தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 januari 2012

சேந்தாங்குளம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் கடற்படை அதிகாரி சண்டித்தனம்!


[ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 12:28.59 PM GMT ]
கீரிமலை, சேந்தாங்குளத்தில் நேற்று முன்தினம் கடற்படையினர் பொதுமக்களைக் கடுமையாகத் தாக்கிய சம்பவத்தை அடுத்து நேற்று இளவாலைப் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்த கடற்படை அதிகாரி ஒருவரை மற்றொரு கடற்படை அதிகாரி பலவந்தமாகக் கூட்டிச் சென்ற சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் திடீரென வந்திறங்கிய அந்த அதிகாரி பொலிஸ் நிலையத்துக்குள் அனுமதி ஏதும் பெறாமல் உள்ளே சென்று பொலிஸாரைப் பார்த்து "நீங்கள் என்ன "ரி.என்.ஏ" க்கு ஆதரவா?'' என்று சிங்களத்தில் கடும்தொனியில் கூறித் திட்டியவாறு மற்றைய அதிகாரியை வந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
தமது கண்முன்னே இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்றும் சிறீதரன் உறுதிப்படுத்தினார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதி கடற்படை அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் பற்றைகள் மற்றும் குப்பைகளை எரியூட்டிய சமயம் கடமையில் நின்ற கடற்படையினர் சிலர் "யார் இங்கே எரியூட்டியது, உடனே அணைத்துவிட வேண்டும்'' என்று கட்டளையிட்டவாறு தாக்கினர்.
அவ்வாறு தீயை அணைத்த பின்னரும் தாக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தைக் கேள்வியுற்று அங்கு விரைந்து வந்த வலி.வடக்குப் பிரதேச சபைத் தலைவரும் உறுப்பினரும் கூடத் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து இளவாலைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதை அடுத்தே இந்த விவகாரம் நீதித்துறை மட்டத்துக்குச் செல்லாமல் தடுக்கும் நோக்குடன் இரு தரப்பினரையும் "சமாதானம்' செய்வதற்குப் பொலிஸார் முயன்றுள்ளனர் என்று அறிய வந்தது.
இவ்வாறான நிலையிலேயே கடற்படை அதிகாரி இந்த "பலாத்கார' நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று தெரியவந்தது.
இதுகுறித்து இளவாலைப் பொலிஸாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது "உதயன்" என்றதும் அதனைத் துண்டித்து விட்டனர். மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியபோது "அப்படியான சம்பவம் ஏதும் நடக்கவில்லை எனக் கூறிவிட்டு உடனடியாகவே தொடர்பு "கட்" ஆகிவிட்டது.

Geen opmerkingen:

Een reactie posten