துரியோதனனிடம் தூது சென்ற கிருஸ்ணாவும்! இலங்கைக்கு வரும் எஸ்.எம்.கிருஸ்ணாவும்!
[ புதன்கிழமை, 04 சனவரி 2012, 07:57.24 AM GMT ]
குருஷேத்திரப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கிருஸ்ண பரமாத்மா துரியோதனனிடம் தூது செல்கிறார். துரியோதனனிடம் தூது சென்ற அந்த கிருஸ்ணனின் நோக்கம் போரை நிறுத்துவதல்ல. மாறாக போரை நடத்தி பாண்டவருக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதே அவரின் இலக்காக இருந்தது.
அதற்காக கிருஸ்ணன் செய்த இராஜதந்திரங்கள் ஏராளம். போரைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாண்டவர் சபை ஆராய்கிறது. எங்கள் தமிழ் அரசியல் தரப்புகள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து - அறிக்கை.
சகாதேவன் மட்டும் போரை நிறுத்துவதற்கான வழியைத் தெரிந்து கொள்கிறான். போரை நிறுத்துவதற்கான உபாயம் என்ன என்பதை போரின் சூத்திரதாரியான கிருஸ்ணனிடமே கூறிவிடுகின்றான்.
போரை நடத்துவதை உள்நோக்கமாகக் கொண்ட கிருஸ்ணன் குருஷேத்திரத்தில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து பகவத் கீதையையும் தந்து, போரையும் நடத்தி முடித்தான்.
அந்த கிருஸ்ணா; உரிமை மறுக்கப்பட்ட பாண்டவர்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார்.
ஆனால் இங்கோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இலங்கைக்கு வருகிறார். அவரின் வருகை தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொடுப்பதற்காக அல்ல.
மாறாக வன்னி யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்து மீளக்குடியமரும் குடும்பங்களுக்கு இந்திய அரசினால் அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகளை கையளிப்பதற்காகவே இவர் வருவதாகக் கூறப்படுகின்றது.
ஓ! கிருஸ்ணா என்றாலே பிரச்சினை போல் தான் தெரிகிறது. போரை நடத்தி, கர்ணனை வீழ்த்தி அவன் உயிரை பறிப்பதற்காக அந்தணர் வேடம் தாங்கி கர்ணன் செய்த புண்ணியப் பேற்றை உதிரத்தின் வழி பெற்ற கிருஸ்ண நாமம் அங்கே.
இங்கோ, இலங்கை அரசு வன்னியில் போரை முன்னெடுப்பதற்கான அத்தனை உதவிகளையும் புரிந்து, போர்க்களத்தில் சிக்குண்ட தமிழ் மக்களை காப்பாற்றுவதைக் கூடத் தவிர்த்து மெளனம் காத்து நாடகம் நடித்த இந்திய அரசு இப்போது வீடு கட்டிக் கொடுக்கிறது. அந்த வீட்டைக் கையளிக்க எஸ்.எம்.கிருஸ்ணா இங்கே வருகிறார்.
வீட்டைக் கையளிக்க மட்டும்தான் வருகிறாரா? அல்லது இலங்கை அரசு சீனாவோடு சேர்ந்து இந்தியாவை ஆபத்துக்குள் வீழ்த்திவிடும் என்ற அச்சத்தில் வருகிறாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனால், இவ்விடத்தில் இந்திய தேசத்திடம் பெற வேண்டிய உதவிகளைப் பெற்று வன்னிப் போரில் வெற்றியும் பெற்று அதற்குப்பின் இந்தியாவை உதறித் தள்ளி சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்தி இந்தியாவை கெஞ்சவைக்கும் பெருமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உண்டு என்பதை மறுத்துவிட முடியாது.
எஸ்.எம்.கிருஸ்ணா அல்ல எவர் வந்தாலும் இலங்கை - சீன நட்புறவை தடுக்கவே முடியாது.
ஆக, ஈழத் தமிழருக்கு இந்தியா இழைத்தவற்றுக்கான தண்டனையை இலங்கை அரசிடம் இருந்தே இந்தியா அனுபவிக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது, ஹரே கிருஸ்ணா! ஹரே கிருஸ்ணா! எஸ்.எம். கிருஸ்ணா என்றுதான் பாடத் தோன்றுகிறது.
வலம்புரி நாளிதழ் ஆசிரியர் தலையங்கம்
Geen opmerkingen:
Een reactie posten