ஆசிரியர் தலையங்கம் (30/01/2011) www.eelampress.com
மிக நெருக்கமாகப் படையினர் நிறுத்தப்பட்ட வன்னி மக்கள் வாழ்வு பதற்றம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். குறிப்பாக இளம் பெண்கள் எது நடக்குமோ எமது கதி என்னவாகுமோ என்ற பதற்றத்துடன் பொழுதைக் கழிக்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு வன்னியில் பிழைத்து விட்டது. படுகொலைகளும் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையும் மலிந்து விட்டன. சில பொலிஸ் நிலையங்கள் வன்னியில் திறக்கப்பட்டுள்ளன. முறைப்பாடு செய்யச் செல்வோரை அடித்துத் துன்புறுத்தி அனுப்பும் வேலையை மாத்திரம் பொலிஸ் அதிகாரிகள் செய்கிறார்கள்.
மிக அண்மையில் ஒரு கணவன் மனைவியை கொள்ளையர்கள் வெட்டிக் கொன்றுள்ளனர். அவர்களுடைய இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கு வெளியூரில் இருந்து வந்த பிள்ளைகளும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தாக்கியவர்கள் மோதிர விரலைத் துண்டித்துள்ளனர். மீள்குடியேற்றம் செய்யும் அரசு குடிபெயரச் செய்வதில் முனைப்புக் காட்டுகிறது.
அண்மையில் கடும் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்த போது வன்னி மக்கள் தங்கள் அவல நிலையை உணர்ந்தனர். தற்காலிக வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஒருவித நிவாராண உதவிகளும் வரவில்லை. சமூக வேலைக்குப் பொறுப்பான அரச தினைக்களங்கள் செயற்பட வில்லை. தொண்டு நிறுவனங்கள் வன்னிக்குள் நுளையப் படையினர் அனுமதிக்கவில்லை.
வேலை இல்லாத் திண்டாட்டம் வன்னியில் உச்சமடைந்துள்ளது. படையினர் அனுமதி கிடைக்காத படியால் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் உதவிகளையும் விவசாய ஆலோசனைகளையும் வழங்காமல் ஒதுங்கியுள்ளனர். பணத் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
வெளி மாவட்டங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்துவதற்கு படையினர் அனுமதி பெற வேண்டும் அனுமதி கிடைத்தாலும் குடும்பத்தினரைத் தனியே விட்டுச் செல்லக் குடும்பத் தலைவர்கள் அஞ்சுகின்றனர். இளம் பெண்கள் வாழ்வு மாத்திரமல்ல இளைஞர் வாழ்வும் நிம்மதி இழந்துள்ளது.
இளம் ஆண்களைப் படையினர் சந்தேகக் கண்ணுடன் நோக்குகின்றனர். ஒவ்வொரு தமிழ் இளைஞனும் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் படையினர் இளைஞர்களை நோக்குகின்றனர். வடக்கு கிழக்கில் அமைதி நிலவுவதாகச் சொல்லப் பட்டாலும் அது மயான அமைதியாக இடம்பெறுகிறது.
பரந்தன் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையை அகலமாக்கும் பணியைப் படையினர் தொடங்கியுள்ளனர். தெருவோர மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. தெரு விரிவாக்கத்திற்காக மக்கள் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.புதிய கிளைத் தெருக்கள் அமைக்கப்படுகின்றன. இவை மக்கள் நலனுக்கு என்று சொல்ல முடியாது. முழுக்க முழுக்கப் படையினர் நலனுக்காகச் செய்யப்படுகிறது.
இராணுவ வாகனங்கள் படுவேகமாகத் வன்னித் தெருக்களில் தொடரணியாகச் செல்கின்றன. அந்த நேரங்களில் பொது மக்கள் தெருக்களில் செல்ல அனமதிக்கப் படுவதி;ல்லை. வன்னியில் இயல்பு நிலை தோன்றவில்லை என்பதற்கு இது மாத்திரம் போதுமானது. பொது மக்களை அச்சுறுத்தும் வதந்திகளைப் படையினர் பரப்புகின்றனர்.
மீண்டும் போர் தொடங்கப் போவதாகவும் இந்த முறை பொது மக்களைத் தப்பிச் செல்ல விடமாட்டோம் என்றும் சொல்கின்றனர். என்ன ஆதாரத்தை வைத்து இப்படியான வதந்திகளைப் பரப்புகிறார்களோ தெரியவில்லை. ஆனால் படையினர் தாமாகவே தாக்குதல்களைத் தொடங்கி மக்கள் உயிருக்கு உலை வைக்கப் போகிறார்கள் என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது.
2009ம் ஆண்டு அனுபவங்களால் வேதனைப் பட்ட மக்கள் மீண்டும் அவலத்தை எதிர்கொள்ளத் தயாரில்லை என்பது தெளிவு. ஏதோ நடக்கப் போகிறது என்ற அச்சம் மக்கள் மனதில் குடிகொண்டுள்ளது. வருமுன் காப்பதே சிறந்த வழி என்று எண்ணும் வன்னி மக்கள் குடிபெயர்ந்து செட்டிக்குளம் முகாமிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக செட்டிக்குளத்தில் எஞ்சியிருக்கும் முகாம் மக்கள் மீள்குடியேற்றத்தை விரும்பாமல் முகாமில் வாழ விரும்புகின்றனர். சிங்கள அரசு தமிழர்களை அடிமைப்படுத்தியது மாத்திரமல்ல நிம்மதியாக வாழவும் விடாமல் நடவடிக்கை மேற்கொள்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten