2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி திருகோணமலையில் வைத்து 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டது பலராலும் அறியப்பட்ட விடையம். இந்த 5 தமிழ் மாணவர்களும் தம்மை நோக்கி கைக்குண்டு ஒன்றை எறிய முற்பட்டதாகவும் தம்மை தாக்க முற்பட்டவேளை அவர்கள் வைத்திருந்த கைக்குண்டு வெடித்ததால் அவர்கள் இறந்ததாக விசேட அதிரடிப் பிரிவினர் தெரிவித்து வழக்கை முடித்தனர். ஆனால் மாணவர்களின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாக மாணவன் ஒருவரின் தந்தை அப்போது தெரிவித்தார். அவருக்கும் விசேட அதிரடிப்படையினர் அச்சுறுத்தல் விடுத்தனர் இதன் காரணமாக அவர் இலங்கையில் இருந்து வெளியேறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
ஆனால் இந்த 5 மாணவர்களையும் சுட்டது அதிரடிப்படையினர் தான் என்றும் அது தனக்குத் தெரியும் எனவும் மகிந்தரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கிடம் கூறியுள்ளார். இதனை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் அனுப்பிவைக்க அத்தகவல்களை விக்கி லீக்ஸ் இணையம் தற்போது வெளியிட்டுள்ளது. சுட்டது அதிரடிப்படையினர் என்றும் ஆனால் அவர்கள் இவ்வாறு கொலைசெய்யும்போது வேறு துப்பாக்கிகளைப் பாவிப்பது வழக்கம் எனவும் பசில் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைக்குண்டு வெடித்து மாணவர்கள் இறந்தார்கள் என்ற அதிரடிப்படையினரின் கூற்றுக்கும் பசில் தெரிவித்துள்ள கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இவர் தன் வாயாலேயே பரபரப்பான இவ்விடையத்தை ஒப்புக்கொண்டுள்ளார். விக்கி லீக்ஸ் தகவல்களை அதிர்வு இணையம் பெற்று மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது: குறியீட்டு இலக்கம்: 06COLOMBO1622
Geen opmerkingen:
Een reactie posten