தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 juli 2011

புத்தனின் பேரால்.. காந்தியின் பேரால்... கன்னடர்கள் ஒலித்த ஈழக் குரல்!

[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூலை 2011, 06:57.04 AM GMT ]
'ஈழத்தை இழவுக் காடாக்கிய ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்!’ என்று உலகம் எங்கும் உள்ள தமிழர்​களின் குரல், ஓங்கி ஒலிக்கும் நிலையில், 'ஈழ விவகாரம், தமிழர் பிரச்னை’ ஆகியவற்றில் இதுவரை மௌனமாக இருந்த கன்னடர்களும்கூட வெகுண்டு எழுந்து​விட்டார்கள்.
பெங்களூருவில் கடந்த ஜூலை 2-ம் தேதி 'சேவ் தமிழ்ஸ்’ மற்றும் 'போர்க் குற்றங்களுக்கும் இனப் படுகொலைக்கும் எதிரான அமைப்பு’ இணைந்து ஒரு கண்டனக் கூட்டத்தைக் கூட்டியது. அதில், 12 கன்னட அமைப்புகள் பங்கேற்று, ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி குரல் கொடுத்தன.
அயர்லாந்தில் அமைக்கப்பட்ட டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பு ஆயத்தில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் பால் நியூமன், இந்தக் கூட்டத்தில் முதலில் பேசினார். ''2008 அக்டோபர் மாதம் அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின்படி, கிளிநொச்சி, வன்னி பகுதியில் வாழ்ந்தவர்கள் 4,29,059 பேர். 2009 ஜூலையில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,82,380 பேர். இந்த இரண்டு கணக்குகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 1,46,679 பேர் போரில் கொல்லப்பட்டு உள்ளனர். இது மாபெரும் இனப் படுகொலை. இதை நிகழ்த்திய ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றம் தண்டித்தே தீரவேண்டும்!'' என்று கனல் தெறிக்கப் பேசினார்.
அடுத்துப் பேசிய பேராசிரியர் ஹரகோபால், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு  மாவட்ட ஆட்சியரை மாவோ​யிஸ்ட்கள் கடத்தியபோது, சமரசம் பேசி விடுவித்​தவர்.
''இந்தியாவுக்கு 16 மைல்களுக்கு அப்பால் இருக்கும் இலங்கையில் ஒரு இனத்தையே கெமிக்கல் குண்டுகளைப் போட்டுக் கொன்று அழித்த பேரினவாதத்தைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டோம். இங்கிலாந்தை உலுக்கிய சேனல் 4-ல் கொலைக் காட்சிகளைப் பார்த்தபோது, நாம் எல்லாம் மனிதர்களாக வாழ்வதற்கே வெட்கப்பட வேண்டும். இத்தனைக் கொடூரமாக நடந்துகொண்ட ராஜபக்ஷேவிடம் நட்பு பாராட்டும் இந்தியாவின் சட்டையைப் பிடித்து நீதி கேட்க வேண்டும். போரை நடத்தியதே இந்தியாதான். இதற்கெல்லாம் மக்கள் சரியான படம் கற்பிப்பார்கள் என்பதற்கு சரியான உதாரணம், கருணாநிதி. இலங்கைத் தமிழினத்துக்கு அவர் மாபெரும் துரோகம் இழைத்ததால்தான் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக்கூட தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு வழங்கவில்லை!'' என்றார்.
அடுத்துப் பேசிய இளைஞர் காலித் வாசிம், காஷ்மீர்காரர். அந்த மாநிலப் பிரச்னையைத் தொடர்ந்து பேசி வருகிறவர். அதனால் பல முறை தாக்குதலுக்கும் ஆளானவர். ''இலங்கை இனப் படுகொலை, கற்பழிப்புக் காட்சிகளைப் பார்க்கும்போது, காஷ்மீரில் நமது ராணுவம் நிகழ்த்தி வரும் கொடுமைகள்தான் நினைவுக்கு வருகின்றன. இலங்கையில் புத்தனின் பேரிலும், இந்தியாவில் காந்தியின் பேரிலும், வன்முறை நடக்கிறது!'' என்று பேசினார்.
இறுதியாக இந்த நிகழ்ச்சியை ஒருக்கிணைத்த 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் வெங்கடேசன், ''இது வரை தமிழர்களின் பிரச்னைகள், இந்தியாவின் பிற பகுதிகளில் பேசப்படவில்லை. இப்போது பேசத் தொடங்கிவிட்டோம். உலகம் முழுதும் உள்ள மனிதநேயப் போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்துதான், இலங்கைத் தமிழினத்தின் விடிவுக்கு உதவ முடியும்!'' என உருக்கமாக முடித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten