தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 januari 2012

புலிகள் இயக்கத்துக்குள் அமெரிக்க ஜனாதிபதிகள்! - பிரபாகரனுக்கு சோதிடத்தில் இருந்த நம்பிக்கை! - அன்ரனுக்கு மாத்திரம் பிரபா வழங்கி இருந்த சலுகை!


[ Sunday, 22 January 2012, 07:57.39 AM. ]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் சிலருடைய இயக்கப் பெயர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பேரதிசயத்தை கொடுத்து இருக்கின்றன.
ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதிகள் சிலரின் பெயர்கள் இந்த உறுப்பினர்களுக்கு சூட்டப்பட்டு இருந்தன.

ரேகன், கென்னடி, கார்ட்டர் போன்ற பெயர்களுடன் இயக்க உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று தூதரக அதிகாரிகள் அறிந்து வைத்திருந்தனர்.

ஆயினும் இப்பெயர்கள் ஏன் சூட்டப்பட்டன? என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் 09 ஆம் திகதி தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.
பிரபாகரனுக்கு சோதிடத்தில் இருந்த நம்பிக்கை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்து இருக்கின்றது.

இதை அமெரிக்கா அறிந்து வைத்து இருந்தது.

தமிழ் – இந்துக்களின் பாரம்பரிய சோதிட நம்பிக்கையின்படி மிகவும் அதிஷ்டத்துக்கு உரிய எண்ணாக ஐந்து நம்பப்படுகின்றது.

இக்காரணத்தால்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மொத்தம் ஐந்து பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிராந்திய தளபதிகளை பிரபாகரன் நியமித்துக் கொண்டார் என்று அமெரிக்கா தெரிந்து கொண்டது.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியனவே ஐந்து பிராந்தியங்களும். வவுனியா பிராந்தியத்துக்குள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், மட்டக்களப்பு பிராந்தியத்துக்குள் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களும் அடங்கப் பெறுகின்றன.

யாழ்ப்பாணத்துக்கு கிட்டுவும், மன்னாருக்கு ராதாவும், மட்டக்களப்புக்கு குமரப்பனும் பிராந்திய தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

உண்மை, விசுவாசம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிராந்திய தலைவர்களை தலைவர் பிரபாகரன் நியமித்து இருந்தார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீஸ் மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.
அன்ரனுக்கு மாத்திரம் பிரபா வழங்கி இருந்த சலுகை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏனைய எந்த உறுப்பினர்களுக்கும் வழங்கி இராத விசேட சலுகை ஒன்றை அன்ரன் பாலசிங்கத்துக்கு தலைவர் வே. பிரபாகரன் வழங்கி இருந்தார் என்று கண்டு கொண்டது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்.

புகைப் பிடிக்கின்றமையில் இருந்து புலிகள் இயக்க உறுப்பினர்கள் கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால் அன்ரனுக்கு மாத்திரம் விதிவிலக்கு கொடுத்து இருந்தார் பிரபாகரன்.

அன்ரன் பாலசிங்கம் அடிக்கடி புகைப் பிடித்துக் கொண்டு இருப்பவர். குறிப்பாக சுருட்டு அடிப்பார்.

1995 ஆம் ஆண்டு இராஜதந்திரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தமையுடன் புலிகளுடன் சந்திப்பு மேற்கொண்டும் இருந்தது.

இதில் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரும் கலந்து இருந்தார்.

இராஜதந்திரிகளுக்கு அன்றைய கால கட்ட அரசியல் நிலைமைகளை விளங்கப்படுத்தி இருந்தார் அன்ரன்.

யாழ்ப்பாண பயணம், புலிப் பிரமுகர்களுடனான சந்திப்பு ஆகியன குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 1995 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten