[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 03:39.21 PM GMT ]
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சு வார்த்தையில் இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையில் காத்திரமான போக்கை கடைப்பிடிக்காத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பா.உ சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி, ஈபி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதென்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட கிளைகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவதென்றும் நேற்று வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய மகாநாடு நடத்தப்படும் என்றும் மகாநாடு நடத்தப்படும் இடம் பின்னர் தீர்மானிக்கப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய மகாநாடு கிளிநொச்சியில் நடைபெறும் என சில இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி தவறானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தாலும், இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இனப்பிரச்சினை தீர்க்கப்படாது உக்கிரம் அடைந்து வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற அக்கறை இன்றி இழுத்தடித்து, ஏமாற்றி வருகிறது.
இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து கடந்த பல தேர்தல்களில் வெற்றிபெற வைத்தார்கள்.
தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும், பலமான நிலையில் இருந்துதான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வழிகளைத் தேட வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட, பிராந்திய, கிராமிய கிளைகளை நிறுவும் வேலைகளை அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
இன்று ஜனநாயக ரீதியான அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தத் திட்டமும் இல்லாது, காலத்தைக் கடத்தும் இந்த அரசுக்கெதிராக எமது உரிமைகளைக் கோரி ஜனநாயக ரீதியிலான அகிம்சைப் போராட்டங்களை நாம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
நாங்கள் இன்று தனிநாட்டை கோரி நிற்கவில்லை. வடகிழக்கு மக்கள் தங்களை தாங்கள் நிர்வகிக்கக் கூடிய சமஷ்டி அதிகாரங்களை உடைய அலகு ஒன்றைத்தான் கோரி நிற்கிறோம். அதிகாரப் பரவலாக்கலைத் தான் கோரி நிற்கிறோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும்,கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படும் கட்சிகள் தங்களின் தனித்துவத்தை பேணும் அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பலமான சக்தியாக உருவாக்க வேண்டும் என்பதில் ஐந்து கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன என தெரிவித்தார்.
அமெரிக்க மற்றும் ஆபிரிக்க பயணம் பற்றிய பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு, பயணம் மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. முக்கியமாக 2012ஆம் ஆண்டு மாற்றங்களை கொண்டுவரக்கூடிய ஆண்டாக அமையும் என தாம் எதிர்பார்ப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten