தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 juli 2011

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் இழைத்தாரா நடேசன்?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அந்த இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த பா. நடேசன் துரோகம் இழைத்து விட்டார் என்று பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து உள்ளார் அதே இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன்.

குமரன் பத்மநாதன் ஏசியன் த்ரிபியூன் பத்திரிகைக்கு வழங்கி இருந்த பேட்டி ஒன்று நேற்று பிரசுரம் ஆனது. இப்பேட்டியிலேயே குமரன் பத்மநாதன் மேற்கண்டவாறு கூறி உள்ளார். இவர் இது தொடர்பாக தெரிவித்து இருப்பவை வருமாறு:- - யுத்தத்தின் இறுதி நாட்களின்போது வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நேரடியாக தொலைபேசித் தொடர்பு வைத்திருக்கின்றமையில் சிரமங்கள் காணப்பட்டன. எனவே புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசனுடன் தொடர்பைப் பேணி வந்தேன்.

எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்புப் பாலமாக நடேசன் செயல்பட்டார். அந்நாட்களில் பிரபாகரனின் தொலைபேசியை நடேசன்தான் வைத்து இருந்தார். எனவே நான் நடேசனுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்கின்றமையும் நான் சொல்கின்ற தகவல்களை தலைவருக்கு நடேசன் தெரியப்படுத்துகின்றமையும் வழமையாக இருந்து வந்தது. இறுதி யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதிக்கு பின்னர் புலிகள் தோல்வி கண்டனர்.

புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற மோதலில் தீவிர புலிகள் காயப்பட்டு இறந்தனர். நான் யுத்த நிலைமையை ஓரளவு மதிப்பீடு செய்தேன். நடேசனை உடனடியாக தொடர்பு கொண்டு தலைவருக்கு சொல்லச் சொல்லி அவசர செய்தி ஒன்றை வழங்கினேன்.

யுத்தத்தை கை விட்டு விட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் உடன்பாடு ஒன்றுக்கு வாருங்கள் என்கிற செய்தியையே நடேசன் ஊடாக பிரபாகரனுக்கு வழங்கி இருந்தேன். பதிலுக்காக காத்திருப்பேன் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் நடேசனிடம் இருந்து எந்தவொரு பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை.

நான் வழங்கி இருந்த செய்தியை பிரபாகரனுக்கு நடேசன் வழங்கி இருக்கவில்லை என்கிற முடிவுக்கு வந்தேன். எனது அச்செய்தியை பிரபாகரனுக்கு தெரியப்படுத்தத் தவறியமை மூலம் பிரபாகரனுக்கு நடேசன் துரோகம் இழைத்து விட்டார்.

அச்செய்தியை பிரபாகரனுக்கு நடேசன் தெரியப்படுத்தி இருப்பாரானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பிரபாகரன் யுத்த நிறுத்தம் செய்து இருக்கக் கூடிய சாத்தியம் தோன்றி இருக்கும். இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்.
15 Jul 2011

Geen opmerkingen:

Een reactie posten