தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 januari 2012

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கலவரம்! காயமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு! 2பேரின் நிலை கவலைக்கிடம்! (படங்கள் இணைப்பு)


[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:04.12 AM GMT ]
தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கலவரத்தையடுத்து, அதிகாரிகள், சிறைக் கைதிகள் உட்பட 28 போ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 2பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மகசின் சிறையில் பதட்டம்!19 பேர் வைத்தியசாலையில் அனுமதி
சிறைச்சாலையினுள் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்தே இந்த பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சிறையினுள் தாக்கல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதனை தொடர்ந்தே இந்த பதட்ட நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தகவலை உறுதி செய்யமுடியவில்லை
இரண்டாம் இணைப்பு:
மெகசின் கைதிகள் 19 பேர் தேசிய வைத்திய சாலையில் அனுமதி
தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையில், சிறைச்சாலையில் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினர் சிறைச்சாலைக்கு விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், கைதிகள் கற்களை கொண்டு தாக்குதல் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதனிடையே கைதிகள் 19 பேர் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை நியுமகசீன் சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கு எதிராக சிங்கள கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தமிழ் கைதிகளிடையே பதட்டம் நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை முதல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி எம்.எல். ரஞ்சன என்பவரை இடமாற்றக்கோரி சிங்கள சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களை களைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் முற்பட்டபோது கலவரம் ஏற்பட்டதாகவும் கலவரத்தின் போது சிறைச்சாலை காரியாலயங்களுக்கும் களஞ்சியசாலைகளுக்கும் சிங்கள கைதிகள் தீ வைத்துள்ளதாகவும். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்ததார்.
இதனிடையே மேற்படி சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் குறித்து சம்பந்தன் ஐயாவுடாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் தமிழ் கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் ஒரு வாரத்திற்கு முன் இந்த சிறைச்சாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன கைதிகளுடன் கடுமையாக நடந்து கொள்வதற்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று காலை சிறைச்சாலை அமைச்சின் செயலாளர் இந்தச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தபோது குறித்த சிறைச்சாலை அத்தியட்சகரை இடமாற்றம் செய்யுமாறு அங்குள்ள 1800 கைதிகளும் சிறைச்சாலைக்குள் ஆர்ப்பாட்டம் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையே தற்போது கலவரமாக மாறியுள்ளதுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 200 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் எதிராக இந்தக் கலவரத்தை திசைதிருப்பி விடப்பட்டதுடன் தமிழ் அரசியல் கைதிகளை சுற்றி வளைத்து தாக்குவதற்கு தயாராக அதிகாரிகளும் எனைய குண்டர்களும் நிற்பதாகவும் தங்களுக்கு மரண பயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாம் இணைப்பு:
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் சிங்கள கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக சிறையினுள் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் லங்காசிறி எப்.எம் சார்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது,
உள்ள சிங்கள கைதிகள் போதைப் பொருள் (குடு)  பாவனையில் ஈடுபட்டு வருவதனைத் தடுப்பதற்காக, மகசின் சிறைச்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகசின் சிறையிலுள்ள சிங்களக் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரியின் அலுவலகத்திலுள்ள பொருட்கள் உட்பட அனைத்தையும் சேதமாக்கியுள்ளனர்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளையும் அதிகாரிக்கெதிராக கலவரத்தில் ஈடுபட அழைத்ததாகவும், அதற்கு தமிழ் கைதிகள் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, சிறையிலுள்ள தமிழ் கைதிகளைத் தாக்குவதற்கு சிங்களக் கைதிகள் ஆயத்தமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் கொடிப்பிலியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
4ம் இணைப்பு
மோதலில் காயமடைந்தோர் எண்ணிக்கை 28ஆக அதிகரிப்பு
புதிய மகசின் சிறைச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 4பேர் உட்பட 28பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலையிலுள்ள பதிவேடுகள் அறைஇ சிறைக்கைதிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் விசேட பொலிஸார்இ இராணுவத்தினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,
புதிய மகசின் சிறைச்சாலைக்குள் சுமார் 1800 சிறைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், போதைப்பொருள் விவகாரங்களால் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களாவர்.
இவர்கள் மத்தியில் இப்பொழுதும் போதைப் பொருள் பாவனை இருந்து வருகிறது. கைதிகள் மத்தியில் போதைப் பொருட் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் முகமாக புதிய ஒழுங்குவிதிகளை சிறைச்சாலை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஒழுங்கு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11.10 மணியளவில் சிறைக்கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களைக் கட்டுப்படுத்த முயற்சித்த அதிகாரிகள் மீது மேற்படி கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், மற்றும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அதிகாரிகள் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் காணப்பட்ட பழமைவாய்ந்த கட்டிடமொன்று தற்போது உடைக்கப்பட்டு வருகின்றது. அக்கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்ட செங்கற்களால் மேற்படி சிறைக்கைதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். (அவ்வாறு அவர்கள் தாக்கிய செங்கற்களின் சிதைவுகள் சிறைச்சாலைக்கு வெளியே பிரதான வீதியிலும் சிதறிக்கிடப்பதைக் காணக்கூடியதாக இருந்தது)
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக விசேட பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் என சிறைச்சாலை வளாகத்துக்குள் குவிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் மீது சிறைக்கைதிகள் தாக்குதல்களை நடத்தினர்.
இந்நிலையில், சிறைக்கைதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பாதுகாப்பு தரப்பினரால் கண்ணீர்ப் புகைக்குண்டு பிரயோகமும் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
கண்ணீர்ப் புகைக்குண்டு பிரயோகத்தினால் சிறைக்கைதிகள் மாத்திரமன்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த மோதல் சம்பவத்தினால் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் உட்பட 28பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவத்தின் போது மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 180 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மோதலின் போது அவர்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்திலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், பாதுகாப்பு தரப்பினரால் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten