையிலும் அத்தகைய அதிகார வன்முறை கலந்த ஜனநாயகத் தேர்தல் நடைபெறுவதை மறுக்க முடியாது.
சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றாவிட்டால், தேர்தலை நிறுத்தப் போவதாகவும் எச்சரிக்கைகள் வெளிவந்தன.
ஈழப் போரில், லெபனான் தேசம் போலான சாவகச்சேரியில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, உயர்பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக அகற்றப்படுமென உறுதியளித்திருந்தார்.
மக்களை சொந்த இடங்களில் அமர வைத்து, அவர்களின் இயல்பு வாழ்வினை உறுதிப்படுத்தாமல், தேர்தல் எதற்கெனக் கேள்வி எழுப்புவதற்கு, இந்த சர்வதேச ஜனநாயக காவலர்களுக்கு தெம்பு இல்லை.
அதேவேளை வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, அரசிற்கு பரிந்துரை செய்கிறது, சர்வதேச நெருக்கடிக்குழு (ICG) என்கிற மேற்குலகின் சிந்தனைக் கோபுரம்.
தமிழர்கள் சிறுபான்மையினர் என்று கூறுவதன் ஊடாக, சிங்கள தேசத்தின் இறைமையை ஏற்று, அவர்கள் தரும் அதிகாரப் பகிர்வினை ஏற்பதுதான் ஒரே வழியென அக்குழுவானது, அறிவுரையும் வழங்குகின்றது.
இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவது கடினமான காரியமென தலைப்பிட்டு, ஆசிய அறிக்கை ஒன்றினை வெளியிட்ட இக் குழு, இணக்கப்பாட்டு அரசியலிற்கான முன்மொழிவுகளையே அதிகம் முன்வைப்பதைக் காணலாம்.
இதேவேளை, மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு, கடந்த திங்களன்று இந்தியா வருகை தந்த ஹிலாரி கிளிண்டன் அம்மையார், சென்னைக்கு விஜயம் செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த விவகாரமே, இலங்கை அரசிற்கு பல அதிர்ச்சியினை உருவாக்கி இருக்கிறது.
ஹிலாரி ஜெயலலிதா அம்மையார்களின் சந்திப்பை அடுத்து, இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசமும், சென்னைக்கான தூதரக அதிகாரி வடிவேலுவும், தமிழக முதல்வரைச் சந்தித்துள்ளார்கள்.
இலங்கையில் தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதைவிட, இந்திய ஆட்சியாளர்களுடன் சுமுகமான உறவினை ஏற்படுத்த இலங்கை ஆட்சியாளர்கள் அதீத கரிசனை கொள்வதில், சர்வதேச அழுத்தம் பாரிய பங்கினை வகிப்பதை இச்சந்திப்புக்கள் புலப்படுத்துகின்றன.
அதேவேளை, கிளிண்டனின் விஜயம், இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து பார்க்க வேண்டும்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவும், ஹிலாரி கிளிண்டனும் இணைந்து, ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பில், அணுசக்தி உடன்பாடு குறித்த விவகாரமே முதன்மைப்படுத்தப்பட்டது.
அதாவது அணுசக்தித் தொழில்நுட்பங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப் பின்னடிக்கும், அமெரிக்காவின் தயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து கொள்ள ஊடகவியலாளர்கள் முயன்றார்கள்.
2008 ல் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையானது, அணு ஆயுத உற்பத்திக்கானதல்ல என்கிற எச்சரிக்கையோடு மேற்கொள்ளப்பட்டதாக, கிளிண்டனின் உரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியது.
இந்த ஒப்பந்தம் ஊடாக, அணுசக்தியை உருவாக்கும் உலைகளை, அமெரிக்க நிறுவனங்களே வழங்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு அமெரிக்க அரசிடம் இருந்தது.
ஆயினும் இவ்வுலைகளினால் வரும் பெரும் பாதிப்பினை, அவற்றினை வழங்கும் நிறுவனங்களே பெரியளவில் பொறுப்பேற்க வேண்டுமென்கிற இந்தியாவின் புதிய சட்டம் (NUCLEAR LIABILITY LAW), அமெரிக்காவை மட்டுமல்ல, அரசால் நிர்வகிக்கப்படும் அணு உலைகளைத் தயாரிக்கும் ரஷ்ய, பிரெஞ்சு (AREVA) போன்ற கம்பனிகளுக்கும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
அதாவது இச்சட்ட மசோதாவின் 17 வது சரத்தானது, அணு உலைகளில் கசிவு அல்லது வெடிப்பு ஏற்படுமாயின், அதன் உற்பத்திப் பொருட்களை அல்லது உற்பத்தி சாதனங்களை வழங்கிய நிறுவனங்களே, அப் பாதிப்பிற்கான பொறுப்பினை ஏற்க வேண்டுமெனக் கூறுகின்றது.
இதற்கான நஷ்டஈடு, பாரியளவில் இருக்கு மென்பதுதான் அமெரிக்காவின் அச்சம்.
இந்த வருடம் ஜப்பானின், புகுஷிமாவில் (FUKUSHIMA) நிகழ்ந்த அணு உலைப் பேரனர்த்தம், அதை நிர்வகித்த நிறுவனம் செலுத்திய நஷ்டஈடு போன்றவை, இத்தகைய அணு உலை வர்த்தகத்தில் பலத்த எச்சரிக்கையை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வழங்குகிறது.
இங்கு இன்னுமொரு சிக்கலும் அமெரிக்கா இந்திய தரப்பினரிடையே உருவாகுவதைக் காணலாம்.
1970 ம் ஆண்டு மார்ச் 5 ம் திகதி நடைமுறைக்கு வந்த அணு ஆயுத பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் (NON-PROLIFERATION TREATY) இந்தியா இன்னமும் கைச்சாத்திடாததால், யுரேனியம் மற்றும் புளுடோனிய செறிவாக்க தொழில்நுட்பத்தை [ENR - Enrichment & Reprocessing] பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
2004 ல், அமெரிக்க கொள்கையில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட மாற்றமும், அதன் பிரகடனமும், இத்தகைய தொழில்நுட்ப பரிமாற்றத்தினைத் தடுத்துவிட்டதெனலாம்.
கடந்த மாதம், அணு மூலப் பொருள் வழங்குனர் குழு (NUCLEAR SUPPLIERS GROUP) கூட்டத்தில், இத் தொழில் நுட்பம் இந்தியாவிற்கு கிடைக்காமல் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆகவே அணுசக்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா, இதனை வழங்க முன்வருமாவென்கிற எதிர்ப்பார்ப்பு, இந்திய மட்டத்தில் அதிகமிருப்பதையே நிருபர்களின் கேள்வி சுட்டிக்காட்டுகின்றது.
தோரியத்தை அதிகளவு கொண்ட இந்தியாவிற்கு, இத் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக கருத இடமுண்டு.
இப்பரவலாக்கத் தடைச்சட்டம் (NPT) குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது, நேட்டோ நட்பு நாடுகளுடன், அணு ஆயுத பரிமாற்றம் தொடர்பான இரகசிய உடன்பாடு ஒன்றினை அமெரிக்கா ஏற்படுத்தி இருந்தது.
அத்தோடு, நேட்டோ நாடுகளில் இருக்கும் இவ்வாயுதங்கள், தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக, புதிய நியாயங்களை முன்வைத்தது அமெரிக்கா.
இது குறித்த எதிர்ப்புணர்வுகள், அணி சேரா நாடுகள் உட்பட, பல நாடுகளிடையே இன்றும் காணப்படுகிறது.
உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா முன்வைக்கும் இத்தகைய வியாக்கியானங்களை ஏற்றுக் கொள்ளாத இந்தியா, அணு ஆயுத பரவலாக்கத் தடைச் சட்டத்தில் தான் கைச்சாத்திடாத நியாயப்பாட்டிற்கு இதனையும் ஒரு காரணியாக முன்வைக்கிறது.
இவை தவிர, கிளிண்டனின் விஜயத்தின் போது, அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறுவதை இந்தியா சாதகமாகப் பார்க்கவில்லை என்கிற செய்தியையும் வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா தெரிவித்தார்.
பாகிஸ்தான் இராணுவத்திற்கான வருடாந்த நிதியுதவி 800 மில்லியன் டொலர்கள், அமெரிக்காவால் நிறுத்தப்பட்டிருப்பதை வரவேற்கும் இந்தியா, பயங்கரவாதத்திற்கெதிரான போரில் அந்நாட்டோடு உறவு கொண்டிருப்பதை சந்தேகத்துடனே பார்க்கிறது.
கிளிண்டனின் உரைகள் எதுவுமே, பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை என்ற ஆதங்கமும், இந்திய உயர்மட்டத்தினரிடையே மேலோங்கி இருந்ததையும் உணரக் கூடியதாகவிருக்கிறது.
இதேவேளை அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளின் பட்டியலில், 12 வது இட த்தைப் பிடித்திருக்கும் இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தகம், 50 பில்லியன் டொலர்களை தற்போது எட்டியிருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
சென்னைக்கு முதல் தடவையாக விஜயம் செய்த ஹிலாரி கிளிண்டன் அம்மையார், வர்த்தக உறவினை மேம்படுத்துவது குறித்தே அதிகம் பேசியதாக செய்திகள் கூறுகின்றன.
இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களின், அம்பாந்தோட்டை என்கிற எதிர்கால கனவுத் தொழிற்சாலைக்கு மாற்றீடாக, சென்னையை மையப்படுத்திய தென்னிந்தியாவை, பெரும் வணிக மையமாக (INDUSTRIAL HUB) உருவாக்கும் திட்டமொன்று இந்தியாவிற்கு இருப்பது போல் தெரிகிறது.
இந்தியாவின், இத்தகைய நீண்டகால மூலோபாயத் திட்டத்தை, அமெரிக்கா புரிந்து கொள்வதை, கிளிண்டனின் விஜயம் உணர்த்துகிறது என்று கணிப்பிடலாம்.
ஆயினும் இரு தரப்பின் சந்தைகளையும், கட்டுப்பாடற்றவகையில் திறந்துவிடுவதன் ஊடாக, வர்த்தகப் பங்காளியாக, பத்தாவது நிலைக்கு இந்தியாவைக் கொண்டு வரலாமென அமெரிக்கா விரும்புகின்றது.
2010 நவம்பரில், பராக் ஒபாமா, இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, 10 பில்லியன் டொலர் பெறுமதியான புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
முப்பது போயிங் 737 விமானங்கள், பத்து C-17 போயிங் ரக இராணுவ போக்குவரத்து விமானங்கள், 107 F414 ரக போர் விமான இயந்திரங்கள், 500 மில்லியன் டொலர் பெறுமதியான 6 கனரக வாயு டேர்பைன்கள் (TURBINES), 3 நீராவி டேர்பைன்கள் போன்றவற்றை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பயணமானது, ஒரு இலட்சம் அமெரிக்கர்களின் தொழில் வாய்ப்பினை உறுதிப்படுத்தும் அல்லது தக்க வைக்கும் என்கிற செய்தி ஒபாமாவினால் வெளியிடப்பட்டது.
ஆகவே பாரிய பொருளாதார சீரழிவினை எதிர்கொள்ளும் அமெரிக்கா, வளர்ச்சியுறும் ஆசிய நாடுகளில் தமது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையைத் தேடுகிறது என்பதனையே கிளிண்டன் அம்மையாரின் பயணம் எடுத்துரைக்கிறதெனலாம்.
ஜனநாயக மயப்படுத்தல், திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை, அமெரிக்காவின் இராணுவ மேலாண்மையை ஏற்றுக் கொள்ளல் என்பதன் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் தாராளவாத சர்வதேச கருத்துருவத்தினை (LIBERAL INTERNATIONALIST IDEAS), மேற்குலகம் சாராது பொருண்மிய வளர்ச்சியில் உச்சம் பெறும் சீனா, இந்தியா என்பன, உள்வாங்குமா என்ற சந்தேகம் ஸ்டீபக் ஹாப்பர் போன்ற அறிவியலாளர் மத்தியில் எழுகிறது.
அதாவது ஏதேச்சாதிகார முதலாளித்துவ முறைமையிலான, மேற்குலகின் நவதாராண்மைவாத சிந்தனைக் கருத்துருவத்திற்கு மாற்றீடாக முன்வைத்து விடுமோ, இந்த நாடுகள் என்பதே இவர்களின் ஆதங்கம்.
ஆனாலும் சீனா போன்ற மேலெழுந்து வரும் பாரிய சக்தி மையங்கள், தற்போது நிலவும் உலகளாவிய தாராளவாத சர்வதேச ஒழுங்கினை முழுமையாக நிராகரித்து விடுமென எதிர்ப்பார்க்க முடியாது.
 இதயச்சந்திரன்
ithayachandran@hotmail.co.uk

Geen opmerkingen:

Een reactie posten