தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 januari 2012

தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு அக்கறையுடன் செயற்படுவேன்! சம்பந்தனிடம் கலாம் உறுதிமொழி


[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 05:15.39 AM GMT ]
இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பங்களிப்பேன் என்று கூட்டமைப்பிடம் அப்துல் கலாம் உறுதியளித்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வில் அப்துல் கலாமும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கலாம் ஏற்றுக் கொண்ட பின்னர் அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இலங்கையின் பல தரப்பட்ட அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அப்துல் கலாம் நேற்று இரவு கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் மட்டும் கலந்து கொண்டிருந்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,
அப்துல் கலாம் யாழ்ப்பாண விஜயம் தொடர்பாக தனது பூரண திருப்தியை என்னிடம் வெளியிட்டார். பல்கலைக் கழகத்திலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் மாணவர்கள் தன்னை உற்சாகமாக வரவேற்றதாகவும், பயணம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு ஆற்றிய உரையின் நகலினையும் என்னிடம் கையளித்தார்.
அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக பல விடயங்கள் அவருடன் பேசப்பட்டன. அவரும் தற்போதைய நிலைமைகளினை அறிவதில் ஆர்வம் செலுத்தினார்.
மேலும் அரசியல் கட்சிகளினது நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு தொடர்பாகவும் அவர் என்னிடம் கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது பரிமாறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர் எனக்குத் தெரிவித்தார்.
தங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். இனப் பிரச்சினையை தீர்ப்பதில் நீங்கள் அக்கறை செலுத்தினால் அதன் மூலம் அதிகளவான நன்மைகள் கிடைக்கும். எனவே தாங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டும். இந்தியாவினது பங்களிப்பும் முக்கியமாக தொடர்ந்து இருக்க வேண்டும். இந்தியாவின் பங்களிப்பு இருந்தால்தான் இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அவரிடம் நான் கோரினேன்.
இதற்கு கலாம், தான் தொடர்ந்தும் அக்கறையுடன் இது குறித்து கருத்துத் தெரிவிப்பதாகக் கூறினார்.
இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten